பின் தொடர்வோர்

Sunday, 21 May 2017

309. மருவு மஞ்சு பூத

309
விரிஞ்சிபுரம்

            தனன தந்த தான தனன தந்த தான
              தனன தந்த தான          தனதான

மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
  தென்று போட                    அறியாது
மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
  வகையில் வந்தி ராத            அடியேனும்
உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும்
  உலக மென்று பேச                அறியாத
உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
  உபய துங்க பாத                மருள்வாயே
அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
  அடிப ணிந்து பேசி               கடையூடே
அருளு கென்ற போது பொருளி தென்று காண
  அருளு மைந்த ஆதி              குருநாதா
திரியு மும்பர் நீடு கிரி பிளந்து சூரன்
  செருவ டங்க வேலை          விடுவோனே
செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
  திருவி  ரிஞ்சை மேவு           பெருமாளே



பதம் பிரித்து உரை

மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது
மலம் இது என்று போட அறியாது

மருவும் - பொருந்தியுள்ள அஞ்சு பூதம் - (மண், நீர், தீ, காற்று, வான் என்னும்) ஐந்து பூதங்களுக்குச் சொந்தமாகாத வண்ணம் மலம் இது என்று போட - (இவ்வுலகம்) அழுக்கு என்று உதரித் தள்ள அறியாது - அறியாமல்

மயல் கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும்
வகையில் வந்திராத அடியேனும்

மயல் கொள் - மயக்கம் கொண்ட இந்த வாழ்வு அமையும் - இந்த வாழ்வு போதும் என்று எந்த நாளும் - எந்த தினத்திலும் வகையில் - அத்தகைய வண்ணம் வந்திராத - நன்றாக மனத்தில் தோன்றுதல் இல்லாத அடியேனும் - அடியேனும்

உருகி அன்பினோடு உனை நினைந்து நாளும்
உலகம் என்று பேச அறியாத

உருகி - உள்ளம் உருகி அன்பினோடு - அன்போடு உனை நினைந்து - உன்னைத் தியானித்து நாளும்- ஒவ்வொரு நாளும் உலகம் என்று - உலகத்தைப் பற்றியே பேச அறியாத - பேச அறியாத

உருவம் ஒன்று இலாத பருவம் வந்து சேர
உபய துங்க பாதம் அருள்வாயே

உருவம் ஒன்று இலாத - இந்த வடிவு என்பது இல்லாத பருவம் வந்து சேர - நிலையை நான் அடைவதற்கு உபய - (உனது) இரண்டு துங்க பாதம் அருள்வாயே - பரிசுத்தமான திருவடிகளத் தந்து அருளுக

அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும்
அடி பணிந்து பேசி கடை ஊடே

அரி - திருமாலும் விரிஞ்சர் - பிரமனும் தேட அரிய - தேடிக் காண முடியாதவரான தம்பிரானும் - தம்பிரானாகிய சிவ பெருமானும் அடி பணிந்து பேசி - உனது திருவடிகளைப் பணிந்து பேசி கடையூடே - கடைசியாக (அந்தப் பிரணவப் பொருளை உபதேசித்து)

அருளுக என்ற போது பொருள் இது என்று காண
அருளும் மைந்த ஆதி குரு நாதா

அருளுக என்ற போது - அருள்வாய் என்று கேட்ட போது பொருள் இது என்று காண - இது தான் அதன் பொருள் என்று அவர் உணர்ந்து கொள்ளும்படி அருளும் மைந்த - அருளிய குழந்தையே ஆதி குருநாதா - அந்த ஆதியாகிய சிவ பெருமானுக்கும் குரு நாதனே

திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர்
செரு அடங்க வேலை விடுவோனே

திரியும் - (சூரன் செல்லும் இடமெல்லாம் உடன்) திரிந்து உம்பர் நீடு - வான் அளாவி நீண்டிருந்த கிரி பிளந்து - எழு கிரிகளைப் பிளந்து சூரர் செரு அடங்க - அசுரர்களின் போர் ஒடுங்கும்படி வேலை விடுவோனே - வேலாயுதத்தைச் செலுத்தியவனே

செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி
திரு விரிஞ்சை மேவு பெருமாளே

செயல் அமைந்த - ஒழுக்கத்துடன் ஓதப்பட்ட வேத - வேதத்தின் தொனி முழங்கு வீதி - ஒலி முழங்கும் வீதியைக் கொண்ட திரு விரிஞ்சை மேவு பெருமாளே - விரிஞ்சி புரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

ஐம்புதங்களுக்கு அடிமை ஆகாமல், இவ்வுலகம் அழுக்கானது என்று உதரித் தள்ள அறியாமல், மயக்கம் கொண்டு இந்த வாழ்வு போதும் என்று உணராத அடியேனும், உன்னைத் தியானித்து, உன் உருவம் இது என்பதே இல்லாத நிலை நான் அடைய, உன் இரு திருவடிகளைத் தந்து அருளுக

திருமாலும், பிரமனும் காண அரியாத சிவபெருமானும், உன்னைப் பணிந்து, பிரணவப் பொருளை உபதேசித்து அருள்க என்று கேட்ட போது, அதை விளக்கிச் சொல்லிய குழந்தையே, ஆதியாகிய சிவபெருமானுக்குக் குரு நாதரே, சூரர்கள் சென்ற இடமெல்லாம் அவர்களைத் துரத்திச் சென்று, எழு கிரிகளைப் பிளந்த வேலனே, விரிஞ்சி புரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே உன் திருவடிகளத் தந்து அருள வேண்டுகின்றேன்

விளக்கக் குறிப்புகள்

தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே அருளுக
ஓமென உரைக்குஞ் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ
போமெனில் அதனை யின்னே புகலென இறைவன் சொற்றான்
முற்றொருங் குணரும் ஆதி முதல்வகேள் உலக மெல்லாம்
பெற்றிடும் அவட்குநீ முன் பிறருண ராத வாற்றால்
சொற்றதோர் இனைய மூலத் தொல்பொருள் யாரும் கேட்ப
இற்றென இயம்ப லாமோ மறையினால் இசைப்ப தல்லால் -கந்த புராணம்

கிரி பிளந்து சூரர் செரு அடங்க
இவை சூரனுக்கு அரணாயிருந்த ஏழு கிரிகள் கிரிவுஞ்சம் அல்ல
கிரவுஞ்சம் தாரகனுக்கு உதவியாயிருந்த மலை

எழுமலை பொடிந்த கதிரிலை நெடுவேல் - கல்லாடம் 3

சமுத்திர மேழுங் குலகிரி யேழுஞ்
   சளப்பட மாவுந்     தனி வீழ -    திருப்புகழ், பெருக்கவுபா

ஒருமுறை, சரஸ்வதியின் நாயகன் பிரம்மனுக்கும் திரு மகளின் நாயகன் மகாவிஷ்ணுவுக்கும் இடையே, 'தங்களில் யார் பெரியவர்?' என்று விவாதம் எழுந்தது. நெடுநேரம் விவாதித்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த சர்ச்சை பெரிய யுத்தமாக மாறியது. இருவருக்கும் இடையே ஒளி பொருந்திய பெரிய நெருப்புத் தூணாக சிவபெருமான் நின்றார். பிரம்ம னும் விஷ்ணுவும் தங்களது சண்டையை விட்டு விட்டு, கோடி சூரிய பிரகாசத்துடன் திகழ்ந்த அந்த நெருப்புத் தூணை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அப்போது, ''ஒளி உருவில் உயர்ந்து நிற்கிறேன். உங்களில் ஒருவர் என் திருவடியையும் மற்றொருவர் என் திருமுடியையும் காண்பதற்கு முயற்சியுங்கள். அதன் பிறகு, உங்களது விவாதத்துக்கு முடிவு சொல்கிறேன்!'' என்றார் சிவபெருமான்.

இதையடுத்து, வலிமையான கொம்புகள் கொண்ட வராகமாக உருவெடுத்தார் திருமால். பூமியை அகழ்ந்து பாதாளத்துக்கும் கீழே சென்று, ஈசனின் பாதமலரைக் காண முற்பட்டார். பிரம்மனோ, அன்னப் பறவையாகி சிறகுகளை விரித்துப் பறக்கத் துவங்கினார்... ஈசனின் திருமுடியைக் காண!

ஆண்டுகள் பல கடந்தன. இருவரும் களைப்புற்ற னர். திருவடியைக் காண முடியாமல் திரும்பினார் திருமால். ஆனால், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தார் பிரம்மன். அந்த வேளையில், தாழம்பூ ஒன்று வேகமாக கீழ் நோக்கி வருவதைக் கண்டார். அதனிடம், ''எங்கிருந்து வருகிறாய்?'' எனக் கேட்டார்.

''சிவபெருமானின் திருமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். அவரின் திருமுடியைக் காண்பது, உங்களால் இயலாத காரியம்!'' என்றது தாழம்பூ. உடனே பிரம்மன், ''எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். ஒளிப் பிழம்பின் திருமுடியைக் கண்ட தாகவும், அங்கிருந்து உன்னை எடுத்து வந்ததாகவும் சொல்வேன். நீ அதை ஆமோதித்தால் போதும்!'' என்றார். தாழம்பூவும் சம்மதித்தது.


தாழம்பூவுடன் பூமிக்குத் திரும்பிய பிரம்மன், தான் திருமுடியைக் கண்டதாகவும் அதற்கு சாட்சியாக திருமுடியிலிருந்து தாழம்பூவை எடுத்து வந்ததாகவும் சிவபெருமானிடம் தெரிவித்தார்.

பிரம்மன் கூறுவது பொய் என்பதை அறிந்த சிவனார் கோபம் கொண்டார். ''பிரம்மனே... பொய்யுரைத்த உனக்கு, கோயில்களும் பூஜைகளும் இல்லாமல் போகட்டும். தாழம்பூ, இனி எந்த பூஜைக்கும் பயன்படாது!'' என்று சபித்தார்.

தவறு உணர்ந்த பிரம்மனும் தாழம்பூவும் தங்களை மன்னிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர். இதன் பலனால்... 'சிவ பூஜை தவிர, மற்ற பூஜைகளுக்கு தாழம்பூ பயன்படும்!' என்று அருளினார் சிவனார். இப்படி பிரம்மன், திருமால் இருவரது அகந்தையையும் போக்கி... சிவபெருமான், உலகுக்குத் தனது பேரொளியைக் காட்டிய திரு வடிவே லிங்கோத்பவ மூர்த்தி!

இந்தப் புராணக் கதையில் உள்ள நுண்ணிய கருத்து சிந்தனைக்குரியது. பிரம்மன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர். அறிவும் செல்வமும் அகந்தையை அதிகப்படுத்தும். ஆனால் அறிவு, செல்வம் ஆகியவற்றால் இறைவனைக் காண முடியாது!

ஒரு வரைமுறைக்கு உட்படாத ஈசனின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த அறிவும், செல்வமும் போதும் என நினைப்பவர்களால் முடியாது என்பதே இந்த அடிமுடி தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் அலைந்ததின் உள்ளார்ந்த தத்துவம் ஆகும். அறிவு மட்டும் இருந்தாலோ, செல்வம் மட்டும் இருந்தாலோ இறைவனை அடையவே முடியாது. இவை இரண்டும் சேர்ந்து இருந்தாலோ மனிதனுக்குத் தான் என்னும் அகங்காரம் ஏற்பட்டு விடும். இந்தத் தான் ஒழிந்தால் தான் அந்தத் தானாக மாறமுடியும், ஒன்றிப் போக இயலும். கல்வியினால் ஏற்படும் செருக்கு அல்லது அகந்தை பணத்தினால் ஏற்படுவதை விடவும் ஒரு பங்கு அதிகம் தான் என்ப தையே இந்தக் கதை விளக்குகிறது.

No comments:

Post a Comment