பின் தொடர்வோர்

Wednesday, 7 August 2019

384.நாராலே


384
பொது

                     தானா தானா தானா தானா
                   தானா தானா                      தனதான

நாரா லேதோல் நீரா லேயாம்
   நானா வாசற்                             குடிலூடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
   நாய்பேய் சூழ்கைக்                   கிடமாமுன்
தாரா ரார்தோ ளிரா றானே
   சார்வா னோர்நற்                 பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலே
   தாள்பா டாண்மைத்                திறல்தாராய்  
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
   பாவார் வேதத்                          தயனாரும்
பாழூ டேவா னூடே பாரூ
   டேயூர் பாதத்                       தினைநாடாச்
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
   சேவூர் வார்பொற்                      சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
   தேவே தேவப்                         பெருமாளே.

பதம் பிரித்து உரை

நாராலே தோல் நீராலே ஆம்
நானா வாசல் குடிலூடே

நாராலே - நார் போன்ற நரம்புகளாலும். தோல் நீரால் ஆ(கு)ம் - தோலாலும் நீராலும் ஆகிய நானா - பல வகையான வாசல் குடிலூடே - வாயில்களை உடைய குடிசையாகிய இந்த உடலுள்.

ஞாதாவாயே வாழ் கால் ஏகாய்
நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆ(கு)ம் முன்

ஞாதாவாயே - அறிவு வாய்ந்தவனாய் வாழ்கால் - வாழ்கின்ற காலத்தில் ஏகு ஆய் - இறந்து போய். நாய் பேய் - நாயும் பேயும் (என் உடலை). சூழ்கைக்கு இடமா(கு)ம் முன் - சூழுவதற்குக் காலம் வருவதற்கு முன்பு.

தார் ஆர் ஆர் தோள் ஈரு ஆறு ஆனே
சார் வானோர் நல் பெரு வாழ்வே

ஆம் தார் ஆர் - ஆத்தி மாலை நிறைந்த. தோள் ஈராறு ஆன - பன்னிரு தோள்களை உடையவனே சார்வானோர் - உன்னைச் சார்ந்த அடியவர்களுக்கு பெரு வாழ்வே - பெரிய செல்வமே.

தாழாதே நாயேன் நாவாலே
தாள் பாடு ஆண்மை திறல் தாராய்

தாழாதே - தாமதிக்காமல் நாயேன் - அடியேனை நாவாலே - என் நாவைக் கொண்டு. தாள் - உனது திருவடிகளை பாடு ஆண்மைத் திறல் - பாடும் வலிமைத் திறமையை அருள் தாராய் - தந்து அருளுக.

பார் ஏழு ஓர் தாளாலே ஆள்வோர்
பாவார் வேதத்து அயனாரும்

பார் ஏழு - ஏழு உலகங்களையும்  ஓர் தாளாலே - ஒப்பற்ற தமது முயற்சியால் ஆள்வோர் - காத்தருளுகின்ற (திருமாலும்) வேதத்து பாவார் - வேதம் ஓதும் அயனாரும் - பிரமனும்.

பாழ் ஊடே வான் ஊடே பார் ஊடே
ஊர் பாதத்தினை நாடா

பாழ் ஊடே - வெட்ட வெளியிலும் வான் ஊடே - விண்ணிலும் பார் ஊடே - மண்ணிலும் ஊர் பாதத்தினை - பரவி நிற்கும் திருவடியை நாடா - நாட முடியாத

சீர் ஆர் மாதோடே வாழ்வார் நீள்
சே ஊர்வார் பொன் சடை ஈசர்

சீர் ஆர் - சிறப்பினை உடையவரும் மாதோடே வாழ்வார் - பார்வதி தேவியைப் பாகத்தில் கொண்டு வாழ்பவரும் நீள் - பெரிய, சே - இடபத்தை ஊர்வார் - வாகனமாகக் கொண்டவரும் பொன் சடை - அழகிய சடையை உடையவருமாகிய ஈசர் - சிவபெருமானுடைய.

சேயே வேளே பூவே கோவே
தேவே தேவ பெருமாளே.

சேயே - குழந்தையே வேளே - செவ்வேளே. பூவே - அழகனே கோவே - தலைவனே தேவே - தேவனே தேவர் பெருமாளே - தெய்வப் பெருமாளே.

சுருக்க உரை

நரம்புகள், தோல், நீர் இவைகளால் ஆக்கப்பட்டதும், ஒன்பது துவாரங்களை உடையதுமான குடிசையாகிய இந்த உடலுள், அறிவு வாய்ந்தனவாய் வாழ்ந்து, இறந்து போன பிறகு நாயும், பேயும் இந்த உடலை உண்ணுவதற்கு முன்னே, ஆத்தி மாலை அணிந்த பன்னிரு தோள்களை உடையவனே, உன்னைச் சார்ந்த அடியார்களுக்கு நல்ல பெரு வாழ்வே, தாமதிக்காமல் நாய் போன்ற அடியேன் எனது நாவினால் உன் திருவடிகளைப் பாடும் திறனை எனக்குத் தருவாயாக.

ஏழு உலகங்களையும் காக்கும் திருமாலும், வேதம் ஓதும் பிரமனும், எங்கேயும் காண முடியாத திருவடியை உடையவரும், பார்வதியைப் பாகமாகக் கொண்டவரும், அழகிய சடையை உடையவரும், இடபத்தை வாகனமாகக் கொண்டவரும், ஆகிய சிவபெருமானுடைய குமாரனே, சேவ்வேளே, அழகனே. தேவர்கள் பெருமாளே, உன் புகழைப் பாடும் திறனை எனக்குத் தந்து அருளுக.

ஒப்புக

1. பார் ஏழ் ஓர் தாளாலே ஆள்வோர்...
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவு உடையம்
                                                                     ..நாலாயிர திவ்யப் பிரபந்தம்
2. பாவார் வேதத்தயனாரும்....
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடுமால்
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்
.                                                                                  ..சம்பந்தர் தேவாரம்



No comments:

Post a Comment