பின் தொடர்வோர்

Saturday, 4 April 2020

417.வாதந் தலைவலி


417
பொது

                     தானந் தனதன தானந் தனதன
                   தானந் தனதன           தனதான

வாதந் தலைவலி சூலம் பெருவயி
   றாகும் பிணியிவை                 யணுகாதே
மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
   வாழுங் கருவழி                        மருவாதே
ஓதம் பெறுகடல் மோதுந் திரையது
   போலும் பிறவியி                    லுழலாதே
ஓதும் பலஅடி யாருங் கதிபெற 
   யானுன் கழலிணை          பெறுவேனோ
கீதம் புகழிசை நாதங் கனிவொடு
   வேதங் கிளர்தர                 மொழிவார்தம்
கேடின் பெருவலி மாளும் படியவ
   ரோடுங் கெழுமுத             லுடையோனே
வேதந் தொழுதிரு மாலும் பிரமனு
   மேவும் பதமுடை                    விறல்வீரா
மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட
   வேல்கொண் டமர்செய்த      பெருமாளே

பதம் பிரித்து உரை

வாதம் தலை வலி சூலம் பெரு வயிறு
ஆகும் பிணி இவை அணுகாதே
வாதம் - வாயு சம்பந்தமான நோய்கள். தலைவலி - தலைவலி. சூலம் - சூலை நோய். பெரு வயிறு - மகோதரம் என்ற வயிற்றில் நீர் தேக்க நோய். ஆகும் - ஆகிய. பிணி இவை - நோய்களாகிய இவை ஒன்றும். அணுகாதே - என்னை அணுகாமலும்.

மாயம் பொதி தரு காயம் தனின் மிசை
வாழும் கரு வழி மருவாதே

மாயம் - அஞ்ஞானம். பொதி தரு - நிரம்பி உள்ள. காயம் தனில் மிசை - உடல் கொண்டு. வாழும் - வாழும்படி. கரு வழி - கருவின் வழி ஒன்றும். மருவாதே - என்னைச் சேராமலும்.

ஓதம் பெறு கடல் மோதும் திரை அது
யான் உன் கழல் இணை பெறுவேனோ

ஓதம் பெறு - வெள்ளமாய் நிறைந்து நிற்கும். கடல் - கடலின். மோதும் - மேலும் மேலும் வீசுகின்ற. திரை அது போலும் - அலைகள் போல். பிறவியில் - பல பிறப்புக்களில். உழலாதே - நான் அலைச்சல் உறாமல்.

கீதம் புகழ் இசை நாதம் கனிவோடு
வேதம் கிளர் தர மொழிவார் தம்

கீதம் - இசை இன்பமும். புகழ் இசை நாதம் - உன் புகழைச் சொல்லுகின்ற ஓசை இன்பமும். கனிவோடு - பக்தியோடு. வேதம் - வேத வாக்கியங்களை. கிளர் தர - நன்கு விளங்கும்படி. மொழிவார் தம் - ஓதுபவர்களுடைய.

கேடின் பெரு வலி மாளும் படி அவரோடும்
கெழுமுதல் உடையோனே
கேடின் - கேட்டினை விளைக்கும் (ஊழ்வினையின்). பெருவலி - திண்மை. மாளும்படி - (அவர்களைப் பீடிக்காது) ஒழியும்படி. அவரோடும் - அவர்களோடு (எப்போதும்). கெழுமுதல் - பொருந்தி உடனிருந்து காக்கும் திருவருளை. உடையவனே - உடையவனே.

வேதம் தொழு திரு மாலும் பிரமனும்
மேவும் பதம் உடை விறல் வீரா

வேதம் தொழும் திருமாலும் - வேதங்கள் தொழுகின்ற திருமாலும். பிரமனும் - பிரமனும். மேவும் - விரும்புகின்ற. பதம் உடை - திருவடிகளை உடைய. விறல் வீரா - வெற்றி வீரனே.

மேல் வந்து எதிர் பொரு சூரன் பொடி பட
வேல் கொண்டு அமர் செய்த பெருமாளே.

மேல் வந்து எதிர் - மேலெழுந்து வந்து போர் செய்த. சூரன் பொடிபட - சூரன் பொடியாகும்படி. வேல் கொண்டு அமர் செய்த - வேலாயுதத்தைக் கொண்டு சண்டை செய்த. பெருமாளே - பெருமாளே.

சுருக்க உரை

வாதம், தலைவலி, சூலம், மகோதரம் முதலிய நோய்கள் என்னை அணுகாமலும், அஞ்ஞானம் நிறைந்த உடல் எடுத்து வாழும்படி விடும் கருவின் வழி என்னைச் சேராமலும், கடல் அலைகளைப் போல் அடுத்து அடுத்து நான் பல பிறவிகளை எடுத்து அலைச்சல் உறாமலும், உனது திருப்புகழை ஓதும் அடியார்கள் நற்கதி அடையவும் நான் உன் திருவடிகளைப் பெறுவேனோ ?

இசையோடும், பக்தியோடும் வேத வாக்கியங்களை நன்கு விளங்கும் படியாக ஓதுபவர்களுடைய ஊழ் வினைகள் அவர்களைப் அண்டாமல் அவர்களுடன் இருந்து காப்பவனே, வேதங்கள் தொழும் திருமாலும், பிரமனும் விரும்பும் திருவடிகளை உடைய வெற்றி வீரனே., மேல் எழுந்து போருக்கு வந்த சூரன் பொடியாகும்படி வேலைச் செலுத்திப் போர் புரிந்தவனே, என் பிறவிகள் ஒழிய உன் திருவடிகளைப் பெறுவேனோ ?

விளக்கக் குறிப்புகள்

கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு...
இறைவன் புகழை இசையோடு பாடுவதை எல்லா சமயங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு மரபாகும்.

பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவுமிடம்
                                                                         ....சம்பந்தர் தேவாரம்.

நாலு வேதம் ஓதலார்கள் நந்துணை என்றிறைஞ்ச
...சிரபுரம் மேயவனே                                        ....சம்பந்தர் தேவாரம்

வேல் கொண்டு அமர் செய்த பெருமாளே....
தீயும்பவனமும் என்ற பாடலில் வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே என வருவதால், முருகன், வேலாலும், வாளாலும் சூரனுடன் போர் செய்தான் என்பதாக கொள்ளலாம்.




No comments:

Post a Comment