பின் தொடர்வோர்

Friday, 16 June 2017

317.குரைகடலுலகினில்

317
வேப்பூர்

(ஆற்காட்டுக்கு அருகில் உள்ளது)

                              தனதன தனதன தனதன
                                  தாந்த தாத்தான தந்த                    தனதான

குரைகட லுலகினி லுயிர்கொடு
   போந்து கூத்தாடு கின்ற              குடில்பேணிக்
குகையிட மருவிய கருவிழி
   மாந்தர் கோட்டாலை யின்றி        யவிரோதம்
வரஇரு வினையற உணர்வொடு
   தூங்கு வார்க்கே விளங்கு                 மனுபூதி
வடிவினை யுனதழ கியதிரு
   வார்ந்த வாக்கால்மொ ழிந்த        ருளவேணும்
திரள்வரை பகமிகு குருகுல
   வேந்து தேர்ப்பாகன் மைந்தன்     மறையோடு
தெருமர நிசிசரர் மனைவியர்
   சேர்ந்து தீப்பாய இந்த்ர                                 புரிவாழ
விரிதிரை யெரியெழ முதலுற
   வாங்கு வேற்கார கந்த                 புவியேழும்
மிடிகெட விளைவன வளவயல்
   சூழ்ந்த வேப்பூர மர்ந்த                பெருமாளே

பதம் பிரித்து உரை

குரை கடல் உலகினில் உயிர் கொடு
போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி

குரை கடல் உலகினில் - ஆரவாரிக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தில் உயிர் கொடு - உயிர் எடுத்து போந்து வந்து  கூத்தாடுகின்ற - கூத்தாடுகின்ற குடில் பேணி - (இந்த) உடலைப் போற்றி


குகை இட(ம்) மருவிய கரு இழி
மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம்

குகை இட(ம்) மருவிய - மலைக் குகை இடம் போல உள்ள கரு - கருவில் இழி மாந்தர் - இறங்கி விடுகின்ற மனிதர்கள் கோட்டாலை இன்றி - துன்பங்கள் இல்லாமல் அவிரோதம் வர - விரோதம் இல்லாமை என்னும் உள்ளன்பு வர

வர இரு வினை அற உணர்வொடு
தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி

இரு வினை அற - நல் வீனை, தீ வினை என்ற இரண்டு வினைகளும் ஒழிய உணர்வொடு - ஞான உணர்வோடு தூங்குவார்க்கே - தூங்கி விழிக்கும் அன்பர்களுக்கு விளங்கும் - விளங்கும்படியான அநுபூதி - அநுபவ ஞானம்

வடிவினை உனது அழகிய திரு
வார்ந்த வாக்கால் மொழிந்து அருள வேணும்

வடிவினை - வடிவத்தை உனது அழகிய திருவார்ந்த - உனது அழகிய லக்ஷ்மீகரம் பொருந்திய வாக்கால் - திருவாக்கால் மொழிந்து - உபதேசம் செய்து அருள வேணும் - அருள் செய்ய வேண்டும்


திரள் வரை பக மிகு குருகுல
வேந்து தேர் பாகன் மைந்தன் மறையோடு

திரள் வரை - திரண்டு பருத்த (கிரௌஞ்ச) மலை
பக - பிளவுபட மிகு குருகுல வேந்து - உயர்ந்த குருகுல அரசனாகிய (அருச்சுனனுடைய) தேர்ப் பாகன் - தேர் ஓட்டியாக விளங்கிய கண்ணனின் மைந்தன் - மகனான (பிரமன்மறையோடு - (தான் கற்ற) வேதமும் தானுமாய்

தெருமர நிசிசரர் மனைவியர்
சேர்ந்து தீ பாய இந்த்ர புரி வாழ

தெருமர - கலக்கம் உறவும் நிசிசரர் மனைவியர் - அசுரர்களுடைய மனைவிகள் சேர்ந்து தீப்பாய -  ஒன்று கூடி நெருப்பில் விழுந்து இறக்கவும் இந்த்ர புரி வாழ - இந்திரனுடைய பொன்னுலகம் வாழவும்

விரி திரை எரி எழ முதல் உற
வாங்கு வேல்கார கந்த புவி ஏழும்

விரி திரை - பரந்த கடலில் எரி எழ - தீ எழவும் முதல் உற -  முதன்மை தன்மை விளங்க வாங்கு - செலுத்திய வேல்கார - வேலாயுதத்தை உடைய கந்த - கந்தப் பெருமானே புவி ஏழும் - ஏழு உலகங்களின்

மிடி கெட விளைவன வள வயல்
சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே




மிடி கெட - வறுமை நீங்கும்படி விளைவன - செழிப்பான விளைச்சலைத் தரும் வயல் சூழ்ந்த - வயல்கள் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே - வேப்பூரில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

கடல் சூழ்ந்த உலகில் பிறந்து கூத்தாடுகின்ற இந்த உடலை விரும்பிப் போற்றி, கருவறையில் இfறங்கி விழுகின்ற மனிதர்களுக்கு உண்டாகும் துன்பங்கள் இல்லாமல், உள்ளன்பு நிறைந்து, வினைகள் இரண்டும் ஒழிய, நல் உணர்வோடு உறங்குபவர்களுக்கு மட்டும் உண்டாகும் ஞான அநுபவத்தை அடைய வழியை உனது திருவாக்கால் உபதேசிக்க வேண்டும்

கிரௌஞ்ச மலை பிளவுபடவும், அருச்சுனனுடைய தேர்ப்பாகனாகிய கண்ணனின் மகனான பிரமன் கலக்கம் உறவும், அசுரர்களின் மனைவிகள் தீப்புகவும், கடல் வற்றவும், செலுத்திய வேலாயுதத்தை உடையவனே செழிப்பான வேப்பூரில் வீற்றிருக்கும் பெருமாளே திருவாக்கால் உபதேசம் செய்ய வேண்டும்

விளக்கக் குறிப்புகள்

உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கு
தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் நிலைசொல்வதெவ் வாறே                    திருமந்திரம்

தூங்காமல் தூங்கிச் சுகப்பெருமான் நின்நிறைவில்
நீங்காமல் நிற்கும் நிலைபெறவும் காண்பேனோ =               தாயுமானவர்
ஆங்காரம் அற்றுஉன் அறிவுஆன அன்பருக்கே
தூங்காத தூக்கம் அது தூக்கும் பராபரமே                         தாயுமானவர் 
மறையோடு தெருமர
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
கன்றச் சிறையிடு மயில்வீரா                        திருப்புகழ், வஞ்சத்துட

பிரமனை முனிந்து காவலிட்
டொரு நொடியில் மண்டு சூரனைப்     பொருதேறிப்.                                                                                     திருப்புகழ்,கறைபடுமுடம்பி

மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்
வேலடை யாள மிட்ட பெருமாளே               திருப்புகழ், தேதெனவாச



No comments:

Post a Comment