பின் தொடர்வோர்

Friday, 19 May 2017

305.அருவரை

305
வயிரவிவனம்
பஞ்சாப் மாகாணத்தில் சரஸ்வதி நதிக்கரையிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது
              
ஞானம் அருள்வாயே

                 தனதன தனத்த தான தனதன தனத்த தான
                 தனதன தனத்த தான                 தனதானா
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
     மரனிட மிருக்கு மாயி                    யருள்வோனே
அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
     மணிமயில் நடத்து மாசை                  மருகோனே
பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
     னிருகர மிகுத்த பார                          முருகாநின்
பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
     பணியவு மெனக்கு ஞானம்               அருள்வாயே
சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக்கு ளாதி
     சொலுவென வுரைத்த ஞான                  குருநாதா
சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
     துணிபட அரக்கர் மாள                    விடும்வேலா
மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
     வயல்புடை கிடக்கு நீல                      மலர்வாவி
வனமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
     வயிரவி வனத்தில் மேவு                    பெருமாளே


பதம் பிரித்து உரை

அரு வரை எடுத்த வீரன் நெரி பட விரல்கள் ஊணும்
அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே

அரு வரை அருமை வாய்ந்த கயிலை மலையை எடுத்த வீரன் அசைத்து எடுக்க முயன்ற இராவணன் நெரி பட -நசுங்கும்படி விரல்கள் ஊணும் அரனிடம் -தம் விரல்களை ஊன்றிய சிவபெருமானது இருக்கும் ஆயி இடது பாகத்தில் இருக்கும் தாயாகிய பார்வதிஅருள்வோனே பெற்ற குழந்தையே

அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சி கூரு
மணி மயில் நடத்தும் ஆசை மருகோனே


அலை கடல் அலை வீசும் கடலை அடைத்த அணை இட்டு அடைத்த ராமன் இராமன் மிக மகிழ்ச்சி கூரு மிகவும் மனம் மகிழ்ச்சி கொள்ளுமாறு மணி மயில் நடத்தும் -கிய மயிலை  வாகனமாகக் கொண்டு நடத்தின ஆசை மருகோனே - ஆசையான மருகோனே

பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்
பனிரு கர மிகுத்த பார முருகா நின்

பருதியின் ஒளிக் கண் சூரியனின் ஒளி தம்மிடத்தே வீறும் - விளங்கும் அறுமுக -ஆறு முகனே நிரைத்த - வரிசையாகவுள்ள  தோள் ப(ன்)னிரு கர தோளும் பன்னிரண்டு கரமும் கொண்டவனே  மிகுத்த பார மிகவும் பெருமை வாய்ந்த   முருகா முருகனே நின் உன்னுடைய

பத மலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே

பதம் மலர் திருவடி மலரை உளத்தில் உள்ளத்தில் நாளும் 
நினைவுறு நினைத்துத் தொழுதிருக்கும் 
கருத்தர் கருத்தை உடைய  அடியார்களின் 
தாள்கள் தாள்களை 
பணியும் எனக்கு - பணிந்தொழுகும் எனக்கு 
ஞானம் அருள்வாயே ஞானத்தைத் தந்தருளுக

சுருதிகள் உரைத்த வேதன் உரை மொழி தனக்குள் ஆதி
சொலு என உரைத்த ஞான குருநாதா

சுருதிகள் உரைத்த வேதன் வேதங்களைக் கூறும் பிரமன் உரை மொழி தனக்குள் சொன்ன மொழிகளுள் ஆதி - முதலாவதான ஓம் என்ற பிரணவத்தை சொலு என -சொல்லுக என்று தந்தையார் கேட்க  உரைத்த ஞான குரு நாதாசிவனுக்கு உபதேசம் செய்த ஞான குரு நாதனே

சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள
துணி பட அரக்கர் மாள விடும் வேலா

சுரர் பதி தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் தழைத்து - செழிப்புடன் வாழ -வாழும்படி அமரர் சிறை அனைத்தும் மீள -சிறையிலிந்தோர் யாவரும் மீளவும் துணிபட வெட்டுண்டு அசுரர் மாள -அசுரர்கள் இறந்தொழியவும் விடும் வேலா - வேலைச் செலுத்தியவனே

மரு மலர் மணக்கும் வாச நிறை தரு தருக்கள் சூழும்
வயல் புடை கிடக்கு நீல மலர் வாவி

மருமலர் மணக்கும் வாசனையுள்ள மலர்கள் வீசும் வாசம் நிறை தரு தருக்கள்நறுமணம் நிறைந்துள்ள மரங்கள் சூழும் - சூழ்ந்துள்ள வயல் புடை கிடக்கும் -வயல்கள் பக்கத்தில் உள்ள  நீல மலர் வாவி நீலோற்பல மலர் மலர்ந்துள்ள நீர் நிலைகளில்

வளம் உறு தடத்தினோடு சரஸ்வதி நதி கண் வீறு
வயிரவி வனத்தில் மேவு பெருமாளே

வளம் உறு வளப்பம் வாய்ந்த  தடத்தினோடு கரைகளோடு  
சரஸ்வதி நதிக் கண் சரஸ்வதி என்னும் ஆற்றினிடத்தே வீறு - விளங்குகின்ற வயிரவி வனத்தில் மேவும் பெருமாளே - 
வயிரவி வனம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே


சுருக்க உரை


கயிலை மலையை அசைத்து எடுக்க முயன்ற இராவணன் நெரியும்படித் தன் விரல்களை ஊன்றிய சிவபெருமானின் இடது பக்கத்தில் இருக்கும் தாயாகிய பார்வதி பெற்ற குழந்தையே, கடலை அணை கட்டிய இராமர் மகிழ்ச்சி கொள்ளும் மருகனே, சூரியனுடைய ஒளி விளங்கும் ஆறு முகங்களும் பன்னிரு தோள்களும் கரங்களும் உடையவனே,

வேதங்களைக் கூறும் பிரமன் சொன்ன மொழிகளில் முதன்மையான பிரணவத்தின் பொருளைக் கூறுக என்று தந்தை கேட்கஅங்ஙனமே பொருளைச் சொன்ன குருநாதனே, இந்திரன் வளம் பெற்று வாழவும்தேவர்கள் சிறையினின்று மீளவும்அசுரர்கள் வெட்டுண்டு இறக்கவும் வேலைச் செலுத்தியவனே, வாசனையான மலர்கள் சூழ்ந்த வயல்களின் கரையிலுள்ள நீலோற்பல மலர்கள் நிறைந்துள்ள சரஸ்வதி நதிக் கரையில் உள்ள வயிரவி வனம் என்னும் தலத்தில் உறையும் பெருமாளே, எனக்கு ஞானத்தை அருள்வாயாக


விளக்கக் குறிப்புகள்
வயிரவி வனம்
வயிரவி வனம் என்னும் தலம் பஞ்சாப் பகுதியில் சரஸ்வதி நதிக் கரையில் இருப்பதாகக் கருதப்படுகிறது இந்த நதி இப்போது மறைந்து விட்டது. அருணகிரியார் வாழ்ந்த பதினைந்தாம் நூற்றாண்டில் சரஸ்வதி நதி இருந்ததா என்றும் தெரியவில்லை

இராவணன் கையிலை மலையை தூக்க முயன்ற வராலாறு நினைவு கூறப்படுகிறது.
வானரநங்கள் சமுத்திரத்தில் அணைகட்டிய சம்பவம் சொல்லப்படுகிறது.

அருவரை எடுத்த வீரன் நெரிபட
சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
சகடு மருத முதைத்த தகவோடே                                 --- திருப்புகழ்,முகைமுளரி

மொழி தனக்குளாதி சொலுவென உரைத்த ஞான குருநாதா
குறைவறநி றைந்த மோனநிர்க்
குணமதுபொ ருந்தி வீடுறக்
குருமலைவி ளங்கு ஞானசற் குருநாதா                     --- திருப்புகழ், கறைபடுமுடம்பி

No comments:

Post a Comment