பின் தொடர்வோர்

Saturday, 4 April 2020

414.முனையழிந்தது


414
பொது

           தனன தந்தன தாத்தன தந்தன
           தனன தந்தன தாத்தன தந்தன
           தனன தந்தன தாத்தன தந்தன    தனதான

முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது
   வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது
   முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது      ப்ரமையான
முகம ழிந்தது நோக்குமி ருண்டது
   இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது
   மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது        அறிவேபோய்
நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு
   மவச மும்பல ஏக்கமு முந்தின
   நெறிம றந்தது மூப்புமு திர்ந்தது                 பலநோயும்
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது
   சலம லங்களி னாற்றமெ ழுந்தது
   நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி      தருள்வாயே
இனைய இந்திர னேற்றமு மண்டர்கள்
   தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை
   யிடுமி டும்புள ராக்கதர் தங்களில்             வெகுகோடி
எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர்
   தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட
   இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை       யெறிவோனே
தினைவ னங்கிளி காத்தச வுந்தரி
   அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து
   செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு       மிளையோனே
திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர்
   குமர கந்தப ராக்ரம செந்தமிழ்
   தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய    பெருமாளே.

பதம் பிரித்து உரை

முனை அழிந்தது மேட்டி குலைந்தது
வயது சென்றது வாய் பல் உதிர்ந்தது
முதுகு வெம் சிலை காட்டி வளைந்தது ப்ரபையான

முனை அழிந்தது - துணிவு அழிந்து போயிற்று. மேட்டி - (இருந்த) ஆணவம். குலைந்தது - தொலைந்து போயிற்று. வயது சென்றது - வயது ஏறிவிட்டது. வாய்ப்பல் உதிர்ந்தது - வாயில் இருந்த பற்கள் உதிர்ந்து போயின. முதுகு வெம் சிலை காட்டி - முதுகு நன்றாய் வளைந்த வில் என்று சொல்லும்படி. வளைந்தது - வளைந்து போய் விட்டது. ப்ரபையான - ஒளி வீசு நேர் நின்ற.

முகம் அழிந்தது நோக்கும் இருண்டது
இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது
மொழி தளர்ந்தது நாக்கு விழுந்தது அறிவே போய்

முகம் அழிந்தது - முகம் ஒளி மழுங்கி விட்டது. நோக்கும் இருண்டது - கண் பார்வையும் இருள் அடைந்தது. இருமல் வந்தது - இருமல் வந்து விட்டது. தூக்கம் ஒழிந்தது - தூக்கம் ஒழிந்து விட்டது. மொழி தளர்ந்தது - பேச்சும் தளர்ந்து சோர்வடைந்து விட்டது. நாக்கு விழுந்தது - பேச்சுக்குத் தடையாய். அறிவே போய் - அறிவு கெட்டுப் போய்.

நினைவு அயர்ந்தது நீட்டல் முடங்கலும்
அவசமும் பல ஏக்கமும் முந்தின
நெறி மறந்தது மூப்பும் முதிர்ந்தது பல நோயும்

நினைவு அயர்ந்தது - ஞாபகம் என்பது சோர்வடைந்தது. நீட்டல் - (கை, கால்களை) நீட்டலும். முடங்கலும் - மடக்குவதும் ஆகி. அவசமும் - மயக்கமும். பல ஏக்கமும் - பல விதமான கவலைகளும். முந்தின - முற்பட்டன. நெறி மறந்தது - ஒழிக்க நெறியும் மறந்து போய் விட்டது. மூப்பு முதிர்ந்தது - கிழத் தன்மை முற்றி விட்டது. பல நோயும் - பல விதமான நோய்களும்.

நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது
சல மலங்களின் நாற்றம் எழுந்தது
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு இனிது அருள்வாயே

நிலுவை கொண்டது - நிலையாகப் பிடித்து நின்றன. பாய்க்கிடை கண்டது - பாயில் படுக்கை விடாது பிடித்துக் கொண்டது. சல மலங்களின் நாற்றம் - மூத்திரம், மலம் ஆகியவைகளின் துர் நாற்றம். எழுந்தது - எழுந்து விட்டது. நிமிஷம் - ஒரே நிமிடம் தான். இங்கு இனி - இங்கு அவ்வளவு தான். என் முன்பு - என்று உலகோர் பேசுவதற்கு முன்பாக. இனிது அருள்வாயே - நான் சுகம் பெறும்படி அருள் புரிவாயாக.

இந்திரன் இனைய ஏற்றமும் அண்டர்கள்
தலமும் மங்கிட ஓட்டி இரும் சிறை
இடும் இடும்பு உள்ள ராக்கதர் தங்களில் வெகு கோடி

இந்திரன் இனைய - இந்திரன் வருத்தம் உற. ஏற்றமும் - (அவனுடைய) மேன்மையும். அண்டர்கள் தலமும் - தேவர்களின் பொன்னுலகமும். மங்கிட - ஒளி இழந்து போய் மங்கும்படி. ஓட்டி - அவர்களை வெருட்டி ஓட்டிவிட்டு. இரும் சிறை இடும் - அவர்களைப் பெரிய சிறையில் அடைவித்த. இடும்பு உள்ள - கொடுஞ் செயலைக் கொண்ட. ராக்கதர் தங்களில் -  அரக்கர்களின். வெகு கோடி - பல கோடியர்.

எதிர் பொரும் படி போர்க்குள் எதிர்ந்தவர்
தசை சிரங்களும் நால் திசை சிந்திட
இடி முழங்கிய வேல் படை ஒன்றனை எறிவோனே

எதிர் பொரும்படி - நேரே சண்டை செய்ய. போர்க்குள் எதிர்ந்தவர் - போரில் எதிர்த்தவர்களின். தசை சிரங்களும் - சதையும் தலைகளும். நாற்றிசை சிந்திட - நாலா திசைகளிலும் சிதறிச் சிந்த. இடி முழங்கிய - இடி போல் ஒலித்த. வேற் படை ஒன்றனை - வேலாயுதமாகிய ஒப்பற்ற ஒரு படையை. எறிவோனே - செலுத்தியவனே.

தினை வனம் கிளி காத்த சவுந்தரி
அருகு சென்று அடி போற்றி மணம் செய்து
செகம் அறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே

தினை வனம் கிளி - தினைப் புனத்தில் கிளிகள் வராமல். காத்த - காவல் புரிந்த. சவுந்தரி - அழகியாகிய வள்ளியின். அருகு சென்று - அருகில் போய். அடி போற்றி - அவளுடைய பாதங்களை வணங்கி. மணம் செய்து - திருமணம் புரிந்து. செகம் அறிந்திட - உலகலொம் அறிய. வாழ்க்கை புரிந்திடும் இளையோனே - அவளுடன் வாழ்க்கை நடத்திய இளையோனே.

திரி புரம் பொடி ஆக்கிய சங்கரர்
குமர கந்த பராக்ரம செம் தமிழ்
தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே.

திரிபுரம் - முப்புரங்களை. பொடி ஆக்கிய சங்கரர் - பொடி செய்த சங்கரனின். குமர - புதல்வனே. கந்த - கந்தனே. பராக்ரம - வலிமையாளனே. செந்தமிழ் தெளிவு கொண்டு - செந்தமிழைத் தெளிவுடன். அடியார்க்கு விளம்பிய பெருமாளே - அடியார்களுக்குப் போதித்த பெருமாளே.

சுருக்க உரை

மனத் துணிவும் ஆணவமும் அழிந்து, வயது முதிர்ந்து, பற்கள் உதிர்ந்து, முதுகு வில்லைப் போல் வளைந்து, முகம் ஒளி குறைந்து, இருமல் மிகுந்து, தூக்கம் ஒழிந்து, பேச்சு தளர்ந்து, நாக்குழறி, அறிவு கெட்டு, மறதி அதிகரித்து, கை, கால்கள் நீட்டவும் மடக்கவும் முடியாமல், பல விதமான நோய்களும் பீடித்து, மல சலங்களின் நாற்றம் எழிந்து, முடிவு இது தான் என்று உலகோர் சொல்லுவதற்கு முன்பாக நான் சுகம் பெறும்படி அருள் புரிவாயாக.

இந்திரன் வருத்தம் உறவும், அவனுடைய பொன்னுலகம் அழிவுறவும் தேவர்களைச் சிறையில் வைத்து, கொடுந் தொழில் புரிந்த அசுரர்களில் பல கோடியர் நேரே எதிர்த்துப் போர் செய்ய அவர்களின் சதையும், தலைகளும் சிதற வேற்படையைச் செலுத்தியவனே, தினைப் புனத்தில் கிளிகள் வராமல் காவல் புரிந்த வள்ளியை அணுகி, அவள் பாதங்களை வணங்கி, அவளை மணம் புரிந்து வாழ்க்கை நடத்திய இளையோனே. திரிபுரங்களை எரித்த சங்கரனின் குமரனே, செந்தமிழைத் தெளிவுடன் அடியார்களுக்குப் போதித்த பெருமாளே, நான் முதுமை எய்தி, நோயால் வருந்தி இறப்பதற்கு முன் எனக்கு அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
இப்பாடல் அருணகிரி நாதரின் இலக்கிய மாண்புக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். சொற்சுவையும் பொருட் சுவையும் நிறைந்த பாடல் இது.

முருகன் அவருக்கு அளித்த அருள் பேற்றை கீழ்க் கண்ட திருப்புகழ்ப் பாடல்களில் காணலாம்.

இணையடிகள் பாடி வாழஎ
னெஞ்சிற் செஞ்சொற் றருளாயே...                       (அருணமணி)
பொற்பு மியல்புதுமை யாகப் பாடப் புகல்வாயே... (முத்துமணி)
எனக்கெறப் பொருட்டங்கத்
தொடுக்குஞ் செற் றமிழ்த்தந்திப் படியாள்வாய்.. .(பருத்தந்தத்தி)

ஒப்புக
நாக்கு விழுந்தது அறிவேபோய்....
சொல் தளர்ந்து கோலூன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல கழன்று பண்டம் பழிகாறும்                                     ....  நாலடியார்

செகமறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே...
கந்தனோர் தருவதாகி, வல்லியர் கிரியை ஞான வல்லியின்
கிளையாய்ச் சூழப் பல்லுயிர்க் கருளைப் பூத்துப் பவநெறி
 காத்திட்டன்பர் எல்லவர் தமக்கும் முத்தி இருங்கனி உதவும் என்றும் 
                                                                                      ....   கந்த புராணம்
  
செந்தமிழை தெளிவுடன் அடியார்களுக்கு விளக்கிய பெருமாளே
முருகன் அகத்தியர், சிகண்டி முனிவர் போன்ற பலருக்கும் செந்தமிழின் அரிய   நுட்பங்களை விளக்கினார். அருணகிரியாருக்கும் இந்த அரிய பேறு கிடைத்தது.   தலை    நாளில் பரமேத்தி அன்புற உபதேசப் பொருள் ஊட்டி முத்தமிழ் ஊட்டி                                                                                 திருப்புகழ்,  தலை நாளில்

No comments:

Post a Comment