பின் தொடர்வோர்

Thursday, 29 November 2018

355.கருப்பையிற்

355
பொது

 தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த     தனதானா


கருப்பை யிற்சுக் கிலத்து லைத்துற் பவித்து            மறுகாதே
     கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க          ளுரையாதே
விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க          ருதுநீயே
     வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி      மகிழ்வோனே
பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச          மரவேளே
     பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த     மயிலோனே
செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு         மிசையோனே
     தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்தபெருமாளே
   
 பதம் பிரித்தல்


கருப்பையில் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து மறுகாதே
கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ர தமிழ்க்கள் உரையாதே
கருப்பையில் - தாயின் கருப்பத்தில் சுக்கிலத்து - சுக்கிலத்தில் உலைத்து - அலைப்புண்டு உற்பவித்து - தோன்றி மறுகாதே -  கலங்காமலும் கபட்ட அசட்டர்க்கு - வஞ்சனை கொண்ட மூடர்களான விலை மாதர்களுக்கு இதத்த - இன்பம் தருவதான சித்ரத் தமிழக்களை - அழகிய தமிழ்ப் பாக்களை உரையாதே - சொல்லாமலும்

விருப்பம் உற்று துதித்து எனை பற்று என கருது நீயே
வெளிப்பட பற்றிட படுத்த தருக்கி மகிழ்வோனே
விருப்பம் உற்று - ஆசையுடன் துதித்து எனைப் பற்று என - துதித்து என்னைப் பற்றுவாயாக என்று கருது நீயே - என்னைக் குறித்து நீயே நினைக்க வேண்டுகிறேன் வெளிப் பட - அடியார்கள் முன்பு பற்றிட - அவர்களை ஏற்றுக் கொள்ளவும் படுத்த - அவர்களை ஆட்கொள்ளவும் தருக்கி - களித்து மகிழ்வோனே - மகிழ்ச்சி கொள்பவனே

பருப்பதத்தை தொளைத்த சத்தி படை சமர வேளே
பணி குலத்தை கவர் பதத்துக்கு அளித்த மயிலோனே
பருப்பதத்தை - கிரவுஞ்ச மலையை தொளைத்த - தொளைத்த சத்தி படை - சத்தி வேல் படையை ஏந்திய சமர வேளே - போர் வேளே
பணிக் குலத்தை - பாம்பின் கூட்டங்களை கவர் பதத்துக்கு - தனது பிரிவு கொண்ட பாதத்தில் கட்டி அகப்படுத்தியுள்ள மயிலோனே - மயில் வீரனே

செரு புறத்து சினத்தை முற்ற பரப்பும் இசையோனே
தினை புனத்து குறத்தியை கை பிடித்த பெருமாளே


செருப் புறத்து - போர்களத்தில் சினத்தை - கோபத்தை முற்றப் பரப்பும் - முற்றிலும் விரித்துக் காட்டிய இசையோனே – புகழோனே தினைப் புனத்து - தினைப் புனத்தில் குறத்தியைக் கைப் பிடித்த - குற மகளாகிய வள்ளியை மணம் கொண்ட பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

கருப்பத்தில் நான் தோன்றி கலங்காமலும், வஞ்சக விலை மாதரிடம் தமிழ்ப் பாக்களைச் சொல்லி இன்பம் காணாமலும், ஆசையுடன் என்னைத் துதித்து பற்றுக என்று நீயே என்னை நினைக்க வேண்டுகிறேன்

அடியார்கள் முன்பு வெளிப்பட அவர்களை ஏற்றுக் கொள்ளவும், அவர்களை ஆட்கொள்ளவும் மகிழ்ச்சி கொள்பவனே, கிரவுஞ்ச மலையைத் தொளைத்த சத்தி வேல் படையை ஏந்திய போர் வேளே, பாம்புகளைப் பாதத்தில் கட்டி அகப்படுத்தி உள்ள மயிலோனே, போர்க் களத்தில் கோபத்தை முற்றிலும் விரித்துக் காட்டியவனே, தினைப் புனத்தில் வள்ளியை மணந்த பெருமாளே, என்னைப் பற்றுக என்று நீ கருதுவாயாக
  

No comments:

Post a Comment