பின் தொடர்வோர்

Thursday 29 November 2018

354.கருப்பற்றுறி

354
பொது

                 தனத்தத் தானத்          தனதானா


கருப்பற் றுறிப் பிறவாதே
      கனக்கப் பாடுற்                     றுழலாதே
திருப்பொற் பாதத் தநுபூதி
      சிறக்கப் பாலித்                  தருள்வாயே
பரப்பற் றாருக் குரியோனே
      பரத்தப் பாலுக்                 கணியோனே
திருக்கைச் சேவற் கொடியோனே
      செகத்திற் சோதிப்               பெருமாளே

பதம் பிரித்து உரை

கருப்பத்து ஊறி பிறவாதே
கனக்க பாடு உற்று உழலாதே
கருப்பத்தில் - கருவில் ஊறிப் பிறவாதே - அலைப்புண்டு நான் பிறவாமலும் கனக்க - மிகவும் பாடு உற்று - வருத்தங்களை அடைந்து உழலாதே - திரியாமலும்

திரு பொன் பாதத்து அனுபூதி
சிறக்க பாலித்து அருள்வாயே
திரு - முத்திச் செல்வமாகிய (உனது) பொன் - அழகிய பாதத்து -  திருவடி அனுபூதி - அனுபவச் சிந்தனையை சிறக்க - சிறப்புற பாலித்து அருள்வாயே - எனக்கு வழங்கி அருள் புரிவாயாக

பரப்பு அற்றாருக்கு உரியோனே
பரத்த அப்பாலுக்கு அணியோனே
பரப்பு - ஆசைப் பெருக்கு அற்றாருக்கு - இல்லாதவர்களுக்கு உரியோனே - உரியவனே பரத்த - மேலானதாயுள்ள யாவற்றையும் அப்பாலுக்கு - கடந்து அப்பால் உள்ள இடத்துக்கு அணியோனே - அருகில் இருப்பவனே

திரு கை சேவல் கொடியோனே
செகத்தில் சோதி பெருமாளே

திருக்கை சேவல் கொடியோனே - திருக்கரத்தில் சேவல் கொடியை உடையவனே செகத்தில் சோதிப் பெருமாளே - உலகில் சோதிப் பொருளான பெருமாளே

சுருக்க உரை

நான் கருவில் பிறவாமலும், மிக்க வருத்தங்களை அடைந்துத்திரியாமலும்,  உன் அழகிய திருவடிகளின் அனுபவச் சிந்தனையை எனக்கு வழங்கி அருள்வாயாக. ஆசைப்பெருக்கு அற்ற பெரியோர்களுக்கு உரியவனே, மேலானதாய் யாவற்றையும் கடந்து அப்பால் உள்ள நிலைக்கு அருகில் இருப்பவனே,  திருக்கரத்தில் சேவல் கொடியை உடையவனே, உலகில் சோதிப் பொருளானபெருமாளே, எனக்கு அனுபூதி அருள்வாயே

விளக்கக் குறிப்புகள்

1.கருப்பத்து ஊறிப் பிறவாதே
ஒருமதித் தான்றியன் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் இருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தச மதி தாயொடு தான்படும்
துக்க சாகரம் துயர் இடைப் பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்)
                                                  -- மாணிக்க வாசகர் திருவாசகம்
2 செகத்தில் சோதிப் பெருமாளே
   நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே---- திருப்புகழ், இத்தாரணிமீதிற்




No comments:

Post a Comment