பின் தொடர்வோர்

Monday, 30 March 2020

409.மதிதனை


409
பொது

        தனதன தனான தான தனதன தனான தான
         தனதன தனான தான              தனதான

மதிதனை இலாத பாவி குருநெறி யிலாத கோபி
   மனநிலை நிலாத பேயர்                    அவமாயை
வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி
   வரும்வகை யிதேது காய                  மெனநாடும்
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
   வினையிகல் விடாத கூள                னெனைநீயும்
மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக
   மிகுமுன துரூப தான                    மருள்வாயே
எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை
   யியலொடு கடாவு தீர                      குமரேசா
இனியசொல் மறாத சீலர் கருவிழி வராமல் நாளும்
   இளமைய துதானு மாக                 நினைவோனே
நதியுட னராவு பூணு பரமர்கு ருநாத னான
   நடைபெறு கடூர மான                     மயில்வீரா
நகைமுக விநோத ஞான குறமினு டனேகு லாவு
   நவமணி யுலாவு மார்ப                   பெருமாளே.

பதம் பிரித்து  உரை

மதி தனை இலாத பாவி குரு நெறி இலாத கோபி
மன நிலை நிலாத பேயன் அவம் மாயை

மதி தனை இலாத பாவி - அறிவு இல்லாத பாவி. குரு நெறி இலாத கோபி - குரு போதித்த நெறியில் நிற்காத சினம் உள்ளவன் மன நிலை நிலாத பேயன் - மனம் ஒரு நிலையில் நிற்காத பேய் போன்றவன் அவம் மாயை - பயனற்ற பொய்யான.

வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி
வரும் வகை இது ஏது காயம் என நாடும்

வகை அது விடாத - போக்குகளை விடாத. பேடி - ஆண்மை அற்றவன். தவ நினைவு இல்லாத மோடி - தவம் என்னும் நினைப்பே இல்லாத (வனக்) முரடன் காயம் வரும் வகை இது ஏது - இந்த உடலில் பிறப்பு வந்தது எப்படி என நாடும் - என்று ஆராயும்.

விதி இலி பொல்லாத லோபி சபை தனில் வராத கோழை
வினை இகல் விடாத கூளன் எனை நீயும்
விதி இலி - பாக்கியம் இல்லாத பொலாத லோபி - பொல்லாத குறையை உடையவன் சபை தனில் வராத கோழை - சபைகளில் வந்து பேசும் மனத் திடம் இல்லாத கோழை வினை இகல் விடாதா - வினையின் வலிமையை விடாத கூளன் எனை - பயனிலி ஆகிய என்னை நீயும் - நீயும்.

மிகு பரமதான ஞான நெறி தனை விசாரமாக
மிகும் உனது ரூப தானம் அருள்வாயே

மிகு பரமதான - மிக மேலான ஞான நெறி தனை - ஞான மார்க்கத்தை விசாரமாக - ஆராய்ச்சி செய்ய மிகும் - மிக்கு விளங்கும் உனது ரூப தானம் - உன்னுடைய உருவமான பரிசை. அருள்வாயே -ருள்வாயாக.

எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக்க வேலை
இயலோடு கடாவு தீர குமரேசா

எதிர் வரும் - எதிர்த்து வந்த உதார சூரன் - மேம்பாடு உடைய சூரன். இரு பிளவதாக - இரண்டு பிளவாகும்படி வேலை - வேலாயுதத்தை இகலொடு - தகுதியுடன் கடாவு - செலுத்திய குமரேசா - குமரேசனே.

இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும்
இளமை அது தானும் ஆக நினைவோனே

இனிய சொல் மறாத - இனிமை வாய்ந்த சொற்கள் இல்லை என்னாத சீலர் - சுத்த ஆன்மாக்கள் கரு வழி வராமல் - மீண்டும் பிறவாமல் நாளும் - எப்போதும் இளமை அது தானும் ஆக - இளமையோடு விளங்க நினைவோனே - நினைத்து அருள்பவனே

நதியுடன் அராவு பூணு பரமர் குரு நாதனான
நடை பெறு கடூரமான மயில் வீரா

நதியுடன் - கங்கை ஆற்றுடன் அராவு  பூணும் - பாம்பையும் அணிந்துள்ள பரமர் - சிவபெருமானின் குரு நாதன் ஆன - குரு மூர்த்தியான (மயில் வீரனே) நடை பெறு - நடையில் கடூரமான - வேகம் வாய்ந்ததான மயில் வீரா - மயில் வீரனே.

நகை முக விநோத ஞான குற மின்னுடனே குலாவு
நவ மணி உலாவு மார்ப பெருமாளே.

நகை முக - சிரித்த முகம் உடையவளும். விநோத - அழகிய ஞான குற மின்னுடனே - அற்புதமான ஞானத்தைக் கொண்டவளும் ஆகிய குறப் பெண் வள்ளியுடன் குலாவும் - கொஞ்சுகின்ற (பெருமாளே) நவமணி உலாவு - நவரத்தின மாலை விளங்குகின்ற மார்ப பெருமாளே - மார்பை உடைய பெருமாளே.

சுருக்க உரை

அறிவு இல்லாத பாவி, குரு சொன்ன நெறியில் நில்லாதவன், சினம் உள்ளவன்,. மனம் ஒரு நிலையில் நிற்காதவன், பயனற்றவன், பொய்யான போக்குகளை விடாத முரடன். தவம் என்ற நினைப்பே இல்லாதாவன். இப்பிறப்பு எப்படி வந்தது என்பதை ஆயும் பாக்கியம் இல்லாதவன் ,சபைகளில் பேசும் மன வலிமை இல்லாதவன். இத்தகைய நானும் மேலான ஞான மார்க்கத்தை விசாரமாக ஆராய்ச்சி செய்ய, உன்னுடைய சாரூபம் என்னும் பரிசை எனக்கு அருள் புரிவாயாக.

சூரனுடைய உடல் இரண்டு பிளவாகும்படி வேலை எய்தியவனே குமரேசனே. இனிமை வாய்ந்த சொற்கள் நான் எப்போதும் பேசும்படியும், பரிசுத்தமானவர்கள் போல நானும் மீண்டும் பிறவாமல் இருக்கவும், என்றும் இளமையோடு வாழவும் நினைத்து அருள வேண்டும். கங்கை, பாம்பு இவற்றை அணிந்த சிவபெருமானுக்குக் குருவானவனே, மயில் வீரனே, சிரித்த முகத்தை உடைய வள்ளி நாயகியுடன் கொஞ்சும் பெருமாளே, நவ இரத்தின மாலை அணிந்த மார்பை உடைய பெருமாளே, உனது உருவத்தைக் காட்டி அருளுக.

ஒப்புக:
சபைதனில் வராத கோழை...
   கல்லா தவரின் கடைடென்ப கற்றறிந்தும்
    நல்லார் அவைஅஞ்சு வார்...திருக்குறள்

விளக்க குறிப்புகள்
உனது ரூப தானம் அருள்வாயே...
 இறைவனோடு ஜீவாத்மா கலப்பதை மூன்று நிலைகளில் கூறலாம்.
   1. சாமீபம் - ஜீவன் பரமாத்மாவை நெருங்கி இருக்கும் நிலை.
   2. சாயுச்சியம் - இறைவனோடு இரண்டற ஐக்கியமாகும் மோட்ச நிலை.
   3. சாரூபம் - இறைவன் உருவம் பெற்று விளங்கும் நிலை.
    அருணகிரி நாதர் இவற்றுள் சாரூப பதவியை வேண்டுகிறார்.  சாரூப     பதவி    சன்மார்க்கத்தால் கை கூடுவது.

உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக
பதம் அடைந்திருந்து அருள் பொருந்தும் அது ஒரு    நாளே            ... திருப்புகழ் கடைசிவந்தகன்
  
இருவோர் ஒரு ரூபமதாய்... இறையோனிடமாய் விளையாடுகவே இயல்வே லுடன் மா அருள்வாயே
                   ...... திருப்புகழ், சிவமாதுடனே
  
 சுக சொரூபத்தை உற்று அடைவேனோ .
                     ..... திருப்புகழ், சரியையாள
    பாடல் 369 குறிப்பை பார்க்கவும்
   முதல் நான்கு அடிகளில் அடிகளார் தம் குறைகள் எடுத்துக் கூறியுள்ளார். இதே    போல் அவகுணவிரகனை எனத் தொடங்கும் திருப்புகழ்ப் பாடலிலும்  
    குறைகள்     கூறப்பட்டுள்ளன.


408.மதனேவிய


408
பொது

                   தனதானன தனதானன தனதானன தனதானன 
                      தனதானன தனதானன             தனதான

மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்
   வடிவாயுடல் நடமாடுக                                  முடியாதேன்
மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை
   மகிழ்ஞானக அருபூதியி                                னருள்மேவிப்
பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ
   பரிபூரண கிருபாகர                                        முடன்ஞான
பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை  யடிமேல்விட
   பலகோடிவெண் மதிபோலவெ                         வருவாயே
சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு
   சசிசூரியர் சுடராமென                                வொருகோடிச்
சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக
   சதிநாடக மருள்வேணிய                                னருள்பாலா
விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி
   வெகுமாலுற தனமேலணை                            முருகோனே
வெளியாசையொ டடைபூவளர் மருகாமணி
   வெயில்வீசிய அழகாதமிழ்                             பெருமாளே.

பதம் பிரித்து உரை

மதன் ஏவிய கணையால் இரு வினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன்

மதன் ஏவிய - மன்மதன் செலுத்திய. கணையால் - பாணங்களில் பட்டும். இரு வினையால் - நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளால் பட்டும். புவி - மண். கடல் - நீர் (முதலிய ஐம்பூதங்களும்). சாரமும் - கிரகங்களின் இயக்கம் இவைகளுக்கு ஈடுபட்ட. வடிவாய் - வடிவமான. உடல் நடமாடுக - இந்த உடலுடன் (உலகில்) நடமாட. முடியாதேன் - முடியாதவனாகிய நான்.

மன மாயையோடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அறமகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி

மனம் மாயையோடு - மனத்தின் கண் உள்ள மாயை உணர்ச்சியும். இரு - நல் வினை, தீ வினை எனப்படும். காழ் வினை - முற்றிய வினைகளும். அற - ஒழிய. மூதுடை மலம் - பழமையாய் வரும் ஆணவ மலம். வேர் அற - வேரற்றுப் போக. மகிழ் - மகிழத் தக்க. ஞானக அநுபூதியின் - உள்ளத்து விளங்கும் அனுபவ ஞானம் ஆகிய . அருள் மேவி - அருளை அடைந்து.

பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் மு(ன்)னே பரிபூரண கிருபாகரம் உடன் ஞான
பதம் மேவும் - உன் திருவடியை அடைந்த. அடியாருடன் - அடியார்களுடன். விளையாடுக - நானும் சேர்ந்து விளையாட. அடியேன் முன்னே - அடியேன் எதிரில். பரிபூரண - நிறைந்த. கிருபாகரம் உடன் - கிருபைக்கு இடம் வைத்து. ஞான - ஞானம் என்னும்

பரி மேல் அழகுடனே ஏறி வி(ண்)ணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவே வருவாயே

பரி மேல் - குதிரையின் மேலே. அழகுடன் ஏறி - அழகுடனே ஏறி. விண்ணவர் பூ மழை - தேவர்கள் பூ மழையை. அடிமேல் விட - உனது திருவடியின் மீது பொழிய. பல கோடி - பல கோடிக் கணக்கான. வெண் மதி போலவே - வெண்ணிலவின் ஒளி வீச. வருவாயே - நீ வருவாயாக.

சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு
சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி

சத கோடி - நூறு கோடி. வெண் மடவார் - வெண்ணிற மாதர்கள். கடல் என - கடலைப் போல. சாமரை அசையா - சாமரங்களை வீச. முழு சசி - பூரண சந்திரன். சூரியர் சுடராம் என - சூரியனின் தீப ஒளியாய் விளங்க. ஒரு கோடி - ஒரு கோடிக் கணக்கான.

சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக
சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா

சடை மா முடி முநிவோர் - சடை தாங்கிய அழகிய முடிகளை உடைய முனிவர்கள். சரண் என - சரணம் என்று வணங்க. வேதியர் மறை ஓதுக - மறையவர்கள் வேதங்களை ஓத. சதி நாடகம் அருள் - தாள ஒத்துடன் கூடிய நடனத்தை அருளிய. வேணியன் - சடை தாங்கும் சிவ பெருமான். அருள் பாலா - அருளிய குழந்தையே.

விதி ஆனவன் இளையாள் எனது உ(ள்)ளம் மேவிய வ(ள்)ளி நாயகி வெகு மால் உற தனம் மேல் அணை முருகோனே
விதி ஆனவன் - உயிர்களுக்கு ஆயுளை விதிக்கும் பிரமனுடைய. இளையாள் - தங்கை. என் உள்ளம் மேவிய - என் உள்ளத்துள் வீற்றிருக்கும். வள்ளி நாயகி - வள்ளி நாயகி. வெகு மால் உற - மிக்க ஆசை அடையும்படி. தனம் மேல் அணை - அவள் கொங்கை மேல் அணையும். முருகோனே - முருகனே.

வெளி ஆசையோடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே.

வெளி ஆசையோடு அடை - ஆகாயம், திசை எல்லாம் சேர்ந்துள்ள. பூவணர் - தாமரைப் பூவில் விற்றிருக்கும் திருமாலின். மருகா  - மருகனே. மணி - இரத்தினம். முதிர் - செம்மை முதிர்ந்த. ஆடகம் - பொன். வெயில் வீசிய - (இவை இரண்டின்) ஒளி கலந்து வீசுகின்ற. அழகா - அழகனே. தமிழ் பெருமாளே - தமிழ்ப் பெருமாளே.
சுருக்க உரை
மன்மதனின் பாணங்களாலும், வினைப் பயனாலும், ஐம்பூதங்களால் ஆன உடலுடன் நடமாட முடியாதவனாகிய நான், எனது மாயையும், முற்றிய வினைகளும் ஒழிய, என் உள்ளத்தில் விளங்கும் அனுபவ ஞானமாகிய அருளை அடைந்து, உன் திருவடியை, மற்ற அடியார்களுடன் கூடி நானும் விளையாட, உன் அருள் கொண்டு, மயிலின் மேல் ஏறி எழுந்தருள வேண்டும்.
விண்ணுலக மாதர்கள் சாமரம் வீச, ஒளி வீசும் சடை தாங்கிய முனிவர்கள் சரணம் என்று வணங்க, மறையோர் வேதம் ஓத, தாள ஒத்துடன் நடனம் செய்யும் சிவபெருமான்  அருளிய குழந்தையே. பிரமனின் தங்கையாகிய வள்ளி நாயகி ஆசை அடையும்படி அவளை அணைந்த முருகனே, திருமாலின் மருகனே. இரத்தினமும், பொன்னும் ஒளி வீசும் அழகனே, தமிழ்ப் பெருமாளே. வெண் மதி போல என் முன்னே வர வேண்டுகின்றேன்.
விளக்க குறிப்புகள்
. விதியானவன் இளையாள்...
 பிரமன் திருமாலின் புதல்வன். வள்ளி நாயகி திருமாலின் புத்திரி. அதனால் பிரமனது    தங்கை வள்ளியாவாள்.
ஒப்புக
திருமால் அளித்தருளும் ஒரு ஞான பத்தினியை
    திகழ் மார்பு உற தழுவும் மயில் வீரா...        திருப்புகழ்,  இருநோய்.