பின் தொடர்வோர்

Sunday, 9 December 2018

365.சாங்கரி

365
பொது

             தாந்தன தானதன தாந்தன தானதன
             தாந்தன தானதன              தனதான

சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக
  தாண்டவ மாடியவர்                             வடிவான
சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்
  தாங்களு ஞானமுற                          வடியேனுந்
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
  தோன்றிய சோதியொடு                   சிவயோகந்
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
  சோம்பினில் வாழும்வகை               அருளாதோ
வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்
  வான்பொழில் சூழும்வய                     லயலேறி
மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்
  மாந்திய வாரணிய                           மலைமீதிற்
பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி
  பூண்பன பாரியன                              தனபாரப்
பூங்குற மாதினுட னாங்குற வாடியிருள்
  பூம்பொழில் மேவிவளர்                  பெருமாளே


பதம் பிரித்து உரை

சாங்கரி பாடி இட ஓங்கிய ஞான சுக
தாண்டவம் ஆடியவர் வடிவான
சாங்கரி - (சங்கரி) பார்வதி தேவி பாடியிட - பாட ஓங்கிய - மேம்பட்டு விளங்கியஞான சுக தாண்டவம் ஆடியவர் - ஞான ஆனந்த தாண்டவத்தை ஆடிய சிவபெருமானது வடிவான - வடிவை அடைந்துள்ளவர்களும் (சாரூப நிலையில் உள்ளவர்களும்)

சாந்தம் அதீதம் உணர் கூ(ர்)ந்த தம சாதி அவர்
தாங்களும் ஞானம் உற அடியேனும்
சாந்தம் அதீதம் - சாந்த குணத்தின் கடந்த நிலையில் இருந்து உணர் கூர்ந்த தம சாதியவர் தாங்களும் - சிவஞானம் மிக்கிருந்த சாதியவர் தாங்களும் ஞானம் உற - (அந்த நாடகக் காட்சியால்) ஞான நிலையை அடைய அடியேனும் - அடியவனாகிய நானும்

தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
தோன்றிய சோதியொடு சிவ யோகம்

தூங்கிய பார்வையொடு–அறிதுயில் கொண்ட  ஞானக் கண்ணுடனும் தாங்கிய வாயுவொடு - புறத்தே ஓடாத வண்ணம் நிறுத்தப்பட்டசுழு முனையில் பிராண வாயுவுடன் தோன்றிய – அந்நிலையில் காணப்படும் சோதியொடு - சோதி தரிசனத்துடன் சிவ யோகம் - சிவ யோக நிலையில்
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
சோம்பினில் வாழும் வகை அருளாதோ
தூண்டிய சீவனோடு - பர சிவத்துடன் கூடி நிலைத்த ஆன்மாவுடன் வேண்டிய காலமொடு - பல்லூழி காலம் சோம்பினில் - சும்மா இருக்கும் மௌன ஞான நிலையில் வாழும் வகை - வாழும்படியான பாக்கிய வகையை அருளாதோ - உனது திருவருள் எனக்கு அருளாதோ?

வாங்குகை யானை என ஈன் குலை வாழை வளர்
வான் பொழில் சூழும் வயல் அயல் ஏறி
வாங்குகை - தொங்குகின்ற துதிக்கையைக் கொண்ட யானை என - யானையைப் போல ஈன் குலை - குலைகளைத் தள்ளும் வாழை - வாழை வளர் - வளர்கின்ற வான் பொழில் சூழும் - பெரிய பொழில்கள் சூழ்ந்துள்ள வயல் - வயல்களின் அயல்- பக்கங்களில் ஏறி - பாய்ந்துசென்று

மாங்கனி தேன் ஒழுக வேங்கையில் மேல் அரிகள்
மாந்திய ஆரணிய(ம்) மலை மீதில்
மாங்கனி தேன் ஒழுக - மாம்பழங்களைத் தேன் ஓழுகும்படி வேங்கையில் மேல் அரிகள் - வேங்கை மரத்தின் மேலிருந்து குரங்குகள் மாந்திய - உண்ட ஆரணியம் - காடுகளைக் கொண்ட மலை மீதில் - (வள்ளி) மலையில்

பூங்கொடி போலும் இடை ஏங்கிட வார் அம் அணி
பூண்பன பாரியன தன பார
பூங்கொடி போலும் - பூங்கொடி போன்ற இடை - (நுண்ணிய) இடை ஏங்கிட - வாடும்படி வார் அம் அணி - கச்சும் அழகிய ஆபரணங்களும் பூண்பன - அணிந்துள்ளனவும் பாரியன - பருத்துள்ளனவுமான தன பார- கொங்கைப் பாரங்களை உடைய

பூங்குற மாதினுடன் ஆங்கு உறவாடி இருள்
பூம் பொழில் மேவி வளர் பெருமாளே

பூங்குற மாதினுடன் - அழகிய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் ஆங்கு உறவாடி - அம்மலையில் நேசம் பூண்டு இருள் - இருண்ட பூம் பொழில் மேவி வளர் - அழகிய சோலையில் விரும்பி வீற்றிருந்த பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

சங்கரி பாடவும், ஞான ஆனந்த தாண்டவத்தை சிவபெருமான் ஆடவும், அதைக் கண்ட சிவ சாரூப நிலையில் உள்ளவர்களும், சாந்த குணத்தின் கடந்த நிலையில் உள்ள சிவ சமய இனத்தினரும், அந்த நாடகக் காட்சியால் ஞான நிலையை அடைய, அடியேனும் அறி துயில் கொண்ட ஞானக் கண்ணுடனும், சிவ யோக சோதி நிலையில் பரசித்துடன் கூடி நிலைத்த ஆன்மாவுடன் பல்லூழி காலம் சும்மா இருக்கும் மௌன ஞான நிலையை எனக்கு அருள மாட்டாயா?

யானையின் துதிக்கையைப் போல் தொங்கும் வாழைக் குலைகளைத் தள்ளும் பொழில்கள் சூழ்ந்த வயல்களின் பக்கங்களில் பாய்ந்து சென்று மாம்பழங்களை உண்ணும் குரங்குகள் உள்ள வள்ளிமலையில் பருத்த கொங்கைகளை உடைய வள்ளியுடன் உறவாடிப் பின்னர் அம் மலைச் சோலைகளில் வீற்றிருந்த பெருமாளே நான் மௌன நிலையில் வாழும் வகையை எனக்கு அருள்வாயாக

'பேரூழி' காலத்தில் உமையுடன் சிவனார் நடனமாடுவதை கூறுகிறார்

ஒப்புக:
1.  சாங்கரி பாடியிட வோங்கிய ஞான சுக தாண்டவம்
சாங்கரி – சங்கரி – சங்கரரின் பத்தினி
ஞான சுக தாண்டவம் –  சிவபிரான் மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடின தாண்டவம்
“வெள்ளியம்பலத்தில் ஞான சுந்தர நாடகம்” நடிப்பான் – திருமுருகன் பூண்டிப் புராணம்.

“கீதம் உமை பாட …..வேத முதல்வன் நின்றாடும்” - சம்பந்தர் தேவாரம்

“பாடுங் கவுரி பவுரி கொண்டாடப் பசுபதி நின்று ஆடும் பொழுது பரமாயிருக்கும் அதீதத்திலே” - கந்தர் அலங்கரம்
“படிதரு பதிவ்ரதை ஒத்தச் சுத்தப் பாழ்ங் கான் தனில் ஆடும் பழயவர் குமர”- திருப்புகழ் கொடியன

2.  வாங்குகை யானை என ஈன் குலை வாழை
யானையின் வளைந்த துதிக்கை வாழை குலைக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது

இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன
3.  தூங்கிய பார்வையொடு
“முருகந் உருவங் கண்டு தூங்கார்” -  கந்தர் அலங்காரம்
“தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் நிலைசொல்வதெவ் வாறே - திருமந்திரம் [தூங்காமல் தூங்கும் தியான நிலையில்தான் ஞானிகள் தம்மை அறிந்து கொள்கின்றனர். தம்மை அறிந்துகொண்ட ஞானிகள் சிவலோகத்தையே தமக்குள் தரிசிக்கின்றனர். இப்படித் தூங்கியதால்தான் ஞானிகளுக்குச் சிவயோகம் சித்தித்தது. சிவனோடு ஒன்றியிருக்கும் சிவபோகமும் கிடைத்தது. இவர்கள் யோக நிஷ்டையில் தூங்காமல் தூங்கிக் கொண்டிருப்பதால் அவர்களது நிலையைக் கூறுவதெப்படி?]

“ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்து
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? “ - பட்டினத்தார்
4.  தாங்கிய வாயுவொடு
“நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தங்க வல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லைத் தானே” - திருமந்திரம்
வாயுப்பிராண்னொன்று மடைமாறி” – திருப்புகழ், வாசித்தநுல்

5.  தோன்றிய சோதியொடு
“சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து    எனையாள்வாய்” – திருப்புகழ், வாதினையடர்ந்த
“சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி தூய ஒளி காண முத்தி விதமாக சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி” – திருப்புகழ், சூலமென

6.  சோம்பினில் வாழும் வகை அருளாதோ
“சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பது சுருதி முடிந்திடம்
சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே” - திருமந்திரம்





  

No comments:

Post a Comment