பின் தொடர்வோர்

Wednesday, 28 November 2018

349.என்பந்தவி னை

349
பொது


                தந்தந்தன தத்தன தாத்தன         தனதான


என்பந்தவி னைத்தொடர் போக்கிவி சையமாகி
      இன்பந்தனை யுற்றும காப்ரிய     மதுவாகி
அன்புந்திய பொற்கிணி பாற்கட        லமுதான
      அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத மருள்வாயே
முன்புந்திநி னைத்துரு வாற்சிறு         வடிவாகி
      முன்திந்தியெ னப்பர தாத்துட     னடமாடித்
தம்பந்தம றத்தவ நோற்பவர்           குறைதீரச்
      சம்பந்தனெ னத்தமிழ் தேக்கிய   பெருமாளே


பதம் பிரித்து உரை

என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி
இன்பம் தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி
என் பந்த வினை - எனது சூழ்ந்து கட்டியுள்ள வினை என்ற தொடர் - விலங்கை போக்கி - ஒழித்து விசையமாகி - வெற்றி அடைந்து இன்பம் தனை உற்று - இன்ப நிலையை அடைந்து மகாப்ரியம் அதுவாகி - நிரம்ப விருப்பம் கொண்டு

அன்பு உந்திய பொன் கிணி பாற் கடல் அமுதான
அந்தம் தனில் இச்சை கொள் ஆற்பதம் அருள்வாயே

அன்பு உந்திய - அன்பு பெருகிய நிலையதாய் பொன் கிணி - பொன் கிண்ணியில் உள்ள பாற் கடல் அமுதான - பாற்கடல் அமுதத்துக்கு ஒப்பான அந்தம் தனில் - முடிவான பேரின்பப் பொருள் மீது இச்சை கொள் - ஆசையைக் கொள்ளும் ஆற்பதம்  (ஆஸ்பதம்) - ஆதார நிலையை அருள்வாயே - தந்தருளுக

முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி
முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி

முன் - முன்பு (சூரனை அழிக்க) புந்தி - மனத்தில் எண்ணி உருவால் சிறு வடிவமாகி - உருவத்தில் இளையவனாய் முன் - முன்பூ (சூரனை அழித்த காலத்தில்) திந்தி என - திந்தி என்னும் ஒலியுடன் பரதாத்துடன் - பரதசாத்திர முறைப்படி நடமாடி - துடி என்னும் கூத்தினை ஆடி

தம் பந்தம் அற தவ(ம்) நோற்பவர் குறை தீர
சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே

தம் பந்தம் - தங்களுடைய பந்தங்களாகிய மலக் கட்டுகள் அற - நீங்க தவ(ம்) நோற்பவர் - தவ நிலையில் நின்று நோற்பவர்களுடைய குறை தீர - குறைகள் நீங்குமாறு சம்பந்தன் என - ஞான சம்பந்தன் என்னும் பெயருடன் விளங்கி தமிழ் தேக்கிய பெருமாளே - தமிழை நிரம்பப் பருகிய பெருமாளே

சுருக்க உரை

என் பந்த வினைகளைப் போக்கி, வெற்றி அடைந்து, அமுதத்துக்கு ஒப்பான  பேரின்பப் பொருள் மீது ஆசை கொள்ளும் ஆதார நிலையைத்  தந்தருளுக 

 சூரனை அழிக்க முன்பு சிறுவனாக வடிவு எடுத்தாய் சூர அழித்தவுடன்  பரத சாத்திர முறைப்படி கூத்து ஆடினாய் தவ முறையில் நின்று  நோற்பவர்களுடைய குறைகள் நீங்க, ஞான சம்பந்தராக வந்துத் தமிழைப் பருகிய பெருமாளே,
எனக்கு முடிவான பேரின்பப் பொருளையும்  ஆனந்தத்தையும் தருவாய்.

விளக்கக் குறிப்புகள்
  1. தம் பந்தம் அற
ஞான சம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந் தேத்த வல்லாரெலாம்  பந்த பாசம் அறுக்க வல்லார்களே

தமிழ்பத்தும் வல்லார்மேல் பந்தமாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே - - சம்பந்தர் தேவாரம்
  2. முன் திந்தி எனப் பரதாத்துடன் நடமாடி
பதிகத்தில் புணரும் இன்இசை  பாடினர் ஆடினர்
பொழிந்தனர் விழி மாரி --பெரிய புராணம், ஞானசம்பந்தர்





No comments:

Post a Comment