பின் தொடர்வோர்

Saturday, 4 April 2020

410.மனகபாடம்


410
பொது

       தனன தான தானான தனன தான தானான
          தனன தான தானான               தனதான

மனக பாட பாடீர தனத ராத ராரூப
   மதன ராச ராசீப                                   சரகோப
வருண பாத காலோக தருண சோபி தாகார
   மகளி ரோடு சீராடி                              யிதமாடிக்
குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான
   குறைய னேனை நாயேனை      வினையேனைக்
கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத
   குருட னேனை நீயாள்வ                  தொருநாளே
அநக வாம னாகார முநிவ ராக மால்தேட
   அரிய தாதை தானேவ                        மதுரேசன்
அரிய சார தாபீட மதனி லேறி யீடேற
   அகில நாலு மாராயு                     மிளையோனே
கனக பாவ னாகார பவள கோம ளாகார
   கலப சாம ளாகார                             மயிலேறுங்
கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார
  கருணை மேரு வேதேவர்                   பெருமாளே

பதம் பிரித்து உரை

மன கபாடம் பாடீர தனம் தராதரம் ரூப
மதன ராச ராசீப சரம் கோப

மன கபாடம் - கபடம் கொண்ட மனத்தையும் பாடீரம் - சந்தனம் அணிந்துள்ள தனம் - கொங்கையாகிய. தராதரம் - மலையையும் (கொண்ட) ரூப - உருவத்தை உடையவரும்  மதன ராசர் -  மன்மத ராஜன் (செலுத்தும்) ராசீப சரம் - தாமரைப் பாணத்தின் கோப - கோபத்துக்கு இலக்காய் (இருப்பதால்).

வருண பாதகம் அலோகம் தருண சோபிதம் ஆகாரம்
மகளிரோடு சீராடி இதம் ஆடி

வருண பாதகம் - குல வேற்றுமையால் வரும் பாவம் அலோகம் - (தம்) கண்ணுக்குப்  புலப்படாதவரும் தருண - இளமை. சோபித - அழகு வாய்ந்த ஆகாரம் - உடம்போடு கூடியவருமான மகளிரோடு - மாதர்களுடன் சீராடி - செல்வச் செருக்குடன் விளையாடியும் இதமாடி - இன்பம் திளைத்தும்

குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான
குறையனேனை நாயேனை வினையேனை

குனகுவேனை - கொஞ்சிக் காலம் கழிப்பவனும். நாணாது - கூச்சமில்லாமல். தனகுவேனை - சரசம் செய்பவனும். வீணான - வீண் காலம் போக்கும். குறையனேனை - குறையை உடையவனும். நாயேனை - நாயைப் போன்றவனும். வினையேனை - வினைக்கு ஈடானவனும்.

கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத
குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே

கொடியனேனை - பொல்லாதவனும் ஓதாத - (உன்னைப் போற்றித்) துதிக்காத. குதலையேனை - கொச்சைப் பேச்சு உடையவனும் நாடாத - (உன்னை)  விரும்பித் தேடாத குருடனேனை - குருடனுமாகிய என்னை நீ ஆள்வது ஒரு நாளே - நீ ஆண்டருளுவதும் ஒரு நாள் ஆகுமோ?

அநக வாமன ஆகாரம் முநிவர் ஆகம் மால் தேட
அரிய தாதை தான் ஏவ மதுரேசன்

அநக - பாபமற்றவனே  வாமன ஆகார - குறள் வடிவம் கொண்ட முநிவராக - தவ முனிவரின் உருவத்தை (மாவலிக்காக எடுத்த) மால் தேட - திருமாலும் தேட அரிய - (அவருக்கு) எட்டாதவராய் நின்ற தாதை - (உன்) தந்தையாகிய மதுரேசன் தான் ஏவ - மதுரைச் சொக்க நாதர் அனுப்ப

அரிய சாரதா பீடம் அதனில் ஏறி ஈடேற
அகில நாலும் ஆராயும் இளையோனே

அரிய - அருமை வாய்ந்த. சாரதா பீடம் அதனில் ஏறி - சரஸ்வதியின் இருப்பிடமான சங்கப் பலகையில் ஏறி. ஈடேற - உலகத்தார் உய்ய. அகில நாலும் - நாற்றிசையில் உள்ள உயிர்களை எல்லாம். ஆராயும் இளையோனே - ஆய்ந்து புரக்கும் இளையோனே.

கனக  பாவன ஆகார பவள கோமள ஆகார
கலப சாமள ஆகர மயில் ஏறும்

கனக - பொன் போன்ற பாவன ஆகார - தூய மேனியனே பவள - பவளம் போன்ற கோமள ஆகார - அழகிய மேனியனே கலப - தோகை உடையதும் சாமள ஆகார - பச்சை நிறம் கொண்டதுமான உடலைக் கொண்ட மயில் ஏறும் - மயிலின் மேல் ஏறும்

கடவுளே க்ருப ஆகார கமல வேதன ஆகார
கருணை மேருவே தேவர் பெருமாளே.

கடவுளே - கடவுளே க்ருப ஆகார - கருணை உருவத்தனே கமல - இதய கமலத்தில் பொருந்திய வேதன ஆகார - ஞான சொருபனே கருணை மேருவே - கருணைப் பெரு மலையே தேவர் பெருமாளே - தேவர் பெருமாளே.

சுருக்க உரை

கபடமான மனத்தையும், சந்தனம் அணிந்த கொங்கையாகிய மலையையும் கொண்ட உருவத்தை உடையவர்களும், மன்மதனுடைய தாமரைப் பாணத்தின் கோபத்துக்கு இலக்காய் இருப்பதால், குல வேற்றுமையே இல்லாதவரும், இளமையும், அழகும் வாய்ந்தவருமாகிய விலை மாதர்களுடன் விளையாடியும், இன்பம் திளைத்தும், காலம் கழிப்பவனும், வெட்கமின்றி காம லீலைகளில் ஈடுபடும் குறையை உடையவனும்,  வினைக்கு ஈடானவனும், பொல்லாதவனுமாகிய நான் உன்னைப் போற்றித் துதிக்காதவன். உன்னை விரும்பித் தேடாத குருடன். இத்தகைய  இழியோனாகிய என்னை நீ ஆண்டருளும் நாள் ஒன்று உண்டோ?
பாபமற்றவன், குறள் வடிவம் எடுத்தவன் ஆகிய திருமாலுக்குத் தேட அரியாதவராகிய உன் தந்தையாகிய சிவபெருமான் அனுப்பச் சங்கப் பலகையில் வீற்றிருந்தவனே, உலகத்தோர் உய்ய நாலு திசைகளில் உள்ள உயிர்களை ஆராய்ந்து புரக்கும் இளையோனே, தூயவனே, சிவந்த மேனியனே, மயில் மேல் ஏறும் கடவுளே, கருணை மேருவே, என்னை ஆண்டருளுவதும் ஒரு நாளே?


ஒப்புக:
வாமனாகார முநிவராக மால் தேட...
மாபலியைச் சிறை வைத்தவன்  ...  திருப்புகழ் எலுப்புநாடி.
குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும் பெரியவன்                                                              ...       திருப்புகழ் செறிதரும்
மால் தேட அரிய தாதை தான் ஏவ....
திருமால் கமலப் பிரமா விழியிற்
றெரியா வரனுக்   கரியோனே....திருப்புகழ், அருமாமதனை.

விளக்கக் குறிப்புகள்

சாரதா பீட மதனி லேறி ஈடேறி....
சாரதா பீடம் என்றால் 'சரஸ்வதியின் இருக்கை' அதாவது அன்னை நித்யவாஸம் செய்யும் இடம் என்று பொருள்.
சாரதா பீடம் - சங்கப் பலகை. சங்கப் புலவர்களுக்குள் ஏற்பட்ட கலக்கத்தை சிவபெருமான் திருவுளப்படி முருகவேள் சங்கப் பல¨கையில் அமர்ந்து தீர்த்து வைத்தார்.

ஒப்புக :  ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்  ..  .திருப்புகழ் சீரானகோல.

No comments:

Post a Comment