406
பொது
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான
தத்தன தானா தனாதன தந்ததான
போத நிர்க்குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா நமோநம
பூர ணக்கலை சாரா நமோநம பஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம
போக சொர்க்கபு பாலா நமோநம சங்கமேறும்
மாத மிழ்த்ரய சேயே நமோநம
வேத னத்ரய வேளே நமோநம
வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம என்றுபாத
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
மாயை யிற்சுழி யூடேவிடாதுக லங்கலமோ
கீத நிர்ததவெ தாளா டவீநட
நாத புத்திர பாகீ ரதீகிரு
பாச முத்திர ஜீமூத வாகனர் தந்திபாகா
கேக யப்பிர தாபா முலாதிப
மாலி கைக்கும ரேசா விசாகக்ரு
பாலு வித்ரும காரா ஷடானன புண்டரீகா
வேத வித்தக வேதா விநோதகி
ராத லக்ஷமிகி ரீடா மகாசல
வீர விக்ரம பாரா வதானவ கண்டசூரா
வீர நிட்டுர வீறாதி காரண
தீர நிர்ப்பய தீராபி ராமவி
நாய கப்ரிய வேலாயு தாசுரர் தம்பிரானே.
பதம்
பிரித்தல்
போத நிர் குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா நமோநம
பூரண கலை சாரா நமோநம பஞ்ச பாண
போத - ஞானியாய். நிர்க்குண போதா - குணங்களைக் கடந்த ஞானியே. நமோநம - உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன். நாத - தலைவனே. நிஷ்கள நாதா - உருவம் அற்ற மூர்த்தியே. நமோநம - ..... பூரண - எல்லா. கலை சாரா - கலைகளின் சாரமாயுள்ள தெய்வமே. நமோநம - ......
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம
போக சொர்க்க
பூபா நமோநம சங்கம் ஏறும்
பஞ்ச பாண பூபன் - ஐந்து மலர்ப் பாணங்களைக் கொண்ட மன்மதனுடைய மைத்துனராகிய அரசே. நமோநம - ...... நீபா - கடம்பனே. புஷ்பக தாளா - மலர்களைத் தன்னிடம் கொண்ட திருவடிகளை உடையவனே. நமோநம - .... போக - இன்பங்களுக்கும். சொர்க்கம்
- பொன்னுலகுக்கும்.
பூபாலா - அரசே. நமோநம - ...... சங்கம் ஏறும் - சங்கப் பலகையில் ஏறி அமர்ந்த.
மா தமிழ் த்ரய சேயே நமோநம
வேதன(ம்) த்ரய வேளே நமோநம
வாழ் ஜக த்ரய
வாழ்வே நமோநம என்று பாத
வாரிஜத்தில் விழாதே மகோததி
ஏழ் பிறப்பினில் மூழ்கா மனோபவ
மாயையில்
சுழி ஊடே விடாது கலங்கலாமோ
கீத நிர்த்த வேதாள அடவி நடநாத
புத்திர பாகீரதி கிருபா
சமுத்திர ஜீமூத வாகனர் தந்தி பாகா
கேகய பிரதாபா மூலாதிப
மாலிகை குமரேசா விசாக
க்ருபாலு வித்ரும
ஆகாரா ஷடானன புண்டரீகா
வேத வித்தக வேதா விநோத
கிராத லக்ஷ¢மி கிரீடா மகா அசல
வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர
வீர நிட்டுர வீராதி காரண
தீர நிர்ப்பய தீரா அபிராம
விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே.
பத உரை
மா - சிறந்த. தமிழ் த்ரய சேயே - முத்தமிழ்ச் செம்மலே நமோநம - ........ வேதனம் த்ரய வேளே - (ருக், யஜுர், சாம என்னும்) மூன்று வேதங்களும் போற்றும் வேளே. நமோநம -.......வாழ் ஜக த்ரய - வாழ்கின்ற மூவுலகங்களும் (போற்றும்). வாழ்வே – செல்வனே
நமோநம -..... என்று - என்று போற்றி.
பாத வாரிஜத்தில் - உன் திருவடித் தாமரைகளில். விழாதே - விழாமல். மகா உததி - பெரிய கடல் போன்ற.
ஏழ் பிறப்பினில் - ஏழு பிறப்பில் மூழ்கா - முழுகி. மனோபவ - மனத்தில் உதிக்கின்ற எண்ணங்களாகிய. மாயையில் - மாயையின் சுழியூடே - சுழற்சியினுள்ளே. விடாது - வெளி வர முடியாமல் அகப்பட்டு கலங்கலாமோ - நான் மனம் கலங்குதல் நன்றோ?
கீத நிர்த்த - பாடல், ஆடல் கொண்ட. வேதாள அடவி - வேதாளப் பேய்களுடன் சுடு காட்டில். நட நாத - நடனம் செய்கின்ற சிவபெருமானுடைய. புத்திர - மகனே. பாகீரதி - கங்கையின் மகனே. கிருபா
சமுத்திர - கருணைக் கடலே. ஜீமூத வாகனர் - மேக வாகனனாகிய இந்திரன் (வளர்த்த). தந்தி பாகா - தேவ சேனையின் கணவனே.
கேகயப் பிரதபா - மயில் வாகனம் கொண்ட புகழோனே. மூல அதிப - மூல காரணத் தலைவனே. மாலிகைக் குமரேசா - மாலைகள் அணிந்த குமரேசனே. விசாகா - முருகனே. க்ருபாலு - கிருபாளனே. வித்துரும ஆகாரா - பவள நிற உருவத்தனே. ஷடானனா - ஆறு திருமுகங்களை உடையவனே. புண்டரீகா - தாமரை போன்ற முகங்களை உடையவனே.
வேத வித்தக - வேதங்களின் வல்ல.
வேதா - கடவுளே. விநோத - அற்புதமான. கிராத - வேட. லக்ஷ்மி - இலக்குமி போல அழகுடைய வள்ளியுடன். கிரீடா - லீலைகள் புரிந்தவனே. மகா அசல - பெரிய மலைகளில் வீற்றிருக்கும். வீர - வீரனே (மகாசல வீர என பிரித்து மிக்க கோபத்துடன் சூரனுடன் போரிட்ட வீரனே
என்றோ அல்லது மகாசலம் வீர என பிரித்து புண்ணிய தீர்த்தமாம் கங்கையில் தோன்றிய வீரனே
எனவும் பொருள் கூறுவார் - செங்கலவராய பிள்ளை). விக்ரம - வலியவனே. பார அவதான - மிக்க கவனம் கொண்டவனே. அகண்ட சூர - சூரத்துவம் வாய்ந்தவனே.
வீர நிட்டூர வீரா - வீரனுக்குரிய கொடுமை கொண்ட வீரனே. ஆதி காரண - மூல காரணப் பொருளே. தீர - தீரனே. நிர்ப்பய தீரா - பயமற்ற தீரனே. அபிராம - அழகனே. விநாயக ப்ரிய வேலாயுதா - விநாயகரிடம் அன்பு கொண்ட வேலாயுதனே. சுரர் தம்பிரானே - தேவர்கள் பெருமாளே.
சுருக்க
உரை
ஞானியே, குணங்களைக் கடந்தவனே, உருவம் அற்றவனே, மலர்ப் பாணங்களைக் கொண்ட
மன்மதனின் மைத்துனராகிய அரசே, கடப்ப மாலை அணிந்தவனே, சங்கப் பலகையில் ஏறி முத்தமிழை
வளர்த்தவனே, மூன்று வேதங்களும் போற்றும் வேளே, இவ்வாறு சொல்லி உன்னைப் போற்றி உன் திருவடிகளில்
விழாமல், ஏழு பிறப்புகளில் முழுகி, உலக மாயையில் சிக்கி, நான் மனம் கலங்குவது நன்றோ?
பேய்களுடன் சுடு காட்டில் நடனம் புரியும் சிவபெருமானின் மகனே.கங்கையின்
புத்திரனே, இந்திரன் மகளாகிய தேவ சேனையின் கணவனே, மயில் வாகனனே, குமரனே, ஆறு முகங்களை
உடையவனே, வேதங்களில் வல்லவனே, இலக்குமி போன்ற வள்ளியுடன் லீலைகள் செய்தவனே, வலிமையாளனே,
வீரனே, சூரனைக் கோபித்த வீரனே, மூலகாரணப் பொருளே, கணபதியிடம் அன்பு கொண்டவனே, வேலனே,
தேவர்கள் பெருமாளே, நான் மாயையில் மனம் கலங்கலாமோ?
விளக்கக்
குறிப்புகள்
வேதன த்ரய வேளே...
வேதங்கள்
மூன்று. நாலாவது மந்திரசாகையான அதர்வ வேதம்.
ஒப்புக
ஏழ் பிறப்பினில் மூழ்கா...
இனிமை போலெழு பிறவியெனு வரியி
னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி லிழியாதே
...திருப்புகழ் விடமும்வேல.
விநாயக ப்ரிய வேலாயுதா...
கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்
பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்
கரதலம் பற்றிப் பெற்ற வொருத்தன் ஜகதாதை...திருப்புகழ், கனக்ரவிஞ்ச
மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
அணி கஜானன விம்ப்னொர் அம்புலி
குமர மூஷிக முந்திய ஐங்கர கணராயன்....திருப்புகழ், கமலமாது.
இப
முகவனுக்கு கந்த இளையவ மருக்கடமப...திருப்புகழ், களபமுலை.
கலியாணி
முத லீண மகவானை மகிழ் தோழ...திருப்புகழ்,வாலவயதா.
No comments:
Post a Comment