பின் தொடர்வோர்

Monday, 24 December 2018

369.சுருதி வெகுமுக

369
பொது

            தனன தனதனன தான தானன
              தனன தனதனன தான தானன
              தனன தனதனன தான தானன       தந்ததான

சுருதி வெகுமுகபு ராண கோடிகள்
    சரியை கிரியைமக யோக மோகிகள்
    துரித பரசமய பேத வாதிகள்                என்றுமோடித்
தொடர வுணரஅரி தாயதூரிய
    பொருளை யணுகியநு போக மானவை
     தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய   நின்ப்ரகாசங்
கருதி யுருகியவி ரோதி யாயருள்
    பெருகு பரமசுக மாம கோததி
    கருணை யடியரொடு கூடு யாடிம            கிழ்ந்துநீபக்
கனக மணிவயிர நூபு ராரிய
    கிரண சரணஅபி ராம கோமள
    கமல யுகளமற வாது பாடநி               னைந்திடாதோ
மருது நெறுநெறென மோதி வேரோடு
    கருது மலகைமுலை கோதி வீதியில்
    மதுகை யொடுதறுக ணானை வீரிட           வென்றுதாளால்
வலிய சகடிடறி மாய மாய்மடி
    படிய நடைபழகி யாயர் பாடியில்
    வளரு முகில்மருக வேல்வி நோதசி           கண்டிவீரா
விருதர் நிருதர்குல சேனை சாடிய
    விஜய கடதடக போல வாரண
    விபுதை புளகதன பார பூஷண                   அங்கிராத
விமலை நகிலருண வாகு பூதர
    விபுத கடககிரி மேரு பூதர
    விகட சமரசத கோடி வானவர்                 தம்பிரானே

பதம் பிரித்து உரை

சுருதி வெகுமுக புராண கோடிகள்
சரியை கிரியை மக யோக மோகிகள்
துரித பர சமய பேத வாதிகள் என்றும் ஓடி
சுருதி - வேதமும் வெகுமுக - பலவிதமான புராண கோடிகள் - கோடிக் கணக்கான புராணங்களும் சரியை - சரியை மார்க்கத்தில் இருப்பவர்களும் கிரியை - கிரியை மார்க்கத்தில் நடப்பவர்களும் மக யோக மோகிகள் – மகா யோக மார்க்கத்தில் இருப்பவர்களும் துரிதம் – அவற்றை யெல்லாம் கடந்த நிலையை அடைந்தவர்களும் பர சமய பேத வாதிகள் - பர சமய பேதங்களை மேற்கொண்டு வாதிப்பவர்களும் என்றும் ஓடி - ஓடி ஓடி ஆராய்ந்து

தொடர உணர அரிதாய தூரிய
பொருளை அணுகி அநுபோகமானவை
தொலைய இனி ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம்
தொடர உணர அரிதாய - தொடர்ந்து பற்றதற்கும், உணர்ந்து கொள்ளுவதற்கும் அருமையானதான தூரிய பொருளை - சுத்த நிலைப் பரம் பொருளை அணுகி - அண்டி நெருங்கி அநுபோகமானவை - (உலக) அனுபவங்கள் தொலைய - தொலைந்து ஒழிய இனிய - இன்பம் தரும் ஒரு - ஒப்பற்ற ஸ்வாமியாகிய - சுவாமியகிய நின் ப்ரகாசம் - உன்னுடைய பேரொளியை

கருதி உருகி அவிரோதியாய் அருள்
பெருகு பரம சுக மா மகா உததி
கருணை அடியரொடு கூடு ஆடி மகிழ்ந்து நீப
கருதி - தியானித்து உருகி - மனம் உருகி அவிரோதயாய் - எல்லா உயிரும் தனது உயிர் என்னும் கருதும் மனம் உடையவனாக அருள் பெருகு - கருணை நிறைந்த பரம சுக - மேலான இன்பமான மகா உததி - பெரிய கடலில் அடியரொடு கூடி மகிழ்ந்து - உன் அடியார்களுடன் கூடி மகிழ்ந்து நீப - கடம்பும்

கனக மணி வயிர நூபுரம் ஆரிய
கிரண சரண அபிராம கோமள
கமல உகளம் மறவாது பாட நினைந்திடாதோ
கனக மணி வயிரம் - பொன், இரத்தினம், வயிரம் இவை விளங்கும் நூபுரம் ஆர் - சிலம்பு அணிந்ததும் ஆரிய - மேலான கிரண - ஒளி வீசுவதும் சரணம் - அடைக்கலம் தரும் அபிராம - அழகிய கோமள - இளமை விளங்குவதான கமல உகளம் - திருவடித் தாமரைகளை மறவாது - (நான்) மறக்காமல் பாட நினைந்திடாதோ - பாடத் தங்கள் திருவுள்ளம் நினைவு கொள்ளாதோ?

மருது நெறு நெறு என மோதி வேரோடு
கருதும் அலகை முலை கோதி வீதியில்
மதுகையொடு தறுகண் ஆனை வீரிட வென்று தாளால்
மருது - மருத மரங்களை நெறு நெறு எனி - நெறுநெறு என்று ஒலிக்குமாறு வேரோடு மோதி - வேருடன் முறியும்படி மோதியும் கருதும் - (தன்னைக் கொல்லும்) எண்ணத்துடன் வந்த அலகை - அலகைப் பேயின் முலை - கொங்கையை கோதி - குடைந்து தோண்டியும் வீதியில் - தெருவில் மதுகையொடு - வலிமையுடன் தறுகண் - கொடுமையுடன் (கொல்ல வந்த) ஆனை வீரிட - குவலயா பீடம் என்னும் யானை அலறிக் கூச்சலிட வென்று - (அதை) வென்றும் தாளால் - காலால்

வலிய சகடு இடறி மாயமாய் மடி
படிய நடை பழகி ஆயர் பாடியில்
வளரும் முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா
வலிய - வலிமை வாய்ந்த சகடு - வண்டியை இடறி - எற்றி உதைத்து மாயமாய் - தந்திரமாய் மடிபடிய - இறக்க நடை பழகி - (மீண்டும்) தவழ்ந்து நடந்தும் ஆயர் பாடியில் - இடைச் சேரியில் வளரும் - வளர்ந்த முகில் - மேக வண்ணனாகிய திருமாலின் மருக - மருகனே வேல் விநோத - வேலாயுதத்தை ஏந்தும் அற்புத மூர்த்தியே சிகண்டி வீரா - மயில் வீரனே

விருதர் நிருதர் குல சேனை சாடிய
விஜய கட தடக போல வாரண
விபுதை புளக தன பார பூஷண அம் கிராத
விருதர் நிருதர் - வீரர்களாகிய அசுரர்களின் குல சேனை - குலச் சேனைகளை சாடிய - துகைக்கழித்த விஜய - வெற்றியாளனே கடம் - மதத்தையுடைய தட - விசாலமான கபோல - கன்னத்தை உடைய வாரணம் - யானையாகிய (ஐராவதம் வளர்த்த) விபுதை - தேவ சேனையின் புளக - புளகம் கொண்ட தன பாரம் - கொங்கைப் பாரங்களை பூஷண - அலங்காரமாகத் தரித்துள்ளவனே அம் - அழகிய கிராத - வேடர் குலத்து

விமலை நகில் அருண வாகு பூதர
விபுத கடக கிரி மேரு பூதர
விகட சமர சத கோடி வானவர் தம்பிரானே

விமலை - தூயவளான வள்ளியின் நகில் - கொங்கையை (அணையும்) அருண - சிவந்த வாகு பூதர - தோள் மலையை உடையவரே விபுத கடக - தேவர்கள் சேனைக்கு நாயகனே கிரி மேரு பூதர - மலைகளுள் மேருமலையுடன் விகட - மாறு பட்டு சமர - பொருதவனே சத கோடி வானவர் தம்பிரானே - நூறு கோடி தேவர்களுக்குத் தம்பிரானே

சுருக்க உரை

வேதங்களும், சரியை, கிரியை, யோகம் ஆகிய மார்க்கங்களில் இருப்போரும், பர சமயங்களை மேற்கொண்டு வாதிப்பவர்களும், உணர்தற்கு அரிதான சுத்த நிலைப் பரம் பொருளை நெருங்கி, உலக சுகங்கள் ஒழிய, மூவாAசுகள் அற்றுப் போக, இன்பம் தரும் சுவாமியே உன்னைத் தியானித்து, மனம் உருகி, எல்லா உயிரையும் தனதாகக் கருதும் இயல்புடையவனாக, உன் அடியார்களுடன் கூடி மகிழ்ந்து, கடம்பும், மணிகளும் விளங்கும் திருவடிகளை நான் மறவாமல் பாடுதற்குத் தங்கள் உள்ளம் நினைவு கொள்ளாதோ?

மருத மரமாக வந்த அசுரனை முறித்து அழித்தும், தன்னைக் கொல்ல வந்த அலகைப் பேயின் கொங்கையை அறுத்தும், குவலயா பீடம் என்ற மத யானையைக் கொன்றும், வண்டியை எட்டி உதைத்தும், பற்பல திருவிளையாடல் புரிந்து, ஆயர் பாடியில் வளர்ந்த திருமாலின் மருகனே,
ஐராவதம் வளர்த்த தேவசேனையின் கொங்கைகளைத் தரித்துள்ளவனே,
வேடர்களின் பெண்ணாகிய வள்ளியியை அணையும் தோள் மலையை உடையவனே,
மேரு மலையுடன் மோதியவனே,
தேவர்களுக்குத் தம்பிரானே,
உன்னை மறவாது நான் பாட அருள் புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

1.   சுருதி வெகுமுக புராண : ஒப்புக:
சுருதியூடு கேளாது சரியை யாளர் காணாது
துரியமீது சாராது எவராலும் தொடரொணாது
                    – திருப்புகழ்,  சுருதியூடு கேளாது
2.      தொடர உணர அரிதாய : ஒப்புக:  தொடா டாது நேராக வடிவு காண வாராது, திருப்புகழ்

3.  மருது நெறு நெறென மோதி-  ஒப்புக:
பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற பரமபத நண்ப ரன்பின் மருகோனே
                                 - திருப்புகழ்  மருமலரி

4.  கருது மலகைமுலை கோதி : ஒப்புக:-
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன்விடு மதிசய வினையுறு மலகையை
வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
                      - திருப்புகழ், குன்றுங்குன்றுங்
பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் மருகோனே           - திருப்புகழ், நேசாசாரா

5.  வலிய சகடிடறி மாய மாய் மடிபடிய
நந்த கோபாலன் வீட்டில் ஒரு வண்டியின் கீழ் கண்ணன் பள்ளி கொண்டிருந்த போது, கம்சனால் ஏவப்பட்ட சகடாசுரன் அவரைக் கொல்ல வந்தான் கண் ணன் பாலுக்கு அழுகிற பாவனையில் அவ்வண்டியை உதைத்து அசுரனைக் கொன்றார்
ஒப்புக:- கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட
              வென்றுகு ருந்தினி லேறி
                        – திருப்புகழ், வஞ்சனைமிஞ்சிய
6.  தறுகண் ஆனை வீரிட வென்று
ஒப்புக:- மருகையொடு தறுகணானை வீரிட வென்று
    மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
    பார்முழுது மண்ட கோள முநடுங்க
    வாய்பிளிறி நின்று ,
                      -  திருப்புகழ், சீயுதிரமெங்கு
ஆயர்பாடியில் கண்ணன் வளர்ந்த போது அவரைக் கொல்லும் பொருட்டு மாயங்கள் பல கம்சன் செய்தான், அவன் புரிந்த மாயச் செயல்களால் கண்ணன் பாதிக்கப்படவில்லை. பின்னர் அவரை மதுரைக்கு அழைத்தான். அவர் வரும்போது தனது பட்டத்து யானையாகிய குவலயா பீடம் என்ற யானைக்கு மதம் ஏற்றி அவரைக் கொல்லுவதற்கு ஆயத்தம் புரிந்து வைத்தான். கண்ணபிரான் அம் மதயானையின் கொம்புகளை ஒடித்து, அந்த யானையையும், கம்சனையும், கொன்றதாக புராணம் சொல்லும்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றி ஒரு சிறு குறிப்பு -
இறைவனை அடைகிற நெறிகள் நான்கு  தாச நெறி  ஆண்டானடிமைத்திறம் சற்புத்ர  நெறி தந்தையும் மைந்தனுமாக நிற்றல் தோழ நெறி தோழமை கொண்டு வணங்குதல் நாயகி – நாயக நெறி இறைவனைக் கணவனாக் கொண்டு ஆன்மா நாயகியாகி அன்பு செய்தல்

முதல் நெறியான தாச நெறியில் சரியை ஆண்டவன் அடிமைத்திறத்தில் ஒரு அச்சம் இருக்கும் இறைவனின் அருள் ஒரு வேலைக்கரானுக்கு கொடுக்கும் ஊதியத்தைப் போலவே இருக்கும்  பயம்கலந்த பக்தியுடன் கடவுளை உணர முற்படுவது இறைவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உறைபவர் என்று எண்ணி கோவில்களில் சென்று வழிபடுவது இறைவனைத் தன்னிலும் வேறுபட்டவனாக சிந்திப்பது இது முதல் நிலை இறைவனை பயத்துடன் அணுகுவது உருவவழிபாடுகளும், நீண்ட பூசை நெறிகளுமே முக்கியம்  தான் ஆண்டவனின் அடிமை என்றே எண்ணுதல் நாவுக்கரசரின் பக்தி இத்தகையது,

தந்தையும் மைந்தனுமாக இருக்கிம் சற்புத்ர நெறியில் கிரியை என்பது ஒருவர் அன்புகலந்த பக்தியுடன் கடவுளை உணர முற்படுவது இறைவன் தன் வீட்டினுள்ளும் உறைபவர் என்று எண்ணி வீட்டினுள் அமைந்த பூசை அறையுள், பெரியோர்கள் போதித்த நெறிமுறைப்படி வழிபடுவது இறைவன் தனக்கு அணுக்கமானவன் என்று சிந்திக்க தொடங்குவது இவ்விரண்டாம் நிலையில் இறைவனை பாசத்துடன் அணுகுவது உருவ வழிபாடு, கூட்டாக சேர்ந்து  வணங்குவது, நூல்களை ஓதுவது போன்றவை இதனுடன் தொடர்புள்ளவை கடவுளை தன் தந்தையை போல் நேசித்தல்

தந்தையின் சொத்து அத்தனையும் மகனுக்காவது போல  இறைவனின் அருள் பூர்ணமாக அடியவருக்கு கிடைக்க ஏதுவாகிறது சம்பந்தர் இறைவனை நேசித்தது போல 

தோழமை நெறியில் யோகம் இறைவனை மைந்தனை விட நெருங்கி பழக வாய்பிருக்கிறது ஒருவர் தன் உடலுள் கலந்த (ஊன்கலந்த) பக்தியுடன் கடவுளை உணர முற்படுவதாகும் இறைவன் தன் உடலுள்ளும் உறைபவர் என்று எண்ணி உடலை ஓர் ஆலயம் என பாவித்து, அதன் ஆறு ஆத்மத்தானங்களான மூலாதாரம் முதலானவற்றில் கடவுள் உறைகிறார் என்று சிந்தித்து, குரு காட்டிய நெறிப்படி வணங்கி வழிபடுவது இந்த நிலையில்தான்இறைவனுடன் ஒரு தோழமை பாவம் வந்து மிக நெருக்கமாகி இருவரும் கலந்துவிவது யோகநெறீயாகும் சுந்தரரின் பக்தி இதற்க்கு எடுத்துகாட்டு

எல்லாவற்றுக்கும் மேலாக கருதப்படுவது நான்காவது நெறியாகிய நாயகி – நாயக நெறிதான்  ஞானம் இன் நிலையில் இருபோர் தன் உயிருள் கலந்த (உயிர்கலந்த) பக்தியுடன் கடவுளை உணர முற்படுகின்றார் இறைவன் தன் உயிரின் உயிரானவன் என்று எண்ணி தன் உயிரையே தெய்வத்தின் உடல் என பாவித்து, உலகுயிரனைத்தும் அதன் திவலைகள் என மதித்து, அன்பே உருவாய், அருளே மொழியாம், பண்பே பொருளாய், பராபரமே நிலையாய் வாழ முற்படுகின்றார் இறைவன் தன் உருவில் உறைபவன் என சிந்திக்கத் தலைபடுகின்றார் இந்நான்காம் நிலையில் இறைவனை பற்றற்று மதிக்கத் தலைப்படுகின்றனர் அவர் இறையன்பர்களைச் சுற்றமென்றும், என்னும் உயிர்களை குழந்தைகள் என்றும், உலகை குடும்பம் என்றும் மதிக்கத் தலைப்படுகின்றார் இந்த நெறியை நமக்கு நன்கு உணர்த்தியவர் மாணிக்கவாசகர் 

சுருங்கச் சொல்லின் சரியை – புறப்பூஜை, கிரியை அகப்பூஜையும், புறப்பூஜையுமாகும். யோகம் அகப்பூஜை மட்டுமே. எல்லாமே ஞானத்தை எட்ட ஏணிப்படிகள்தான்

இவ் நான்கு நிலையில் நின்றோர் பெரும் முக்திகள் முறையே சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்
சாலோகம் - ஈசனவன் கூட்டத்தில் அவ்வுலகில் வாழ்வது
சாமீபம் - ஈசன் சமீபத்தில் அவன் ஆடும்பாதமடி வாழும் பேறு
சாரூபம் - ஈசனின் வடிவே தாமும் எய்தி வாழ்வது
சாயுச்சியம் - ஈசனே தன்னுள் கலந்து தான் அவனாகிவிட்ட அத்துவித நிலை சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை
சமயக்குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிககவாசர் முறையே இந்த நான்கு வித முக்தியை அடைந்தார்கள் என வரலாறு சொல்கிறது

பாடல் 154 குறிப்பையும் பார்க்க



368.சுட்டதுபோ லாசை

368
பொது

                தத்ததனா தான தத்ததனா தான
                தத்ததனா தான         தனதான

சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
  துக்கமிலா ஞான                             சுகமேவிச்
சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
  சுத்தநிரா தார                               வெளிகாண
மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
  முட்டவுமீ தேறி                               மதிமீதாய்
முப்பதுமா றாறு முப்பதும்வே றான
  முத்திரையா மோன                   மடைவேனோ
எட்டவொணா வேத னத்தொடுகோ கோவே
  னப்பிரமா வோட                             வரைசாய
எற்றியஏ ழாழி வற்றிடமா றாய
  எத்தனையோ கோடி                         யசுரேசர்
பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு
  பத்திருதோள் வீர                        தினைகாவல்
பத்தினிதோள் தோயு முத்தமமா றாது
  பத்திசெய்வா னாடர்                     பெருமாளே

பதம் பிரித்து உரை

சுட்டது போல் ஆசை விட்டு உலக ஆசார
துக்கம் இலா ஞான சுகம் மேவி

சுட்டது போல் - (கையில் உள்ள ஒரு பொருள்) சுட்டதைப் போல ஆசை விட்டு - ஆசைகளை விட்டு ஒழித்து உலக ஆசார - உலக வாழ்க்கையால் ஏற்படும் துக்கம் இலா - துக்கங்கள் இல்லாத ஞான சுகம் மேவி - ஞான சுக நிலையை அடைந்து

சொல் கரண(ம்) அதீத நிற்குணம் ஊடாடும்
சுத்த நிராதார வெளி காண

சொல் - சொற்களுக்கும் கரண(ம்) - மனதுக்கும் அதீத - அப்பாற்பட்ட நிலையதாய் நிற் குணம் - குணம் கடந்த நிலையில் ஊடாடு - விளங்குகின்றதும் சுத்த - பரிசுத்தமானதும் நிராதார - சார்பற்றதுமான வெளி காண - பர வெளியைக் காண

மொட்டு அலர் வாரீச சக்ர சடாதார
முட்டவும் மீது ஏறி மதி மீதாய்

மொட்டு அலர் - மொட்டுக்கள் மலர்ந்துள்ள வாரீச சக்ர - தாமரைச் சக்கரங்களாகிய சடாதார - ஆறு ஆதாரங்கள் முட்டவும் மீது ஏறி - எல்லாவற்றின் மீதும் கடந்து சென்று மதி மீதாய் - மதிக் கலா அமிர்தம் பொங்கும் நிலைக்கு மேலானதும்

முப்பதும் ஆறு ஆறும் முப்பதும் வேறான
முத்திரையாம் மோனம் அடைவேனோ

முப்பதும், ஆறு ஆறும், முப்பதும் - (30 + 36 + 30) தொண்ணூற்றாறு தத்துவங்களுக்கும் வேறான - வேறானதான முத்திரையாம் - அடையாள அறி குறியான மோனம் அடைவேனோ - மோன நிலையை அடையும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா?

எட்ட ஒணா வேதனத்தோடு கோ கோ என
பிரமா ஓட வரை சாய

எட்ட ஒணா - இவ்வளவு என்று மனத்தால் அளதற்கரிய வேதனத்தோடு – சொல்லாள்வில்லாத வேதனையோடு கோகோ என - கோ கோ என்று அலறிக் கொண்டே பிரமா ஓட - பிரமன் ஓடவும் வரை - கிரௌஞ்ச மலை சாய - சாய்ந்து விழவும்

எற்றிய ஏழு ஆழி வற்றிட மாறு ஆய
எத்தனையோ கோடி அசுரேசர்

எற்றிய - (அலை) வீசுகின்ற ஏழு ஆழி - ஏழு கடல்களும் வற்றிட - வற்றிப் போக மாறாய - பகைவர்களான எத்தனையோ கோடி அசுரேசர் - கோடிக் கணக்கான அசுரத் தலைவர்கள்

பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு
பத்து இரு தோள் வீர தினை காவல்

பட்டு - அழிபட்டு ஒரு சூர் மாள - ஒப்பற்ற சூரன் இறக்கவும் விக்ரம - வலிமை பொருந்திய வேல் ஏவு - வேலாயுதத்தைச் செலுத்திய பத்து இரு தோள் வீர - பன்னிரு தோள் வீரனே தினை காவல் - தினைப் புனத்தைக் காவல் புரிந்த

பத்தினி தோள் தோயும் உத்தம மாறாது
பத்தி செய் வான் நாடர் பெருமாளே

பத்தினி தோள் தோயும் - கற்புடைய வள்ளியின் தோளை அணைந்த உத்தம - உத்தமனே மாறாது - மாறாத புத்தியுடன் பத்தி செய் - பத்தி செய்த வான் நாடர் பெருமாளே - தேவர்கள் பெருமாளே

சுருக்க உரை
கொதிக்கின்ற பொருளை எடுக்கும் போது தன்னையறியாமல் கை எங்ஙனம் கீழே விட்டுவிடுவோமோ, அது போல், ஆசைகளை சட்டென்று விட்டொழித்து, உலக வாழ்க்கையால் ஏற்படும் துக்கங்கள் இல்லாத ஞான சுக நிலையை அடைந்து, சொல்லுக்கும், மனதுக்கும் எட்டாததும், குணங்களைக் கடந்ததும், பரிசுத்தமானதும், சார்பற்றதுமாகிய பர வெளியைக் காண, தாமரைச் சக்கரங்களாகிய ஆறு ஆதாரங்களைக் கடந்து சென்று, மதிக் கலா அமிர்தம் பொங்கும் நிலைக்கு மேலானதும், 96 தத்துவங்களுக்கும் வேறானதுமான அடையள அறிகுறியான மவுன நிலையை அடையும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா?

மிக்க மன வேதனையோடு பிரமன் ஓடவும், கிரௌஞ்ச மலை சாய்ந்து விழவும், ஏழு கடல்களும் வற்றிப் போகவும், கணக்கில்லாத அசுரத் தலைவர்கள் இறந்து படவும் வேலைச் செலுத்திய பன்னிருதோள் வீரனே, தினைப் புனத்தைக் காவல் புரிந்த கற்புடைய வள்ளியை அணைந்தவனே, நிலையான புத்தியுடன் பத்தி செய்த தேவர்கள் பெருமாளே நான் மோன நிலையை அடைவேனோ?

விளக்கக் குறிப்புகள்

சுட்டது போல் ஆசை விட்டுயிர்     
அற்றது பற்றெனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே -திருவாய் மொழி
அவா இல்லார்க் கில்லாகும் துன்பம் - திருக்குறள் 
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினனும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே - திருமந்திரம்
ஆ முப்பதும் ஆறும்ஆறும் முப்பதும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சம்    அறு நாலும் 
ஆறு மாய சஞ்சல ங்கள் வேறதாவிளங்குகின்ற -
திருப்புகழ் ,ஆறுமாறுமஞ்சு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறைய மறையெனஅ ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு         சம்ப்ரதாயம்  - திருப்புகழ்     அதலவிதல
ஆறாறையும் நீத்ததன் மேனிலையைப் பேறா அடியேன் பெறுமாறுளதோ - கந்தர்  அனுபூதி

சடாதார முட்டவும் மீதேறி
உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் (நிலைகள்) - குதம் (மூலாதாரம்), குய்யம் (ஸ்வாதிஷ்ட்டானம்), நாபி (மணிபூரகம்), இதயம் (அநாகதம்), அடிநா (விஷுத்தி), நெற்றி (ஆக்ஞா)
நாம் உட்கொள்ளும் சுவாசக் காற்று, இந்த ஆறு நிலைகளுக்குள் பரவி, முறைப்பட செயல் படுவதையும், இறை வழிபாட்டுக்கும் இந்த நிலைகளுக்கும் உள்ள தொடர்புகளையும் சைவ சித்தாந்த நூல்களில் காணலாம்
ஆர மூணுபதி  யிற்கொள நிறுத்திவெளி
யாரு சோதி – திருப்புகழ்,  ஆசைநாலுசது
பிரமா ஓட
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
கன்றச் சிறையிடு மயில்வீரா- திருப்புகழ், வஞ்சத்துடன்