பின் தொடர்வோர்

Showing posts with label கண்ணன். Show all posts
Showing posts with label கண்ணன். Show all posts

Saturday, 4 April 2020

413.முருகம யூர


413
பொது
           
       தனதன தானத் தானன தனதன தானத் தானன
       தனதன தானத் தானன         தனதான

முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
   முகுளப டீரக் கோமள                                   முலைமீதே
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை
   முதியபு ராரிக் கோதிய                              குருவேயென்
றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு
   முணர்வினொ டூடிக் கூடியும்                         வழிபாடுற்
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
   யுனதடி யாரைச் சேர்வது                            மொருநாளே
மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
   வரவிடு மாயப் பேய்முலை                           பருகாமேல்
வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி
   மதுகையில் வீழச் சாடிய                                  சதமாபுட்
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு
   சகடுதை யாமற் போர்செய்து                     விளையாடிப்
பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத
   புரமதில் மாபுத் தேளிர்கள்                           பெருமாளே.

பதம் பிரித்து உரை

முருக மயூர சேவக சரவண ஏனல் பூ தரி
முகுள படீர கோமள முலை மீதே

முருக - முருகனே. மயூர சேவக - மயிலேறும் வலிமையாளனே. சரவண - சரவணபவனே. ஏனல் - தினை விளைந்த. பூதரி - மலைப் பெண் வள்ளியின். முகுள - அரும்புற்றதும். படீர - சந்தனம் அணிந்ததும். கோமள - அழகுடையதுமாகிய. முலை மீதே - கொங்கையின் மேல்.

முழுகுய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை
முதிய புராரிக்கு ஓதிய குரு என்று

முழுகிய - முழுகிய. காதல் காமுக - ஆசை கொண்டவனே. பதி - கடவுள். பசு - உயிர். பாசம் - தளை இவைகளின். தீர் வினை - முடிவான உட்பொருளை. முதிய - பழைய. புராரிக்கு - திரிபுரம் அழித்த சிவபெருமானுக்கு. ஓதிய - உபதேசம் செய்த. குருவே என்று - குருநாதரே என்று துதித்து.

உருகியும் ஆடி பாடியும் இரு கழல் நாடி சூடியும்
உணர்வினொடு ஊடி கூடியும் வழி பாடு உற்று

உருகுயும் - மனம் உருகியும். ஆடிப் பாடியும் - ஆடியும் பாடியும். இரு கழல் நாடி - உனது இரு திருவடிகளை நாடியும். சூடியும் - அவற்றைத் தலையில் சூடியும். உணர்வினோடு ஊடி - ஞான உணர்ச்சியோடு பிணங்கியும். கூடியும் - இணங்கியும். வழி பாடு உற்று - வழி பாடு செய்து.

உலகினோர் ஆசை பாடு அற நிலை பெறும் ஞானத்தால் இனி
உனது அடியாரை சேர்வதும் ஒரு நாளே

உலகினோர் ஆசைப் பாடு அற - உலக ஆசைபாடுகள் அற்றுப் போக. நிலை பெறு - நிலையான. ஞானத்தால் - ஞானத்துடன். இனி - இனி மேல். உனது அடியாரைச் சேர்வதும் - உன் அடியார்களைச் சேர்வதும். ஒரு நாளே - ஒரு நாள் உண்டாகுமோ?

மருகன் எ(ன்)னாமல் சூழ் கொலை கருதிய மாம பாதகன்
வர விடு மாய பேய் முலை பருகா மேல்

மருகன் என்னாமல் - (சகோதரி தேவகியின் மகன்) என்று கருதாமல். சூழ் கொலை கருதிய - சூழ்ச்சியுடன் அந்த மருகனைக் கொல்ல எண்ணிய. மாமப் பாதகன் - மாமனாம் பாவியாகிய (கம்சன்). வரவிடு - அனுப்பி வைத்த. மாயப் பேய் முலை - மாயத்தில் வல்ல பேயின் கொங்கையை. பருகா - உண்டும். மேல் - பின்னும்.

வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி
மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள்

வரும் மத யானை - (கொல்ல) வந்த மத யானையாகிய குவலாய பீடத்தின். கோடு அவை திருகி - தந்தங்களைத் திருகிப் பறித்தும். விளாவில் - விளா மரத்தில். காய் கனி - காய்களும் கனிகளும். மதுகையில் - தனது வன்மையால். வீழச் சாடிய - விழும்படிச் செய்த. அ - அந்த. சதம் - இறகுகளை உடைய. மா - பெரிய. புள் - கொக்காகிய பறவையுடன்.

பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு
சகடு உதையா மல் போர் செய்து விளையாடி

பொருது - சண்டை செய்து (அதன் வாயைப் பிளந்தும்). இரு கோர - இரண்டு கொடுமை வாய்ந்த. பாரிய - பருத்த. மருது இடை போய் - மருத மரங்களுக்கு இடையில் தவழ்ந்து சென்று (அம்மரங்களை முறித்தும்). அப்போது  - அந் நிகழ்ச்சியுடன். ஒரு சகடு உதையா - ஒரு வண்டியை உதைத்தும். மற்போர் செய்து விளையாடி - மல்லர்களுடன் போர் செய்து.

பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுத
புரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே.

பொதுவியர் - இடையர்களின். சேரிக்கே வளர் - சேரியில் வளர்ந்த. புயல் - மேக வர்ணனாகிய திருமாலின். மருகா - மருகனே. வஜ்ராயுத - குலிசாயுதம் ஏந்திய இந்திரனின். புரம் அதில் - ஊராகிய பொன்னுலகத்தில். மா புத்தேளிகள் - சிறந்த தேவர்களின். பெருமாளே - பெருமாளே.

சுருக்க உரை

முருகனே, மயில் ஏறும் வீரனே. சரவணபவனே, தினை விளையும் மலை நாட்டில் வாழ்ந்த குறப் பெண் வள்ளியின் அழகிய கொங்கைகளின் மேல் ஆசை வைத்த காமுகனே, பதி, பசு, பாசம் ஆகியவற்றின் உட்பொருளைத் திரி புரம் எரித்த சிவபெருமானுக்கு உபதேசித்த குருநாதனே, இவ்வாறு எல்லாம் துதித்தும், மனம் உருகி ஆடியும், பாடியும், உன் திருவடிகளை நாடியும், சூடியும், ஞான உணர்ச்சியுடன் பிணங்கியும், இணங்கியும், உலக ஆசைகள் அற்றுப் போக, நிலையான ஞானத்துடன் உன் அடியார்களுடன் சேரும்படியான பாக்கியத்தை அடையும் நாள் எனக்குக் கிட்டுமோ?
தன்னுடைய சகோதாரியின் மகன் என்று கூடக் கருதாது, சூழ்ச்சி செய்து கொல்ல எண்ணிய மாமனாகிய கம்சன் அனுப்பிய மாயமான பேயின் முலைகளை உண்டும், குவலயம் என்னும் மத யானையின் தந்தங்களைத் திருகிப் பறித்தும், விளா மரத்தின் காய், கனிகளை விழச் செய்தும், தன்னைத் தாக்கிய பெரிய கொக்கின் வாயைப் பிளந்தும், இரு மருத மரங்களின் இடையே தவழ்ந்து என்று அம் மரங்களை முறித்தும், வண்டியை உதைத்து மற்போர் செய்தும் திருவிளையாடல்களைச் செய்த திருமாலின் மருகனே, குலிசாயுதம் ஏந்திய இந்திரன் ஊராகிய பொன்னுலகில் இருக்கும் தேவர்களின் பெருமாளே, உன் அடியாருடன் நான் சேர்ந்து நன்னெறியில் ஒழுக அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
* பேய் முலை பருகா.....
அலகையௌ வென்றுங் கொன்றுங் துண்டந் துண்டஞ்
செயுமரி....                                                       திருப்புகழ், குன்றுங்குன்று.

பேழ்வாய் வேதா ளம்பகடைப்பகு
வாய் நீள் மானாளும் சரளத்தொடு
பேயானாள் போர் வென்றி....                               திருப்புகழ், நேசாசாரா.
பேய்மகள் கொங்கை நஞ்சுண்ட
 பிள்ளை பரிசிது வென்றால் ....                                     பெரிய திருமொழி

* யானைக் கோடவை திருகி...
வாரண இரண்டு கோடொடிய வென்ற நெடியோனாம்... .திருப்புகழ் சீயுதிர.

* விளாவிற் காய் கனி மதுகையில் வீழச் சாடிய....
கண்ணனை கொல்ல கம்ஸன் அனுப்பிய கபித்தாசுரன் விளா மர உருவத்துடன் வந்தான். மற்றொரு அசுரன் கன்றின் உருவத்துடன் பசுக் கூட்டத்தில் கலந்து நின்றான். இதை அறிந்த கண்ணன் அந்த இரண்டு அசுரர்களையும் கொன்றார்.
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த் கள்ள அசுரன் தன்னை
சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தான்.
                                                                        ...பெரியாழ்வார் திருமொழி

* மருதிடை போய் அப்போது...
    பரிவொடு மகிழ்ந்தி றைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
    பரமபத நண்பர் ...                                             திருப்புகழ், மருமலரின.



Friday, 19 May 2017

303.குருதிகிருமிகள்

303
வயலூர்
           தனன தனதன தனதன தனதன
                    தனன தனதன தனதன தனதன
                    தனன தனதன தனதன தனதன        தனதான

குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
   மருவு முருவமு மலமல மழகொடு
   குலவு பலபணி பரிமள மறுசுவை            மடைபாயல்
குளிரி லறையக மிவைகளு மலமல
   மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
   குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல         மொருநாலு
சுருதி வழிமொழி சிவகலை யலதினி
   யுலக கலைகளு மலமல மிலகிய
   தொலைவி லுனைநினை பவருற வலதினி     யயலார்பால்
சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
   முறவு மலமல மருளலை கடல்கழி
  துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற       அருள்வாயே
விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
   முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
   விகட இறகுகள் பறையிட அலகைகள்          நடமாட
விபுத ரரகர சிவசிவ சரணென
   விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர
   வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும்   வடிவேலா
மருது நெறுநெறு நெறுவென முறிபட
   வுருளு முரலொடு தவழரி மருகசெ
   வனச மலர்சுனை புலிநுழை முழையுடை      யவிராலி
மலையி லுறைகிற அறுமுக குருபர
   கயலு மயிலையு மகரமு முகள்செநெல்
   வயலி நகரியி லிறையவ அருள்தரு          பெருமாளே

பதம் பிரித்து உரை

குருதி கிருமிகள் சல(ம்) மல(ம்) மயிர் தசை
மருவும் உருவமும் அலம் அலம் அழகொடு
குலவு பல பணி பரிமளம் அறு சுவை மடை பாயல்

குருதி - இரத்தம் கிருமிகள் - புழுக்கள் சலம் மலம் மயிர், தசை - நீர், மலம், மயிர், மாமிசம் ஆகிய இவை மருவும் -பொருந்திய   உருவமும் - உருவை உடைய (இந்த உடல் எடுத்தது) அலம் அலம் - போதும் போதும் அழகொடு குலவு -அழகோடு விளங்கும் பல பணி - பல விதமான அணி கலன்களும் பரிமளம் - நறு மணமுள்ள வாசனைப் பொருள்களும்  அறு சுவை மடை - ஆறு சுவைகள்  கூடியசோறு பாயல் - படுக்கை


குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம் அலம்
மனைவி மகவு அ(ன்)னை அநுசர்கள் முறை முறை
குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம் அலம் ஒரு நாலு

குளிர் இல் அறை - குளிர் இல்லாத அடக்கமான அறைகள் கொண்ட அகம் - வீடு இவைகளும் - இவைகளும் அலம் அலம்- போதும் போதும் மனைவி மகவு அ(ன்)னை - மனைவி ,குழந்தைகள், தாயார் அநுசர்கள் - கூடப் பிறந்தவர்கள் முறை முறை - உறவு முறை கூறி குனகு - கொஞ்சிக் குலவும்கிளைஞர்கள் - சுற்றத்தினர் இவர்களும் அலம் அலம் -இவர்களும் போதும் போதும் ஒரு நாலு - ஒரு நான்கு


சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி
உலக கலைகளும் அலம் அலம் இலகிய
தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார் பால்

சுருதி வழி - வேதங்களின் வழியை மொழி - எடுத்துக் கூறும்சிவ கலை அ(ல்)லது - சைவ சித்தாந்த நூல்கள் தவிர இனி உலக கலைகளும் - வேறு உலக சம்பந்தமான நூல்களைஅலம் அலம் - (ஓதுவதும்) போதும் போதும் இலகிய -விளங்கி நிற்பவனும் தொலைவு இல் உனை நினைபவர் -அழிவில்லாத வனுமாகிய உன்னை நினைப்பவர்களுடையஉறவு அலது - நட்பைத் தவிர இனி அயலார் பால் - இனி பிறரிடத்தே


சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும்
உறவு அலம் அலம் அருள் அலை கடல் கழி
துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே

சுழல்வது - திரிவது இனிது என - நல்லது என்று வசமுடன் -அவர்கள் வசப்பட்டு வழிபடும் - அவர்களைப் பின்பற்றி வழிபடுகின்ற உறவு அலம் அலம் - நட்பும் போதும் போதும்அருள் அலை - (உனது) திருவருள் அலை வீசும் கடல் கழி துறை - கடலின் கால்களின் துறை வழியில் செல் அறிவினை- செல்லும் அறிவை எனது உள் மகிழ்வுற - என் மனம் மகிழும் பொருட்டு அருள்வாயே - அருள்வாயாக


விருது முரசுகள் மொகு மொகு மொகு என
முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில்
விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட

விருது முரசுகள் - வெற்றிச் சின்னமான பறைகள் மொகு மொகு மொகு என முகுற (குமுற) - மொகு மொகு என்று பேரொலி செய்ய ககபதி - கருடன்  முகில் திகழ் - மேகம் விளங்கும் முகடு அதில் விகட - ஆகாயத்தில் அகன்ற (தனது)இறகுகள் பறையிட - இறகுகளைக் கொண்டு வட்டமிடஅலகைகள் நடமாட - பேய்கள் நடமாட


விபுதர் அரகர சிவ சிவ சரண் என
விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர
வினை கொள் நிசிசரர் பொடிபட அடல் செயும் வடிவேலா

விபுதர் - தேவர்கள் அரகர சிவ சிவ சரண் என - அரகர சிவசிவ சிவசிவ உன் அடைக்கலம் என்று ஒலி செய்ய விரவு கதிர் - பொருந்திய சூரியனும் முதிர் இமகரன் - நிறைந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வர - வலம் வரவினைகொள் - தீச்செயலைக் கொண்ட நிசிசரர் - அசுரர்கள்பொடிபட - பொடிபட்டு அழிய அடல் செயும் - போர் செய்தவடிவேலா - அழகிய வேலனே


மருது நெறு நெறு நெறு என முறிபட
உருளும் உரலொடு தவழ் அரி மருக செவ்
வனசம் மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி

மருது - மருத மரம் நெறு நெறு நெறு என முறி பட - நெறு நெறு என்று முறிபடும்படி உருளும் உரலொடு - உருண்டு சென்று உரலுடனே தவழ் - தவழ்ந்து சென்ற அரி மருக -திருமாலின் மருகனே வனசம் மலர் - செந்தாமரை மலர்கின்றசுனை - சுனையும் புலி நுழை - புலி நுழையும் முழை உடைய -குகையும் கொண்ட விராலி மலையில் - விராலி மலையில்


மலையில் உறைகிற அறு முக குருபர
கயலும் மயிலையும் மகரமும் உகள் செ(ந்)நெல்
வயலி நகரியில் இறையவ அருள் தரு பெருமாளே

உறைகிற - வீற்றிருக்கும் அறுமுக - ஆறுமுகனே குருபர -குருபரனே கயலும் - கயல் மீன்களும் மயிலையும் - மயிலை என்னும் மீன்களும் மகரமும் - சுறா மீன்களும் உகள் - தாவித் திரியும் நெ(ந்) நெல் வயல் - செந்நெல் வயல்களைக் கொண்ட ஊரில் நகரியில் இறைவ - வயலூர்ப் பதியில் இறைவனேஅருள் தரு பெருமாளே - திருவருள் புரியும் பெருமாளே
சுருக்க உரை
இரத்தம், புழுக்கள், நீர், மலம், மயிர், சதை ஆகியவை பொருந்தும் உருவமாக இவ்வுடல் எடுத்ததும்,அழகொடு விளங்கும் அணி கலன்களும், அறுசுவை உணவும்,  வீடும், மனைவி, குழந்தைகள், உற்றார்,உறவினர், இவை எல்லாம் போதும் போதும்; நான்கு வேதங்களின் மார்க்கங்களை எடுத்து உரைக்கும் சைவ சித்தாந்த நூல்களைத்  தவிர, மற்ற உலக சம்பந்தமான நூல்களைப் படித்தது போதும்; நண்பர்களிடம் பழகி அவர்களைப் பின் பற்றுதல் போதும்; உனது  திருவருள்  வழியில் செல்லும் அறிவை என் உள்ளம் மகிழ்ச்சி பெற அருள் புரிவாயாக
வெற்றிப் பறைகள் முழங்கவும், கருடன் வட்டமிடவும்,  பேய்கள் நடமாடவும், தேவர்கள் அரகர சிவசிவ என்று துதி செய்யவும், கதிர்கள் வலம் வரவும்,அசுரர்கள் பொடிபட்டு விழப் போர் செய்த வேலனே, மருத மரம் முறிய தவழ்ந்து சென்ற கண்ணனுடைய மருகனே, விராலி மலையில் உறையும் ஆறு முகனே குருபரனே, செழிப்பான வயலுரில் வீற்றிருக்கும் பெருமாளே,  என் அறிவு உன்னைப் போற்றி மகிழ அருள்புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

அலம் அலம் அலம் - போதும் இந்தச் சொற்றொடர் வந்துள்ள மற்றொரு திருப்புகழ் பாடல் -அருவமிடை,   குடல் நிண

முகுற ககபதி
முகுற என்பது குமுற என்பதின் நிலை மாறல்

மருது நெறு நெறு நெறு என முறிபட
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
பரமபத நண்பர் அன்பின் மருகோனே-  திருப்புகழ்- 'மருமலரினன்'