பின் தொடர்வோர்

Saturday, 5 October 2019

391.நீலம் கொள்


391
பொது





                         தானந்த தானத்தந்        தனதானா

நீலங்கொள் மேகத்தின்                   மயில்மீதே
   நீவந்த வாழ்வைக்கண்                 டதனாலே 
மால்கொண்ட பேதைக்குன்           மணநாறும் 
   மார்தங்கு தாரைத்தந்                 தருள்வாயே  
வேல்கொண்டு வேலைப்பண்    டெறிவோனே 
   வீரங்கொள் சூரர்க்குங்                  குலகாலா 
நாலந்த வேதத்தின்                  பொருளோனே 
   நானென்று மார்தட்டும்              பெருமாளே


பதம் பிரித்து உரை
நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே
நீ வந்த வாழ்வை கண்டு அதனாலே 
நீலம் கொள் - நீல நிறத்தைக் கொண்ட மேகத்தின்  - மேகம் போன்ற மயில் மீதே - மயில் மேல் ஏறி
நீ வந்த வாழ்வை - நீ எழுந்தருளி வந்த திருச்சபா மண்டபத்து காட்சியை  கண்டு அதனாலே - தரிசித்த காரணத்தினால்

மால் கொண்ட பேதைக்கு உன் மண(ம்) நாறும்
மார் தங்கு(ம்) தாரை தந்து அருள்வாயே
மால் கொண்ட பேதைக்கு - உன் மீது காதல் கொண்ட இந்தப் பெண்ணுக்கு உன் – உன்னுடைய  மணம் நாறும் - நறு மணம் வீசும் மார் தங்கும் - மார்பில் விளங்கும் தாரை - மாலையை தந்து அருள்வாயே - கொடுத்தருள்க.

வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே 
வீரம் கொள் சூரர்க்கும் குலகாலா
வேல் கொண்டு - வேலாயுதத்தைக் கொண்டு வேலை – கடலை பண்டு - முன்பு  எறிவோனே - வற்றும்படிச் செலுத்தியவனே வீரம் கொள் சூரர்க்கும் குலகாலா - வீரம் படைத்த சூரர் குலத்துக்கே யமனாக விளங்குபவனே

நால் அந்த  வேதத்தின் பொருளோனே 
நான் என்று மார் தட்டும் பெருமாளே.
நால் அந்த வேதத்தின் - (ருக்க, யஜுர், சாம, அதர்வண என்று சொல்லப்படும்) அந்த நான்கு வேதங்களின் பொருளோனே - பொருளாய் விளங்குபவனே நான் என்று மார் தட்டும் பெருமாளே - (உயிருக்கு உயிராய் நிற்பவன்) நான் என்றும் உயிருக்குள்ளே ஒளித்து நிற்பவன் என்றும் பெருமை பாராட்டும் பெருமாளே.

சுருக்க உரை

நீல நிறம் கொண்ட மயிலின் மேல் ஏறி நீ தந்தருளிய காட்சியைக் கண்டதினால், உன் மீது ஆசை கொண்ட இந்தப் பெண்ணுக்கு உனது நறு மணம் வீசும் உன் மார்பில் விளங்கும் மாலையைத் தருவாயாக. வேலைக் கொண்டு முன்பு கடல் வற்றும்படி செலுத்தியவனே, வீரம் கொண்ட சூரர்கள் குலத்துக்கு யமனாக விளங்குபவனே, நான்கு வேதங்களின் பொருளாய் அமைந்தவனே, உயிர்களுக்குள் உயிராய் இருக்கிறேன் என்று மார் தட்டும் பெருமாளே, எனக்கு உன் மாலையைத் தந்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்

இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது.
ஒப்புக:
1 வேல் கொண்டு வேலைப் பண்டு எறிவோனே...
  வேலை உறை நீட்டி வேலை தனில் ஓட்டு 
  வேலை விளையாட்டு  வயலூரா ...திருப்புகழ்,  ஆரமுலைகாட்டி.

2 நானென்று மார்தட்டும் பெருமாளே....
    நான் என்னும் சொல் கடவுளையே குறிக்கும். 
    உள்ளத் தொடுக்கும் புறத்துளும் நானெனுங் 
   கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்....திருமந்திரம்  
    பிறிது இன்றி நான் அமரும் பொருள் ஆகி நின்றான்...சம்பந்தர் தேவாரதம். 
முருகன் சகல கலா வல்லவன் நான்தான் என்று மார் தட்டிய வரலாறு:
வித்வத் தாம்பூலம் யாருக்குக் கொடுப்பது என்ற வாதத்தில் ஒளவையார், இந்திரன், சரஸ்வதி, அகத்தியர், ஆகியோர் தமக்கு அப்பரிசு பெற தகுதி இல்லை என மறுத்த உடன், தேவர்களும் முனிவர்களும் பார்வதியை அணுகினர். தேவி புன்னகை புரிந்து, நான் வாழைப் பழத்தின் தோல் போன்றவள். எனக்குள் இருக்கும் கனி, முத்துக் குமரனே இப்பரிசுக்குத் தக்கவன் என்று கூறி னார். பின்னர் முருகவேள் தாம்பூலத்தைப் பெற்றார் என்பது புராணம்.

  

390.நீரும் என்பு


390
பொது

              தான தந்த தான தான தான தந்த தான தான
                தான தந்த தான தான                        தனதான

நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்களோடு
   நீளு மங்க மாகி மாய                                        வுயிரூறி 
நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட  போதில் மேவி
   நீதி யொன்று பால னாகி                           யழிவாய்வந்
தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத   
   ரோடு சிந்தை வேடை கூர                               உறவாகி
ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச 
   ஊனு டம்பு மாயு மாய                             மொழியாதோ 
சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது 
   தோகை யின்கண் மேவி வேலை                    விடும்வீரா 
தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு 
   தோகை பங்க ரோடு சூது                      மொழிவோனே 
பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள்   
   பாடல் கண்டு ஏகு மாலின்                           மருகோனே 
பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல்  வேத வாய்மை 
   பாடு மன்பர் வாழ்வ தான                            பெருமாளே

பதம் பிரித்து உரை

நீரும் என்பு தோலினாலும்  ஆவது என் கை கால்களோடு
நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி
நீரும் என்பு தோலினாலும் ஆவது - நீர், எலும்பு, தோல் இவைகளால் ஆக்கப்பட்டதாகிய என் கை கால்களோடு - என்னுடைய கை, கால்கள் இவைகளோடு நீளும் - நீண்ட அங்கமாகி - அங்கங்களை உடையவதாகி மாய உயிர் ஊறி - மாயமான உயிர் ஊறப் பெற்று.

நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்ட போதில் மேவி 
நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து

நேசம் ஒன்று - ஆசை பொருந்திய தாதை, தாயர் - தந்தை தாய் ஆகிய இருவரும் ஆசை கொண்ட போதில் - காதல் கொண்ட சமயத்தில் மேவி - கருவில் உற்று நீதி ஒன்று - ஒழுக்க நெறியில் நிற்கும். பாலனாகி - பிள்ளையாய்த் தோன்றி அழிவாய் வந்து - அழிதற்கே உரியவனாய்ப் பூமியில் பிறந்து.

ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு  
சிந்தை வேடை கூர உறவாகி

ஊரும் இன்ப வாழ்வுமாகி -அனுபவிக்கும் இன்ப வாழ்வை உடையவனாகி ஊனம் ஒன்று இலாது - குறை ஒன்றும் இல்லாமல் மாதரோடு - மாதர்களுடன் சிந்தை வேடை கூர - மன வேட்கை மிக்கு எழ. உறவாகி – அவர்களுடன் சம்பந்தப்பட்டு.

ஊழி இயைந்த கால(ம்) மேதியோனும் வந்து பாசம் வீச  
ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ

ஊழ் இயைந்த - ஊழ் வினையின்படி அமைந்த.  கால(ம்) - முடிவு காலத்தில். மேதியோனும் - எருமை வாகனனான
யமனும். வந்து பாசம் வீச - வந்து பாசக் கயிற்றை வீச. ஊன் உடம்பு - (இந்த) மாமிச உடல். மாயும் - அழிந்து போகும். மாயம் ஒழியாதோ - முடிவு பெறாதோ?

சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய் விடாது 
தோகை பங்கரோடு சூது மொழிவோனே

சூரன் அண்ட லோகம் - சூரன் அண்டங்களாம் லோகங்களின்
மேன்மை - மேலான சூறை கொண்டு - தலைமையைக் கொள்ளை அடித்து போய் விடாது - போய் விடாமல்
தோகையின் கண் மேவி - மயிலின் மேல் ஏறி  வேலை விடும் வீரா - வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே

பாரை உண்ட மாயன் வேயை ஊதி பண்டு பாவலோர்கள் 
பாடல் கண்டு ஏகும் மாலின் மருகோனே

பாரை உண்ட மாயன் - இப்பூமியை உண்டவனான மாயவன் வேயை ஊதி - புல்லாங் குழலை ஊதியவன். பண்டு - முன்பு. பாவலோர்கள் - (திருமழிசை ஆழ்வார் ஆகிய) புலவர்களின் பாடல் கண்டு - பாடலைக் கண்டு மகிழ்ந்து ஏகும் - (பின்னர் அவர்களின் வேண்டு கோளுக்கு இரங்கி) அவர்கள் பின்பு
செல்பவனாகிய மாலின் மருகோனே - திருமாலின் மருகனே.

பாதகங்கள் வேறி நூறி நீதியின் சொல் வேத வாய்மை 
பாடும் அன்பர் வாழ்வதான பெருமாளே.

பாதகங்கள் - பாபங்களை வேறி - குலைந்து. நூறி - பொடி படுத்தி. நீதியின் சொல் - நீதிச் சொற்களைக் கொண்டு வேத வாய்மை - வேத உண்மைகளை எடுத்து பாடும் அன்பர் - பாடும் அன்பர்களுக்கு வாழ்வதான பெருமாளே - செல்வப் பொருளான பெருமாளே.
`
சுருக்க உரை

நீர், எலும்பு, தோல் முதலியவற்றால் ஆக்கப்பட்ட கை, கால்களோடு, அங்கங்களுடன் கூடிய உடல் கொண்டு, அவ்வுடலில் உயிர் உறையப் பெற்று. தந்தை தாய் ஆகிய இருவரும் காதல் கொள்ளும் சமயத்தில் கருவாய்த் தோன்றி, ஒழுக்க நெறியில் பிள்ளையாகப் பூமியில் பிறந்து, நல்ல வாழ்வை உடையவனாகி, குறை இல்லாமல் வளர்ந்து, மாதர்களுடன் ஆசை மிகுந்து, உறவாடி, ஊழ் வினையின் பயனாக முடிவு வரும் சமயத்தில் யமன் வந்து பாசக் கயிற்றை வீச, இந்த மாய உடல் அழிந்து போகும் மாயமாகிய பிறப்பு முடிவு பெறாதோ? சூரன் அண்டங்களை எல்லாம் கொள்ளை அடித்துப் போகாமல் வேலைச் செலுத்திய வீரனே.

தோளில் எலும்பையும், சடையில் கங்கையையும் தரித்து ஆடல் புரியும் பார்வதி பாகனான சிவபெருமானுக்குப் பிரணவத்தை உபதேசித்தவனே,

பூமியை உண்டவனும், புல்லாங்குழலை ஊதியவனும், திருமங்கை ஆழ்வார் வேண்டுகோளுக்கு இரங்கி, புலவர்கள் பின் சென்றவனும் ஆகிய திருமாலின் மருகனே,

பாவங்களைக் குலைந்து, பொடியாக்கி, வேத உண்மைகளை எடுத்து ஓதும் அன்பர்களுக்குச் செல்வமாக உள்ள பெருமாளே,
   
   என் பிறப்பாகிய மாயம் ஒழியாதோ?

விளக்கக் குறிப்புகள்

1. சூது மொழிவோனே...
      பிரணவம் மௌனமறை ஆதலால் அது சூது  எனப்பட்டது.
     (மவூன மறை ஓதுவித்த குருநாதா)...திருப்புகழ் (வடவையன).

2.   பண்டு பாவலோர்கள் பாடல் கண்டு....
காஞ்சியில் திருமழிசை ஆழ்வாரிடம் கணிகண்ணன் என்பவர் பணிவிடை செய்து  வந்தார். ஒரு கிழவி ஆழ்வார் அருளால் முதுமை நீங்கியதை அறிந்த அரசன், ஆழ்வாரை அணுகித் தனக்கும் அவ்வாறு அருள் செய்ய வேண்டுமென்று கேட்க, ஆழ்வார் கணிகண்ணரை அணுகுமாறு கூறினார். கணிகண்ணர் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்காமல் போகவே, அரசர் கணிகண்ணரை அவ்வூரை விட்டுப் போகும்படி உத்தரவு இட்டார். இத்னை கேட்டு வருத்தமுற்ற திருமழிசை ஆழ்வார்,
 கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி 
 மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவொன்றிச் 
 செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன் 
 பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்  என்று பெருமாளைக் கேட்டுக்   கொண்டார். 
பெருமாள் போனவுடன் நாடு பொலிவு இழந்தது. அரசன் மீண்டும் ஆழ்வாரை அணுகி வேண்ட, அவரும் பதிகம் பாடி நாட்டைச் செழிக்கச் செய்தார். 
 கணிகண்ணன் போக்கிழந்தான்  காமருபூங் கச்சி
 மணிவண்ணா நீகிடக்க வேண்டும் துணிவுடைய 
 செந்நாப் புலவனும் போக்கிழந்தான் நீயுமுன்றன் 
 பைந்நாகப் பாய் படுத்துக் கோள்.  இவரே சொன்ன வண்ணம் செய்த பெருமாள்  எனப்படுவர்.

                                                    

389.நிருதரார்க்கு


389
பொது

இந்தத் தமியன் முன் நீ தோன்றுவதும் ஒரு நாள் ஆகுமோ?

               தனன தாத்தன தானா தானன
              தனன தாத்தன தானா தானன
              தனன தாத்தன தானா தானன          தனதான

நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
   சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய
   நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய              விறலான
நெடிய வேற்படை யானே ஜேஜெய
   எனஇ ராப்பகல் தானே நான்மிக
   நினது தாட்டொழு மாறே தானினி           யுடனேதான்
தரையி னாழ்த்திரை யேழே போலெழு
   பிறவி மாக்கட லு\டே நானுறு
   சவலை தீர்த்துன தாளே சூடியு             னடியார்வாழ்
சபையி னேற்றியின் ஞானா போதமு
   மருளி யாட்கொளு மாறே தானது
   தமிய னேற்குமு னேநீ மேவுவ              தொருநாளே
தருவி னாட்டர சாள்வான் வேணுவி
   னுருவ மாய்ப்பல நாளே தானுறு
   தவசி னாற்சிவ னீபோய் வானவர்           சிறைதீரச்
சகல லோக்கிய மேதா னாளுறு
   மசுர பார்த்திப னோடே சேயவர்
   தமரை வேற்கொடு நீறா யேபட          விழமோதென்
றருள ஏற்றம ரோடே போயவ
   ருறையு மாக்கிரி யோடே தானையு
   மழிய வீழ்தெதிர் சூரோ டேயம                ரடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தானுறு
   சிAறாய மீட்டர னார்பால் மேவிய
   அதிப ராக்ரம வீரா வானவர்                பெருமாளே

பதம் பிரித்தல்

நிருதரார்க்கு ஒரு காலா ஜேஜெய
சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய
நிமலனார்க்கு ஒர பாலா ஜேஜெய விறலான

நிருதரார்க்கு ஒரு காலா - அசுரர்களுக்கு ஒரு யமனாக ஏற்பட்டவனே ஜேஜெய - உனக்கு வெற்றி உண்டாகுக. சுரர்கள் ஏத்திடு வேலா - தேவர்கள் போற்றிடும் வேலனே ஜேஜெய - உனக்கு வெற்றி உண்டாகுக. நிமலனார்க்கு ஒரு பாலா பரிசுத்த மூர்த்தியாகிய (சிவபெருமானுக்கு) ஒரு குழந்தையே ஜேஜெய - உனக்கு வெற்றி உண்டாகுக விறலான – வீரம் வாய்ந்த.

நெடிய வேல் படையானே ஜேஜெய
என இரா பகல் தானே நான் மிக
நினது தாள் தொழுமாறே தான் இனி உடனே தான்

நெடிய வேல் படையானே - பெரிய வேலாயுதத்தைப் படையாகக் கொண்டவனே ஜேஜெய - உனக்கு வெற்றி உண்டாகுக. என - என்றெல்லாம் இராப் பகல் - இரவு பகல் எந்த நேரத்திலும்.
தானே மிக - நான் நிரம்ப நினது தாள் தொழுமாறே -  உனது திருவடியைத் தொழும்படி தான் இனி உடனே தான் நான் இனித் தாமதிக்காமலே தான்

தரையில் ஆழ் திரை ஏழே போல் எழு
பிறவி மா கடல் ஊடே நான் உறு
சவலை தீர்த்து உன தாளே சூடி உன் அடியார் வாழ்

தரையில் - இப்பூமியில். ஆழ் - ஆழமுள்ள திரை ஏழே போல்  ஏழு கடலைப் போல். எழு பிறவி - எழுகின்ற பிறவி என்னும்
மாக் கடலூடே - பெரிய கடலுள் நான் உறு - நான்
அனுபவிக்கும் சவலை - மனக் குழப்பத்தை. தீர்த்து – நீக்கி உனது தாளே சூடி - உனது திருவடியை என் தலையில் வைத்து
உன் அடியார் வாழ் - உனது அடியார்கள் வாழ்கின்ற

சபையின் ஏற்றி இன் ஞானா போதமும்
அருளி ஆட் கொளுமாறே தான் அது
தமியனேற்கு மு(ன்)னே நீ மேவுவது ஒரு நாளே

சபையின் ஏற்றி - கூட்டத்தில் என்னையும் கூட்டி வைத்து இன் - இனிய ஞானா போதமும் - ஞான உபதேசத்தையும் அருளி ஆட்கொளு மாறே தான் - அருள் செய்து என்னை ஆட்
கொள்ளுமாறு அது - அதன் பொருட்டு. தமியனேற்கு - தனியேனாகிய எனக்கு. முன்னே - முன்னே நீ மேவுவது ஒரு நாளே - வந்து தோன்றுவது ஒரு நாள் உண்டோ?

தருவின் நாட்டு அரசு ஆள்வான் வேணுவின்
உருவமாய் பல நாளே தான் உறு
தவசினால் சிவன் நீ போய் வானவர் சிறை தீர
தருவின் நாட்டு அரசு ஆள்வான்  - கற்பக மரங்கள் உள்ள பொன்னுலகை அரசாளும் (இந்திரன்) வேணுவின் உருவமாய் -
மூங்கிலின் உருவெடுத்த .பல நாளே - பல நாட்கள் தான் உறு - தான் செய்த. தவசினால் - தவப் பயனால். சிவன் – சிவ பெருமான் (உன்னை) நீ போய் வானவர் சிறை தீர - தேவர்களின் சிறையை நீக்கும் பொருட்டு.

சகல லோக்கியமே தான் ஆள் உறும் 
அசுர பார்த்திபனோடே சேய் அவர்
தமரை வேல் கொடு நீறாயே பட விழ மோது என்று

சகல லோக்கியமே தான் ஆள் உறும் - எல்லா உலக
இன்பங்களையும் ஆண்டு அனுபவிக்கும் அசுர பார்த்திபனோடே - அசுர அரசனாகிய சூரனையும். சேயவர் - அவனுடைய
மக்களையும் தமரை - சுற்றத்தினரையும். வேல் கொடு - வேலாயுதத்தால். நீறாயே பட விழ - பொடியாய் அழிந்து
விழும்படி. மோது என்று - தாக்குவாயாக என்று.

அருள ஏற்று அமரோடே போய் அவர்
உறையு மா கிரியோடே தானையும்
அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி

அருள - திருவாய் மலர்ந்து சொல்ல. ஏற்று - (அவர் சொல்லுக்கு) இணங்கி. அமரோடே போய் - போருக்கு எழுந்து சென்று. அவர் - அந்த அசுரர்கள் உறையும் – வசிக்கும் மாக்கிரியோடே- பெரிய கிரௌஞ்சம், ஏழு மலைகள் ஆகியவற்றையும். தானையும் - (அவர்களுடைய) சேனைகளையும். அழிய - அழிந்து போகும்படி. வீழ்த்தி -விழும்படிச் செய்து. எதிர் சூரோடே - எதிர்த்து வந்த சூரனுடன் அமர் அடலாகி - பொருந்திய பகைமை பூண்டு.

அமரில் வீட்டியும் வானோர் தான் உறு
சிறையை மீட்டு அரனார் பால் மேவிய
அதி பராக்ரம வீரா வானவர் பெருமாளே.


அமரில் - போரில். வீட்டியும் - அவனை அழித்தும். வானோர் தான் உறு சிறையை - விண்ணவர்களை அவர்கள் அடைபட்டிருந்த சிறையிலிருந்தும் மீட்டு - நீக்கி. அரனார் பால்
மேவிய - (தந்தையாகிய) சிவபெருமானிடத்து வந்து சேர்ந்த அதி பராக்ரம வீரா - பெரிய வலிமைசாலியே. வானவர்
பெருமாளே - தேவர்கள் பெருமாளே.

சுருக்க உரை

அசுரர்களுக்கு ஒரு காலனாக வந்தவனே, தேவர்கள் போற்றித் துதிக்கும் வேலனே, பெரிய வேலாயுதப் படையை உடையவனே. உனக்கு வெற்றி உண்டாகுக. நான் இரவும் பகலும் உன் திருவடியைப் பணிந்து போற்றும்படி அருள்புரிவாயாக. இப்பூமியில் உள்ள ஏழு கடல்களைப் போல எழுகின்ற என் பிறவிகளை நீக்கி, என் மனக் குழப்பத்தை ஒழித்து, உனது திருவடியை என் தலையில் வைத்து, உன் அடியாருடன் என்னைக் கூட்டி வைத்து, ஞான உபதேசத்தையும் அருளுமாறு என்னை ஆட்கொள்ளும் நாள் இந்தத் தமியனுக்கு என்று கிட்டுமோ?

கற்பக மரங்கள் நிறைந்த பொன்னுலகை ஆளும் இந்திரன் மூங்கில் உருவத்துடன் தான் செய்த தவப் பயனால், சிவபெருமான் இரங்கி, உன்னைத் தேவர்கள் சிறையை நீக்கும்படி பணி செய்ய, அங்ஙனமே சூரனுடன் போர் செய்து, அவனுடைய கிரௌஞ்சம், எழு மலைகள் ஆகியவற்றைப் பொடி செய்து, சூரனையும் அழித்த வீரனே, தேவர்கள் பெருமாளே, இந்தத் தமியன் முன் நீ தோன்றுவதும் ஒரு நாள் ஆகுமோ?

விளக்கக் குறிப்புகள்

1 வேணுவின் உருவமாய்ப் பல நாளே தான் உறு...
சூரனுக்கு அஞ்சி இந்திரன் மூங்கில் உருவத்துடன் சீகாழியில் தவம் செய்தான். அதற்கிணங்கிச் சிவபெருமான் சூரனை  அழிக்கக் கந்தனுக்கு ஆணை இட்டார்.

2. அடியாற் வாழ் சபையின் ஏற்று இன் ஞானா போதமும்....
    இடுதலைச் சற்றும் கருதேனைப் போதம் இலேனை அன்பால்
    கெடுதல் இலாத் தொண்டரில் கூட்டியவா...கந்தர் அலங்காரம்