பின் தொடர்வோர்

Saturday, 15 May 2021

441.அனித்த மான

 


                                441

திருவானைக்கா

 

             தனத்த தான தானான தனத்த தான தானான

                   தனத்த தான தானான           தனதான

 

 அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி

    யடைத்து வாயு வோடாத             வகைசாதித்

 தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச

    அசட்டு யோகி யாகாமல்           மலமாயை

 செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார

    சிரத்தை யாகி யான்வேறெ        னுடல்வேறு

 செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத

    சிவச்சொ ரூப  மாயோகி யெனஆள்வாய்

 தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால

    சுதற்கு நேச மாறாத              மருகோனே

 சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால

    தொடுத்த நீப வேல்வீர              வயலூரா

 மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி

    மகப்ர வாக பானீய             மலைமோதும்

 மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக

    மாள்வாரு மதித்த சாமி யேதேவர்      பெருமாளே

 

 பதம் பிரித்து உரை

அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி

அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து

 

அனித்தமான - நிலை இல்லாத ஊன் நாளும் இருப்பதாகவே - அழியக் கூடிய இந்த உடல் என்றும் நிலைத்து இருப்பதற்காக நாசி அடைத்து - மூக்கை அடைத்து வாயு ஓடாத வகை - மூச்சு ஓடாத முறையை சாதித்து - பழகி

 

அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச

அசட்டு யோகி ஆகாமல் மலம் மாயை

 

அவத்திலே - பயனில்லாத வழியிலே குவால் - நிரம்ப மூலி - மூலிகைகளை புசித்து - உண்டு ஆயாச - களைப்பு மிக்க அசட்டு யோகி ஆகாமல் - முட்டாள் தனம் உள்ள யோகியாக ஆகாமல் மலம் மாயை- மலமும் மாயையும்

 

செனித்த காரிய உபாதி ஒழித்து ஞான ஆசார

சிரத்தை ஆகி யான் வேறு என் உடல் வேறு

 

செனித்த - தோன்றுகின்ற காரிய உபாதி - காரியங்களையும் வேதனைகளையும் ஒழித்து - ஒழித்து ஞான ஆசார - ஞானமும் ஆசாரமும் சிரத்தை ஆகி - இவைகளை முயற்சியாக்கி யான் வேறு என் உடல் வேறு - நானும் என்னுடைய உடலும் வேறு

 

செகத்தில் யாவும் வேறாக நிகழ்ச்சியா மன அதீத

சிவ சொரூப மா யோகி என ஆள்வாய்

 

செகத்தில் - உலகில் யாவும் வேறாக - யாவும் வேற்றுமை காட்டும் வேறு வேறாக எண்ணும்படி நிகழ்ச்சயா - நிகழ்ச்சிகளைக் காட்டும் மந அதீத - மனதுக்கு எட்டாததாய் விளங்கும் சிவ சொரூப மா யோகி - சிவ சொரரூப மகா யோகி என - என்று நான் ஆகும்படி ஆள்வாய் - என்னை ஆண்டருள்க

தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால

சுதற்கு நேச மாறாத மருகோனே

 

தொனித்த நாத - ஒலி தரும் இசையுடன் கூடிய வேய் ஊது - புல்லாங்குழலை ஊதுபவரும் சகஸ்ர நாம - ஆயிரம் நாமங்களைக் கொண்டவரும் ஆகிய கோபால சுதற்கு - நந்த கோபாலனுடைய பிள்ளைக்கு (திருமாலுக்கு) நேசம் மாறாத மருகோனே - அன்பு மாறாத மருமகனே

 

சுவர்க்க லோக மீகாமன் சமஸ்த லோக பூ பால

தொடுத்த நீப வேல் வீர வயலூரா

 

சுவர்க்க லோக- விண்ணுலகம் என்னும் கப்பலைக் காப்பாற்றிய மீகாம - மாலுமியே சமஸ்த லோக பூபால - எல்லா உலகங்களையும் காக்கும் அரசே தொடுத்த நீப - தொடுக்கப்பட்ட கடப்ப மாலையனே வேல் வீர - வேல் வீரனே வயலூரா - வயலூரானே

 

மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி

மக ப்ரவாக பானீயம் அலை மோதும்

 

மனித்தர் ஆதி - மனிதன் முதலிய ஜீவராசிகள் வாழும் சோணாடு - சோழ நாடு தழைக்க மேவும் - தழைப்பதற்கு வரும் காவேரி மகாப் ப்ரவாக பானீயம் - காவிரி ஆற்று வெள்ள நீரின் அலை மோதும் - அலைகள் மோதுகின்றதும்

 

மணத்த சோலை சூழ் காவை அனைத்து லோகம் ஆள்வாரும்

மதித்த சாமியே தேவர் பெருமாளே

  

மணத்த சோலை சூழ் - நறு மணம் கமழும் சோலைகள் சூழ்ந்ததுமாகிய காவை - திருவானைக்காவில் வாழும் அனைத்து லோகம் ஆள்வாரும் - எல்லா உலகங்களையும் ஆள்பவரும் மதித்த சாமி - மதித்து வணங்கும் தெய்வமே தேவர் பெருமாளே - தேவர்கள் பெருமாளே

 

 

சுருக்க உரை


 நிலை இல்லாத உடல் நீண்ட நாள் நிலைத்து நிற்க, மூக்கை அடைத்து, மூச்சு வெளிப்போகாத வழியில் நிறுத்திப் பழகி, பல மூலிகைகளை உண்டு, களைப்பும், முட்டாள் தனமும் உள்ள யோகியாக நான் மாறாமல், மலம், மாயைகளை ஒழித்து, ஞான ஆசாரத்துடன், நான் வேறு, என் உடல் வேறு , உலகில் யாவும் வேறு என்பதை உணர்ந்து, மனதுக்கு எட்டாததாய் விளங்கும் சிவ சொரூப மகா யோகியாய் நான் ஆகும்படி என்னை ஆண்டருள்க

புல்லாங்குழலை ஊதுபவரும், ஆயிரம் திரு நாமங்களை உடையவரும் ஆகிய நந்த கோபாலனுடைய பிள்ளைக்கு மருகனே! அனைத்து உலகங்களைப் புரக்கும் அரசனே! சோழ நாடு செழிக்கும்படி வரும் காவிரி ஆற்று வெள்ள நீரின் அலைமோதும் திருவானைக்காவில் விளங்கும் பெருமாளே! எல்லா உலகங்களும் போற்றும் பெருமாளே! என்னைச் சிவ யோகியாய ஆகும்படி அருள்வாய்.

   விளக்கக் குறிப்புகள்

 

நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து

விழி நாசி வைத்து

மூட்டில் கபால மூலாதார

நேர்அண்ட மூச்சையுள்ளே

ஒட்டிப் பிடித்து எங்கும் ஓடாமல்

சாதிக்கும் யோகிகளே                          ----   கந்தர் அலங்காரம்

 

துருத்தி யெனும்படி கும்பித்து

வாயுவைச் சுற்றிமுறித்து

அருத்தி யுடம்பை யொறுக்கலென்

னாம் சிவயோகமென்னும்                        ---- கந்தர் அலங்காரம்

அனாசார கரும யோகி யாகாமல்

அவனி மீதி லோயாது தடுமாறும்

உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக

                                      - திருப்புகழ்  அகலநீளம்யாதாலு

கருமவச னங்க ளால்மறித் தனலூதிக்

கவலைபடு கின்ற யோககற்

பனைவருவு சிந்தை போய்விட      ---- திருப்புகழ்.   கறைபடுமுடம்பி

 சகஸ்ர நாம கோபால

பேரா யிரமுடைய பேராளன்

 பேராளஇ என்கின்றாளால்                       ---- பெரிய திருமொழி

சமஸ்த லோக பூ பால -

பொருது தாக்கிய வய பராக்ரம பூபாலா- திருப்புகழ், முதலி யாக்கையும்


No comments:

Post a Comment