பின் தொடர்வோர்

Showing posts with label குருநாதர். Show all posts
Showing posts with label குருநாதர். Show all posts

Saturday, 4 April 2020

415.மூலா நிலமதின்


415
பொது

          தானா தனதன தானா தனதன
          தானா தனதன             தனதான

மூலா நிலமதின் மேலே மனதுறு
   மோகா டவிசுடர்                  தனைநாடி
மோனா நிலைதனை நானா வகையிலு
   மோதா நெறிமுறை              முதல்கூறும்
லீலா விதமுன தாலே கதிபெறு
   நேமா ரகசிய                           வுபதேசம்
நீடூ ழிதனிலை வாடா மணியொளி
   நீதா மலமது                           தருவாயே
நாலா ருசியமு தாலே திருமறை
   நாலா யதுசெப                   மணிமாலை
சூலா திபர்சிவ ஞானார் யமனுதை
   காலார் தரவரு                         குருநாதா
தோதீ திகுதிகு தீதீ செகசெக
   சோதீ நடமிடு                     பெருமாளே

பதம் பிரித்து உரை

மூலா நிலம் அதின் மேலே மனது உறு
மோக அடவி சுடர் தனை நாடி

மனது உறு - மனத்தில் பொருந்திய. மோக அடவி - ஆசை என்கின்ற காடு (வேறு வழியில் செல்லாது). மூலா நிலம் அதின் மேலே - மூலாதார நிலைக்கு மேல் உள்ள (விநாயகர் முதல், மேலே சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ருத்திரன், ஆஞ்ஞை முதலிய ஆதாரங்களில் உள்ள பிரமன், விஷ்ணு, ருத்திரன், சதாசிவம் ஆகிய மூர்த்திகளின் திருக்கோயில்களைத் தாண்டி). சுடர் தனை நாடி - நல்ல சுடர் தோற்றமுற (யோக வழியில்) நாடி.

மோனா நிலை தனை நானா வகையிலும்
ஓதா நெறி முறை முதல் கூறும்

மோனா நிலை தனை - மெளன நிலையை. நானா வகையிலும் - பல வகையாலும். ஓதா - கற்று. நெறி முறை - நன்னெறி முறை வழி முதலானவற்றை. முதல் கூறும் - முதலில் காட்டுகின்ற.

லீலாவிதம் உனதாலே கதி பெற
நேமா ரகசிய உபதேசம்

லீலாவிதம் - உனது திருவிளையாடல்களின் உண்மை நிலையை. உனதாலே - உன்னுடைய திருவருளாலே. கதி பெற - நான் உய்யுமாறு. நேமா - நியமம் வாய்ந்த. ரகசிய உபதேசம் - ரகசிய உபதேசத்தைத் (தருவாயே).

நீடூழி தன் நிலை வாடா மணி ஒளி
நீதா பலம் அது தருவாயே

நீடூழி - நீண்ட ஊழி காலத்தும். தன் நிலை வாடா - தனது நிலை வாடாத. மணி ஒளி - சுயம் பிரகாச மணிச்சோதியே . நீதா - நீதிமானே. பலம் அது தருவாயே - பயன்தரத் தருவாயே.

நாலா ருசி அமுதாலே திருமறை
நாலாய் அது செபம் மணி மாலை

நாலா ருசி அமுதாலே - பலவிதமான இன்பச் சுவை அமுதம் பருகிய உணர்ச்சியால். திருமறை நாலாய் அது - அழகிய வேதங்கள் நான்கினையும். செப மணி மாலை - செப மாலை கொண்டு

நாடு ஆய் தவர் இடர் கேடா அரி அரி
நாராயணர் திரு மருகோனே

நாடு ஆய் - நாடி ஆராய்கின்ற. தவர் - தவத்தினர்களுடைய. இடர் கேடா -  துன்பங்களை அழிப்பவனே. அரி அரி நாராயணர் - அரி அரி என்று ஓதப்படும் திருமால். திரு - இலக்குமி இவர்களின். மருகோனே - மருகனே.

சூல அதிபர் சிவ ஞானார் யமன் உதை
காலார் தர வரு(ம்) குருநாதா

சூல அதிபர் -  சூல ஆயுதம் ஏந்தியவர். சிவ ஞானார் - சிவ மனத்தினர். யமன் உதை- யமனை உதைத்த. காலர் - திருவடியினர். தர - தந்தருள. வரும் - வந்த. குருநாதா - குருநாதரே.

தோதீ திகுதிகு தீதீ செகசெக
சோதீ நடமிடும் பெருமாளே.

தோதீ .....நடமிடு - தோதீ முதலான ஒலிகளோடு நடனம் செய்கின்ற. பெருமாளே - பெருமாளே.

சுருக்க உரை

மனத்தில் பொருந்திய ஆசை என்னும் காடு, வேறு வழியில் செல்லாது அடக்கி, யோக வழியில் நின்று, மூலாதார நிலைக்கு மேல் உள்ள மற்ற ஆதாரங்களையும் கடந்து, சோதி ஒளியாகிய உன்னை நாடி, மவுன நிலையை பல வகையாலும் கற்று, நன்னெறி காட்டும் உனது திருவிளையாடல்களை உன் திருவருளால் ஆராய்ந்து, நான் நற்கதியைப் பெற வேண்டிய ஒழுங்கான ரகசிய உபதேசத்தை எனக்குப் பயன்படுமாறு தந்தருளுக.

ஊழி காலத்திலும் தன் நிலை வாடாத ஒளி வீசும் மணிச் சோதியே, நீதிமானே, உபதேச மொழியைத் தருவாயாக. பல விதமான இன்பச் சுவையைப் பருகிய உணர்வால், நான்கு மறைகளையும் செப மாலை கொண்டு ஆய்கின்ற தவசிகளின் இடர்களை அழிப்பவனே, திருமால், இலக்குமி இவர்களின் மருகனே, யமனைக் காலால் உதைத்த சிவபெருமான் அருளிய குருநாதரே, தோதீ என நடமிடும் பெருமாளே, எனக்கு உபதேசம் செய்வாயாக.

ஒப்புக
* நானா வகையிலும் ஓதா நெறி முறை....
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடேறு நானு ரைத்த நெறியாக
                                                      ....திருப்புகழ்,நாவேறுபாம.

* மூலா நிலமதின் மேலே மனதுறு....
மூலங்கிள ரோருரு வாய் நடு
நாலங்குல மேனடு வேரிடை
மூள்புங்கலை நாடியொ டாடிய முதல்வேர்கள்
                                                           ...திருப்புகழ், மூலங்கிள.

* மணியொளி நீதா...
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்....கந்தர் அனுபூதி.
ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் தம்பிரானே
                                                      ...திருப்புகழ் ஓதுமுத்தமிழ்.



Tuesday, 3 December 2019

392.நெடிய வடகுவடு


392
பொது

                 தனன தனதன தனதன தனதன
                  தனன தனதன தனதன தனதன   
                 தனன தனதன தனதன தனதன   தனதான

நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி   
   நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி   
   நிபிட முடிகிழி யவுநில மதிரவும்             விளையாடும்   
நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்   
   நினது கருணையு முறைதரு பெருமையும்   
   நிறமு மிளமையும் வளமையு மிருசர          ணமும்நீப   
முடியு மபிநவ வனசரர் கொடியிடை
   தளர வளர்வன ம்ருகமத பரிமள   
   முகுள புளகித தனகிரி தழுவிய              திரடோளும்
மொகுமெ கெனமது கரமுரல் குரவணி   
   முருக னறுமுக னெனவரு வனபெயர்   
   முழுது மியல்கொடு பழுதற மொழிவது     மொருநாளே   
கொடிய படுகொலை நிசிசர ருரமொடு   
   குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு   
   குருதி நதிவித சதியொடு குதிகொள     விதியோடக்   
குமுறு கடல்குடல் கிழிபட வடுமர   
   மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர்   
   குருகு பெயரிய வரைதொளை படவிடு    சுடர்வேலா  
இடியு முனைமலி குலிசமு மிலகிடு   
   கவள தவளவி கடதட கனகட   
   இபமு மிரணிய தரணியு முடையதொர்   தனியானைக்   
கிறைவ குருபர சரவண வெகுமுக   
   ககன புனிதையும் வனிதைய ரறுவரும்   
   எனது மகவென வுமைதரு மிமையவர்         பெருமாளே.

பதம் பிரித்து உரை

நெடிய வட குவடு இடியவும் எழு கிரி       
நெறு நெறு என நெரியவும் முது பணி பதி 
நிபிட முடி கிழியவும் நிலம் அதிரவும் விளையாடும்

நெடிய - நீண்டதும். வட குவடு இடியவும் - வடக்கே உள்ள மேரு மலை இடி பட்டுப் பொடிபடவும். எழு கிரி - ஏழு மலைகளும். நெறு நெறு என நெரியவும் - நெறு நெறு என்று நெரிவு உறவும்.  முது - முதுமை வாய்ந்ததும். பணி பதி - பாம்புகளுக்குத் தலைவனும் ஆகிய ஆதி சேடனது. நிபிட முடி - நெருங்கிய பணா முடிகள். கிழியவும் - கிழிபட. நிலம் - பூமி. அதிரவும் - அதிரவும். விளையாடும் - விளையாடுகின்ற.

நிகர் இல் கலபியும் ரவி உமிழ் துவசுமும்    
நினது கருணையும் உறை தரு பெருமையும்    
நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப

நிகர் இல் - ஒப்பில்லாத கலபியும் - மயிலும் ரவி - சூரியனை உமிழ் தரு - கக்குகின்ற. துவசமும் - கொடியாகிய சேவலும் நினது கருணையும் - உன்னுடைய கருணையும் உறை தரு - உன்னிடம் நிலைத்து விளங்கும் பெருமையும் - பெருமையும். நிறமும் - ஒளியும் இளமையும் - இளமையும் இரு சரணமும் - இரண்டு திருவடிகளும் நீப - கடம்பும் (அணிந்த).

முடியும் அபிநவ வனசரர் கொடி இடை   
தளர வளர்வன ம்ருகமத பரிமள  
முகுள புளகித தன கிரி தழுவிய திரள் தோளும் 

முடியும் - திருமுடிகளும் அபிநவ - புதுமை நிறைந்த வனசரர் - வேடர்களின் கொடி இடை - வள்ளியின் கொடி போன்ற இடை தளர் - தளர்வுறும்படி. வளர்வன - வளர்கின்ற ம்ருகமத - கஸ்தூரி அணிந்த. பரிமள - நறுமணம் உள்ள முகுள - மலர்ந்த மொட்டுப் போன்ற புளகித - புளகிதம் கொண்ட தன கிரி - மலை போன்ற கொங்கைகளை தழுவிய - தழுவிய திரள் தோளும் - திரண்ட தோள்களும்.


மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி 
முருகன் அறுமுகன் என வருவன பெயர்    
முழுதும் இயல் கொடு பழுது அற மொழிவதும் ஒரு நாளே

மொகு மொகு என - மொகுமொகுவென்று மதுகரம் - வண்டுகள் முரல் - ஒலிக்கின்ற குரவு அணி - குரா மலரை அணியும் முருகன் -  முருகன் அறுமுகன் - ஆறுமுகன் என வருவன - என்று வருவனாகிய பெயர் முழுதும் - உனது திருநாமங்கள் முழுமையும் இயல் கொடு - இயல் தமிழில் அமைத்து பழுது அற - குற்றம் இல்லாமல். மெழிவதும் ஒரு நாளே - நான் ஓதுவதும் ஒரு நாள் கிடைக்குமோ?


கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு   
குமுகும் என விசையுடன் இசை பெற மிகு   
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட

கொடிய - பொல்லாத. படுகொலை - கொடுமையான கொலைகளைச் செய்யும் நிசிசரர் - அசுரர்களது. உரமொடு - மார்புடன் குமுகும் என இசை பெற - குமுகும் என்னும் ஒலி உண்டாகும்படி மிகு குருதி - வேகத்துடன் நிரம்ப இரத்தம் நதி வித சதியொடு - நதி வெள்ளம் போல் தாளத்தோடு குதி கொள - குதித்துப் பாய்ச்சல் கொள்ளவும் விதி - பிரமன். ஓட - அஞ்சி ஓடவும்.


குமுறு கடல் குடல் கிழி பட அடு மரம்    
மொளு மொளு என அடியொடு அலறி விழ உயர்   
குருகு பெயரிய வரை தொளை பட விடு சுடர் வேலா


குமுறு - கலங்கி ஒலிக்கும் கடல் குடல் கிழி பட - கடலின் உட் பாகங்கள் கிழியவும் அடு மரம் - கொல்லும் தன்மையை உடைய (சூரனாகிய) மாமரம். மொளு மொளு என - மொளுமொளுவென்று அடியோடு அலறி விழ - அடிப்பாகம் முதல் அலறி விழவும் உயர் குருகு - உயர்ந்து வளர்ந்த பறவையின் பெயரிய வரை - பெயர் கொண்ட. வரை - கிரௌஞ்ச மலை. தொளை பட - தொளைபடவும் விடு சுடர் வேலா - வேலைச் செலுத்தும் வேலனே.

இடியும் முனை மலி குலிசமும் இலகிடு   
கவள தவள விகட தட கன கட   
இபமும் இரணிய தரணியும் உடையது ஒர் தனி யானைக்கு


இடியும் - இடியும். முனை மலி - கூர்மை மிக்க குலிசமும் - குலிசாயுதமும் இலகிடு - விளங்கும் கவள - கவளமாக ஊண் உண்பதும். தவளம் - வெண்ணிறமானதும். விகட - அழகுள்ளதும் தட - பரந்ததுமான கன கட இபமமும் - மதச் சுவட்டினின்று மிகுந்த மதம் பொழியும் ஐராவதம் என்னும் வெள்ளை யானையும் இரணிய தரணியும் - பொன்னுலகமும் உடையது - தமக்குச் சொந்தமாக உள்ள. ஒரு - ஒப்பற்ற தனி யானைக்கு -  பரிசுத்தமான தேவயானைக்கு


இறைவ குருபர சரவண வெகு முக   
ககன புனிதையும் வனிதையர் அறுவரும்   
எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே.


இறைவ - தலைவனே குருபர - குருபரனே. சரவண - சரவணனே வெகு முக - பல முகமாய்ப் பரந்து வரும் ககன புனிதையும் - ஆகாய கங்கையும். வனிதையர் அறுவரும் - கார்த்திகைப் பெண்கள் அறுவரும். எனது மகவு என - எங்கள் குழந்தை என்று பாராட்டும்படி. உமை தரும் - பார்வதி பயந்தருளிய இமையவர் பெருமாளே - தேவர்கள் பெருமாளே.
சுருக்க உரை
மேருமலை பொடியாகவும், ஏழு மலைகளும் நெரிவு உறவும், ஆதிசேடனுடைய முடிகள்  கிழிந்து விழவும், மயிலும், சேவலும், கருணையும், பெருமையும் உனது ஒளியும், இளமையும், வளமையும், இரு திருவடிகளும், கடம்பணிந்த முடிகளும், வள்ளி நாயகியின் கொங்கைகளைத் தழுவும் தோள்களும், குரா மலர் அணிந்த முருகன், ஆறுமுகன், என்று உனது திருநாமங்களைக் குற்றமற்ற தமிழில் ஓதும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ?
அசுரர்களின் மார்புடன் விழ, அவர்களுடைய இரத்த வெள்ளம் குதித்துப் பாய்ந்து வெளிவரவும், பிரமன் பயந்து ஓடவும்,  கடலின் உட்பாகங்கள் கிழியவும், சூரனாகிய மாமரம் முறிந்து விழவும், கிரௌஞ்ச மலை தொளை படவும் வேலைச் செலுத்திய வேலனே. குலிசாயதமும், ஐராவதம் என்ற வெள்ளை யானையும், பொன்னுலகமும் தனக்குச் சொந்தமாகக் கொண்ட தேவசேனையின் கணவனே, குருபரனே, சரவணனே, ஆகாய கங்கையும், கார்த்திகைப் பெண்களும் தமது குழந்தையாகப் போற்றும் உமா தேவி பெற்ற குழந்தையே, தேவர்கள் பெருமாளே, உன் திரு நாமங்களைப் பாடும் பாக்கியம் எனக்குக் கிட்டாதோ?
ஒப்புக
எழு கிரி நெறு நொறு என நெரியவும்.....
      குன்றோடும் சூழ் அம்பேழும் சூரும்   
      போய் மங்கப் பொருகோபா...              திருப்புகழ்., வெங்காளம்.
ரவி உமிழ் துவசமும்.....
     நயனமும் ரவி உமிழ்   
      கொடியு மகிலமும் வெளிபட...             திருப்புகழ்,கொடியமறலி
முருகன் ஆறுமுகன் என வருவன....    
      முருகன் குமரன் குகன் என்று மொழிந்துருகுஞ்    
     செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்....          கந்தர் அனுபூதி
குருகு பெயரிய வரை....
   பறவைப்  பெயருடைய மலை, கிரௌஞ்சம்.