பின் தொடர்வோர்

Wednesday, 7 August 2019

385. நாலிரண்டு


385
பொது

                 தான தந்தன தானா தானன
                 தான தந்தன தானா தானன
                 தான தந்தன தானா தானன        தனதான

நாலி ரண்டித ழாலே கோலிய
   ஞால முண்டக மேலே தானிள
   ஞாயி றென்றுறு கோலா காலனு     மதின்மேலே
ஞால முண்டபி ராணா தாரனும்
   யோக மந்திர மூலா தாரனு
   நாடி நின்றப்ர பாவா காரனு               நடுவாக
மேலி ருந்தகி ரீடா பீடமு
  நூல றிந்தம ணீமா மாடமு
   மேத கும்ப்ரபை கோடா கோடியு           மிடமாக
வீசி நின்றுள தூபா தீபவி
   சால மண்டப மீதே யேறிய
   வீர பண்டித வீரா சாரிய                 வினைதீராய்
ஆல கந்தரி மோடா மோடிகு
   மாரி பிங்கலை நானா தேசிய
   மோகி மங்கலை லோகா லோகியெ வுயிர்பாலும்   
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
   ஆதி யம்பிகை ஞாதா வானவ
   ராட மன்றினி லாடா நாடிய                 அபிராமி
கால சங்கரி சீலா சீலித்ரி
   சூலி மந்த்ரச பாஷா பாஷணி
   காள கண்டிக பாலீ மாலினி               கலியாணி
காம தந்திர லீலா லோகினி
   வாம தந்திர நூலாய் வாள்சிவ
   காம சுந்தரி வாழ்வே தேவர்கள்        பெருமாளே

பதம் பிரித்து உரை

நாலிரண்டு இதழாலே கோலிய
ஞால் அம் முண்டகம் மேலே தான் இள 
ஞாயிறு என்று உறு கோலா கலனும் அதின் மேலே

நாலு இரண்டு இதழாலே - ஆறு இதழ்த் தாமரையால் கோலிய - வகுக்கப்பட்ட ஞால் அம் - தொங்கிப் பொருந்தி உள்ள அந்த முண்டகம் மேலே - தாமரையின் மேல் உள்ள (சுவாதிட்டானம் என்னும்) ஆதார நிலையில் தான் இள ஞாயிறு என்று உறு - உதிக்கும் செஞ் சூரியன் என்று சொல்லும்படியான செம்பொன் நிறமுள்ள கோலாகலனும் - ஆடம்பரம் உள்ள பிரமனும் அதின் மேலே - அந்த ஆதாரத்தின் மேல்  நிலையில்.

ஞாலம் உண்ட பிராண ஆதாரனும்
யோக மந்திர மூலாதாரனு(ம்)
நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்) நடுவாக

ஞாலம் உண்ட - பூமியை உண்டவரும். பிராண ஆதாரனும் - உயிர்களைக் காக்கும் தொழிலைக் கொண்டவரும் (மணி பூரகம் என்னும் ஆதார நிலையில் உள்ள) திருமாலும் யோக மந்திர மூலாதாரனும் - யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் (அனாகதம் என்ற ஆதார நிலையில்) உள்ள ருத்திரனும். நாடி நின்ற - (இம்மூவரும்) தேடி நிற்கும். ப்ரபாவ ஆகாரனும் - ஒளியும் மேன்மையும் கொண்ட உருவத்தனாய் (புருவ மத்தியில் உள்ள சதாசிவ மூர்த்தியும்) நடுவாக - நடு நிலையில் வீற்றிருக்க.

மேல் இருந்த கிரீடா பீடமு(ம்)
நூல் அறிந்த மணி மா மாடமும்
மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக

மேல் இருந்த - (இவர்களுக்கு) மேலான நிலையில் இருந்த கிரீடா பீடமும் - (உனது) லீலைகளுக்கு வேண்டிய இருப்பிடமும். நூல் அறிந்த - சாத்திர நூல்கள், இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான மணி - இரத்தின மயமான. மா - அழகிய மாடமும் - மண்டபமும்
ஆன மே தகு - மேன்மை வாய்ந்த. ப்ரபை - ஒளி கோடா கோடியும் - கோடிக் கணக்காய் விளங்கும் இடமாக - (உனது) இடமாகக் கொண்டு

வீசி நின்று உள தூபா தீப
விசால மண்டபம் மீதே ஏறிய
வீர பண்டித வீர ஆசாரிய வினை தீராய்

வீசி நின்றுள - வீசி நின்று காட்டப்படும். தூபா தீப - விளக்குகள் விளங்கும் விசால மண்டப மீதே ஏறிய - விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டித - வீர பண்டிதனே வீர ஆசாரிய - வீர குரு மூர்த்தியே வினை தீராய் - எனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக.

ஆல கந்தரி மோடா மோடி
குமாரி பிங்கலை நானா தேசி
அமோகி மங்கலை லோக லோகி எவ்வுயிர் பாலும்

ஆல கந்தரி - விஷம் பொருந்திய கழுத்தை உடையவள் மோடா மோடி - ஆடம்பரமுள்ள துர்க்கை (காடுகாள்) குமாரி - மூப்பு இல்லாதவள். பிங்கலை - பொன்னிறத்தவள். நானா தேசி - பலவிதமான ஒளிகளில் மோகி - விருப்பம் உள்ளவள் அமோகி - ஆசையற்றவள் மங்கலை - சுமங்கலி லோகா லோகி - எல்லா உலகங்களையும் ஈன்று காப்பவள்  எவ்வுயிர் பாலும் - எல்லா உயிர்களிடத்தும்

ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி அம்பிகை ஞாதா ஆனவர்
ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி

ஆன சம்ப்ரமி - அன்பு வைத்துள்ள பெருமிதம் உடையவள் மாதா - தாய் மாதவி - துர்க்கை ஆதி - ஆதி நாயகி. அம்பிகை - அம்பிகை ஞாதா ஆனவர் - எல்லாம் அறிந்த இறைவன் ஆட - நடிக்க மன்றினில் - (அவருடன்) அம்பலத்தில் ஆடா - நடனம் புரிந்து நாடிய - விரும்பிய. அபிராமி - அழகி.

கால சங்கரி சீலா சீலி த்ரி
சூலி மந்த்ர சபாஷா பாஷிணி
காள கண்டி கபாலி மாலினி கலியாணி

கால சங்கரி - காலனை அழித்தவள் சீலா சீலி - பரிசுத்த தேவதைகளுக்குள் தூயவள் த்ரி சூலி - முத்தலைச் சூலத்தை உடையவள். மந்த்ர சபாஷா - மந்திரங்களின் நல்ல சொற்களை பாஷிணி - பேசுபவள் காளகண்டி - கறுத்த நீல நிறக் கழுத்தை உடையவள் கபாலி - கபாலத்தை ஏந்தியவள். மாலினி - மாலையை அணிந்தவள்
கலியாணி - நித்ய கல்யாணி

காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம
சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே.

காம தந்திர - காம சாத்திரம் கூறும் லீலா லோகினி - லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள் வாம தந்திர - சத்தி வழிபாடு முறைகளைக் கூறும் ஆகம நூல்களால் ஆய்வாள் - ஆராயப்படுபவள் சிவகாம சுந்தரி வாழ்வே - சிவகாம சுந்தரியான பார்வதியின் பெருஞ் செல்வமே தேவர்கள் பெருமாளே - தேவர்கள் பெருமாளே.

சுருக்க உரை

யோக முறையில் கூறப்படும் பல ஆதார நிலைகளையும் கடந்து, சாஸ்திர நூல்கள் இறைவனிருக்குமிடம் இதுதான் என்று சொல்லப்படும் ஒளி விளங்கும் மண்டபத்தினேறி அமர்ந்துள்ள வீரபண்டிதனே, வீரகுருவே எனது வினைகளை ஒழித்தருளுக.

விஷம் பொருந்திய கழுத்தை உடையவள்; துர்க்கை; குமாரி; பொன்னிறம் கொண்டவள்; ஆசை இல்லாதவள்; எல்லா உலகங்களையும் ஈன்று காப்பவள்; எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்துள்ளவள்; தாய், ஞானம் நிறைந்த சிவ பெருமான் நடனம் செய்ய உடனிருந்து அம்பலத்தில் ஆடும் அழகி, யமனை அழித்தவள்; தூயவள்; முத்தலைச் சூலத்தை ஏந்தியவள்; கபாலம் ஏந்தியவள்; மாலை அணிந்தவள்; காம சாஸ்திரம் கூறும் லீலைகளை  உலகில் நடத்தி வைப்பவள்; ஆகம நூல்களால் ஆராயப்படுபவ;, இத்தகைய சிவகாம சுந்தரியின் பெருஞ் செல்வமே, தேவர்கள் பெருமாளே, என் வினைகளைத் தீர்ப்பாயாக.

விளக்கக் குறிப்புகள்

நமது உடலில் எப்படி யோக அல்லது குண்டலினி சக்தி ஆதரங்களிலிருந்து மேலே எழும்பி ஓவ்வொரு ஆதாரத்தையும் கடந்து எப்படி நமது சிரசில் உள்ள சஹஸ்ராரம் என்று சொல்லபடுகிற ஆயிரம் இதழ் தாமரையில் எப்படி ஐக்கியமாகின்றது  என்பதை மிக அழகாகக்  கூறுகிறார்

இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் : நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்தி வைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன. 'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம். 'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம். 'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது. 'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.  - http://www.tamilsurangam.in/literatures/arunagirinathar/thiruppugazh

இப்பாடலில் குறிப்பிட்ட யோக முறைகள் ‘நாவேறு பாமணத்தில்’  பாடலில் விளக்கப்பட்டுள்ளன.
 ஒப்புக
இள ஞாயிறு என்று உறு கோலாகலனும் அதின் மேலே... 
செம்பொனின் மேனியன் ஆம் பரமன் திருமாலும் தேட நின்ற...சம்பந்தர் தேவாரம்





2 comments:

  1. 'Sakthi Dharan' via Thiruppugazh Anbargal Bangalore
    Fri, 9 Aug, 11:37 (22 hours ago)
    to bangaloreanbargal Unsubscribe



    Many thanks to Sri Sundara Rajan for sending vert apt song for the occasion,
    After receiving this, i heard our Guruji and also detailed meaning of this song.
    Essence of Devi Bhagavatham and Soundharya Lahari,i suppose.
    We can only admire Arunagirinathar and our Guruji.
    Regards,
    Sakthidharan

    ReplyDelete
  2. Thanks for sharing this.

    அமோகி - ஆசையற்றவள்.

    This seems to be a sanskrit word. Mogha(with the fourth gha as in ghar).
    MoGha in sanskrit means - Wasted / wasteful . AmoGha therefore means unwasted or will produce results for sure (you can say Veen Pogadhadhu in Tamil).

    Lord Rama is said to posses AmoGha bhanam - It will produce results as per His intention.

    In Valmiki Ramayana, there is a sloka

    AmoGham bala veeryam the, AmoGhasthe parakramah
    AmoGham darsanam Rama, na cha MoGha tava stava
    AmoGhasthe Bhavisyanthi , bhakthi manthascha ye narah

    This comes in brahma stuthi, when seetha enters fire after Ravana vadham, Lord Brahma praises Rama
    saying you are vishnu , Narayanan , Hari . This comes at the end of the stuthi. Meaning Rama " Hey
    Rama, your strength , valor, darshanam , your sloka/ stotram rendered with bhakthi will never be in
    vain"


    This is my humble view and I may be wrong. Not sure how the meaning of the song will change when
    applied.

    Regards
    Sitaraman V

    ReplyDelete