பின் தொடர்வோர்

Monday, 9 May 2022

503.முத்துநவரத்நமணி

 

503





மதுரை (= பத்மபுரி)

       தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

          தத்ததன தத்ததன           தனதான

முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட

   மொய்த்தகிரி முத்திதரு                 எனவோதும்

முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்

   முப்பதுமு வர்க்கசுர                        ரடிபேணி

பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி

   பற்குனனை வெற்றிபெற                   ரதமூரும்

பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்

   பத்தர்மன துற்றசிவம்                  அருள்வாயே

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு

   தெய்த்ததென தெய்த்ததென             தெனனான

திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு

   செச்சரிகை செச்சரிகை                  யெனஆடும்

அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ

   சித்தியருள் சத்தியருள்                     புரிபாலா

அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள

   ரற்கனக பத்மபுரி                        பெருமாளே.

பதம் பிரித்து உரை

முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம்

மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும்

முத்து = முத்தும். நவ ரத்ந மணி = நவரத்ன மணிகளும். பத்தி நிறை = வரிசையாக விளங்கும். சத்தி = பார்வதி. இடம் = (தமது) இடப் பாகத்தில். மொய்த்த = நெருங்கியுள்ள. கிரி = மலை போன்ற சிவபெருமான். முத்தி = முத்திக் கனியை அளிக்கும். தரு = மரம். என = என்றெல்லாம். ஓதும் = ஓதப்படும்.

முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள்

முப்பது மூவர்க்க சுரர் அடி பேணி

முக்கண் இறைவர்க்கும் = மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கும். அருள் வைத்த = அருள் பாலித்த. முருகக் கடவுள் =முருகக் கடவுள். முப்பது மூ வர்க்க சுரர் = முப்பத்து மூன்று வகையான தேவர்களும் அடி பேணி = (தமது) திருவடியைப் போற்றி விரும்ப

பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி

பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்

பத்து முடி தத்தும் வகை உற்ற = (இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி. கணி விட்ட அரி = அம்பைச் செலுத்திய திருமால். பற்குனனை = அருச்சுனன். வெற்றி பெற = (போரில்) வெற்று பெறும் வகையில். ரதம் ஊரும் = தேரைச் செலுத்திய.

பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள்

பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே

பச்சை நிறம் உற்ற புயல் = பச்சை நிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால். அச்சம் உற வைத்த = (பதுமன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க வைத்த. பொருள் = கடவுளே. பத்தர் மனது உற்ற = பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும். சிவம் = மங்கலத்தை. அருள்வாயே = அருள் புரிவாயாக.

தித்திமிதி............தெனனான

திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு

........என ஆடும்

தித்தி....என = இவ்வாறான ஒலிகளுடன் மத்தளம் = மத்தளம் இடக்கை = இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி துடி = உடுக்கை ஆகியவை ஒலிக்க தத்த...என ஆடும் = நடனம் ஆடும்.

அத்தனுடன் ஒத்த நடநி திரி புவனத்தி நவ

சித்தி அருள் சத்தி அருள் பாலா

அத்தனுடன் = சிவபெருமானுடன். ஒத்த = ஒத்ததான. நடநி = நடனம் புரிபவள். த்ரி புவனத்தி = மூன்று லோகங்களுக்கும் முதல்வி. நவ சித்தி அருள் = புதுமையான சித்திகளை அருளும். சத்தி = பார்வதி. அருள் புரி பாலா = ஈன்றருளிய குழந்தையே.  [அத்தன் என்றால் தகப்பன் என்று தமிழில் பொருள். பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம். அத்தா, அச்சன், முத்தன், அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்]

அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர்

அல் கனக பத்ம புரி பெருமாளே.

அற்ப இடை = நுண்ணிய இடையை உடைய மாதர்களின். தற்பம் அது முற்றும் = மெத்தை வீடுகள் எல்லாம். நிலை பற்று வளர் = நிலை பெற்றனவாய் உயர்ந்த. அல் = மதில்களுடன் விளங்கும். கனக பத்ம புரி = பொற்றாமரைக் குளம் விளங்கும் பட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும். பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

முத்தும் நவ மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி தேவி தமது இடப் பாகத்தில் நெருங்கியுள்ளவரும், முத்திக் கனியை அளிக்கும் தரு என்று சிறப்பித்து ஓதப்படுபவரும் ஆகிய சிவபெருமானுக்கும் அருள் பாலித்துப் பிரணவத்தை உபதேசித்த முருகக் கடவுளே! முப்பது மூன்று வகையான தேவர்களாலும் விரும்பிப் போற்றப்படுவனே!

இராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் எய்தவனும், அருச்சுனன் போரில் வெற்று பெற அவனுடைய தேரைச் செலுத்தியவனும் ஆகிய மேக நிறம் கொண்ட திருமால், அசுரர்களிடம் கொண்ட பயத்தை நீக்கி, மங்கலத்தை அருளியவனே! பல வகையான வாத்தியங்கள் முழங்க, நடனம் புரியும் சிவபெருமானுடன் ஒத்தவாறு நடனம் செய்த பார்வதி ஈன்ற குழந்தையே! நுண்ணிய இடை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லம் மதில்களுடன் விளங்கும், பொற்றாமரைக் குளம் சிறந்து விளங்கும் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே! உன் பக்தர்களுக்குச் சிவத்தை அருள்வாயே.

விளக்கக் குறிப்புகள்

இந்தப் பாடலின் முதல் நான்கு அடிகள் முத்தைத் தரு என்னும் பாடலை ஒத்தனவாகும்.

முப்பத்து மூன்று தேவர்கள்.....

12 ஆதித்தியர்கள் 8 வசுக்கள், 11 ருத்திரர்கள்இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரைச் சேர்த்து முப்பத்தி மூன்று தேவர்கள் என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முப்பத்தி மூன்று தேவர்களையே தற்போது முப்பத்தி முக்கோடி தேவர்கள் என அறியப்படுகிறது. கோடி என்பது எண்ணிக்கை அல்ல அதன் உண்மையான அர்தம் "பிரிவு".  ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள்

1) விஷ்ணு 2)தாதா 3) மித 4) ஆர்யமா 5) ஷக்ரா 6) வருண 7) அம்ஷ 8) பாக 9) விவாஸ்வான் 10) பூஷ 11) ஸவிதா 12) தவாஸ்தா

வசு நிலையில் 8 வகையாவன:

14. த்ருவ 15. சோம 17. அனில 18. அனல 19. ப்ரத்யுஷ 20. ப்ரபாஷ

ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள்  22. பஹூரூப 23. த்ரயம்பக 24. அபராஜிதா 25. ப்ருஷாகாபி 26. ஶம்பூ 27. கபார்தி 28. ரேவாத் 29. ம்ருகவ்யாத 30. ஷர்வா 31.கபாலி

மற்றும் 2 பிரிவு அஷ்வினி குமாரர்கள்

ஆக மொத்தம் = 33 வகையான(பிரிவுகளான) தெய்வங்கள்

பற்குனன் = பல்குணன்.  உத்திர பல்குணி உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவன் அருச்சுனன்.அதனால் பல்குணன் என்ற பெயர் அவனுக்கு.

கனக பத்மம்....

இந்த தீர்த்தம் மதுரைத் திருக் கோயிலுள் உள்ளது. இது பொற்றாமரைக் குளம் எனப்படும்.

Rev: 30-5-22

பாடலை கேட்க


 

Wednesday, 4 May 2022

502. முறுகுகாள

 

502




திருவேரகம்

       தனன தான தனன தந்த தனன தான தனன தந்த

       தனன தான தனன தந்த               தனதான

 

முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி

   முளரி வேரி முகைய டர்ந்த                              முலைமீதே

முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து

   முகமொ ராறு மிகவி ரும்பி                                 அயராதே

அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை

   அடைய வாரி மிசைபொ ழிந்து                         னடிபேணி

அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி

   னடிமை யாகு முறைமை யொன்றை             அருள்வாயே

தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து

   தமர வேலை சுவற வென்ற                                வடிவேலா

தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டு

   தரணி யேழும் வலம்வ ருந்திண்                        மயில்வீரா

மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து

   வலிய காவல் புனைய ணங்கின்                      மணவாளா

மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி

   வளர்சு வாமி மலைய மர்ந்த                            பெருமாளே

பதம் பிரித்து உரை

முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உ(ள்)ளம் மயங்கி

முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே

முறுகு = முற்றிய [பொங்கி எழுந்த]  காள விடம் = கரிய விஷத்தை அயின்ற = உண்ட இரு கண் = இரண்டு கண்களாகிய வேலின் உள்ளம் மயங்கி = வேலினால் மனம் மயங்கி முளரி = தாமரையின் வேரி = மணம் உள்ள முகை அடர்ந்த = மொட்டுப் போன்ற முலைமீதே = கொங்கையின் மேல்

[இரண்டு கண்களும் முற்றிய விஷத்தை கக்குவது போன்று இருப்பதாக உவமை]

முழுகு காதல் தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து

முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே

முழுகு காதல் தனை மறந்து = முழுகுகின்ற காதலை மறந்து பரம ஞான ஒளி சிறந்து = மேலான ஞான ஒளியை மிகுந்து முகம் ஒரு ஆறு = உனது ஆறு முகங்களையும் மிக விரும்பி = மிகவும் விரும்பி அயராதே = சோர்வில்லாமல் [இறைவனை மலர் கொண்டு அர்ச்சிப்பதில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதர்க்காக "அயராதே"]

அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை

அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி

அறுகு = அறுகம் புல் தாளி = ஊமத்தை நறை அவிழ்ந்த குவளை = மணம் வீசும் குவளை வாச மலர் கரந்தை = மணம் கொண்ட திரு நீற்றுப் பச்சை அடைய = இவைகளை எல்லாம் நிரம்ப  வாரி மிசை பொழிந்து = (உன் திருவடியின் மேலே) சொரிந்து உன் அடி பேணி = உனது திருவடியை விரும்பி  

அவசமாகி உருகு தொண்டர் உடன் அதாகி விளையும் அன்பின்

அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே

அவசம் ஆகி = தன் வசம் அழிந்து உருகும் = (மனம்) உருகுகின்ற தொண்டருடன் அதாகி = அடியார்களுடன் கலந்து கூடி விளையும் அன்பின் = அதனால் உண்டாகும் அன்பினால் அடிமையாகும் முறைமை = அடிமை  என்னும் ஒழுக்க முறைமையாகிய ஒன்றை = ஒரு பேற்றை அருள்வாயே = அருள்வாயாக

தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து

தமர வேலை சுவற வென்ற வடி வேலா

தறுகண் வீரர் = அஞ்சாமை கொண்ட வீரர்களின் தலை அரிந்து = அரிந்து பொருத = சண்டை செய்த சூரன் உடல் பிளந்து = சூரனுடைய உடலை (இரு கூறாகப்) பிளந்து தமர வேலை சுவற = ஒலிக்கும் கடல் வற்றும்படி வென்று = வென்ற வடிவேலா = கூரிய வேலனே

தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு

தரணி ஏழும் வலம் வரும் திண் மயில் வீரா

தரளம் ஊரல் = முத்துப் போன்ற பற்களை உடைய உமை மடந்தை = உமை மாதின் முலையில் ஆர = கொங்கைகளில் நிரம்ப அமுதம் உண்டு = பால் அமுதம் உண்டு தரணி ஏழும் = ஏழு உலகங்களையும் வலம் வரும் = வலம் வந்த திண் = வலிய மயில் வீரா = மயில் வீரனே

மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதணில் இருந்து

வலிய காவல் புனை அணங்கின் மணவாளா

மறு இலாத = குற்றம் இல்லாத தினை விளைந்த = தினை விளைந்த புனம் விடாமல் = புனத்தை விட்டு நீங்காது இதணில் இருந்து = பரண் மீது இருந்து வலிய = பலமாக காவல் புனை = காவல் புரிந்த அணங்கின் மணவாளா = அணங்காகிய வள்ளியின் கணவனே

மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன(ம்) நெருங்கி

வளர் சுவாமி மலை அமர்ந்த பெருமாளே

மருவும் = பொருந்திய ஞாழல் = புலி நகக் கொன்றை அணி = அழகிய செருந்தி அடவி = செருந்தி [ஒருவகை புல்] இவையுள்ள நந்த வனமும் சூத வனம் = மாமரக் காடும் நெருங்கி வளர் = நெருங்கி வளரும்  சுவாமி மலை அமர்ந்த பெருமாளே = திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

விலை மாதர்களின் கடுமையான, கரிய விஷம் போன்ற கண்களாகிய வேலால் உள்ளம் மயங்கி, தாமரை மொட்டுப் போன்ற அவர்களுடைய கொங்கைகளில் முழுகுகின்ற காதலை மறந்து, ஞான ஒளி மிகுந்து, உனது பன்னிரு முகங்களை விரும்பி, சோர்வின்றி, அறுகு, தாளி, கரந்தை இவைகளை நிரம்ப உன் திருவடியில் பொழிந்து, தன் வசம் அழிந்து, மனம் உருகும் தொண்டர்களுடன் கலந்து கூடி, அதனால் விளையும் அன்பினால் அடிமை என்னும் பேற்றை அடைய அருள் புரிவாயாக

அஞ்சாமை கொண்ட வீரர்களின் தலைகளை அரிந்து, சூரன் உடலை இரு கூறாகப் பிளந்து கடலும் வற்றும்படி செய்த கூரிய வேலனே! முத்துப் போன்ற பற்களை உடைய உமா தேவியின் கொங்கைகளில் பால் அமுதத்தை உண்டு, ஏழு உலகங்களையும் வலம் வந்த மயில் வீரனே! தினைப் புனத்தை நீங்காது காவல் புரிந்த அணங்காகிய வள்ளியின் மணவாளனே! புலி நகக் கொன்றை, செருந்தி இவைகள் நிறைந்த நந்தவனமும், மாமரக் காடுகளும் நெருங்கி வளரும் சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே! நான் உன் அடிமையாகும் முறைமை ஒன்றை எனக்கு அருள் புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

தொண்டருடன தாகி விளையும் அன்பின் அடிமை

இந்த வரத்தை அருணகிரி நாதர் பெற்றார் என்பதைப் பின் கண்ட பாக்களால் அறியலாம்

இடுதலைச் சற்றுங் கருதேனைஅன்பாற் கெடுதலிலாத் தோண்டரிற் கூட்டியவா                                                                               - கந்தர் அலங்காரம்

சீரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர் குழாம் சாரிற் கதியன்றி வேறிலை காண்                                                                    - கந்தர் அலங்காரம்

rev 30-5-22

பாடலை கேட்க