பின் தொடர்வோர்

Saturday, 4 April 2020

413.முருகம யூர


413
பொது
           
       தனதன தானத் தானன தனதன தானத் தானன
       தனதன தானத் தானன         தனதான

முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
   முகுளப டீரக் கோமள                                   முலைமீதே
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை
   முதியபு ராரிக் கோதிய                              குருவேயென்
றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு
   முணர்வினொ டூடிக் கூடியும்                         வழிபாடுற்
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
   யுனதடி யாரைச் சேர்வது                            மொருநாளே
மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
   வரவிடு மாயப் பேய்முலை                           பருகாமேல்
வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி
   மதுகையில் வீழச் சாடிய                                  சதமாபுட்
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு
   சகடுதை யாமற் போர்செய்து                     விளையாடிப்
பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத
   புரமதில் மாபுத் தேளிர்கள்                           பெருமாளே.

பதம் பிரித்து உரை

முருக மயூர சேவக சரவண ஏனல் பூ தரி
முகுள படீர கோமள முலை மீதே

முருக - முருகனே. மயூர சேவக - மயிலேறும் வலிமையாளனே. சரவண - சரவணபவனே. ஏனல் - தினை விளைந்த. பூதரி - மலைப் பெண் வள்ளியின். முகுள - அரும்புற்றதும். படீர - சந்தனம் அணிந்ததும். கோமள - அழகுடையதுமாகிய. முலை மீதே - கொங்கையின் மேல்.

முழுகுய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை
முதிய புராரிக்கு ஓதிய குரு என்று

முழுகிய - முழுகிய. காதல் காமுக - ஆசை கொண்டவனே. பதி - கடவுள். பசு - உயிர். பாசம் - தளை இவைகளின். தீர் வினை - முடிவான உட்பொருளை. முதிய - பழைய. புராரிக்கு - திரிபுரம் அழித்த சிவபெருமானுக்கு. ஓதிய - உபதேசம் செய்த. குருவே என்று - குருநாதரே என்று துதித்து.

உருகியும் ஆடி பாடியும் இரு கழல் நாடி சூடியும்
உணர்வினொடு ஊடி கூடியும் வழி பாடு உற்று

உருகுயும் - மனம் உருகியும். ஆடிப் பாடியும் - ஆடியும் பாடியும். இரு கழல் நாடி - உனது இரு திருவடிகளை நாடியும். சூடியும் - அவற்றைத் தலையில் சூடியும். உணர்வினோடு ஊடி - ஞான உணர்ச்சியோடு பிணங்கியும். கூடியும் - இணங்கியும். வழி பாடு உற்று - வழி பாடு செய்து.

உலகினோர் ஆசை பாடு அற நிலை பெறும் ஞானத்தால் இனி
உனது அடியாரை சேர்வதும் ஒரு நாளே

உலகினோர் ஆசைப் பாடு அற - உலக ஆசைபாடுகள் அற்றுப் போக. நிலை பெறு - நிலையான. ஞானத்தால் - ஞானத்துடன். இனி - இனி மேல். உனது அடியாரைச் சேர்வதும் - உன் அடியார்களைச் சேர்வதும். ஒரு நாளே - ஒரு நாள் உண்டாகுமோ?

மருகன் எ(ன்)னாமல் சூழ் கொலை கருதிய மாம பாதகன்
வர விடு மாய பேய் முலை பருகா மேல்

மருகன் என்னாமல் - (சகோதரி தேவகியின் மகன்) என்று கருதாமல். சூழ் கொலை கருதிய - சூழ்ச்சியுடன் அந்த மருகனைக் கொல்ல எண்ணிய. மாமப் பாதகன் - மாமனாம் பாவியாகிய (கம்சன்). வரவிடு - அனுப்பி வைத்த. மாயப் பேய் முலை - மாயத்தில் வல்ல பேயின் கொங்கையை. பருகா - உண்டும். மேல் - பின்னும்.

வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி
மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள்

வரும் மத யானை - (கொல்ல) வந்த மத யானையாகிய குவலாய பீடத்தின். கோடு அவை திருகி - தந்தங்களைத் திருகிப் பறித்தும். விளாவில் - விளா மரத்தில். காய் கனி - காய்களும் கனிகளும். மதுகையில் - தனது வன்மையால். வீழச் சாடிய - விழும்படிச் செய்த. அ - அந்த. சதம் - இறகுகளை உடைய. மா - பெரிய. புள் - கொக்காகிய பறவையுடன்.

பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு
சகடு உதையா மல் போர் செய்து விளையாடி

பொருது - சண்டை செய்து (அதன் வாயைப் பிளந்தும்). இரு கோர - இரண்டு கொடுமை வாய்ந்த. பாரிய - பருத்த. மருது இடை போய் - மருத மரங்களுக்கு இடையில் தவழ்ந்து சென்று (அம்மரங்களை முறித்தும்). அப்போது  - அந் நிகழ்ச்சியுடன். ஒரு சகடு உதையா - ஒரு வண்டியை உதைத்தும். மற்போர் செய்து விளையாடி - மல்லர்களுடன் போர் செய்து.

பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுத
புரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே.

பொதுவியர் - இடையர்களின். சேரிக்கே வளர் - சேரியில் வளர்ந்த. புயல் - மேக வர்ணனாகிய திருமாலின். மருகா - மருகனே. வஜ்ராயுத - குலிசாயுதம் ஏந்திய இந்திரனின். புரம் அதில் - ஊராகிய பொன்னுலகத்தில். மா புத்தேளிகள் - சிறந்த தேவர்களின். பெருமாளே - பெருமாளே.

சுருக்க உரை

முருகனே, மயில் ஏறும் வீரனே. சரவணபவனே, தினை விளையும் மலை நாட்டில் வாழ்ந்த குறப் பெண் வள்ளியின் அழகிய கொங்கைகளின் மேல் ஆசை வைத்த காமுகனே, பதி, பசு, பாசம் ஆகியவற்றின் உட்பொருளைத் திரி புரம் எரித்த சிவபெருமானுக்கு உபதேசித்த குருநாதனே, இவ்வாறு எல்லாம் துதித்தும், மனம் உருகி ஆடியும், பாடியும், உன் திருவடிகளை நாடியும், சூடியும், ஞான உணர்ச்சியுடன் பிணங்கியும், இணங்கியும், உலக ஆசைகள் அற்றுப் போக, நிலையான ஞானத்துடன் உன் அடியார்களுடன் சேரும்படியான பாக்கியத்தை அடையும் நாள் எனக்குக் கிட்டுமோ?
தன்னுடைய சகோதாரியின் மகன் என்று கூடக் கருதாது, சூழ்ச்சி செய்து கொல்ல எண்ணிய மாமனாகிய கம்சன் அனுப்பிய மாயமான பேயின் முலைகளை உண்டும், குவலயம் என்னும் மத யானையின் தந்தங்களைத் திருகிப் பறித்தும், விளா மரத்தின் காய், கனிகளை விழச் செய்தும், தன்னைத் தாக்கிய பெரிய கொக்கின் வாயைப் பிளந்தும், இரு மருத மரங்களின் இடையே தவழ்ந்து என்று அம் மரங்களை முறித்தும், வண்டியை உதைத்து மற்போர் செய்தும் திருவிளையாடல்களைச் செய்த திருமாலின் மருகனே, குலிசாயுதம் ஏந்திய இந்திரன் ஊராகிய பொன்னுலகில் இருக்கும் தேவர்களின் பெருமாளே, உன் அடியாருடன் நான் சேர்ந்து நன்னெறியில் ஒழுக அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
* பேய் முலை பருகா.....
அலகையௌ வென்றுங் கொன்றுங் துண்டந் துண்டஞ்
செயுமரி....                                                       திருப்புகழ், குன்றுங்குன்று.

பேழ்வாய் வேதா ளம்பகடைப்பகு
வாய் நீள் மானாளும் சரளத்தொடு
பேயானாள் போர் வென்றி....                               திருப்புகழ், நேசாசாரா.
பேய்மகள் கொங்கை நஞ்சுண்ட
 பிள்ளை பரிசிது வென்றால் ....                                     பெரிய திருமொழி

* யானைக் கோடவை திருகி...
வாரண இரண்டு கோடொடிய வென்ற நெடியோனாம்... .திருப்புகழ் சீயுதிர.

* விளாவிற் காய் கனி மதுகையில் வீழச் சாடிய....
கண்ணனை கொல்ல கம்ஸன் அனுப்பிய கபித்தாசுரன் விளா மர உருவத்துடன் வந்தான். மற்றொரு அசுரன் கன்றின் உருவத்துடன் பசுக் கூட்டத்தில் கலந்து நின்றான். இதை அறிந்த கண்ணன் அந்த இரண்டு அசுரர்களையும் கொன்றார்.
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த் கள்ள அசுரன் தன்னை
சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தான்.
                                                                        ...பெரியாழ்வார் திருமொழி

* மருதிடை போய் அப்போது...
    பரிவொடு மகிழ்ந்தி றைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
    பரமபத நண்பர் ...                                             திருப்புகழ், மருமலரின.



No comments:

Post a Comment