344
பொது
தானா தனந்த
தானா தனந்த
தானா தனந்த தனதான
ஊனே றெலும்பு சீசீ மலங்க
ளோடே நரம்பு கசுமாலம்
ஊழ்நோ யடைந்து மாசான மண்டு
மூனோ டுழன்ற கடைநாயேன்
நானா ரொடுங்க நானார் வணங்க
நானார் மகிழ்ந்து உனையோத
நானா ரிரங்க நானா ருணங்க
நானார் நடந்து விழநானார்
தானே புணர்ந்து தானே யறிந்து
தானே மகிழ்ந்து அருளூறித்
தாய்போல் பரிந்த தேனோ டுகந்து
தானே தழைந்து சிவமாகித்
தானே வளர்ந்து தானே யிருந்த
தார்வேணி யெந்தை யருள்பாலா
சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
சாரூப தொண்டர் பெருமாளே.
பதம் பிரித்து உரை
ஊன்
ஏறு எலும்பு சீ சீ மலங்கள்
ஓடே
நரம்பு கசு மாலம்
ஊன் ஏறு - மாமிசத்தின் மேலே ஏறி மூடியுள்ள. எலும்பு - எலும்பு. சீ சீ மலங்களோடே
- சீசீ என வெறுக்கத் தக்க அழுக்குகள் இவையுடன். கசுமாலம் - பிற அசுத்தங்கள்.
ஊழ்
நோய் அடைந்து மாசு ஆன மண்டும்
ஊனோடு
உழன்ற கடை நாயன்
ஊழ் நோய் - ஊழ்வினை சம்பந்தமாக வரும் நோய்கள் (இவைகளை அடைந்து) மாசான மண்டும் - குற்றங்களே நெருங்கிச் சேருகின்ற ஊனோடு - (இந்த) உடலோடு உழன்ற - அலைச்சல் உற்ற கடை நாயேன் - இழிவுபட்ட நாயை ஒத்தவனாகிய நான்
நான்
ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க
நான்
ஆர் மகிழ்ந்து உ(ன்)னை ஓத
நான்
ஆர் இரங்க நான் ஆர் உணங்க
நான்
ஆர் நடந்து விழ நான் ஆர்
நான் ஆர் ஒடுங்க.......நான் ஆர் விழ - உயிர்களிடத்தே இரக்கம் கொள்ளுதல், அடங்கி ஒடுங்குதல், வணங்கிப் பணிதல், மகிழந்து உனை ஓதுதல் முதலிய நல்ல பண்புகள் என் இச்சையில் உள்ள செயல்களா?
தானே
புணர்ந்து தானே அறிந்து
தானே
மகிழ்ந்து அருள் ஊறி
தானே புணர்ந்து, தானே அறிந்து, தானே மகிழ்ந்து - புணரும் பொருளும், அறிபவனும், மகிழ்பவனும் தானேயாய். அருள் ஊறி - அருள் சுரந்து.
தாய்
போல் பரிந்த தேனோடு உகந்து
தானே
தழைந்து சிவமாகி
தாய் போல் பரிந்த தேனோடு - தாய் போல் அன்பைக் காட்டும் தேன் அனைய தேவியுடன் உகந்து - மகிழ்ந்து. தானே
தழைந்து -
செழிப்புடன் விளங்கி சிவம் ஆகி - சிவமாகத் திகழ்பவனும் தானே - தானேயாய்
தானே
வளர்ந்து தானே இருந்த
தார்
வேணி எந்தை அருள் பாலா
தானே
- தானேயாய்.
வளர்ந்து - வளர்பவனும். தானே இருந்த - அழியாது இருப்பவனும். தார் வேணி எந்தை - பூமாலை அணிந்த சடையினராகிய என் தந்தையாகிய சிவபெருமான். அருள் பால் - அருளிய குழந்தையே
சாலோக
தொண்டர் சாமீப தொண்டர்
சாரூப
தொண்டர் பெருமாளே.
சாலோக தொண்டர், சாமீப தொண்டர், சாரூப தொண்டர் - சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று வகையில் உள்ள அடியார்களுக்கும். பெருமாளே - பெருமாளே.
சுருக்க
உரை
ஊனும், எலும்பும் கூடி
மலங்கள் நிறைந்த உடல் எடுத்து, நோய் வாய்ப்பட்டு, அலைச்சல் உற்ற இழிவுபட்ட அடியேனாகிய
நான், அடங்கி ஒடுங்கவும், வணங்கவும், நடக்கவும், விழவும், என் இச்சையில் உள்ளதா?
தானே அறிபவனும், மகிழ்பவனும்
ஆகி, தாய் போல் அன்பு காட்டும் தேன் அனைய தேவியுடன் செழிப்புடன் விளங்கிச், சிவமாயத்
திகழ்பவனும் தானே ஆகி, வளர்பவனும், அழியாது இருப்பவனும் தன்னந் தனியே நின்று விளங்குபவனும்
ஆகிய பெருமாளே, சிவபெருமானின் குழந்தையே, மூன்று வகையில் உள்ள தொண்டர்கள் பெருமாளே,
அடங்கி ஒடுங்கவும் வணங்கவும் ஓதவும் விழவும் நான் ஆர்?
விளக்கக்
குறிப்புகள்
1. தானேபுணர்ந்து.....
தனக் கென் றெதுவும் புணரா இயல்பில் தனி ஞான முதற் பொரு ளான பிரான் -- தணிகைப் புராணம் நாரதன்
பிறவாதே தோன்றிய பெருமான் தன்னை
பேணார் அவர் தம்மைப் பேணாதானை
--- திருநாவுக்கரசர் தேவாரம்.
பிறவா யாக்கைப் பெரியோன்-- அவதாரம் என்ற பெயரில் ஒரு தாயின் வயிற்றிலும் பிறவாத மஹாதேவனாகிய சிவன்
- சிலப்பதிகாரம்
உதியா, மரியா, உணரா, மறவா – கந்தர் அநுபூதி
2 சாலோக தொண்டர்....
இப்பாடலில் சிவ சன்மார்க்க நிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சாலோகம் - சிவன் உலகம் (இறைவனோடு ஒரே இடத்தில் இருக்கும் நிலை). சாமீபம் - சிவன் அண்மை (இறைவனோடு நெருங்கி இருக்கும் நிலை). சாரூபம் - சிவன் உருவாதல் (இறைவன் உருப் பெற்று விளங்கும் பேறு).
சாயுச்சியம் - சிவனாதல் (இறைவனோடு இரண்டறக் கலத்தல்—ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியம் கொண்ட மோட்ஷ நிலை).
சாயுச்சிய பதவியில் இறைவனோடு இரண்டறக் கலத்தலால் ஏனைய மூவகைத் தொண்டர்களை மட்டும் கூறினார்.
சரியை முதலிய நான்கும் முறையே
தாசமார்க்கம், புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனவும் பெயர்
பெறும் எனவும், அந்நெறிகளில் நிற்பார் தொண்டர், மைந்தர், சாதகர், போதகர் எனப் பெயரெய்துவார்
எனவும், அவரெய்தும் பயன் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் பதமுத்தி
பரமுத்திகளுமாம் எனவும் சொல்வார்கள்
நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டில்லாத் தற்பதம்
தானென்று நானெற்ற தத்துவ நல்கலால்
தானென்றும் நானெற்றுஞ் சாற்றகில் லேனே. - திருமந்திரம்
அறிபவன் நான்,
அறியப்படும் பொருள் சிவன் என்று எண்ணி ஆராய்ந்து நான் சிவனைச் சென்று சேர்ந்தேன். அப்போது
சிவன், சீவன் என்ற இரு வேறு நிலைகள் இல்லை! சீவனே சிவன் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன்.
அதனால் நான், அறிபவன் அறியப்படும் பொருள் என்ற நிலைகளைக் கடந்து, பிரித்து அறிய இயலாத
பெரு நிலையை அடைந்து விட்டேன். ‘அது’வாக நானே மாறிவிட்டேன். சிவன், சீவன் என்ற வேறுபாடுகள்
இன்றி அவனுடன் ஒன்றி விட்டேன்.
விளம்பி திருகார்த்திகை திருநாள்
Song no 345 is missing
ReplyDelete