பின் தொடர்வோர்

Sunday 25 November 2018

347. விழையும் எழுதரிய

347
பொது

          தனனதன தனனதன தனனதன தனனதன
          தத்தத்த னந்தனந் தத்தத்த னந்தனந்    தந்ததான


***********
தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக
     சுத்தப்பெ ரும்பதஞ் சித்திக்க அன்புடன்            சிந்தியாதோ
எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை
     யிட்டுச்ச மைந்தசெஞ் சுட்டிக்க லன்களுந்         துங்கநீள்பன்
னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும்
     ரத்தக்கு தம்பையும் பத்மக்க ரங்களுஞ்         செம்பொனூலும்
மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு
     முத்தச்ச தங்கையுஞ் சித்ரச்சி கண்டியுஞ்         செங்கைவேலும்
முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு
     முக்கட்சி வன்பெறுஞ் சற்புத்ர வும்பர்தம்            தம்பிரானே

பதம் பிரித்தல்

*******
தொலைவு இல் பிறவியும் அகல ஒரு மவுன பரம சுக
சுத்த பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ
தொலைவு இல் - முடிவே இல்லாத பிறவியும் - பிறப்புக்களும் அகல - என்னை விட்டு நீங்க ஒரு - ஒப்பற்ற மவுன பரம சுக - மவுன மேலான சுகமாகிய சுத்த - பரிசுத்தமான பெரும் பதம் - பெரிய திருவடி சித்திக்க - எனக்குக் கிடைக்க அன்புடன் சிந்தியாதோ - அன்புடன் நினைக்காதோ?

எழுத அரிய அறுமுகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டு
சமைந்த செம் சுட்டி கலன்களும் துங்க நீள்
எழுத அரிய - எழுத முடியாத அறுமுகமும் - ஆறு திரு முகங்களும் அணி நுதலும் - அழகிய நெற்றியும் வயிரம் இடையிட்டு - வயிரம் மத்தியில் பொதிக்கப்பட்டு சமைந்த - அமைந்துள்ள செம் சுட்டிக் கலன்களும் - செவ்விய சுட்டி முதலிய அணி கலன்களும் துங்க - பரிசுத்தமான நீள் - நீண்ட

பன்னிரு கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும்
ரத்ந குதம்பையும் கரங்களும் செம் பொன் நூலும்
பன்னிரு கருணை விழி மலரும் - பன்னிரண்டு கருணை பொழியும் கண் மலர்களும் இலகு - விளங்கும் பதினிரு குழையும் - பன்னிரண்டு குண்டலங்களும் ரத்நக் குதம்பையும் - இரத்தினக் காதணியும் பத்மக் கரங்களும் - தாமரை போன்ற கைகளும் செம் பொன் நூலும் - செம்பொன்னாலாகிய பூணூலும்

மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும்
முத்த சதங்கையும் சித்ர சிகண்டியும் செம் கை வேலும்
மொழி புகழும் - சொல்லிப் புகழ் தக்க உடை மணியும் - உடை மணியும் அரை வடமும் - அரையில் கட்டிய நாணும் அடி இணையும் - இரு திருவடிகளும் முத்தச் சதங்கையும் - முத்தாலான கிண்கிணியும் சித்ர - அழகிய சிகண்டியும் - மயிலும் செம் கை வேலும் - திருக் கரத்தில் வேலாயுதமும்

முழுதும் அழகிய குமர கிரி குமரியுடன் உருகும்
முக்கண் சிவன் பெறும் சற் புத்ர உம்பர் தம் தம்பிரானே

முழுதும் அழகிய குமர - (இவ்வாறு) முழுதும் அழகு மயமாக உள்ள குமரனே கிரி குமரியுடன் - இமய மலையின் மகளாகிய பார்வதியுடன் உருகும் - உள்ளம் உருகும் முக்கண் சிவன் - முக்கண்ணனாகிய சிவ பெருமான் பெறும் - பெற்ற சற்புத்ர - நற்குணம் பொருந்திய பிள்ளையே உம்பர் தம் தம்பிரானே - தேவர்கள் போற்றும் தனிப்பெரும் தலைவரே

சுருக்க உரை

உனது எழுதற்கரிய ஆறு முகங்களும், அழகிய நெற்றியும், வயிரம் பொதிக்கப்பட்ட சுட்டி முதலிய அணி கலன்களும், பரிசுத்தமான பன்னிரண்டு குண்டலங்களும், இரத்தினக் காதணியும், பத்மக் கரங்களும், செம்பொன்னாலகிய பூணூலும், உடை மணியும், அரை வடமும், திருவடிகளும், அழகிய மயிலும், கையில் ஏந்திய வேலாயுதமும் பொருந்தி அமைந்த அழகு மயமான குமரனே பார்வதியும், முக்கண்ணராகிய சிவபெருமானும் பெற்ற பிள்ளையே தேவர்கள் தம்பிரானே உன் திருவடிகளைச் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ? [கொடிய, இடர் நிறைந்த வாழ்க்கையும், முடிவே இல்லாத பிறப்புக்களும் ஒழிய, உனது திருவடி எனக்கு சித்திக்குமாறு உன் உள்ளம் நினைக்காதோ?]



விளக்கக் குறிப்புகள்


 முருகனின் உடல் அழகு இப்பாட்டில் விளக்கப்பட்டுள்ளது
எழுதரிய அறுமுகமும் அணி நுதலும்
ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே 
                                                            - திருநாவுக்கரசர் தேவாரம்
பழுதுறாத பாவாணர் எழுதொணாத தோள்வீர 
                                                         –திருப்புகழ்,  குருதிதோலி

முக்கண் சிவன் பெறும் சற் புத்ர – “அரன் அருள் சற்புதல்வோனே அருணகிரி பெருமாளே” –  திருப்புகழ், இரவு பகல் பல காலும்

பன்னிரு கருணை விழி-  “ இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே”  
                                                            -திருப்புகழ், வதை பழகு



No comments:

Post a Comment