பின் தொடர்வோர்

Friday, 19 May 2017

308. நிகரில்பஞச

308

விரிஞ்சிபுரம்
(வேலூருக்கு அருகில் உள்ளது)

               
                 தனன தந்த தானன  தனன தந்த தானன
                 தனன தந்த தானன              தனதான

நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
   நெகிழ வந்து நேர்படு                   மவிரோதம்
நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
   நிருப அங்கு மாரவெ                     ளெனவேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
   சமய பஞ்ச பாதக                             ரறியாத
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
   சரண புண்ட ரீகம                       தருள்வாயே
மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
   மறுகி வெந்து வாய்விட                 நெடுவான
வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு
   மடிய இந்தி ராதியர்                       குடியேறச்
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
   சிறுவ சந்த்ர சேகரர்                      பெருவாழ்வே
திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
   திருவி ரிஞ்சை மேவிய                  பெருமாளே

பதம் பிரித்தல்

நிகர் இல் பஞ்ச பூதமு(ம்) நினையு(ம்) நெஞ்சும் ஆவியு(ம்)
நெகிழ வந்து நேர் படும் அவிரோதம்

நிகர் இல் - ஒப்பில்லாத பஞ்ச பூமும் - ஐந்து பூதங்களும் நினையும் நெஞ்சும் - நினைக்கின்ற நெஞ்சும் ஆவியும் - உயிரும் நெகிழ - கசிந்து உருகி வந்து நேர் படும் - வந்து கூடுகின்ற அவிரோதம் - விரோதமின்மையை

நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர
நிருப அம் குமார வேள் என வேதம்

நிகழ் தரு - கூட்டுவிக்கின்ற ப்ரபாகர - (ஞான) ஒளி உருவனே நிரவிய - அழிவில்லாத பராபர - மேலான பொருளே நிருப - அரசே அம் குமார வேளே - அழகிய குமார வேளே என வேதம் - என்று வேதங்கள் (முழங்கவும்)

சகர சங்க(ம்) சாகரம் என முழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதகர் அறியாத

சகர - சகரரால் ஏற்பட்டதும் சங்க(ம்) - சங்குகள் உள்ளதுமான சாகரம் என - கடலைப் போல் முழங்கும் - ஒலி எழுப்பி வாதிகள் - வாதம் செய்யும் சமய பஞ்ச பாதகர் - சமய வாதிகளாகிய பஞ்ச மா பாதகர்கள் அறியாத - அறியாததும்
தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன
சரண புண்டரீகம் அது அருள்வாயே

தனிமை கண்டதான - (ஊழ்க் காலத்தில்) தனித்து நிலைத்திருப்பதும் கிண்கிணிய தண்டை சூழ்ந்த - கிண்கிணியும் தண்டையும் சூழ்ந்துள்ள சரண புண்டரீகம் அது - திருவடித் தாமரையை தருவாயே - தந்து அருள்வாயாக

மகர(ம்) விம்ப சீகரம் முகர(ம்) வங்க(ம்) வாரிதி  
மறுகி வெந்து வாய் விட நெடு வான


மகர - மகர மீன்கள் உள்ளதும் விம்ப - ஒளி கொண்டதும் சீகரம் - அலை உள்ளதும் முகரம் - ஒலி கொண்டதும் வங்கம் - மரக்கலங்கள் செல்வதுமான வாரிதி - கடல் மறுகி வெந்து - கலங்கி சூடாகி வாய்விட - கொந்தளிக்கவும் நெடு வான - பெரிய ஆகாய

வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும்
மடிய இந்திராதியர் குடி ஏற

வழி திறந்து - வழியைத் திறந்து (வந்த) சேனையும் - படைகளும் எதிர் மலைந்த சூரனும் - எதிர்த்துப் போர் செய்த சூரனும் மடிய - மாண்டு போக இந்திராதியர் குடி ஏற - இந்திரன் முதலிய தேவர்கள் (பொன் உலகுக்குக்) குடி போக


சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு
சிறுவ சந்த்ர சேகரர் பெரு வாழ்வே


சிகர - சிகரங்களை உடைய துங்க - உயர்ந்த மால் வரை தகர - மாயையில் வல்ல கிரௌஞ்ச மலை பொடிபட்டு அழிய வென்றி வேல் விடு - வெற்றி வேலைச் செலுத்திய சிறுவ - இளையோனே சந்த்ர சேகரர் - சந்திரனை முடியில் சூடியுள்ள சிவபெருமானின் பெரு வாழ்வே - பெருஞ் செல்வமே

திசை தொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய
திரு விரிஞ்சை மேவிய பெருமாளே

திசைதோறும் - திசைகள் தோறும் உள்ள ப்ர பூபதி - மேன்மை பொருந்திய அரசர்களும் திசை முகன் - பிரமனும் பராவிய - பரவிப் போற்றிய திரு விரிஞ்சை - அழகிய விரிஞ்சி புரம் என்னும் தலத்தில் மேவிய பெருமாளே - வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை




ஒப்பற்ற ஐந்து பூதங்களும், நினைக்கும் நெஞ்சும், உயிரும் கசியும்படி வந்து கூடுகின்ற ஞானத்தைக் கூட்டுவிக்கும் ஞான சூரியனே பரம் பொருளே அழகிய குமர வேளே என்று வேதங்கள் முழங்குவதும், கடற் சங்குகள் போல் ஒலி எழுப்பி வாதம் செய்யும் சமய வாதிகளாகிய பாதகர்கள் அறியாததும், ஊழிக் காலத்திலும் தனித்து நிற்பதும், கிண் கிணியும், தண்டைகளும் அணிந்ததும் ஆகிய உனது திருவடித் தாமரைகளை எனக்குத் தந்து அருள்க



மகர மீன்களை உடையதும், மரக்கலங்கள் செல்வதுமான கடல் கலங்கி, சூடாகி, கொந்தளிக்கும்படி, ஆகாய வழியைத் திறந்து வந்த சேனைகளுடன் போருக்கு வந்த சூரன் அழியவும், தேவர்கள் விண்ணில் குடி போகவும், கிரௌஞ்ச மலை பொடியாகவும் வெற்றி வேலைச் செலுத்திய சிவபெருமானின் பெருஞ் செல்வமே, அரசர்கள் பலரும், பிரமனும் போற்றிய விரிஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே உனது தாமரைத் திருவடியைத் தந்து அருள வேண்டுகின்றேன்



விளக்கக் குறிப்புகள்


நெடு வான வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும்
சூரனோடு போர் செய்த போது அண்டத்துக்கு அப்பாலிருந்த சேனைகள் வராத வண்ணம் அண்ட வாயிலை முருக வேள் அடைத்தார் அப்போது சூரன் கணைகள் ஏவி ஆகாய வழியைத் திறந்து தன் சேனைகளை வரவழைத்தான் - வசுசெங்கல்வராய பிள்ளை



No comments:

Post a Comment