பின் தொடர்வோர்

Wednesday 28 November 2018

350.ஏட்டிலேவரை

350
பொது

             தாத்த தானன தாத்த தானன
             தாத்த தானன         தந்ததான


ஏட்டி லேவரை பாட்டி லேசில
        நீட்டி லேயினி                            தென்றுதேடி
ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக
        லேற்ற மானகு                          லங்கள்பேசிக்
காட்டி லேயியல் நாட்டி லேபயில்
        வீட்டி லேஉல                              கங்களேசக்
காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண
        யாக்கை மாய்வதொ                  ழிந்திடாதோ
கோட்டு மாயிர நாட்ட னாடுறை
        கோட்டு வாலிப                      மங்கைகோவே
கோத்த வேலையி லார்த்த சூர்பொரு
        வேற்சி காவள                     கொங்கில்வேளே
பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
        பூட்கை சேர்குற                         மங்கைபாகா
பூத்த மாமலர் சாத்தி யேகழல்
        போற்று தேவர்கள்                       பெருமாளே


பதம் பிரித்தல்

ஏட்டிலே வரை பாட்டிலே சில
நீட்டிலே இனிது என்று தேடி
ஏட்டிலே வரை –  எழுதப்படுகின்ற  பாட்டிலே - பாடல்களும் நீட்டிலே - நீட்டி இசை பாடுதலும்  இனிது என்று தேடி - (பொருள் சம்பாதிப்பதற்கு)  இனிய வழிகள் என்று நினைத்து

ஈட்டு மா பொருள் பாத்து உ(ண்)ணாது
இகல் ஏற்றமான குலங்கள் பேசி
ஈட்டும் மா பொருள் - சம்பாதிக்கின்ற பெரும் பொருளை பாத்து - பகுந்து உ(ண்)ணாது - உண்ணாமல் இகல் ஏற்றமான - தகுதி மிக்க  குலங்கள் பேசி  - குலப் பெருமைகளைப் பேசி

காட்டிலே இயல் நாட்டிலே பயில்
வீட்டிலே உலகங்கள் ஏச
காட்டிலே பயில் - காட்டிலும் நாட்டிலே - பொருந்திய நாட்டிலும் பயில் வீட்டிலே - பழகும் வீட்டிலும் (உள்ள) உலகங்கள் ஏச - உலகில் உள்ளோர் பழிச் சொல்லுக்கு ஆளாகி (இறுதியில்)

காக்கை நாய் நரி பேய் குழாம் உ(ண்)ண
யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ
காக்கை, நாய், நரி, பேய் குழாம் உ(ண்)ணா - காக்கையும், நாயும், நரியும், பேய்க் கூட்டங்களும் உண்ணும்படி யாக்கை - (இந்த) உடல் மாய்தல் - இறந்து படுதல்  அழிந்திடாதோ - நீங்காதோ?

கோட்டும் ஆயிர நாட்டன் நாடு உறை
கோட்டு வால் இப மங்கை கோவே
கோட்டும் - அமையப் பெற்ற ஆயிர நாட்டன் - ஆயிரம் கண்களை உடைய இந்திரனுடைய நாடு உறை - பொன்னுலகில் வாழ்கின்ற கோட்டு - தந்தங்களை உடைய வால் இப - வெண்ணிறமான ஐராவதம் என்ற யானை வளர்த்த மங்கை - தேவசேனையின் கோவே - தலைவனே

கோத்த வேலையில் ஆர்த்த சூர் பொரு
வேல் சிகாவள கொங்கில் வேளே
கோத்த வேலையில் - உலகத்தை ஆடையாக உடுத்துள்ள கடலில் ஆர்த்த - ஆர்ப்பரித்து நின்ற சூர் பொரு - சூரனோடு சண்டை செய்த வேல் - வேலாயுதத்தை ஏந்திய சிகாவள - மயிலோனே கொங்கில் வேளே - கொங்கு நாட்டில் உள்ள தலங்களில் உறையும் சேவகனே

பூட்டுவார் சிலை கோட்டு வேடுவர்
பூட்கை சேர் குற மங்கை பாகா
பூட்டு வார் சிலை - கட்டப்பட்ட நாண் ஏற்றப்பட்ட வில்லை கோட்டு வேடுவர் - மலை வேடர்களின் பூட்கை சேர் - கொள்கையில் சேர்ந்து வளர்ந்த குற மங்கை பாகா - குறப் பெண்ணாகிய வள்ளியின் பங்கனே

பூத்த மா மலர் சாத்தியே கழல்
போற்று தேவர்கள் பெருமாளே

பூத்த மா மலர் - மலர்ந்துள்ள நல்ல பூக்களை சாத்தியே - சாத்தி கழல் - (உன்) திருவடியை போற்று தேவர்கள் - போற்றும் தேவர்கள் பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

ஏட்டில் எழுதியும், நீண்ட பாடல்களைப் பாடியும், செல்வந்தர்கள் இடமிருந்து பொருளைப் பெற்று, பிறருக்கு பங்கிட்டு உண்ணாமல், உலகில் உள்ளோர்பழிகளுக்கு ஆளாகி, இறுதியில் இறந்து பட்டு, இந்த உடல்,  நாய் நரிகளுக்கு இரையாதல்,  எனக்கு ஒழியாதா

ஆயிரம் கண்களை உடைய இந்திரன் மகளான தேவசேனையின் தலைவனே, கடல் ஆர்ப்பரிக்கும் படி நின்ற சூரனுடன் வேல ஏந்திப் போர் செய்தவனே, கொங்கு நாட்டு மலைகளில் வீற்றிருப்பவனே, வள்ளியின் பங்கனே உன் திருவடியைப் போற்றும் தேவர்கள் தலைவனே என உடல் மாய்வது ஒழிந்திடாதோ?

விளக்கக் குறிப்புகள்

  1.  பாத்து உணா
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்   --  திருக்குறள்
  2.  கொங்கில் வேளே
கொங்கு நாட்டில் உள்ள ஸ்தலங்கள்: சென்னிமலை, மருதமலை முதலியன
  3.  வேடுவர் பூட்கை - வேடுவரின் பழக்க வழக்கங்கள்—
       ஆடை, அணிகலன்கள், தினை காத்தல் முதலியன




No comments:

Post a Comment