பின் தொடர்வோர்

Showing posts with label ஜோதி. Show all posts
Showing posts with label ஜோதி. Show all posts

Friday, 15 June 2018

336. இத்தரணி


336
பொது
                        தத்ததன தானத்   தனதானா
 
 இத்தரணி மீதிற்            பிறவாதே
     எத்தரொடு கூடிக்       கலவாதே
முத்தமிழை யோதித்         தளராதே
     முத்தியடி யேனுக்      கருள்வாயே 
தத்துவமெய்ஞ் ஞானக்     குருநாதா
     சத்தசொரு பாபுத்    தமுதோனே
நித்தயக்ரு தாநற்          பெருவாழ்வே
     நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே.

பதம் பிரித்தல்

இத்தரணி மீதில் பிறவாதே
எத்தரொடு கூடி கலவாதே

இத்தரணி மீதில் பிறவாதே - இந்தப் பூமியில் நான் பிறவாமலும். எத்தரோடு - வஞ்சகர்களுடன். கூடிக் கலவாதே - கூடிக் கலந்து கொள்ளாமலும்.

முத்தமிழை ஒதி தளராதே
முத்தி அடியேனுக்கு அருள்வாயே

முத்தமிழை ஓதித் தளராதே - இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழ்களையும் படித்துப் படித்துச் சோர்வு அடையாமலும். முத்தி அடியேனுக்கு அருள்வாயே - முத்தியை அடியேனுக்கு அருள் புரிய வேண்டுகின்றேன்.

தத்துவ மெய் ஞான குரு நாதா
சத்த சொருப புத்த அமுதோனே

தத்துவ மெய்ஞ் ஞானம் - உண்மைப் பொருளாய மெய்ஞ்ஞானத்தை உபதேசிக்க வல்ல. குரு நாதா - குரு மூர்த்தியே. சத்த சொருபா - ஒலி உருவத்தனே. புத்த - புதிய. அமுதோனே - அமுதம் போன்றவனே.

நித்திய க்ருதா நல் பெரு வாழ்வே
நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே.

நித்யக்ருதா - நித்திய வாழ்வை (வீட்டுப் பேற்றைத்) தருபவனே. நல் பெரு வாழ்வே - நல்ல பெருஞ் செல்வமே. நிர்த்த - ஆடல் புரியும். ஜெக ஜோதிப் பெருமாளே - உலகத்தில் சோதியாய் விளங்கும் பெருமாளே.

சுருக்க உரை

இந்தப் பூமியில் நான் இனிப் பிறவாமலும், வஞ்சகர்களாகிய விலை மாதர்களுடன் சேராமலும், முத்தமிழைத் திரும்பத் திரும்பப் படித்துத் தளராமலும், முத்தி நிலையை எனக்கு அருள் புரிய வேண்டும்.
மெய்ப் பொருள் தத்துவத்தை எனக்கு உபதேசித்த குரு நாதனே, ஒலி வடிவானவனே, அமுதம் போன்றவனே, நித்திய வாழ்வைத் தருபவனே, நல்ல பெருஞ் செல்வமே, உலகில் சோதி வடிவான பெருமாளே, எனக்கு முத்தியை அருள்வாயாக.
 
விளக்கக் குறிப்புகள்

முத்தி நெறியைக் குறிக்கும் துதிப் பாடல்.
இந்தப் பாடலின் அடிகளைக் கொண்டு பற்பல தனிப் பாடல்களை அமைக்கலாம். (1,2,3,4) (5,6,7,8) (1,2,5,4) (1,2,6,4)  (1,2,7,4) (1,2,4,8) (2,4,6,8) (1,4,5,6) ( 2,4,5,6) (3,4,5,6).