382
பொது
தானத்த தானத்த தானத்த தானத்த
தானத்த தானத்த தனதான
தோலத்தி யாலப்பி
னாலொப்பி லாதுற்ற
தோளுக்கை காலுற்ற குடிலூடே
சோர்வுற்று வாழ்வுற்ற
கால்பற்றி யேகைக்கு
வேதித்த சூலத்த னணுகாமுன்
கோலத்தை வேலைக்கு
ளேவிட்ட சூர்கொத்தொ
டேபட்டு வீழ்வித்த கொலைவேலா
கோதற்ற பாதத்தி
லேபத்தி கூர்புத்தி
கூர்கைக்கு நீகொற்ற அருள்தாராய்
ஆலத்தை ஞாலத்து
ளோர்திக்கு வானத்த
ராவிக்கள் மாள்வித்து மடியாதே
ஆலித்து மூலத்தொ
டேயுட்கொ ளாதிக்கு
மாம்வித்தை யாமத்தை யருள்வோனே
சேலொத்த வேலொத்த
நீலத்து மேலிட்ட
தோதக்கண் மானுக்கு மணவாளா
தீதற்ற நீதிக்கு
ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த பெருமாளே.
பதம் பிரித்து உரை
தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற
தோளு கை கால் உற்ற குடிலுடே
தோல் - தோலாலும்
அத்தியால் - எலும்பினாலும்.
அப்பினால் - நீராலும் ஒப்பிலாது - ஒப்பில்லாத வகையில்
உற்ற - அமைந்துள்ள தோளு - தோள்
கைக் கால் உற்ற - கை, கால் இவை கூடிய
குடிலுடே - குடிசையாகிய இந்த உடலில்.
சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றியே கைக்கு
வேதித்த சூலத்தன் அணுகா முன்
சோர்வற்று - தளர்ந்து
போகாமல் வாழ்வுற்ற கால் - நான் வாழ்ந்திருந்த காலத்தில்
பற்றி - (உனது திருவடியைப்) பிடித்து
ஏகைக்கு - நான் வாழ் நாளைச் செலுத்துதற்கு
வேதித்த - என் மேல் மாறு கொண்ட சூலத்தன் - திரி சூலத்தை
ஏந்திய யமன். அணுகா முன் – என்னை நெருங்கிவரும் முன்பாக.
கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே
பட்டு வீழ்வித்த கொலை வேலா
கோலத்தை - தனது உருவை
வேலைக்குளே விட்ட - கடலுக்குள் (மாமரமாய்ச்) சேர்ப்பித்த சூர் - சூரன்.
கொத்தோடே பட்டு - தன் குலத்தாருடன் அழிந்து.
வீழ்வித்த - விழச் செய்த கொலை வேலா - கொலைத்
தொழில் வல்ல வேலாயுதனே.
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி
கூர்கைக்கு நீ கொற்ற அருள் தாராய்
கோது அற்ற - குற்றமற்ற.
பாதத்திலே- உனது திருவடியில்
பத்தி கூர் - பத்தி மிகுந்த.
புத்தி கூர்கைக்கு - புத்தி மிகுதற்கு
நீ கொற்ற அருள் - நீ வெற்றி தரும் திருவருளை.
தாராய் - (எனக்குத்) தந்தருளுக
ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர்
ஆவிக்கள் மாள்வித்து மடியாதே
ஆலத்தை - ஆலகால
விடத்தை ஞானத்து உளோர்க்கு - பூமியில் உள்ளவர்களும்
திக்கு - பல திசைகளில் இருந்தவர்களும் வானத்தர் - விண்ணோர்களும்.
ஆவிக்கள் மாள்வித்து - தத்தம் உயிர் மாண்டு மடியாதே - இறந்து படாமல்.
ஆலித்து மூலத்தோடே உட் கொள் ஆதிக்கும்
ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே
ஆலித்து - களித்து
நடித்து. மூலத்தோடே - அடியோடு (முழு விஷத்தையும்). உட்கொள் - உட்கொண்ட.
ஆதிக்கு - ஆதி மூர்த்திக்கும். ஆம் வித்தையாம் அத்தை
- ஏற்றதான உண்மை ஞானமாகிய அந்தப் பொருளை.
அருள்வோனே - உபதேசித்தவனே.
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட
தோதக் கண் மானுக்கு மணவாளா
சேல் ஒத்த - சேல் மீன்
போன்றதும். வேல் ஒத்த - வேலாயுதம் போன்றதும்.
நீலத்து மேலிட்ட - நீலோற்பல மலருக்கும் மேலாகவும். தோதக்
கண் - (உனக்குக்) காம வருத்தம்
தந்த கண்களைக் கொண்ட. மானுக்கு மணவாளா - மான் போன்ற வள்ளிக்குக் கணவனே.
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர்
சேவிக்க வாழ்வித்த பெருமாளே.
தீது அற்ற - குற்றம்
இல்லாத. நீதிக்குள் ஏய் - நீதி வழியில்
பொருந்த. கூர் பத்தர் - பக்தி
மிக்க பக்தர்கள். சேவிக்க - (உன்னைப்)
போற்ற. வாழ்வித்த பெருமாளே - (அவர்களை)
வாழவித்த பெருமாளே.
சுருக்க உரை
தோல்,
எலும்பு, நீர் இவைகளால் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடல் தளர்ந்து போகாது, நான் நன்றாக
வாழ்ந்திருக்கும் காலத்தில், என்னைப் பிடித்துச் செல்ல யமன் தன் திரி சூலத்துடன் நெருங்கி
வருவதற்கு முன், கடலில் தன் உருவத்தை மறைத்து மாமரமாக ஒளிந்த சூரனைக் குலத்தோடு அழிந்து
மடியும்படி விழச் செய்த கொலைத் தொழிலில் வல்ல வேலாயுதனே, குற்றமற்ற உன் திருவடியை நான்
பெறும்படி திருவருளை எனக்குத் தந்து அருளுக.
கடலில்
ஏழுந்த ஆலகால விடம் முழுவதையும் உட்கொண்ட ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு உண்மை
ஞானமாகிய அந்தப் பொருளை உபதேசித்தவனே, சேல் மீனையும், வேலையும் ஒத்ததும், வள்ளியின்
மீது காமத்தைக் கொடுத்ததுமான கண்களை உடைய வள்ளிக்கு மணவாளனே, குற்றமற்ற பத்தர்கள் உன்னைப்
போற்ற அவர்களுக்கு நல் வாழ்வை அளித்த பெருமாளே, யமன் என்னை அணுகு முன் உன் திருவடியைத்
தந்து அருளுக.
ஒப்புக
வித்தையாம் அத்தை அருள்வோனே...
ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே
...திருப்புகழ், வேதவெற்பிலே.
No comments:
Post a Comment