பின் தொடர்வோர்

Friday 23 November 2018

346.எதிரொருவ ரிலை

346
பொது

            தனதனன தனதனன தனதனன தனதனன
            தத்தத்த தத்தான                                   தந்ததான

எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு
       திட்டுக்ரி யைக்கேயெ                        ழுந்துபாரின்
இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை
       யெட்டெட்டு மெட்டாத                 மந்த்ரவாளால்
விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை
       வெட்டித்து ணித்தாண்மை             கொண்டுநீபம்
விளவினின இலைதளவு குவளைகமழ் பவளநிற
       வெட்சித்திருத்தாள்வ                   ணங்குவேனோ
திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர்
       செக்கச்செ வத்தேறு                    செங்கைவேலா
சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப
       சித்ரக்க கத்தேறு                            மெம்பிரானே
முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன
       முட்டச்செ லுத்தாறி                          ரண்டுதேரர்
மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு
       முப்பத்து முத்தேவர்                           தம்பிரானே

பதம் பிரித்து உரை

எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு
க்ரியைக்கே எழுந்து பாரின்

எதிர் ஒருவர் - எமக்கு இணையானவர் உலகில் இலை என - உலகத்திலேயே ஒருவரும் இல்லை என்று அலகு - பறவை மூக்கு போன்று கூர்மையான சிலுகு - வாதப் போருக்கு
விருதிட்டு - கொடி கட்டி க்ரியைக்கு எழுந்து - அச்செய்கைக்குத் துணிந்து எழுந்து

இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை
எட்டு எட்டும் எட்டாத மந்த்ர வாளால்

பாரின் இடை - உலகின் மத்தியில் உழல்வ சுழலுவ - திரிந்து சுழல்பவர்களான அன சமய வித - எல்லா வகைய சமய வாதிகளாலும் எட்டெட்டும் எட்டாத - அறுபத்து நான்கு கலைகளாலும் எட்ட முடியாத மந்த்ர வளால் - மந்திர வாள் கொண்டு

விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை
வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம்

விதி வழியின் - பிரமன் எழுதிய ஏட்டில் உள்ள படி உயிர் கவர வரு - உயிரைக் கவர வரும் கொடிய - கொடுமை வாய்ந்த
யம படரை - யம தூதுவர்களை வெட்டித் துணித்து - வெட்டித் துண்டுப்படுத்தி ஆண்மை கொண்டு - (எனது) பக்தி வைராக்கியத்தை நிலை நிறுத்தி நீபம் - கடம்பு

விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற
வெட்சி திரு தாள் வணங்குவேனோ

விளவின் இள இலை - விளாவின் இளந் தளிர் தளவு - முல்லை
குவளை - கழு நீர் கமழ்மணக்கும் பவள நிற வெட்சி - பவள நிறுமுள்ள வெட்சி (இவற்றை அணிந்த) திருத்தாள் - (உனது) திருவடிகளை வணங்குவேனோ - வணங்க மாட்டேனோ?

திதி புதல்வர் ஒடு பொருது குருதி நதி முழுகி ஒளிர்
செக்க செவத்து ஏறு செங்கை வேலா

திதி புதல்வரோடு - (காசிபர் மனைவியாகிய) திதியின் தல்வர்களாகிய அசுரர்களோடு பொருது - சண்டை செய்து
குருதி நதி  - இரத்த ஆற்றில் முழுகிமுழுகி ஒளிர்விளக்கமுறும் செக்கச் செவத்து - மிக்கச் செந்நிறத்துடன் ஏறும் செங்கை வேலா- செவ்விய திருக்கரத்தில் பொருந்தி உள்ள வேலா வேலை உடையவனே

சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப
சித்ர ககத்து ஏறும் எம்பிரானே

சிகர கிரி - சிகரங்களை உடைய (கிரௌஞ்ச) மலையை தகர விடும் - பொடிபடச் செய்த உருவ உருவத்தனே மரகத - பச்சை நிற  கலப - தோகை உடைய சித்ர - அழகிய ககத்து ஏறும் - பட்சியாகிய மயிலின் மீது ஏறும்   எம்பிரானே - எம்பெருமானே

முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம்
முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர்

முதிய – பழமையான பதினொரு விடையர் - பதினோரு உருத்திரர்களும் முடுகுவன - முடுகிச் செலுத்தப்படும்
பரி - குதிரைகளை ககனம்ஆகாயத்தில் முட்ட செலுத்து  - நன்கு செலுத்துகின்ற ஆறிரண்டு தேரர் - பன்னிரண்டு தேர்களை உடைய பன்னிரு சூரியர்களும்

மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும்
முப்பத்து முத்தேவர் தம்பிரானே

மொழியும் சொல்லப்படும் இரு அசுவனிகள் - இரண்டு அசுவனி தேவர்களும் இரு சது வித - எண் வித வசுவசுக்களும் முப்பத்து முத்தேவர் தம்பிரானே - (30+3- 33) முப்பத்து மூன்று வகைத் தேவர்கள் தம்பிரானே
 சுருக்க உரை
உலகில் தமக்கு நிகரானவர் என்று கூறி கொடியைக் கட்டிக் கொண்டு வரும் சமய வாதிகளலும், அறுபத்து நான்கு கலைகளாலும், எட்ட ஒண்ணாத மந்திர வாள் கொண்டு, விதியின் முறைப்படி உயிர்களைக் கவர வரும் யம படர்களை வெட்டி, எனது பத்தி வைராக்கியத்தை நிலை நிறுத்தி, பலவகை மலர்கள் அணிந்துள்ள உன் திருத்தாளை வணங்க மாட்டேனா?

அசுரர்களை வெட்டி இரத்தத்தால் சிவந்த திருக்கையில் வேலை ஏந்தியவனே கிரௌஞ்சி மலையைப் பொடி செய்த திரு உருவத்தனே பச்சை மயில் மீது ஏறும் பெருமானே முப்பத்து மூவகைத் தேவர்களுக்கும் தம்பிரானே உன் வெட்சித் திருத்தாளை நான் வணங்க மாட்டேனா?
விளக்கக் குறிப்புகள்
1 சமயவித சகலகலை
 தறிய கலைகொடு சுட்டாத் தீரபொருள்
  பதறிய சமயிகள் எட்டாப் பேரொளி     --- திருப்புகழ், கதறியகலைகொடு  
2.விதிவழியின் உயிர்கவர
வண்போதன் தீட்டுந் தொடரதுபடி யேமன் சங்காரம் போர்---
                                                                                திருப்புகழ், மங்காதிங்கா
கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்- -திருப்புகழ் , ஆலமேற்றவிழி
காலன் ஆதி விதி யோடுபிற ழாதவகை தேடியென --                                  
                                                                         திருப்புகழ் , சூதினுணவாசை
3 முப்பத்து முத்தேவர்

11 ருத்திரர், 12 சூரியர், 2 மருத்துவர்கள், 8 வசுக்கள் .  இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி பரிவாரங்கள் இருப்பதாகக்  கொள்ளப் படுவதால், மொத்தமாக முப்பத்து முக்கோடி தேவர்கள் எனப்படுகிறார்கள்

11 ருத்திரர்கள் - ஏகாதச ருத்ரர்கள் எனப்படுபவர்கள். அவர்கள்
1.           மஹாதேவன்   2. ஹரன்   3. ருத்ரன்    4. சங்கரன்    5. நீலலோஹிதன் 6. ஈசானன்    7. விஜயன்     8. பீமதேவன்   9. பவோத்பவன்    10. கபாலி 11. சௌம்யன்.    திருக்கச்சி ஏகம்பரைப் போற்றிய திருநாவுக்கரசர் “விரைகொள் மலரவன் வசுக்கள் “ஏகாதசர்கள்” வேறுடைய இரைக்கும் அமிர்தக்கரிய ஒண்ணா எங்கள் ஏகம்பனே” என்று பாடுவதால், ஏகம்பரை ஏகாதச ருத்திரர்கள் போற்றி வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகின்றது.
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகைதிருப்புகழ், கதியை விலக்கு
ஆனந்தம் (பேரின்பம்), விஞ்ஞானம் (பகுத்தறிவு), மனம் (எண்ணங்கள்), பிராணன் (மூச்சுக் காற்று அல்லது வாழ்க்கை), வாக் (நா வன்மை), ஈசானன், (உலகை ஆட்சி செய்பவர்), தத்புருஷம் (பரம் பொருள்), அகோரர் (கோபமற்றவர்), வாமதேவம் (அமைதியானவர்), சத்யோஜாதம் (நினைத்தவுடன் பிறப்பவர்), ஆத்மன்

12 சூரியர்கள் ( ஆதித்தர்கள்)  :  விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், அம்சன், ஆர்யமான், பாகன், துத்தி, மித்திரன், புஷன், சக்ரன், சாவித்திரன், துவச்த்திரன், வருணன், விஷ்ணு, விவஸ்வத்.  ஆனால் ஆதித்தர்களின் எண்ணிக்கை என்றும் ஒரேயளவாகவே இருந்ததாகத் தெரியவில்லை. வேதங்களில் இவர்களை பற்றிய குறிப்புகள் குறைவாகவே உள்ளன
ஜனகர் சபையில்  யாக்ஞவல்கியர் என்னும் மகரிஷி க்கும் பெண் ஞானி கார்க்கி க்கும் நடந்த சம்வாதத்தில் , ‘‘இவர் மிகச் சிறந்த பிரம்மவாதி. இவரை வெல்ல எவராலும் ஆகாது...” என்று  அறிவிக்கிறாள். அப்படியும் விதக்தர் என்ற சாகல்ய முனிவர், ‘‘தேவர்களின் மொத்தக் கணக்கு எவ்வளவு?” என்று ஒரு வினாவை எழுப்புகிறார். அதற்கு யாக்ஞவல்கியர், ‘‘முப்பத்து மூன்று தேவர்கள், எட்டு வசுக்கள், பதினொரு ருத்திரர்கள், பன்னிரண்டு ஆதித்தர்கள் உண்டு. இந்திரன், பிரஜாபதி முதலியோர் 33 தேவர்கள் ஆவார்கள்.  என பதில் அளிப்பதாக நமது பண்டைய நூல்கள் சொல்கின்றன்
அக்கினி, பூமி, வாயு, அந்தரிக்ஷம், ஆதித்யன், சுவர்க்கம், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவை எட்டு வசுக்கள். ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் இவைதான் 11 ருத்திரர்கள். பன்னிரண்டு மாதங்களுக்குத் தேவதைகளாகப் பன்னிரு ஆதித்தர்கள் உள்ளனர். நம்முடைய ஆயுளும் செய்கைகளும் இவர்களுடைய ஆட்சிக்கு உட்பட்டே அமைகின்றன” என்றார்.

2 மருத்துவர்கள் – அஸ்வனி குமாரர்கள் – தேவலோக மருதுவர்கள்


8 வசுக்கள் : அஷ்ட வசுக்கள் என்பவர்கள் மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்கள் ஆவர். அவர்களின் பெயர்கள் தரா, துருவா, சோமா, அஹா, அனிலா, அனலா, பிரதியுஷா மற்றும் பிரபாசா ஆகும். உலகியல் தேவர்களளாகிய  அஷ்ட வசுக்கள் : புவி, அக்னி, ஆகாயம், நீர், காற்று, சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன், ஆகிய இயற்கைப் பொருட்களை ஆள்பவர்கள்.

விளம்பி திருகார்த்திகை திருநாள்

No comments:

Post a Comment