பின் தொடர்வோர்

Thursday 22 November 2018

345.எதிரொருவ ரிலையுலகி

346
பொது

            தனதனன தனதனன தனதனன தனதனன
            தத்தத்த தத்தான                                   தந்ததான

எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு
       திட்டுக்ரி யைக்கேயெ                        ழுந்துபாரின்
இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை
       யெட்டெட்டு மெட்டாத                 மந்த்ரவாளால்
விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை
       வெட்டித்து ணித்தாண்மை             கொண்டுநீபம்
விளவினின இலைதளவு குவளைகமழ் பவளநிற
       வெட்சித்திருத்தாள்வ                   ணங்குவேனோ
திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர்
       செக்கச்செ வத்தேறு                    செங்கைவேலா
சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப
       சித்ரக்க கத்தேறு                            மெம்பிரானே
முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன
       முட்டச்செ லுத்தாறி                          ரண்டுதேரர்
மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு
       முப்பத்து முத்தேவர்                           தம்பிரானே

பதம் பிரித்து உரை

எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு
க்ரியைக்கே எழுந்து பாரின்

எதிர் ஒருவர் - எமக்கு இணையானவர் உலகில் இலை என - உலகத்திலேயே ஒருவரும் இல்லை என்று அலகு - பறவை மூக்கு போன்று கூர்மையான சிலுகு - வாதப் போருக்கு
விருதிட்டு - கொடி கட்டி க்ரியைக்கு எழுந்து - அச்செய்கைக்குத் துணிந்து எழுந்து

இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை
எட்டு எட்டும் எட்டாத மந்த்ர வாளால்

பாரின் இடை - உலகின் மத்தியில் உழல்வ சுழலுவ - திரிந்து சுழல்பவர்களான அன சமய வித - எல்லா வகைய சமய வாதிகளாலும் எட்டெட்டும் எட்டாத - அறுபத்து நான்கு கலைகளாலும் எட்ட முடியாத மந்த்ர வளால் - மந்திர வாள் கொண்டு

விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை
வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம்

விதி வழியின் - பிரமன் எழுதிய ஏட்டில் உள்ள படி உயிர் கவர வரு - உயிரைக் கவர வரும் கொடிய - கொடுமை வாய்ந்த
யம படரை - யம தூதுவர்களை வெட்டித் துணித்து - வெட்டித் துண்டுப்படுத்தி ஆண்மை கொண்டு - (எனது) பக்தி வைராக்கியத்தை நிலை நிறுத்தி நீபம் - கடம்பு

விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற
வெட்சி திரு தாள் வணங்குவேனோ

விளவின் இள இலை - விளாவின் இளந் தளிர் தளவு - முல்லை
குவளை - கழு நீர் கமழ்மணக்கும் பவள நிற வெட்சி - பவள நிறுமுள்ள வெட்சி (இவற்றை அணிந்த) திருத்தாள் - (உனது) திருவடிகளை வணங்குவேனோ - வணங்க மாட்டேனோ?

திதி புதல்வர் ஒடு பொருது குருதி நதி முழுகி ஒளிர்
செக்க செவத்து ஏறு செங்கை வேலா

திதி புதல்வரோடு - (காசிபர் மனைவியாகிய) திதியின் தல்வர்களாகிய அசுரர்களோடு பொருது - சண்டை செய்து
குருதி நதி  - இரத்த ஆற்றில் முழுகி - முழுகி
ஒளிர்விளக்கமுறும் செக்கச் செவத்து - மிக்கச் செந்நிறத்துடன் ஏறும் செங்கை வேலா- செவ்விய திருக்கரத்தில் பொருந்தி உள்ள வேலா வேலை உடையவனே

சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப
சித்ர ககத்து ஏறும் எம்பிரானே

சிகர கிரி - சிகரங்களை உடைய (கிரௌஞ்ச) மலையை தகர விடும் - பொடிபடச் செய்த உருவ உருவத்தனே மரகத - பச்சை நிற  கலப - தோகை உடைய சித்ர - அழகிய ககத்து ஏறும் - பட்சியாகிய மயிலின் மீது ஏறும்   எம்பிரானே - எம்பெருமானே

முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம்
முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர்

முதிய – பழமையான பதினொரு விடையர் - பதினோரு உருத்திரர்களும் முடுகுவன - முடுகிச் செலுத்தப்படும்
பரி - குதிரைகளை ககனம்ஆகாயத்தில் முட்ட செலுத்து  - நன்கு செலுத்துகின்ற ஆறிரண்டு தேரர் - பன்னிரண்டு தேர்களை உடைய பன்னிரு சூரியர்களும்

மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும்
முப்பத்து முத்தேவர் தம்பிரானே

மொழியும் சொல்லப்படும் இரு அசுவனிகள் - இரண்டு அசுவனி தேவர்களும் இரு சது வித - எண் வித வசுவசுக்களும் முப்பத்து முத்தேவர் தம்பிரானே - (30+3- 33) முப்பத்து மூன்று வகைத் தேவர்கள் தம்பிரானே
 சுருக்க உரை
உலகில் தமக்கு நிகரானவர் என்று கூறி கொடியைக் கட்டிக் கொண்டு வரும் சமய வாதிகளலும், அறுபத்து நான்கு கலைகளாலும், எட்ட ஒண்ணாத மந்திர வாள் கொண்டு, விதியின் முறைப்படி உயிர்களைக் கவர வரும் யம படர்களை வெட்டி, எனது பத்தி வைராக்கியத்தை நிலை நிறுத்தி, பலவகை மலர்கள் அணிந்துள்ள உன் திருத்தாளை வணங்க மாட்டேனா?

அசுரர்களை வெட்டி இரத்தத்தால் சிவந்த திருக்கையில் வேலை ஏந்தியவனே கிரௌஞ்சி மலையைப் பொடி செய்த திரு உருவத்தனே பச்சை மயில் மீது ஏறும் பெருமானே முப்பத்து மூவகைத் தேவர்களுக்கும் தம்பிரானே உன் வெட்சித் திருத்தாளை நான் வணங்க மாட்டேனா?
விளக்கக் குறிப்புகள்
1 சமயவித சகலகலை
 தறிய கலைகொடு சுட்டாத் தீரபொருள்
  பதறிய சமயிகள் எட்டாப் பேரொளி---திருப்புகழ், கதறியகலைகொடு  
2.விதிவழியின் உயிர்கவர
வண்போதன் தீட்டுந் தொடரதுபடி யேமன் சங்காரம் போர்---திருப்புகழ், மங்காதிங்கா
கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்--திருப்புகழ் , ஆலமேற்றவிழி
காலன் ஆதி விதி யோடுபிற ழாதவகை தேடியென---திருப்புகழ் , சூதினுணவாசை
3 முப்பத்து முத்தேவர்
    11 உருத்திரர், 12 சூரியர், 2 மருத்துவர், 8 வசுக்கள்
 



No comments:

Post a Comment