485
சிதம்பரம்
தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான தனதான
சுடரனைய திருமேனி யுடையழகு
முதுஞான
சொருப
கிரி யிடமேவு முகமாறும்
சுரர்தெரிய லளிபாட மழலைகதி
நறைபாய
துகிரிதழின்
மொழிவேத மணம்வீச
அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட
அயில்கரமொ
டெழில்தோகை மயிலேறி
அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை
அதிசயமெ
னருள்பாட வரவேணும்
விடைபரவி அயன்மாலொ டமரர்முநி
கணமோட
மிடறடைய
விடம்வாரி யருள்நாதன்
மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
மிகமகிழ அநுபூதி யருள்வோனே
இடர்கலிகள் பிணியோட எனையுமருள்
குறமாதி
னிணையிளநிர்
முலைமார்பி னணைமார்பா
இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி
யிருடியர்கள்
புகழ்ஞான பெருமாளே
பதம் பிரித்து உரை
சுடர் அனைய திருமேனி உடை அழகு முது ஞான
சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும்
சுடர் அனைய திருமேனியுடை = (காலைக்) கதிர் போன்ற உடலின் அழகும் = அழகும் முது ஞான சொருப = முற்றின ஞானத்தின் திருவுருவமும்
கிரீடம் மேவும் = மகுடம்
பொருந்திய முகம் ஆறும் = ஆறு முகங்களும்
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய
துகிர் இதழின் மொழி வேத மணம் வீச
சுரர் = தேவர்கள் (சூட்டிய) தெரியல் = மாலைகளிலிருக்கும் அளி பாட = வண்டுகள் பாட மழலைகதி = (அதனால் அம்மாலைகளிலிருந்து) மெதுவான வகையில் நறை பாய = துளித் துளியாகத் தேன் பாய துகிர் இதழின் = பவளம் போன்ற
வாயிதழிலிருந்து சொல்லப்படும் மொழி வேத = வேத மொழிகளின் மணம் வீச = நறு மணம் வீச
அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட
அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி
அடர் பவள ஒளி பாய = அடர்ந்த பவள நிறத்தின் ஒளி பாய அரிய = அருமையான பரிபுரம் ஆட = கால் சிலம்பு ஒலிக்க அயில் கரமொடு = வேல் ஏந்திய திருக் கரத்தோடு எழில் தோகை மயில் ஏறி = அழகிய கலாபம் உள்ள மயிலின் மீது ஏறி
அடியன் இரு வினை நீறுபட அமரர் இது புரை
அதிசயம் என அருள் பாட வரவேணும்
அடியன் = அடியேனுடைய இரு வினை நீறுபட = அடியேனாகிய என் இரண்டு வினைகளும் பொடிபட்டு
அழிய அமரர் = (அதைக் கண்டு) தேவர்கள் இது பூரை அதிசயம் என = (இவன் ஒன்றுக்கும் உதவாதவன் கடவுள் இவனுக்கு அருள் செய்வது) என்ன ஆச்சரியம்
என அருள் பாட = (உனது) திருவருளைக் கொண்டாடிப் பாட வர வேணும் = நீ எழுந்தருளி என் முன் வர வேண்டும்
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட
மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன்
விடை பரவி = நந்தி எம்பெருமானைப் போற்றி வணங்கி அயன் மாலொடு = பிரமன், திருமாலுடன் அமரர் முநி கணம் = தேவர்களும் முனிவர் கூட்டங்களும் ஓட = ஓடி வந்து தம்மிடம் சரணம் புக மிடறு அடைய = தமது நெஞ்சிடையே பொருந்தி நிற்கும்படி
விடம் வாரி அருள் நாதன்
= விடத்தை வாரி உண்டு (சரணம்
அடைந்தவர்களுக்கு) அருள் புரிந்த தலைவன்
மி(ன்)னல் அனைய இடை மாது இடம் மருவு குரு நாதன்
மிக மகிழ அநுபூதி அருள்வோனே
மி(ன்)னல் அனைய இடை மாது = மின்னல் போன்ற
இடையை உடைய பார்வதியை இடம் மருவு குரு நாதன் = (தனது) இடப்பாகத்தில் பொருந்தி உள்ள குரு
மூர்த்தியாகிய சிவபெருமான் மிக மகிழ = மிகவும் மகிழ அநுபூதி அருள்வோனே = அவருக்கு ஞான உபதேசத்தை அருளியவனே
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின்
இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா
இடர் கலிகள் = துன்பங்களும், வறுமையும் பிணி ஓட = நோய்களும் விலக எனையும்
அருள் = என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருளியவனே குற மாதின் = குறப் பெண் வள்ளியின் இணை இள நீர் முலை மார்பில் = இரண்டு இள நீர் போன்ற கொங்கைகள் அமைந்த
மார்பில் அணை மார்பா = அணையும் மார்பனே
இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி
இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே
இனிய = இன்ப நிலையில் முது புலி பாதன் உடன் = பழைய முனிவரான வியாக்ரபாதருடன் அரவு = பாம்பு உருவமுள்ள (பதஞ்சலி முனிவரும்) சத கோடி = நூறு கோடி இருடியர்கள் = முனிவர்களும் புகழ் = புகழும் ஞான பெருமாளே = ஞான மூர்த்தியாகிய பெருமாளே
சுருக்க உரை
ஒளி வீசும் திரு மேனியின் அழகும், முதிர்ந்த ஞான வடிவும், ஆறு திருமுகங்களும் விளங்க, பவள வாயினின்று சொல்லப்படும் வேத மொழி மணம் வீச, காலில் சிலம்புகள் ஒலிக்க, தோகை மயிலின் மீது ஏறி, அடியேனுடைய இரு
வினைகளும் பொடிபட, தேவர்கள் ஒன்றுமில்லாதவனுக்கு இறைவன் திருவருள் செய்தது
ஆச்சரியம் என்று சொல்லும்படி, உன் திருவருளைக் கொண்டாட, நீ என் முன் எழுந்தருளி வரவேண்டும்
நந்தி பகவானை வணங்கி, பிரமன், திருமால், தேவர்கள், முனிவர் கூட்டங்கள் ஓடி வந்து சரணம் புக, நந்தி அளித்த விடையைப் பெற்று, தம் நெஞ்சில் விடம்
அடைந்து
நிற்கும்படி, அதை உண்டு, சரண் புகுந்தவர்களுக்கு அருள் புரிந்த
சிவபெருமானுக்கு, அவருடைய இடப் பாகத்தில்
உள்ள உமை மகிழும்படி, ஞான உபதேசத்தை அருளியவனே ! எனது
துன்பங்கள், வறுமை, நோய் எல்லாம் விலக எனக்கு
அருளியவனே ! வள்ளியின் கொங்கைகளை அணைந்தவனே ! பழைய முனிவரான வியாக்ரபாதருடன், பதஞ்சலியும் புகழ்கின்ற ஞான மூர்த்தியாகிய பெருமாளே ! என் முன்னே வர வேண்டுகிறேன்
விளக்கக் குறிப்புகள்
பூரை = ஒன்றும் இல்லாதவன் திருமாது = பார்வதி
முது புலிபாதரு டனரவு சத கோடி
தில்லையில் முதலில் தவம் செய்தவர் வியாக்கிரபாதர் பின்பு தான் பதஞ்சலி வந்து அவருடன் கூடினார்
rev 30-5-2022