பின் தொடர்வோர்

Tuesday, 6 August 2019

383.நரையொடு


383
பொது

                 தனதன தத்த தந்த தானத்த     
                 தனதன தத்த தந்த தானத்த
                 தனதன தத்த தந்த தானத்த     தனதான

நரையொடு பற்க ழன்று தோல்வற்றி
   நடையற மெத்த நொந்து காலெய்த்து
   நயனமி ருட்டி நின்று கோலுற்று             நடைதோயா
நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து
   நமதென மெத்த வந்த வாழ்வுற்று
   நடலைப டுத்து மிந்த மாயத்தை             நகையாதே
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற
   ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு
   மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும்     வினையோடு
மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு
   மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன்
   விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு           வினவாதோ
உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு
   மொளிபெற நற்ப தங்கள் போதித்து
   மொருபுடை பச்சை நங்கை யோடுற்று        முலகூடே
உறுபலி பிச்சை கொண்டு போயுற்று
   முவரிவி டத்தை யுண்டு சாதித்து
  முலவிய முப்பு ரங்கள் வேவித்து            முறநாகம்
அரையொடு கட்டி யந்த மாய்வைத்து
   மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க
   அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து          மரவோடே   
அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த
   அரியய னித்தம் வந்து பூசிக்கும்
   அரநிம லர்க்கு நன்றி போதித்த            பெருமாளே.

பதம் பிரித்து உரை

நரை ஒடு பல் கழன்று தோல் வற்றி
நடை அற மெத்த நொந்து கால் எய்த்து
நயனம் இருட்டி நின்று கோல் உற்று நடை தோயா

நரையொடு - மயிர் நரைக்கவும் பல் கழன்று - பற்கள் கழன்று விழவும் தோல் வற்றி - தோல் வற்றிப் போகவும் நடை அற - நடை அற்றுப் போகவும் மெத்த நொந்து - மிகவும் நோவுற்று கால் எய்த்து - கால்கள் இளைத்துப் போகவும் நயனம் இருட்டி நின்று - கண்கள் இருளடைந்து பார்வையை இழந்து நின்று கோல் உற்று - தடியை ஊன்று கோலாகக் கொண்டு நடை தோயா - நடை பயின்று.

நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து
நமது என மெத்த வந்த வாழ்வு உற்று
நடலை படுத்து இந்த மாயத்தை நகையாதே

நழுவும் - நழுவி மறைந்து (இறந்து) போகும் விடக்கை - (இந்த) மாமிச உடலை ஒன்று போல் வைத்து - நிலைத்து நிற்கும் ஒரு பொருள் போல் நினைத்து நமது என - நம்முடையது என்று உடைமைகளைப் பாராட்டி மெத்த வந்த  வாழ்வுற்று - அங்ஙனம் சேகரித்து வந்த நல் வாழ்வை அடைந்து நடலை படுத்தும் - (முடிவில்) துன்பப் படுத்தும் இந்த மாயத்தை - இந்த மாய வாழ்க்கையை நகையாதே - (நீ) சிரித்து விலக்காமல்.

விரை ஒடு பற்றி வண்டு பாடு உற்ற
ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு
மிளிரும் மையை செறிந்த வேல் கட்கும் வினை ஓடு

விரையொடு பற்றி - நறு மணத்தை நுகர்ந்து வண்டு பாடுற்ற - வண்டுகள் பாட ம்ருகமதம் அப்பி - கஸ்தூரியைத் தடவி வந்த ஓதிக்கு - வந்த தோய்ந்துள்ள கூந்தலுக்கும் மிளிரும் - விளங்கும். மையைச் செறிந்த - மை தீட்டிய வேல்கட்கும் - வேல் போன்ற கண்களுக்கும் வினையோடு - தந்திர எண்ணத்துடன்.
ம்ருகமதம் - கஸ்தூரி எனப்படும் ஒரு வகை மானிலும், அதனின்று பெறப்படும் ம்ருகமதம் என்று சிறப்பித்துக் கூறப்படும் விசேஷமான கந்த த்ரவ்யம்

மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும்
இடை படு சித்தம் ஒன்றுவேன் உன்
விழுமிய பொன் பதங்கள் பாடற்கு வினவாதோ

மிகு கவின் இட்டு நின்று - மிக்க அழகைச் செய்து அலங்காரத்துடன் நின்ற மாதர்க்கு - விலைமாதர்களுக்கு இடைபடு - மத்தியில் அவதிப்படுகின்ற சித்தம் ஒன்றுவேன் - மனம் பொருந்துதலை உடையவனாகிய நான். உற்று - அன்பு உற்று உன் விழுமிய - உனது சிறந்த பொன் - அழகிய. பதங்கள் - திருவடியை பாடுதற்கு - பாடிப் புகழ்தற்கு வினவாதோ - ஆய்ந்து மேற் கொள்ள மாட்டேனோ?

உரை ஒடு சொல் தெரிந்த மூவர்க்கும்
ஒளி பெற நல் பதங்கள் போதித்தும்
ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் உலகூடே

உரையொடு - பொருளோடு சொல் தெரிந்த - சொல்லும் தெரிந்த (சிவம், சக்தி இவைகளின் உண்மை தெரிந்த) மூவர்க்கு - சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் மூவர்க்கும் ஒளி பெற - அவர்கள் புகழ் ஒளி பெற நல் பதங்கள் - சிறந்த எழுத்துக்களான ஐந்தெழுத்தை உபதேசம் செய்தும் ஒரு புடை - தமது ஒரு பக்கத்தில் பச்சை நங்கையோடு உற்ற - பச்சை நிறப் பெருமாட்டியாகிய பார்வதியோடு உற்றும் - அமைந்தும் உலகூடே - உலகம் எல்லாம்.

உறு பலி பிச்சை கொண்டு பொய் உற்றும்
உவரி விடத்தை உண்டு சாதித்தும்
உலவிய முப்புரங்கள் வேவித்தும் உற நாகம்

உறு - கிடைக்கும் பலி பிச்சை கொண்டு போயுற்றும் - பிச்சையை ஏற்றுக் கொண்டும் உவரி விடத்தை உண்டு- (கடலில் எழுந்த விடத்தை) உண்டு சாதித்தும் - (தமது பரத்தை) நிலை நிறுத்தியும்  உலவிய - பறந்து உலவிச் சென்ற முப்புரங்கள் - திரி புரங்களையும் வேவித்தும் - எரித்துச் சாம்பலாக்கியும் உற நாகம் - பொருந்தும்படி பாம்பை.

அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும்
அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க
அழகு திருத்தி இந்து மேல் வைத்தும் அரவோடே

அரையொடு கட்டி - இடுப்பில் கட்டி அந்தமாய் வைத்து - அழகாக அமைத்தும். அவிர் சடை வைத்த - விளங்கும் சடையில் தரித்துள்ள கங்கையோடு ஒக்க - கங்கையுடன் ஒத்திருக்க அழகு திருத்தி - அழகு பெற்று இந்து மேல் வைத்தும் - பிறைச் சந்திரனை மேலே வைத்தும் அரவோடே - பாம்புடன்.

அறுகு கொடு நொச்சி தும்பை மேல் வைத்த
அரி அயன் நித்தம்  வந்து பூசிக்கும்
அர நிமலர்க்கு நன்று போதித்த பெருமாளே.

அறுகொடு - அறுகம் புல்லோடு நொச்சி - நொச்சியையும் தும்பை மேல் வைத்த - தும்பையையும் மேலே சூடியுள்ளவரும் அரி அயன் - திருமாலும், பிரமனும் நித்தம் வந்து பூசிக்கும் - நாள்தோறும் வந்து பூசை செய்யும். அரன் - சிவபெருமான் ஆகிய. நிமலர்க்கு - நிர்மல மூர்த்திக்கு நன்றி போதித்த பெருமாளே - நல்ல உபதேசப் பொருளைப் போதித்தப் பெருமாளே.

சுருக்க உரை

சிறந்த அங்கங்களைக் கொண்ட விலை மாதர்களுடன் நெருங்கிப் பழகும் ஒழுக்கம் உள்ளவனாகிய அடியேன், மயிர் வெளிர, பற்கள் கழல, தோல் வற்ற, நடை தளர, நோய் வந்து சேர, கால் இளைக்க, கண்கள் இருள, இறந்து படும் இந்த உடலைப் பேணி, உடைமைகளைப் பாராட்டி, முடிவில் துன்பத்தை உண்டாக்கும் இந்த மாய வாழ்க்கையைச் சிரித்து விலக்காமல், உனது அழகிய திருவடிகளைப் பாடிப் போற்ற ஆய்ந்து மேற்கொள்ள மாட்டேனோ?

சைவக் குரவர்கள் மூவருக்கும் சொல்லும் பொருளும் நன்கு தெரியும்படி ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்தவரும், உமா தேவியைப் பாகத்தில் கொண்டவரும், பிச்சை எடுத்து உண்பவரும், திரிபுரங்களை எரித்தவரும், பாம்பை இடுப்பில் தரித்தவரும், சடையில் கங்கையையும், நிலவையும் வைத்தவரும், பாம்பு, நொச்சை, அறுகு, தும்பை ஆகியவற்றை அணிந்தவரும், அரியும், பிரமனும் தினமும் பூசித்தவருமாகிய சிவபெருமானுக்கு நல்ல உபதேசப் பொருளை உபதேசித்த பெருமாளே. உன் புகழைப் பாடுதற்கு அருள் புரியலாகாதா?

ஒப்புக
  1. நற்பதங்கள் போதித்து...
    அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி
    முந்தி எழும் பழைய வல்வினை மூடாமுன்.
                                                            ..சுந்தரர் தேவாரம்

  1. உறுபலி பிச்சை கொண்டு போயுற்று...
வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண   மாபலி முதற்கொ ணாதன்  முருகோனே...திருப்புகழ், கூரியகடை.



No comments:

Post a Comment