பின் தொடர்வோர்

Wednesday, 5 December 2018

362.சமயபத்தி

362
பொது

                   தனதனத்த தனாத்தன       தனதானா

சமயபத்தி வ்ருதாத்தனை          நினையாதே
  சரணபத்ம சிவார்ச்சனை           தனைநாடி
அமையசற்குரு சாத்திர           மொழிநூலால்
  அருளெனக்கினி மேற்றுணை       தருவாயே
உமைமுலைத்த ருபாற்கொடு       அருள்கூறி
  உரியமெய்த்த வமாக்கிந            லுபதேசத்
தமிழ்தனைக்க ரைகாட்டிய       திறலோனே
  சமணரைக்க ழுவேற்றிய          பெருமாளே

பதம் பிரித்து உரை

சமய பத்தி விருதா தனை நினையாதே
சரண பத்ம சிவ அர்ச்சனை தனை நாடி
சமய பத்தி - சமயக் கொள்கையில் உள்ள பக்தி விருதா தனை - பயனற்ற தன்மையது என்று நினையாது - நினையாமல் சரண பத்ம -உனது திருவடித் தாமரையில் சிவ அர்ச்சனை தனைநாடி  - சிவார்ச்சனை செய்ய விரும்பியவனாய் (நான்)

அமைய சற்குரு சாத்திர மொழி நூலால்
அருள் எனக்கு இனி மேல் துணை தருவாயே
அமைய - மனம் பொருந்தி நிலைத்திருக்க சற்குரு - சற்குரு மூலமாகவும் சாத்திர மொழி நூலால் - சாத்திர மொழி நூல்கள் மூலமாகவும் அருள் - உனது திருவருளை எனக்கு இனிமேல் - எனக்கு இனி மேல் துணை தருவாயே - துணையாகத் தந்து அருளுக

உமை முலை தரு பால் கொடு அருள் கூறி
உரிய மெய் தவமாக்கி நல் உபதேச
உமை முலைத் தரு பாற்கொடு - (ஞான சம்பந்தராக அவதரித்து) உமா தேவியின் கொங்கை தந்த பால் உண்டதன் பயனாக அருள் கூறி - சிவபெருமான் திருவருளைப் பதிகங்களில் எடுத்துக் கூறி அங்ஙனம் கூறுதலையே உரிய மெய்த் தவமாக்கி - தனக்கு உரிய உண்மைத் தவ
ஒழுக்கமாகக் கொண்டு நல் உபதேச - நல்ல உபதேசங்களைக் கொண்ட

தமிழ் தனை கரை காட்டிய திறலோனே
சமணரை கழு ஏற்றிய பெருமாளே

தமிழ் தனை - (தேவாரத்) தமிழால் கரை காட்டிய - முத்திக்கு ஒரு கரை காட்டுவித்த திறலோனே - வல்லமை உடையவனே சமணரைக் கழு ஏற்றிய பெருமாளே - சமணர்களைக் கழுவேற்றிய பெருமாளே

சுருக்க உரை

சமயக் கொள்கைகளை வீணானவை என்று நினைக்காமல், உனது திருவடித் தாமரையில் சிவார்ச்சனை செய்ய விரும்பியவனாக என்
 மனம் நிலைத்திருக்க, சற்குருவின் மூலமாகவும், சாத்திர மொழி நூல்கள் மூலமாகவும் திருவருளை எனக்கு இனி துணையாகத் தந்தருளுக

சம்பந்தராக அவதரித்து, உமை தேவியின் முலைப்பாலை உண்டதால், சிவபெருமானின் திருவருளைத் தேவாரப் பாக்களில் எடுத்துக் கூறி, அதையே தனக்குத் தவ ஒழுக்கமாகக் கொண்டு, உலகில் உண்மைத் தவ நிலையை ஓங்கச் செய்து, நல்ல உபதேசங்களைக் கொண்ட தேவாரத் தமிழால் முத்திக்கு வழி காட்டிய திறலோனே சமணர்களைக்கழுவில் ஏற்றியவனே உன் திருவருளை எனக்குத் துணையாகத் தருவாய்

விளக்கக் குறிப்புகள்

1உமை முலைத் தரு பாற்கொடு
நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலையுன்டிடு நுவல்மெய்ப்புள பாலனென்றிடு    மிளையோனே                             - திருப்புகழ்,  பகர்தற்கரி

2 உரிய மெய்தவமாகி நல் உபதேச
அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
அரியகதிர் காமத்தி  லுரியாபிராமனே  – திருப்புகழ்,சமரமுக

3தமிழ்தனைக் கரை காட்டிய திறலோனே
  கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
  கல்விகரை கண்ட  புலவோனே    -திருப்புகழ், அல்லசலடை

4 சமணரைக் கழுவேற்றிய பெருமாளே
தெளியஇனி வென்றிவிட்ட மோழைகள் கழுவேற
                                                        - திருப்புகழ்,நிகமமெனி


பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத்   தனைபேரும்
பொடிபடச் சிவமெனப் பொடிபரப் பியதிருப்
புகலியிற் கவுணியப் புலவோனே - திருப்புகழ், கிறி மொழி

சமணர்கள் கழுவேறிய வரலாறு

பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞான சம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார்.   அவர் சமயத்தில் நம்பிக்கை யில்லாத சமணர்கள் அவர் வருகை தந்ததை வரவேற்கவில்லை. அவரை ஒழித்துக்கட்ட  அவர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டனர். ஒரு தேசத்தில் அராஜகம் நடக்கிறது என்றால், அதன் பலனை அரசனே அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சம்பந்தர், "அந்தத் தீ அரசனையே பைய சாரட்டும்'' என்று சொல்லி பதிகம் பாடினார். உடனே, கூன்பாண்டியனை தீயின் வெப்பம் வெப்பு நோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான். அவன் சார்ந்திருந்த சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை. தன் வெப்பு நோயைத் தீர்க்க அவன் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தான். கருணை மனம் கொண்ட ஞானசம்பந்தர் "மந்திரமாவது நீறு' என்ற பதிகம் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளி சாம்பலை அவனுக்கு பூசியதும், நோய் நீங்கியது. இதனால் மனம் மகிழ்ந்த  மன்னன்  சைவ மதத்திற்கு மாற எண்ணிணான்.   இதைத் தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தர் செய்தது சித்துவேலை என்றும், தாங்கள் அறிவிக்கும் போட்டியில் சம்பந்தர் வெற்றி பெற்றால், மதுரையை விட்டே போய் விடுவதாகவும் அறிவித்தனர். அதன்படி  இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச்  செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்`என்றனர்.

முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் திசையிலே ஓடிற்று.  ஞான சம்பந்தர், `வாழ்க அந்தணர்` என்னும் திருப்பதிகத்தைப் பாடி, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டைஆற்றில் இட்டார்.  அந்த ஏடு வைகை ஆற்று வெள்ள ஒட்டத்துக்கு மாறாக எதிர் திசையில் சென்றது. அத்திருப்பதிகப் பாடலில் `வேந்தனும் ஓங்குக` என ஞான சம்பந்தர் அருளியதால் பாண்டியன் கூன் நிமிர்ந்தது.

இதற்கு முன் சமணர்கள்` இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்
சமயம் எனக் கொள்வோம்` என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார்.
பாண்டியன் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான். ஞானசம்பந்தர் தாம் அருளிய பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை நூல் போட்டு விரித்ததில். `போகமார்த்த பூண்முலையாள்` என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் வந்தது. ஞானசம்பந்தர் திரு நள்ளாறு இறைவனைப் போற்றி அந்த ஏட்டினை எடுத்து அது நெருப்பில்  வேகாதிருக்க வேண்டி  `தளிரிள வள ரொளி` என்றதொரு திருப்பதிகம் பாடி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது. சமணர்கள் ‘அஸ்தி நாஸ்தி`  என்ற தங்கள் சமய வசனத்தை எழுதி ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்த போது  அது முன்னையினும் பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் வழங்க பெறுவதாயிற்று.  இந்த இரண்டு போட்டிலும் தோற்ற சமணர்கள் போட்டிக்கு முன்னால் ஒப்புக்கொண்டபடி தாங்களே கழு ஏறினார்கள் எனச் சொல்லப்படுகிறது.

அருணகிரி நாதர் திருநள்ளார் திருப்புகழை பச்சையொண்கிரி என ஆரம்பிப்பது நோக்கத்தககது

உமை தேவியின் முலைப்பாலை உண்ட வரலாறு

திருஞானசம்பந்தருக்கு மூன்று வயது ஆகும் போது தந்தையுடன் தங்கள் ஊர் சீர்காழி பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார்.   கரையில் பாலகனை இறக்கி விட்டு தந்தை குளத்து நீரில் மூழ்கி குளிக்கும் போது தந்தையை காணாமல் பாலகன் சம்பந்தன் அழுதான். அழுத குழந்தையை அமைதி படுத்த உலக நாயகி, பார்வதி தன் பதி  சிவனுடன் வந்து மெய்ஞானம் கலந்த தமது திருமுலைப் பாலை புகட்டி மறைந்தாள்.  நீராடி வந்த தந்தை குழந்தையின் வாயில் பால் வடிவதை கண்டு கோபித்து “ பால் கொடுத்தது யார்?” என்று கோபிக்க அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, "தோடுடைய செவியன் விடையேறி" என்ற பாடலைப் பாடினார். பெண்கள் அணிவதுதான் தோடு. இங்கே அன் விகுதி சேர்ந்து ஆணைக் குறிக்கிறது. அக்குழந்தைக்கு காட்சியானது சிவனின் அர்த்தநாரீஸ்வரர் கோலம். எனவே உமை இருந்த பகுதியான காதில் தோடு இருக்க அதனையே சுட்டிக் காட்டியது குழந்தை சம்பந்தர் .'திருமுலைப்பால் உண்டார் மறுமுலைப்பால் உண்ணார்' என்பது இப்பகுதியில் சொல்லப்படும் மொழியாகும். இன்றைக்கும் அக்கோயிலில் இன் நிகழ்சியின் நினைவாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது

1 comment:

  1. புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
    Punithanena ஏடு தமிழால்
    திருப்புகழ் --- எழுகுநிறை

    ReplyDelete