310
விருத்தாசலம்
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதான
திருமொழி யுரைபெற அரனுன
துழிபணி
செயமுன மருளிய குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை
யுயிர்கழு
தெறிபட மறுகிட விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில
லவர்களி
னுறுபட ருறுமெனை யருள்வாயே
உலகினி லனைவர்கள் புகழ்வுற
அருணையில்
ஒருநொடி தனில்வரு மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி
குறமகள்
கணினெதிர் தருவென முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு
மருமக
கருணையில் மொழிதரு முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள்
சிறைவிட
முரணுறு மசுரனை முனிவோனே
முடியவர் வடிவறு சுசிகர
முறைதமிழ்
முதுகிரி வலம்வரு பெருமாளே
பதம் பிரித்து உரை
திருமொழி உரை பெற அரன் உனதுழி
பணி
செய முனம் அருளிய குளவோனே
திரு மொழி - முத்தி மொழியாகிய பிரணவப் பொருளின் உரை பெற - விளக்கப் பொருளைப் பெற அரன் - சிவபெருமான் உனதுழி - உன்னிடத்தே பணி செய - வணங்க முனம் - முன்பு அருளிய - (அவருக்கு) அப்பொருளை உபதேசித்த குளவோனே - சரவணப் பொய்கையில் உற்பவித்தவனே
திறல் உயர் மதுரையில் அமணரை
உயிர் கழு
தெறி பட மறுகிட விடுவோனே
திறல் உயர் - ஒளி மிக்க மதுரையில் - மதுரையில் அமணரை - சமணர்களின் உயிர் கழு - உயிர் கழுவில் மறுகிட தெறி பட - கலக்கமுற்று சிதறுண்ண விடுவோனே - வைத்தவனே
ஒருவு அரும் உனது அருள்
பரிவிலர் அவர்களின்
உறு படர் உறும் எ(ன்)னை
அருள்வாயோ
ஒருவு அரும் - நீக்குதற்கு அரிதான உனது அருள் - உன்னுடைய திருவருளில் பரிவிலர் அவர்களின் - அன்பில்லாதவர்களைப் போல உறு படர் - துன்பத்தை உறும் - அனுபவிக்கின்ற எனை அருள்வாயோ - என்னைக் கண் பார்த்து அருளாயோ?
உலகினில் அனைவர்கள் புகழ்
உற அருணையில்
ஒரு நொடி தனில் வரு(ம்)
மயில் வீரா
உலகினில் அனைவர்கள் - உலகத்தில் உள்ள எல்லோரும் புகழ் உற - புகழும்படியாக அருணையில் - திருவண்ணாமலையில் ஒரு நொடி தனில் வரும் - ஒரு நொடிப் பொழுதில் வந்து (உதவிய) மயில் வீரா - மயில் வீரனே
கரு வரி உறு பொரு கணை விழி
குற மகள்
க(ண்)ணின் எதிர் தரு என
முனம் ஆனாய்
கரு வரி உறு - கரிய ரேகைகள் பொருந்தி பொரு - சண்டை செய்ய வல்ல கணை விழி - அம்பு போன்ற கண்களை உடைய குற மகள் - குறப் பெண்ணாகிய வள்ளியின் கண்ணின் எதிர் - கண்களின் எதிரில் தரு என - (வேங்கை) மரமாக முனம் ஆனாய் - முன்பு ஆனவனே
கரு முகில் பொரு நிற அரி
திரு மருமக
கருணையில் மொழி தரு முதல்வோனே
கரு முகில் பொரு = கரிய மேகத்தை ஒத்த. நிற = நிறத்தை உடைய. அரி திரு மருமக = திருமாலின் மருகனே. கருணையில் = கருணையுடன். மொழி தரு = (உபதேச) மொழியை. தரு முதல்வோனே = (எனக்குத்) தந்த முதல்வோனே.
முருகு அலர் தரு உறை அமரர்கள்
சிறைவிட
முரண் உறும் அசுரனை முனிவோனே
முருகு அலர் - நறு மண மலர் கொண்ட தரு உறை - கற்பகத் தருவின் நிழலில் இருக்கும் அமரர்கள் - தேவர்களின் சிறை விட - சிறையை விடுமாறு முரண் உறு அசுரனை - மாறுபட்டு நின்ற சூரனை முனிவோனே - கோபித்தவனே
முடிபவர் வடிவு அறு சுசி
கரம் உறை தமிழ்
முது கிரி வலம் வரு(ம்)
பெருமாளே
முடிபவர் - (விருத்தாசலத்தில்) இறப்பவர்கள் வடிவு - பிறப்பை அறு - அறுகின்ற சுசிகரம் உறை - தூயதான தமிழ் - தமிழ் விளங்கும் முது கிரி - திருமுதுகுன்றம் என்னும்
விருத்தாசலத்தில் வலம் வரும் பெருமாளே - வெற்றியுடன் எழுந்தருளியுள்ள பெருமாளே
சுருக்க
உரை
முத்தி மொழியாகிய பிரணவப் பொருளின் நுணுக்கங்களைப் பெற சிவ பெருமான்
உன்னை வணங்க, முன்பு அவருக்கு அப்பொருளை உபதேசித்த சரவணபவனே, மதுரையில் சம்பந்தாராக
வந்துச் சமணர்களைக் கழுவில் ஏற்றி சிதறுண்ண வைத்தவனே உன்னுடைய திருவருளில் அன்பில்லாதவர்கள்
போலத் துன்பத்தை அனுபவிக்கும் என்னைக் கண் பார்த்து அருள்வாயாக
உலகில யாவரும் புகழும்படித் திருவண்ணாமலையில் ஒரு நொடிப்பொழுதில்
வந்து எனக்கு உதவிய மயில் வீரனே, வள்ளியின் எதிரே வேங்கை மரமாக வந்தவனே கரிய திருமாலின்
மருகனே, கற்பகத் தருவின் நிழலில் வாழும் தேவர்களின் சிறையை விடுமாறு, சூரனைக் கோபித்தவனே, பிறப்பை
அறுக்கும் விருத்தாசலத்தில் வெற்றியுடன் எழுந்தருளியுள்ள பெருமாளே, துன்புறும் என்னைக்
கண் பார்த்தருள்க
விளக்கக்
குறிப்புகள்
அரன் உனதுழி பணி செய முனம் அருளிய குளவோனே
பரப்பிரமனாதி யுற்ற பொருள் ஓதுவித்தமைய
றிந்தகோவே
திருப்புகழ்,
வாதபித்தமொடு
மதுரையில் அமணரைஉயிர் கழு தெறிபட
சிறியகர பங்கயத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினில்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற
– திருப்புகழ், நிகமமெனி
குறமகள் கணின் எதிர் தருவென முனம் ஆனாய்
தேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலை
வேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ திருப்புகழ், கூந்தலவிழ
கருணையில் மொழிதரு முதல்வோனே
கமலா லைப்பதி சேர்த்து முன்பதி
வெளியா கப்புக ஏற்றி யன்பொடு
கதிர்தோ கைப்பரி மேற்கொளுஞ்செயல் மறவேனே
திருப்புகழ், தலைநாளிற்
கரண மாய்த்தெனை மரண மாற்றிய
கருணை வார்த்தையி ருந்தவாறென் திருப்புகழ், பொதுவதாய்
உலகினில் அனைவர்கள் புகழ்
உற அருணையில்
ஒரு நொடி தனில் வரு(ம்)
மயில் வீரா
சயிலமெ றிந்தகை வேற்கொடு
மயிலினில் வந்தது எனை யாட்கொளல்
சகம் அறியும்படி காட்டிய குருநாதா
- திருப்புகழ், அரிவையர் நெஞ்சுரு
பழய அடியவருடன் இமையவர்கணம்
இருபுடையுன் இகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வரும் அதில் அருணையில் ஒருவிசைவரவேணும்
திருவருணையில் அருணகிரியாருடன் வாதிட்ட சம்பந்தாண்டான் தேவியை அரசவையில் வரவழைப்பேன் என்று உறுதி கூறி, அவ்வாறு அழைக்க
முடியாது தோல்வியடைந்தான். அருணகிரியார்.
“அதல சேடனாராட” என்ற திருப்புகழைப்பாடி வேண்டினார். முருகக் கடவுள் கம்பத்திலிருந்து
வெளிப்பட்டுப் பிரபுடதேவராஜன் முதலிய அனைவரும் கண்டுகளிக்கக் காட்சியளித்தார். இந்தச் செயல் உலகமறிய நிகழ்ந்ததாக இங்கு சொல்கிறார்
No comments:
Post a Comment