442
திருவானைக்கா
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன தனதான
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி
லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை
க்ரியையும் புணர்ந்தவ ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ
சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு
முழுதுங் கலந்தது சிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு
குறையின்றி நின்றது
சாதி குலமு
மிலதன்றி யன்பர்சொ னவியோமஞ்
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம
சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து
நின்கழல் பெறுவேனோ
வால குமர குக கந்த குன்றெறி
வேல மயில எனவந்து
கும்பிடு
வான விபுதர்
பதியிந்த்ரன் வெந்துயர் களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க
சுந்தர
வாகை புனையும்
ரணசிங்க புங்கவ வயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி
பரைமங்கை குண்டலி
நாளு மினிய
கனியெங்க ளம்பிகை த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர
முளபைங் கரும்புவெ
ணாவ லரசு
மனைவஞ்சி தந்தருள் பெருமாளே
பதம் பிரித்து உரை
ஓல மறைகள் அறைகின்ற ஒன்று
அது
மேலை வெளியில் ஒளிரும் பரம்
சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர்
எவராலும்
ஓலம் மறைகள் அறைகின்ற - வேதங்கள் ஒலமிட்டு எழுப்புகின்ற ஒன்று
அது - ஒப்பற்ற ஒரு பொருள் மேலை
வெளியில் - பர வெளியில் ஒளிரும் - பிரகாசிக்கின்ற பரஞ் சுடர் - பரஞ்சோதி ஓதும்
- சொல்லப்படும் சரியை
க்ரியையும் - சரியை, கிரியை என்னும் மார்க்கத்தை புணர்ந்தவர்
எவராலும் - கடைப்பற்றியவர் எவராலும்
ஓத அரிய துரியம் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனும் உயிரும் முழுதும் கலந்தது சிவஞானம்
ஓத அரிய - சொல்வதற்கு அரிதாகிய துரியம்
கடந்தது - உயர் நிலைக்கு அப்பால்
நிற்பது போத - உணர்வு மயமாகிய அருவ - வடிவின்மை சுருபம் - வடிவம் ப்ரபஞ்சமும்
- உலகும் ஊனும்
உயிரும் - உடல், உயிர் ஆகிய இவை எல்லாவற்றிலும் முழுதும்
கலந்தது - கலந்து நிற்பது சிவஞானம்
- சிவஞானம்
சால உடைய தவர் கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவு இன்றி நின்றது
சாதி குலமும் இலது அன்றி அன்பர் சொ(ன்)ன வியோமம்
சால உடைய - மிகவும் உடைய தவர் - தவசிகள் கண்டு
கொண்டது - அறிந்து உணர்ந்தது மூல
- மூலப் பொருளாய் நிறைவு குறைவு இன்றி - நிறைவும் குறைவுமில்லாத முதற் பொருளாய்
நின்றது - தற்பரமாக நிற்பது சாதி குலமும் இலது - சாதி, குலம் ஆகியவை இல்லாதது அன்றி
- மேலும் அன்பர்
சொ(ன்)ன - அடியார்கள் சொன்ன வியோமம்
- ஞானஆகாசத்தை
வியோமம் – ஆகாசம்.
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய்
வீடு பரம சுக சிந்து இந்த்ரிய
தாப சபலம் அற வந்து நின் கழல் பெறுவேனோ
சாரும் அனுபவர் - சார்ந்துள்ள அனுபவம் உடைய சான்றோர் அமைந்து
அமைந்த - மனம் ஒடுங்கிப்
பொருந்தி உள்ள மெய் வீடு - உண்மையான முத்தி நிலை பரம
சுக சிந்து - இன்பக் கடல் போன்றது
இந்த்ரிய - ஐந்து புலன்களால் உண்டாகும் தாப
சபலம் - தாகமும் ஆசைகளும் அற
வந்து - ஒழிய வந்து நின்
கழல் - உன்னுடைய திருவடிகளை
பெறுவேனோ - அடைவேனோ
வால குமர குக கந்த குன்று எறி
வேல மயில என வந்து கும்பிடு
வான விபுதர் பதி இந்த்ரன் வெம் துயர் களைவோனே
வால குமர - இளங் குமரனே குக கந்த - குகனே, கந்தனே குன்று
எறி வேல - கிரௌஞ்ச மலையை அழித்த
வேலாயுதனே மயல - மயில் வாகனனே என வந்து கும்பிடு - எனக் கூறி வணங்கும் வான
விபுதர் - வானுலகத் தேவர்களின் பதி
இந்த்ரன் - தலைவனான இந்திரனின் வெம்
துயர் - கொடிய துன்பத்தை களைவோனே
- நீக்குபவனே
வாச களப வர துங்க மங்கல
வீர கடக புய சிங்க சுந்தர
வாகை புனையும் ரண (அ)ரங்க(ம்) புங்கவ வயலூரா
வாச களப - வாசனை மிகுந்த கலவைச் சாந்து அணிபவனே வர
துங்க - மேலான பரிசுத்தமானவனே மங்கல
- மங்களகரமானதும் வீர
கடக - வீர கங்கணத்தை அணிந்தவனும்
ஆகிய புய சிங்க - கரங்களை உடைய சிங்கமே சுந்தர
- அழகானவனே வாகை
புனையும் - வெற்றி கொண்ட ரண
(அ)ரங்க(ம்) புங்கவ - போர்க் களத்தில் சிறந்தவனே
வயலூரா - வயலூரில் எழுந்தருளி இருப்பவனே
ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின்
நீலி கவுரி பரை மங்கை குண்டலி
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரி புராயி
ஞாலம் முதல்வி - உலகுக்கு முதல்வி இமயம் பயந்த - இமய மலை அரசன் பெற்ற மின்
- மின்னல் போன்ற தேவி
நீலி கவுரி பரை - நீலி, பச்சை நிறம் உடையவள், பரா சக்தி மங்கை, குண்டலி - அழகி, வல்லப சக்தி நாளும் இனிய கனி - என்றும் இனிய கனி (பழம்) போன்றவள் எங்கள்
அம்பிகை - எங்கள் அம்பிகை த்ரி புராயி - மூன்று புரங்களை எரித்தவள்
நாத வடிவி அகிலம் பரந்தவள்
ஆலின் உதரம் உள பைம் கரும்பு வெண்
நாவல் அரசு மனை வஞ்சி தந்து அருள் பெருமாளே
நாத வடிவி - ஓசை வடிவம் உடையவள் அகிலம்
பரந்தவள் - அகிலாண்ட நாயகி ஆலின்
உதரம் உள - ஆலிலை போன்ற வயிற்றை
உடையவள் பைங் கரும்பு - பசிய கரும்பு போன்றவள் வெண்
நாவல் அரசு - வெண் நாவல் மரத்தின்
கீழ் வீற்றிருக்கும் ஜம்பு நாதனின் மனை - மனைவி வஞ்சி
- வஞ்சிக் கொடி போன்றவள்
(ஆகிய உமா தேவி) தந்தருள்
பெருமாளே - பெற்ற பெருமாளே
சுருக்க உரை
வேதங்கள் புகழ்ந்து ஓலமிடும் ஒப்பற்ற பொருளானதும், வானில் ஒளி வீசும் பரஞ் சோதியும், ஞானிகளும் கண்டு உணர்தற்கு அரிய மூல மெய்ப் பொருளானதும், உரு, அரு, உருவருவாக எங்கும் கலந்து நிற்பதும் ஆகிய சிவஞானம் நிரம்ப உடைய தவசிகள் கண்டு கொண்டது முழு முதல் பொருளாக நிலைத்து நிற்பது, நிறைவு குறைவு இல்லாதது, சாதி, குலம் வேறுபாடுகள் இல்லாதது அன்பர்கள் சொன்ன ஞான ஆகாசமாக இருப்பது என்னுடைய தாக ஆசைகள் நீங்கி அத்தகைய வீடு பேற்றைப் பெறுவேனோ
வயலூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே இமயமலை அரசன் ஈன்ற
உமா தேவியின் மைந்தனே உன் கழல் பெற அருள்வாயே
விளக்கக் குறிப்புகள்
ஓல மறைகள் அறைகின்ற
மெய்யா விமலா
விடைப் பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
-
- திருவாசகம், சிவ புராணம்
சரியை க்ரியையும் புணர்நதவர்
சரியையு டன்க்ரியை போற்றிய
பரமப தம்பெறு
வார்க்கருள்
தருகணன் ரங்கபு
சோச்சிதன் மருகோனே
---திருப்புகழ், அரிவையர் நெஞ்சுரு
சரியை கிரியை ஆகமத்தில் சொல்லப்படும் பாதங்கள் சரியை - புற
வழிபாடு, கிரியை - அகப்புற வழிபாடு யோகம் - அக வழிபாடு ஞானம்- அறிவால் வழிபாடு.
அறிவுமாத்திரத்தால் உரு, அரு, உருவரு என்ற மூன்றையும கடந்த அகண்டாகார ஜோதிமயமான
திருமேனியை வழிபடுதல்.
இதன் விளக்கத்தை 369பாடல்
விளக்கத்தில் பார்க்கலாம்
மூல நிறைவு குறைவு இன்றி
மூலமாய முதலவன் தானே --- சம்பந்தர் தேவாரம்
மூலம் அது ஆகி நின்றான் --- சம்பந்தர் தேவாரம்
குறைவு இலா நிறைவே, குணக்குன்றே --- சுந்தரர் தேவாரம்
போத அருவ சுருபம்
பரம் பொருளான சிவன் ஒன்பது நிலையில் நிற்பதைக் குறிக்கும்
அருவத் திருமேனி (சிவம், சத்தி, நாதம், விந்து ஆகிய நான்கு
உருவத் திருமேனி ( மகேசன், உருத்திரன், மால், அயன் என்ற
நான்கு) அருவுருவத் திருமேனி (சதாசிவம் என்ற ஒன்று)
சிவம் சத்தி நாதம், விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவத்தரு ளுருத்திரன் தான் மாலயன் ஒன்றி னொன்றாய்ப்
பவந்தரும் அருவம் நாலிங் குருவநால் உபயம் ஒன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்- --- சிவஞான சித்தி
அருவமும் உருவ மாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற
சோதிப் பிழம்பு --- கந்த புராணம்
நாளும் இனிய கனி
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியே)- -- திருவிசைப்பா
வியோமம்
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
னக்ரம்வி யோம கோளகை ...... மிசைவாழும்
நாமமும் வடிவுங்கிளைத்திடு வியோமவடிவமாய்த் தோன்றும் திருக்காளத். புராணம்.
ஞானாகாயத்திற் கலந்து இன்புறுகின்ற அநுபவிக்கள் அவர்களைப்
பந்தத்தினின்றும் விடிபட்டி அதனையடையவர்
மருத்துவ நெறி யுரைக்கும் மருந்தும் மணியும் மந்திரமும்
அறியேன்; இயற்கையும் செயற்கையுமாகிய அறிவில்லேன்; வாழ்க்கை இயல்பும் அதற்கமைய
என்னைத் திருத்திக் கொள்ளும் திறமும் அறியேன்: திருவருள் செய்யும் நற்செயலை
அறியேன்; அருட் செயல் ஞானப் பேற்றுக்குத் துணை செய்யும் அறம் செய்யும் வகையும் மன
மடங்கும் திறமாகிய ஓரிடத்தேயிருந்து ஒன்றியிருத்தலும், அதன் பயனறிந்த பெரியோர்களை
வழிபடலும் அறியேன்; இவை யாவும் அறிந்தோர் எய்தும் நின்னுடைய மணியிழைத்த
சிற்றம்பலத்தைச் சேரும் திறம் அறியேன்; அஃது இருந்த திசை தானும் அறியேன்; இந்
நிலையில் நான் நின்னுடைய ஞானாகாயத்திற் புகுவேன்; எனது இயலாமையை யாரிடம்
உரைப்பேன்; எதனைச் செய்வேன்; ஒன்றும் தெரியேன் .- திருவருட்பா
ஞாலம் முதல்வி ….…. மனைவஞ்சி - இந்த 6 வரிகளினால் உமாதேவியாருடைய
ஒப்புபற்ற பெருமையைச் ஸ்வாமிகள் உரைக்கின்றனர். திருவானைக்காவில் எழுந்தருளிய
திருவேலிறைவனைப் பாடுகின்றனர். அதனால் அங்குச் சிறப்புடன் வீற்றிருக்கின்ற
அகிலாண்ட நயாகியயைத் துதிப்பாராயினார். இந்தச் சொற்றொடர்கள் எத்துனை யினிமையாக
இருக்கின்ற தென்பதை அன்பர்கள் ஊன்றிப் படித்துப் பார்க்கவும். நினைப்பார்
நெஞ்சமும், வசனிப்பார் வாக்கும் கேட்பார் செவியும் ஒருங்கே தித்திக்குந் தெள்ளிய
தீந்தமிழ்ச் சொற்களால் தொடுத்து இனிமையிலும் இனிமையாகப் பாடி வைத்தருளினார் -
கிருபானநத வாரியார்
No comments:
Post a Comment