பின் தொடர்வோர்

Tuesday, 23 May 2017

312. அடலரி மகவு

312
வெள்ளிகரம்
(திருத்தணியிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள பள்ளிப்பட்டு கிராமம் அருகில்) இன்றைக்கு கிடைத்திருக்கும் இத்தல 9 பாடல்களிலும் வள்ளியை போற்றி பாடியிருப்பது குறிப்பிடதக்கது
         
          தனதன தனன தனதன தனன
          தய்யன தத்த தந்த      தனதானா
 
    
அடலரி மகவு விதிவழி யொழுகு
     மைவரு மொய்க்கு ரம்பை      யுடனாளு ம்
அலைகட லுலகி லலம்வரு கலக
     வைவர்த மக்கு டைந்து              தடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
     டெல்லைவி டப்ர பஞ்ச           மயல்தீரா
எனதற நினது கழல்பெற மவுன
     வெல்லைகு றிப்ப தொன்று      புகல்வாயே
வடமணி முலையு மழகிய முகமும்
     வள்ளையெ னத்த யங்கு         மிருகாதும்
மரகத வடிவு மடலிடை யெழுதி
     வள்ளிபு னத்தில் நின்ற            மயில்வீரா
விடதர திகுண ரசசிதர் நிமலர்
     வெள்ளிம லைச்ச யம்பு             குருநாதா
விகசித கமல பரிபுர முளரி
     வெள்ளிக ரத்த மர்ந்த            பெருமாளே

பதம் பிரித்து உரை

 
அடல் அரி மகவு விதி வழி ஒழுகு(ம்)
ஐவரும் மொய் குரம்பையுடன் நாளு ம்

அடல் அரி - வலிமை வாய்ந்த திருமாலின் மகவு - பிள்ளையாகிய பிரமன் விதி வழி ஒழுகும் - எழுதிவிட்ட விதியின் வழியின்படி செல்லுகின்ற ஐவரும் மொய் - சுவை, ஒளி,ஊறு, ஓசை,நாற்றம் ஆகிய ஐந்து உணர்ச்சிகளும் நெருங்கி (வேலை செய்யும்) குரம்பை உடன் - குடிலாகிய உடலுடன் நாளும் - நாள் தோறும்

அலைகடல் உலகில் அலம் வரு கலக
ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி

அலை கடல் உலகில் - அலைகளை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் அலம் வரும் - துன்பம் உண்டாகின்ற கலக ஐவர் தமக்கு - கலகம் செய்யும் ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய) இந்திரியங்களால் உடைந்து தடுமாறி - மனம் உடைந்து தடுமாற்றம் அடைந்து

இடர் படும் அடிமை உளம் உரை உடலொடு
எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர

இடர் படு(ம்) - வருத்தங்களுக்கு ஆளான அடிமை - அடிமையாகிய நான் உளம், உரை, உடலொடு - மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் எல்லை விட - உலகத்தில் ஈடுபடுதல் முடியவும் மயல் தீர - மயக்கம் தீரவும்


எனது அற நினது கழல் பெற மவுன
எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே

எனது அற - எனது எனப்படும் பாசம் (மமகாரம்) நீங்க நினது கழல் பெற - உனது திருவடியைப் பெறவும் மவுன எல்லை குறிப்பது - மோன வரம்பைக் குறிப்பதாகிய ஒன்று - ஒரு உபதேசத்தை புகல்வாயே - அருள்புரிவாயாக

வட மணி முலையும் அழகிய முகமும்
வள்ளை என தயங்கும் இரு காதும்

வடம் மணி முலையும் - (வள்ளியின்) மணி வடம் அணிந்த கொங்கையும் அழகிய முகமும் - அழகான முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் - வள்ளைக் கொடி போல விளங்கும் இரண்டு காதுகளும்  (ஒருவிதமான கொடி)
மரகத வடிவும் மடல் இடை எழுதி
வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா

மரகத வடிவும் - மரகத நிறமும் மடல் இடை எழுதி - படத்தில் எழுதி வள்ளி புனத்தில் - வள்ளியினுடைய தினைப் புனத்தில் நின்ற மயில் வீரா - மயில் வீரனே

விடதர் அதி குணர் அ சசிதர் நிமலர்
வெள்ளி மலை சயம்பு குருநாதா

விட தரர் - விடத்தைக் கண்டத்தில் தரித்தவர் அதி குணர் - மேலான குணத்தை உடையவர் அ சசிதர் - அந்தச் சந்திரனைச் சடையில் தரித்தவர் நிமலர் - பரிசுத்தமானவர் வெள்ளி மலை - வெள்ளி மலையகிய (கயிலையில்) வீற்றிருக்கும்  சயம்பு - ஸ்வயம்பு மூர்த்தியான சிவ பெருமானுக்கு குரு நாதா - குரு நாதரே

விகசிதம் கமல பரிபுர முளரி
வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே
 

விகசித(ம்) - மலர்ந்த கமல - தாமரை பரிபுர - சிலம்பணிந்த முளரி - தாமரை மலர் போன்ற திருவடியை உடைய வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே - வெள்ளிகரம் என்னும் தலத்தில் அமர்ந்த பெருமாளே

சுருக்க உரை
 
பிரமனுடைய விதிப் படி ஐம்புலன்கள் அடங்கிய இவ்வுடலுடன் நாள் தோறும், துன்பத்தைத் தரும் ஐந்து இந்தியங்களால் மனம் உடைந்து, தடுமாறி, வருத்தம் உறும் அடியேனுக்கு மனம், வாக்கு, காயம் இவைகளால் ஏற்படும் மயக்கம் ஒழியவும், எனது என்னும் மமகாரம் நீங்கவும், உனது திருவடியை அடைய மௌன வரம்பைக் குறிப்பதான ஒரு உபதேசத்தை அருள் புரிவாயாக
 
மணி வடங்கள் அணிந்த கொங்கை உடையவளும், அழகிய முகம் கொண்டவளும் ஆகிய வள்ளியினுடைய வனப்பு விளங்க மடலில் தீட்டி தினைப் புனத்தில் நின்ற மயில் வீரனே விடத்தைக் கண்டத்தில் கொண்டவரும், சந்திரனைச் சடையில் தரித்தவரும், கயிலை மலையில் வீற்றிருப்பவரும் ஆகிய சிவ பெருமானின் குரு நாதனே தாமரை மலர் போன்ற திருவடியை உடைய பெருமாளே வெள்ளிகரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே மௌன வரம்பைக் குறிக்கும் உபதேசத்தை அருள் புரிவாயாக
 
விளக்கக் குறிப்புகள்
 
மரகத வடிவு மடலிடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற
மடல் ஏறுதல் - தான் காதலித்தத் தலைவியைப் பெறாவிடத்துத் தலைவன் பனங் கருக்கால் குதிரை போல் செய்த ஊர்தி மேல் ஏறுதல் . மடல் எழுதுதல் - தலைவியின் படத்தை எழுதிக் கோயில் பிடித்துக் கொண்டு மடல் ஏறுதல்
மடல் ஏறுதல் குறிக்கும் மற்ற திருப்புகழ்ப் பாடல்கள்
தறையின் மானுட ராசையி னால் மடலெழுது மாலருள்--- திருப்புகழ், தறையின்
மிந்த்ர நீலமும் மடலிடை யெழுதிய பெருமாளே     ----திருப்புகழ், கொந்துவார்
மாலாய்மட லேறுங் காமுக எம்பிரானே          --- திருப்புகழ், வதனசரோருக
 

No comments:

Post a Comment