பின் தொடர்வோர்

Showing posts with label வயலூர். Show all posts
Showing posts with label வயலூர். Show all posts

Friday, 19 May 2017

304.தாமரையின்மட்டு

304
வயலூர்

           தானதன தத்த தானதன தத்த
                    தானதன தத்த                      தனதான

தாமரையின் மட்டு வாசமல ரொத்த
   தாளிணைநி னைப்பி             லடியேனைத்
தாதவிழ்க டுக்கை நாகமகிழ் கற்ப
   தாருவென மெத்தி                  யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
   வாவெனஅ ழைத்தென்             மனதாசை  
மாசினைய றுத்து ஞானமுத ளித்த
   வாரமினி நித்த                   மறவேனே
காமனையெ ரித்த தீநயன நெற்றி
   காதியசு வர்க்க                   நதிவேணி 
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
   காதுடைய அப்பர்                 குருநாதா
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
   சோலைபுடை சுற்று               வயலூரா 
சூடிய தடக்கை வேல்கொடுவி டுத்து 
   சூர்தலை துணித்த              பெருமாளே


பதம் பிரித்து உரை

தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த  
தாள் இணை நினைப்பு இல் அடியேனை

தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த தாமரையின் நறு மணம் வீசும் மலருக்கு ஒப்பான தாள் இணை நினைப்பு இல் - (உனது) இரண்டு திருவடிகளின் நினைப்பே இல்லாதஅடியேனை - அடியேனை

தாது அவிழ் கடுக்கை நாக(ம்) மகிழ் கற்ப
தாரு என மெத்திய விராலி

தாது அவிழ் கடுக்கை மகரந்தப் பொடி விரியும் கொன்றைநாகம் - சுர புன்னை மகிழ் மகிழ மரம் (முதலியவை) கற்ப தாரு கற்பக விருட்சம் என என்று சொல்லும்படியாக  மெத்திய மிகுந்த விராலி விராலி என்கின்ற

மா மலையினில் நிற்ப நீ கருதி உற்று
வா என அழைத்து என் மனது ஆசை

மா மாலையில் நிற்ப சிறந்த மலையில் வீற்றிருக்கின்றோம்  நீ கருதி உற்று வா நீ கருத்தில் கொண்டு வருவாயாக என அழைத்து என்று என்னை அழைத்து  என் மனது அசை - என்னுடைய மனதில் உள்ள ஆசைகளையும்

மாசினை அறுத்து ஞான அமுது அளித்த
வாரம் இனி நித்தம் மறவேனே

மாசினை  - (என்) குற்றங்களையும் அறுத்து ஒழித்து ஞான அமுது அளித்த ஞான அமுதத்தை எனக்குத் தந்த வாரம் -அன்பை இனி நித்தம் இனி எந்நாளும் மறவேனே மறக்க மாட்டேன்

காமனை எரித்த தீ நயன நெற்றி
காதிய சுவர்க்க நதி வேணி

காமனை எரித்த மன்மதனை எரித்த தீ நயன நெற்றி -நெருப்புக் கண்ணை உடைய நெற்றியையும் காதிய -எல்லாவற்றையும் அழிக்க வல்லதான   சுவர்க்க நதி ஆகாய கங்கையைச் சூடியுள்ள வேணி சடையையும்

கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட
காது உடைய அப்பர் குருநாதா

கானில் உறை காட்டில் இருக்கும் புற்றில் ஆடும் புற்றில் படம் எடுத்து ஆடுகின்ற பணி பாம்பை  இட்ட அணிந்த  காது உடைய அப்பர் காதுகளைக் கொண்ட சிவபெருமானுக்கு  குரு நாதா குரு நாதரே

சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க
சோலை புடை சுற்று வயலூரா

சோமனொடு சந்திரனோடு அருக்கன் சூரியனும் மீன் உலவும் நட்சத்திரங்களும் உலவும் (அளவுக்கு) மிக்க -உயர்ந்த சோலை புடை சுற்றும் - சோலைகள் பக்கங்களில் சுற்றியுள்ள 
வயலூரா - வயலூரில் வாழ்பவனே

சூடிய தடக் கை வேல் கொடுவித்து
சூர் தலை துணித்த பெருமாளே

தடக்கை சூடிய அகன்ற திருக் கரத்தில் ஏந்திய வேல் கொடு விடுத்து வேலைச் செலுத்தி சூர் தலை துணித்த பெருமாளே - சூரனுடைய தலையை வெட்டித் துணித்த பெருமாளே

சுருக்க உரை

தாமரை மலர் போன்று மணக்கும் உனது இரு திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனைசெழிப்பான விராலி மலையில் வீற்றிருக்கின்றோம்அங்கு வந்து எம்மைத் தரிசிக்கவும் என்று என்னை அழைத்துஎன் ஆசைகளையும்குற்றங்களையும் அழித்துஞான அமுதத்தைக் கொடுத்த உன் கருணையை என்றும் மறக்க மாட்டேன்

மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணை உடையவரும்ஆகாய கங்கையைச் சூடிய சடையையும்பாம்பு அணிந்த காதுகளை உடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு குரு நாதரே உயர்ந்த சோலைகள் சூழ்ந்த வயலூரில் வாழ்பவனே திருக் கரத்தில் ஏந்திய வேலைச் செலுத்திச் சூரனுடைய தலையைத் துணித்த பெருமாளே எனக்கு ஞானம் அளித்த உன் கருணையை நான் என்றும் மறவேன்

விளக்கக் குறிப்புகள்

காதிய சுவர்க்க நதி
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு பரமேசர்          – திருப்புகழ், அழகுதவிழ்

புற்றிலாடு பணி இட்ட காதுடைய அப்பர்

 புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
  பற்றி வாழும் பரமனைப் பாடிட                           - சம்பந்தர் தேவாரம் 

303.குருதிகிருமிகள்

303
வயலூர்
           தனன தனதன தனதன தனதன
                    தனன தனதன தனதன தனதன
                    தனன தனதன தனதன தனதன        தனதான

குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
   மருவு முருவமு மலமல மழகொடு
   குலவு பலபணி பரிமள மறுசுவை            மடைபாயல்
குளிரி லறையக மிவைகளு மலமல
   மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
   குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல         மொருநாலு
சுருதி வழிமொழி சிவகலை யலதினி
   யுலக கலைகளு மலமல மிலகிய
   தொலைவி லுனைநினை பவருற வலதினி     யயலார்பால்
சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
   முறவு மலமல மருளலை கடல்கழி
  துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற       அருள்வாயே
விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
   முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
   விகட இறகுகள் பறையிட அலகைகள்          நடமாட
விபுத ரரகர சிவசிவ சரணென
   விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர
   வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும்   வடிவேலா
மருது நெறுநெறு நெறுவென முறிபட
   வுருளு முரலொடு தவழரி மருகசெ
   வனச மலர்சுனை புலிநுழை முழையுடை      யவிராலி
மலையி லுறைகிற அறுமுக குருபர
   கயலு மயிலையு மகரமு முகள்செநெல்
   வயலி நகரியி லிறையவ அருள்தரு          பெருமாளே

பதம் பிரித்து உரை

குருதி கிருமிகள் சல(ம்) மல(ம்) மயிர் தசை
மருவும் உருவமும் அலம் அலம் அழகொடு
குலவு பல பணி பரிமளம் அறு சுவை மடை பாயல்

குருதி இரத்தம் கிருமிகள் புழுக்கள் சலம் மலம் மயிர்தசை - நீர்மலம்மயிர்மாமிசம் ஆகிய இவை மருவும் -பொருந்திய   உருவமும் உருவை உடைய (இந்த உடல் எடுத்தது) அலம் அலம் போதும் போதும் அழகொடு குலவு -அழகோடு விளங்கும் பல பணி - பல விதமான அணி கலன்களும் பரிமளம் நறு மணமுள்ள வாசனைப் பொருள்களும்  அறு சுவை மடை - ஆறு சுவைகள்  கூடியசோறு பாயல் படுக்கை


குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம் அலம்
மனைவி மகவு அ(ன்)னை அநுசர்கள் முறை முறை
குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம் அலம் ஒரு நாலு

குளிர் இல் அறை குளிர் இல்லாத அடக்கமான அறைகள் கொண்ட அகம் வீடு இவைகளும் - இவைகளும் அலம் அலம்போதும் போதும் மனைவி மகவு அ(ன்)னை மனைவி ,குழந்தைகள், தாயார் அநுசர்கள் கூடப் பிறந்தவர்கள் முறை முறை உறவு முறை கூறி குனகு கொஞ்சிக் குலவும்கிளைஞர்கள் சுற்றத்தினர் இவர்களும் அலம் அலம் -இவர்களும் போதும் போதும் ஒரு நாலு ஒரு நான்கு


சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி
உலக கலைகளும் அலம் அலம் இலகிய
தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார் பால்

சுருதி வழி வேதங்களின் வழியை மொழி எடுத்துக் கூறும்சிவ கலை அ(ல்)லது சைவ சித்தாந்த நூல்கள் தவிர இனி உலக கலைகளும் வேறு உலக சம்பந்தமான நூல்களைஅலம் அலம் - (ஓதுவதும்) போதும் போதும் இலகிய -விளங்கி நிற்பவனும் தொலைவு இல் உனை நினைபவர் -அழிவில்லாத வனுமாகிய உன்னை நினைப்பவர்களுடையஉறவு அலது நட்பைத் தவிர இனி அயலார் பால் இனி பிறரிடத்தே


சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும்
உறவு அலம் அலம் அருள் அலை கடல் கழி
துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே

சுழல்வது திரிவது இனிது என நல்லது என்று வசமுடன் -அவர்கள் வசப்பட்டு வழிபடும் - அவர்களைப் பின்பற்றி வழிபடுகின்ற உறவு அலம் அலம் நட்பும் போதும் போதும்அருள் அலை (உனது) திருவருள் அலை வீசும் கடல் கழி துறை - கடலின் கால்களின் துறை வழியில் செல் அறிவினைசெல்லும் அறிவை எனது உள் மகிழ்வுற என் மனம் மகிழும் பொருட்டு அருள்வாயே அருள்வாயாக


விருது முரசுகள் மொகு மொகு மொகு என
முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில்
விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட

விருது முரசுகள் வெற்றிச் சின்னமான பறைகள் மொகு மொகு மொகு என முகுற (குமுற) மொகு மொகு என்று பேரொலி செய்ய ககபதி கருடன்  முகில் திகழ் மேகம் விளங்கும் முகடு அதில் விகட ஆகாயத்தில் அகன்ற (தனது)இறகுகள் பறையிட - இறகுகளைக் கொண்டு வட்டமிடஅலகைகள் நடமாட - பேய்கள் நடமாட


விபுதர் அரகர சிவ சிவ சரண் என
விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர
வினை கொள் நிசிசரர் பொடிபட அடல் செயும் வடிவேலா

விபுதர் தேவர்கள் அரகர சிவ சிவ சரண் என அரகர சிவசிவ சிவசிவ உன் அடைக்கலம் என்று ஒலி செய்ய விரவு கதிர் பொருந்திய சூரியனும் முதிர் இமகரன் - நிறைந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வர - வலம் வரவினைகொள் தீச்செயலைக் கொண்ட நிசிசரர் அசுரர்கள்பொடிபட பொடிபட்டு அழிய அடல் செயும் போர் செய்தவடிவேலா அழகிய வேலனே


மருது நெறு நெறு நெறு என முறிபட
உருளும் உரலொடு தவழ் அரி மருக செவ்
வனசம் மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி

மருது - மருத மரம் நெறு நெறு நெறு என முறி பட - நெறு நெறு என்று முறிபடும்படி உருளும் உரலொடு - உருண்டு சென்று உரலுடனே தவழ் தவழ்ந்து சென்ற அரி மருக -திருமாலின் மருகனே வனசம் மலர் - செந்தாமரை மலர்கின்றசுனை சுனையும் புலி நுழை புலி நுழையும் முழை உடைய -குகையும் கொண்ட விராலி மலையில் விராலி மலையில்


மலையில் உறைகிற அறு முக குருபர
கயலும் மயிலையும் மகரமும் உகள் செ(ந்)நெல்
வயலி நகரியில் இறையவ அருள் தரு பெருமாளே

உறைகிற வீற்றிருக்கும் அறுமுக ஆறுமுகனே குருபர -குருபரனே கயலும் கயல் மீன்களும் மயிலையும் மயிலை என்னும் மீன்களும் மகரமும் - சுறா மீன்களும் உகள் தாவித் திரியும் நெ(ந்) நெல் வயல் செந்நெல் வயல்களைக் கொண்ட ஊரில் நகரியில் இறைவ வயலூர்ப் பதியில் இறைவனேஅருள் தரு பெருமாளே திருவருள் புரியும் பெருமாளே
சுருக்க உரை
இரத்தம்புழுக்கள்நீர்மலம்மயிர்சதை ஆகியவை பொருந்தும் உருவமாக இவ்வுடல் எடுத்ததும்,அழகொடு விளங்கும் அணி கலன்களும்அறுசுவை உணவும்,  வீடும்மனைவிகுழந்தைகள்உற்றார்,உறவினர்இவை எல்லாம் போதும் போதும்; நான்கு வேதங்களின் மார்க்கங்களை எடுத்து உரைக்கும் சைவ சித்தாந்த நூல்களைத்  தவிரமற்ற உலக சம்பந்தமான நூல்களைப் படித்தது போதும்; நண்பர்களிடம் பழகி அவர்களைப் பின் பற்றுதல் போதும்; உனது  திருவருள்  வழியில் செல்லும் அறிவை என் உள்ளம் மகிழ்ச்சி பெற அருள் புரிவாயாக
வெற்றிப் பறைகள் முழங்கவும்கருடன் வட்டமிடவும்,  பேய்கள் நடமாடவும்தேவர்கள் அரகர சிவசிவ என்று துதி செய்யவும்கதிர்கள் வலம் வரவும்,அசுரர்கள் பொடிபட்டு விழப் போர் செய்த வேலனே, மருத மரம் முறிய தவழ்ந்து சென்ற கண்ணனுடைய மருகனே, விராலி மலையில் உறையும் ஆறு முகனே குருபரனே, செழிப்பான வயலுரில் வீற்றிருக்கும் பெருமாளே,  என் அறிவு உன்னைப் போற்றி மகிழ அருள்புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

அலம் அலம் அலம் - போதும் இந்தச் சொற்றொடர் வந்துள்ள மற்றொரு திருப்புகழ் பாடல் -அருவமிடை,   குடல் நிண

முகுற ககபதி
முகுற என்பது குமுற என்பதின் நிலை மாறல்

மருது நெறு நெறு நெறு என முறிபட
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
பரமபத நண்பர் அன்பின் மருகோனே-  திருப்புகழ்- 'மருமலரினன்'