பின் தொடர்வோர்

Sunday 25 November 2018

348.எழுபிறவி

348
பொது

        தனனதன தான தத்த தனனதன தான தத்த
        தனனதன தான தத்த                    தனதான


எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
        இடர்முளைக ளேமுளைத்து                    வளர்மாயை
எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து
        இருளிலைக ளேதழைத்து                           மிகநீளும்
இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து
        இடியுமுடல் மாமரத்தி                                 னருநீழல்
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
        இனியதொரு போதகத்தை                    யருள்வாயே
 வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற
        மதியிரவி தேவர்வஜ்ர                              படையாளி
மலர்கமல போனிசக்ர வளைமருவு பாணிவிக்ர
        மறையஎதிர் வீரவுக்ரர்                         புதல்வோனே
 அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு
        அசலமிசை வாகையிட்டு                        வரும்வேலா
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
        அமரர்சிறை மீளவிட்ட                            பெருமாளே


பதம் பிரித்து உரை

எழு பிறவி நீர் நிலத்தில் இரு வினைகள் வேர் பிடித்து
இடர் முளைகளே முளைத்து வளர் மாயை
எழு பிறவி - ஏழு பிறப்புகளாக நீர் நிலத்தில் - நீர் சூழ்ந்த நிலத்தில் இரு வினைகள் ஏர் பிடித்து - நல் வினை, தீ வினை என்ற வேர்கள் ஊன்றிக் கொண்டு இடர் - துன்பம் என்னும்  முளைகளே - முளைகள் முளைத்து வளர் மாயை என்னும்முளைக்க வளர்ந்து மாயை ஆகிய பொய்த் தோற்ற உணர்ச்சிகள்

எனும் உலவையே பணைத்து விரகம் குழையே குழைத்து
இருள் இலைகளே தழைத்து மிக நீளும்
உலவையே - கொம்புகள் பணித்து - செழிப்புற்று விரகம் குழை - காமம் என்கின்ற தளிர்கள் குழைத்து - தளிர் விட்டு இருள் இலைகளே - இருட்டு (அஞ்ஞானம்) என்கின்ற இலைகள் தழைத்து - செழிப்புடன் தழைத்து மிக நீளும் - மிகப் பெரிதாகி

இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து
இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல்
இழவு - கேடு (என்னும்) நனையே பிடித்து - பூ மொட்டுகள் அரும்புவிட மரணம் - இறப்பு என்னும் பழமே பழுத்து - பழம் பழுத்து இடியும் உடல் - (இறுதியில்) முறிந்து அழிந்து போகின்ற உடல் எனப்படும் மா மரத்தின் - பெரிய மரத்தின் அரு நீழல் - அரிய நிழலாகிய

இசையில் விழ ஆதிபத்தி அழியும் மு(ன்)னமே எனக்கு
இனியது ஒரு போதகத்தை அருள்வாயே
ஆதபத்தி (ஆதபத்திரம்) - குடை (உடல் என்னும் நிழல் தரும் மாமரக் குடை) இசையில் விழ - அதன் பண்பு இழந்துபட அழியும் முன்னமே எனக்கு - அழிந்து போவதற்கு முன்பே (நீ) எனக்கு இனியத ஒரு - இனிமை தரும் போதகத்தை - உபதேச மொழியை அருள்வாயே - அருள்வாயாக

வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற
மதி இரவி தேவர் வக்ர படையாளி
வழுவு நெறி பேசு - தவறான வழியைப் பேசிய தக்கன் - தக்கன் இசையும் - அமைத்த மக சாலை உற்ற - யாக சாலைக்குச் சென்றிருந்த மதி - சந்திரன் இரவி - சூரியன் தேவர் - தேவர்கள் வஜ்ர படையாளி - குலிசாயுதப் படையைக் கொண்ட இந்திரன்

மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம்
மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே
மலர் கமல போனி - (திருமாலின் உந்தித்) தாமரை மலரில் தோன்றிய பிரமன் சக்ர - சக்கரம் வளை - சங்கு (இவைகளை) மருவு பாணி - ஏந்திய திருக்கைகளை உடைய திருமால் ஆகியவர்களின் விக்ர மறைய - பராக்கிரம் மறைந்து ஒடுங்க எதிர் - அவர்களை எதிர்த்து அடக்கிய       வீர உக்ரர் - வீர உக்ர மூர்த்தியான சிவபெருமானின் புதல்வோனே - மகனே

அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு
அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா
அழகிய கலாப கற்றை - அழகான தோகைக் கூட்டத்தைக் கொண்ட விகட மயில் - அழகிய மயிலில் ஏறி - மீது ஏறி எட்டு அசலம் மிசை - எட்டுத் திக்குகளில் உள்ள மலைகளிலும்  வாகை இட்டு - வெற்றி கொண்டு வரும் வீரா - வருகின்ற வீரனே

அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி
அமரர் சிறை மீள விட்ட பெருமாளே

அடல் - வலிமை வாய்ந்த அசுரர் சேனை கெட்டு முறிய - அசுர்களுடைய சேனை அழிபட்டு முறியும்படி மிக மோதி வெட்டி - மிகவும் பலமாகத் தாக்க அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே - தேவர்கள் சிறையிலிருந்து வரும்படி செய்த பெருமாளே

 எழுபிறவி – பிறப்பு தாவரம், ஊற்வன, நீர்வாழ்வன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர் என ஏழ் வகைப்படும்

சுருக்க உரை

ஒரு மரம் போல் உலகில் பிறந்து, முளைத்து, துளிர் விட்டு, மாயை என்னும் கொம்பு விட்டு, காமம் என்னும் தளிர்கள் தளிர் விட்டு அஞ்ஞானம் என்ற இலைகள் தழைத்து, பெரிதாகி, கேடு என்னும் பூ மொட்டுக்கள் அரும்புவிட, மரணம் என்னும் பழம் பழுத்து, முடிவில் இவ்வுடல் அழிந்து போகும் இங்ஙனம் இந்த மரத்தின் குடையில் வாழ்ந்து அழியும் முன் உன் உபதேச மொழியைத் தந்து அருளுக

தவறான யாகத்தை அமைத்த தக்ஷ்ன் யாக சாலைக்குச் சென்ற சந்திரன், சூரியன், இந்திரன், திருமால், பிரமன் இவர்களின் வீரத்தை அடக்கிய சிவபெருமானின் புதல்வனே அழகிய மயிலில் எட்டு திக்குகளில் உள்ள மலைகளும் நடுங்க வலம் வந்தவனே அசுரர் சேனைகளை அழித்தவனே எனக்கு இனியதொரு போதகத்தை அருள்வாயாக

விளக்கக் குறிப்புகள்
1.   எழு பிறவி---நீழல்
உடல் ஒரு மரத்துக்கு ஒப்பிடப்பட்டுள்ளது
யானெனப் பெயரிய நச்சு மாமரம் நனிமிக முளைத்துப்
பொய்யென கவடுகள் போக்கிச் செய்யும், பாவப் பஃறழை
பரப்பிப், பூவெனக் கொடுமை அரும்பிக், கடுமை மலர்ந்து,
துன்பப் பல்காய் தூக்கிப், பின்பு மரணம் பழுத்து,
நரகிடை வீழ்ந்து தமக்கும் பிறர்க்கும் உதவாது,
இமைப்பிற் கழியும் இயற்கையோ படைத்தே                 ---பட்டினத்தடிகள்

2. ஆத பத்தி
ஆத பத்திரம் என்பதன் கடைக்குறை

3. வீர உக்ரரர் புதல்வோனே
வீர பத்திரர் சிவபிரானது ஏவலால் யாகத்தைச் சிதைத்தவராதலின்   யாகத்தை அழித்த மூல புருடர் சிவனே ஆவர்.
தக்கன் வேள்வி  தகர்த்தருள் ஆலவாய்ச் சொக்கனே ---
                                                                                        சம்பந்தர் தேவாரம்

மரம் - உடல் உருவகம்


No comments:

Post a Comment