பின் தொடர்வோர்

Monday, 30 March 2020

408.மதனேவிய


408
பொது

                   தனதானன தனதானன தனதானன தனதானன 
                      தனதானன தனதானன             தனதான

மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்
   வடிவாயுடல் நடமாடுக                                  முடியாதேன்
மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை
   மகிழ்ஞானக அருபூதியி                                னருள்மேவிப்
பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ
   பரிபூரண கிருபாகர                                        முடன்ஞான
பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை  யடிமேல்விட
   பலகோடிவெண் மதிபோலவெ                         வருவாயே
சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு
   சசிசூரியர் சுடராமென                                வொருகோடிச்
சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக
   சதிநாடக மருள்வேணிய                                னருள்பாலா
விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி
   வெகுமாலுற தனமேலணை                            முருகோனே
வெளியாசையொ டடைபூவளர் மருகாமணி
   வெயில்வீசிய அழகாதமிழ்                             பெருமாளே.

பதம் பிரித்து உரை

மதன் ஏவிய கணையால் இரு வினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன்

மதன் ஏவிய - மன்மதன் செலுத்திய. கணையால் - பாணங்களில் பட்டும். இரு வினையால் - நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளால் பட்டும். புவி - மண். கடல் - நீர் (முதலிய ஐம்பூதங்களும்). சாரமும் - கிரகங்களின் இயக்கம் இவைகளுக்கு ஈடுபட்ட. வடிவாய் - வடிவமான. உடல் நடமாடுக - இந்த உடலுடன் (உலகில்) நடமாட. முடியாதேன் - முடியாதவனாகிய நான்.

மன மாயையோடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அறமகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி

மனம் மாயையோடு - மனத்தின் கண் உள்ள மாயை உணர்ச்சியும். இரு - நல் வினை, தீ வினை எனப்படும். காழ் வினை - முற்றிய வினைகளும். அற - ஒழிய. மூதுடை மலம் - பழமையாய் வரும் ஆணவ மலம். வேர் அற - வேரற்றுப் போக. மகிழ் - மகிழத் தக்க. ஞானக அநுபூதியின் - உள்ளத்து விளங்கும் அனுபவ ஞானம் ஆகிய . அருள் மேவி - அருளை அடைந்து.

பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் மு(ன்)னே பரிபூரண கிருபாகரம் உடன் ஞான
பதம் மேவும் - உன் திருவடியை அடைந்த. அடியாருடன் - அடியார்களுடன். விளையாடுக - நானும் சேர்ந்து விளையாட. அடியேன் முன்னே - அடியேன் எதிரில். பரிபூரண - நிறைந்த. கிருபாகரம் உடன் - கிருபைக்கு இடம் வைத்து. ஞான - ஞானம் என்னும்

பரி மேல் அழகுடனே ஏறி வி(ண்)ணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவே வருவாயே

பரி மேல் - குதிரையின் மேலே. அழகுடன் ஏறி - அழகுடனே ஏறி. விண்ணவர் பூ மழை - தேவர்கள் பூ மழையை. அடிமேல் விட - உனது திருவடியின் மீது பொழிய. பல கோடி - பல கோடிக் கணக்கான. வெண் மதி போலவே - வெண்ணிலவின் ஒளி வீச. வருவாயே - நீ வருவாயாக.

சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு
சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி

சத கோடி - நூறு கோடி. வெண் மடவார் - வெண்ணிற மாதர்கள். கடல் என - கடலைப் போல. சாமரை அசையா - சாமரங்களை வீச. முழு சசி - பூரண சந்திரன். சூரியர் சுடராம் என - சூரியனின் தீப ஒளியாய் விளங்க. ஒரு கோடி - ஒரு கோடிக் கணக்கான.

சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக
சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா

சடை மா முடி முநிவோர் - சடை தாங்கிய அழகிய முடிகளை உடைய முனிவர்கள். சரண் என - சரணம் என்று வணங்க. வேதியர் மறை ஓதுக - மறையவர்கள் வேதங்களை ஓத. சதி நாடகம் அருள் - தாள ஒத்துடன் கூடிய நடனத்தை அருளிய. வேணியன் - சடை தாங்கும் சிவ பெருமான். அருள் பாலா - அருளிய குழந்தையே.

விதி ஆனவன் இளையாள் எனது உ(ள்)ளம் மேவிய வ(ள்)ளி நாயகி வெகு மால் உற தனம் மேல் அணை முருகோனே
விதி ஆனவன் - உயிர்களுக்கு ஆயுளை விதிக்கும் பிரமனுடைய. இளையாள் - தங்கை. என் உள்ளம் மேவிய - என் உள்ளத்துள் வீற்றிருக்கும். வள்ளி நாயகி - வள்ளி நாயகி. வெகு மால் உற - மிக்க ஆசை அடையும்படி. தனம் மேல் அணை - அவள் கொங்கை மேல் அணையும். முருகோனே - முருகனே.

வெளி ஆசையோடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே.

வெளி ஆசையோடு அடை - ஆகாயம், திசை எல்லாம் சேர்ந்துள்ள. பூவணர் - தாமரைப் பூவில் விற்றிருக்கும் திருமாலின். மருகா  - மருகனே. மணி - இரத்தினம். முதிர் - செம்மை முதிர்ந்த. ஆடகம் - பொன். வெயில் வீசிய - (இவை இரண்டின்) ஒளி கலந்து வீசுகின்ற. அழகா - அழகனே. தமிழ் பெருமாளே - தமிழ்ப் பெருமாளே.
சுருக்க உரை
மன்மதனின் பாணங்களாலும், வினைப் பயனாலும், ஐம்பூதங்களால் ஆன உடலுடன் நடமாட முடியாதவனாகிய நான், எனது மாயையும், முற்றிய வினைகளும் ஒழிய, என் உள்ளத்தில் விளங்கும் அனுபவ ஞானமாகிய அருளை அடைந்து, உன் திருவடியை, மற்ற அடியார்களுடன் கூடி நானும் விளையாட, உன் அருள் கொண்டு, மயிலின் மேல் ஏறி எழுந்தருள வேண்டும்.
விண்ணுலக மாதர்கள் சாமரம் வீச, ஒளி வீசும் சடை தாங்கிய முனிவர்கள் சரணம் என்று வணங்க, மறையோர் வேதம் ஓத, தாள ஒத்துடன் நடனம் செய்யும் சிவபெருமான்  அருளிய குழந்தையே. பிரமனின் தங்கையாகிய வள்ளி நாயகி ஆசை அடையும்படி அவளை அணைந்த முருகனே, திருமாலின் மருகனே. இரத்தினமும், பொன்னும் ஒளி வீசும் அழகனே, தமிழ்ப் பெருமாளே. வெண் மதி போல என் முன்னே வர வேண்டுகின்றேன்.
விளக்க குறிப்புகள்
. விதியானவன் இளையாள்...
 பிரமன் திருமாலின் புதல்வன். வள்ளி நாயகி திருமாலின் புத்திரி. அதனால் பிரமனது    தங்கை வள்ளியாவாள்.
ஒப்புக
திருமால் அளித்தருளும் ஒரு ஞான பத்தினியை
    திகழ் மார்பு உற தழுவும் மயில் வீரா...        திருப்புகழ்,  இருநோய்.
 

No comments:

Post a Comment