பின் தொடர்வோர்

Friday, 26 May 2017

314.சிகரிக ளிடிய

314
வெள்ளிகரம்
( ராஜதகிரி  )

             
             தனதன தனன தனதன தனன
               தய்யன தத்த தந்த                தனதான

சிகரிக ளிடிய நடநவில் கலவி
    செவ்விம லர்க்க டம்பு             சிறுவாள்வேல்
திருமுக சமுக சததள முளரி
    திவ்யக ரத்தி ணங்கு              பொருசேவல்
அகிலடி பறிய எறிதிரை யருவி
    ஐவன வெற்பில் வஞ்சி              கணவாஎன
றகிலமு முணர மொழிதரு மொழியி
    னல்லது பொற்ப தங்கள்           பெறலாமோ
நிகரிட அரிய சிவசுத பரம
     நிர்வச னப்ர சங்க                      குருநாதா
நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
    நெல்லிம ரத்த மர்ந்த                    அபிராம
வெகுமுக ககன நதிமதி யிதழி
    வில்வமு டித்த நம்பர்              பெருவாழ்வே
விகசித கமல பரிமள கமல
    வெள்ளிக ரத்த மர்ந்த                பெருமாளே

பதம் பிரித்து உரை

சிகரிகள் இடிய நட(ம்) நவில் கலவி
செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல்

சிகரிகள் இடிய - மலைகள் பொடிபட நடம் நவில் - நடனம் செய்கின்ற கலவி - மயில் செவ்வி - புதிய கடம்பு மலர் - கடப்ப மலர் சிறு வாள் - சிறுவாள் வேல் - வேலாயுதம்


திரு முக சமுக சததள முளரி
திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல்

சத தள முளரி - நூற்றிதழ்த் தாமரை போன்ற திருமுக சமுக - ஆறு திருமுகங்களின் தோற்றம் திவ்ய - தெய்வீகமான கரத்தில் இணங்கு - திருக் கையில் பொருந்திய பொரு - போர் செய்ய வல்ல சேவல் - கோழி (இவைகளைக் கொண்டவனே)

அகில் அடி பறிய எறி திரை அருவி
ஐவன(ம்) வெற்பில் வஞ்சி கணவா என்று

அகில் அடி பறிய - அகில் மரத்தின் அடியினைப் பறித்து எறி - எறியும் திரை - அலை வீசும் அருவி - அருவிகள் பாய்கின்ற ஐவனம் வெற்பில் - மலை நெல் விளையும் (வள்ளி) மலையில் வஞ்சி கணவா - வள்ளிக் கொடி போன்ற (வள்ளியின்) கணவனே என்று - என்று

அகிலமும் உணர மொழி தரு மொழியின்
அல்லது பொன் பதங்கள் பெறலாமோ

அகிலமும் உணர - உலகம் எல்லாம் உணரும்படி மொழிதரு - சொல்லும் மொழியின் அல்லது - சொற்களால் அன்றி பொன் பதங்கள் பெறலாமோ - (உனது) அழகிய திருவடியைப் பெற முடியுமோ?

நிகர் இட அரிய சிவசுத பரம
நிர்வசன ப்ரசங்க குரு நாதா

நிகர் இட அரிய - ஒப்பிடுவதற்கு முடியாத சிவ சுத - சிவ குமாரனே பரம - மேலானவனே நிர்வசன - வாக்குக்கு எட்டாததான ப்ரசங்க - உபதேசத்தைச் செய்த குரு நாதா - குரு நாதனே

நிரை திகழ் பொதுவர் நெறி படு பழைய
நெல்லி மரத்து அமர்ந்த அபிராம

நிரை திகழ் - பசுக் கூட்டங்களை விளங்கக் கொண்ட பொதுவர் - இடையர்கள் நெறி படு - செல்லும் வழியில் பழைய - பழைய நெல்லி மரத்து அமர்ந்த - நெல்லி மரத்தின் கீழ் அமர்ந்த அபிராம - அழகனே

வெகு முக ககன நதி மதி இதழி
வில்வம் முடித்த நம்பர் பெரு வாழ்வே

வெகு முகு ககன நதி - பல முகங்களுடன் ஓடும் ஆகாய கங்கையையும் மதி - நிலவையும் இதழி - கொன்றையையும் வில்வம் முடித்த நம்பர் - வில்வத்தையும் தலையில் சூடியுள்ள பெருமானுடைய பெரு வாழ்வே - பெருஞ் செல்வமே

விகசித கமல பரிமள கமல
வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே


விகசித - மலர்ந்த கமல - தாமரையை ஒத்ததும் பரிமள கமல - நறு மணம் உள்ளதுமான தாமரையை ஒத்த திருவடியை உடையவரே வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே - வெள்ளிகரம் என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

மலைகள் நடுங்கும்படி நடனம் செய்கின்ற மயில், அன்றலர்ந்த கடப்ப மலர், சிறு வாள், வேல், தாமரை போன்ற ஆறு திருமுகங்கள், போர் செய்ய வல்ல கோழி இவைகளை எல்லாம் பொருந்தியவரே வள்ளியின் கணவனே, என்று உலகெல்லாம் உணரும்படி, சொற்களால் சொன்னாலன்றி, உனது அழகிய திருவடியைப் பெற முடியுமா?

ஒப்பற்ற சிவபெருமானின் சேயே, பரமனே, வாக்குக்கு எட்டாதவனே, கங்கை, நிலவு, கொன்றை, வில்வம் ஆகிவற்றைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு மௌன உபதேசம் செய்த குரு நாதனே, தாமரை போன்ற திருவடியை உடையவரே, வெள்ளிகரத்தில் உறையும் பெருமாளே உன் பொற் பாதங்களைப் பெற முடியுமோ?

விளக்கக் குறிப்புகள்

கலவி - கலபி (மயில்)
"திருதரு கலவி" - இலக்குமி ஈன்ற மயிலனைய வள்ளி கலவி கலவத்தையுடையது - மயில், கலவம் - மயில்தோகை - இங்கனமும் பொருள் காணலாம்

நிர்வசன ப்ரசங்க குரு நாதா
வாச கம்பிற வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக    திருப்புகழ், ‘தோடுறுங்குழை’
நெல்லி மரத்தமர்ந்த அபிராம
இந்த நெல்லி மரம் சுவாமி மலையில் உள்ள நெல்லி மரம் என ஒருவாறு கொள்ளலாம் (வசு செங்கல்வராயபிள்ளை)

உமா தேவி இட்ட சாபம் நீங்க, பூமா தேவி முருகன் அருளால் சாபம் நீங்கப் பெற்றாள். அவரை விட்டுப் போக மனமில்லாமல் அங்கேயே ஒரு நெல்லி மரமாக நின்று அவரை வழிபட்டு வந்தாள் என்பது திருவேரக மான்மியம்

திருவாரூர்க்கு அருகில் இருக்கும் திருநெல்லிக்கா என்னும் திருத்தலத்தை குறிக்கும் வாரியார் ஸ்வாமிகள்

ஸகுண – நிர்குண உபாஸனை
இத்திருப்புகழில் ஸகுண உபாஸனையுடன் மட்டும் நின்று விடாது நிர்குண உபாஸனையின் தொடக்கத்தையும் சுட்டிக் காட்டுகிறார். அவன் மயிலை நடத்தி வரும் அழகு, அவன் அழகிய கைகளில் உள்ள சிறு வாளும் வேலும், அன்றலர்ந்த ஆயிரம் இதழ் தாமரைமலர்களை ஒத்த முகங்களும் வள்ளியை மட்டுமா கவர்கிறது? நம்மை யுமல்லவா ஆகர்ஷிக்கிறது!! இந்த அழகை வார்த்தைகள் அல்லாது வேறு எவற்றால் தெரிவிக்க முடியும்? தெரிவிக்க முடியாமல் எப்படி அனுபவிக்க முடியும்? மற்ற அன்பர்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்ள முடியும்?
‘அகிலமு முணர மொழிதரு மொழியி னல்லது பொற்ப தங்கள் பெறலாமோ?’
‘சொற்களால் சொன்னாலன்றி, உனது அழகிய திருவடியைப் பெற முடியுமா?’ ஆனால், அது மட்டும் போதுமா? இத்துடன் நின்று விடலாமா என்றால் அடுத்த வரிகளில் பதில் தருகிறார்.
நிர்வசன ப்ரசங்க நிர்குண உபாஸனையின் தொடுக்கம்
பாட்டின்  முதல் பாதியில்  முருகனின் ரூபத்தை நினைத்து மனம் மகிழ்வடைகிறது. பின் அதுவே மனமுழுதும் நிறைகிறது. மனம் அமைதியாகிறது. மெதுவாக அவனுடைய ஸ்வரூபத்தை காண விழைகிறது. ஆனால் ஸ்வரூபம் என்பது தானே தான் அல்லவா? தானே புணர்ந்து தானே அறிந்து தானே மகிழ்பவன் அல்லவா அவன்? அவன் ஸத்ஸ்வரூபம், அவனே ப்ரணவ ஸ்வரூபன், அதன் பொருளும் அவனே என்ற பின் எப்படி அவனை விளிப்பது? வார்த்தைகள் கூட ஓரளவுக்குத்தான் அர்த்தத்தைக் கூற முடியும். அவைகளால் உணர்த்த முடியாது. ‘இனிப்பு’ எனும் வார்த்தை நாக்கிற்கு இனிப்புச் சுவையைத் தர முடியுமா?  அனுபூதி எனும் போது வார்த்தைகள் தானே நகன்று விடும்

 அவன் எல்லையில்லாதவன் எனும் போது வார்த்தைகளுக்குள் எவ்வாறு கட்டுப் படுத்துவது? ஆகவே அவனுடைய ஸகுணத்தை வர்ணித்துக் கொண்டே வந்தவர், ‘சிவ சுதன் பரமன்’ என்றவுடன் ‘நிர்வசன ப்ரசங்கன்’ என்று திடீரென்று பதிவு செய்கிறார். அது மட்டுமல்ல அதை உணர்த்திக் கொடுத்ததே அந்த முருகன் தான் என்று காட்டுவதற்காக ‘குருநாதா’ என்கிறார். வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத வாசாமகோசரன் அவனே அல்லவோ!!!

வெகுமுக ககன நதி
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு   பரமேசர்   
  - திருப்புகழ், ‘அழகுதவிழ்’
இதழி வெகு முக கண                         சீர்பாத வகுப்பு



No comments:

Post a Comment