பின் தொடர்வோர்

Showing posts with label வேதாரணியம். Show all posts
Showing posts with label வேதாரணியம். Show all posts

Sunday, 11 June 2017

316. சூழும்வினை

316
வேதாரணியம்

           தானன தத்தத் தந்தன தந்தன      தனதானா

சூழுங்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி       கழிகாமஞ்
  சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு      துணையாதே
ஏழையெ னித்துக் கங்களு டன்தின      முழல்வேனோ
  ஏதம கற்றிச் செம்பத சிந்தனை              தருவாயே
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை     யெழுநாளே
  ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் மருகோனே
வேழமு கற்குத் தம்பியெ னுந்திரு           முருகோனே
  வேதவ னத்திற் சங்கரர் தந்தருள்          பெருமாளே

பதம் பிரித்தல்

சூழும் வினை கண் துன்பம் நெடும் பிணி கழி காமம்
சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறு துணை யாதே

சுழும் வினைக் கண் -(என்னைச்) சூழ்ந்துள்ள வினையின்  காரணமாக வருகின்ற துன்பம் - துன்பம் நெடும் பிணி - நீண்ட நோய் கழி - மிகுந்த காமம் - ஆசை சோரம் - களவு, வஞ்சனை இதற்கு - இவைகளை சிந்தை நினைந்து - மனத்தில் நினைவு கொண்டிருந்தால் உறு துணை யாதே - எனக்கு உற்ற துணை ஏது உள்ளது?

ஏழை என் இத் துக்கங்களுடன் தினம் உழல்வேனோ
ஏதம் அகற்றி செம் பத சிந்தனை தருவாயே

ஏழை என் - ஏழையாகிய நான் இத் துக்கங்களுடன் - இத்தகைய துக்கங்களுடன் தினம் உழல்வேனோ - நாள் தோறும் அலைச்சல் உறுவேனோ? ஏதம் - (எனது) குற்றங்களை அகற்றி - நீக்க செம் பத சிந்தனை தருவாயே - செம்மையான திருவடியைச் சிந்திக்கும் எண்ணத்தைத் தந்து அருள்வாய்


ஆழி அடைத்து தம் கை இலங்கையை எழு நாளே
ஆண்மை செலுத்தி கொண்ட கரும் புயல் மருகோனே
ஆழி அடைத்து - கடலை அணையால் அடைத்து தம் கை - தமது கையில் இலங்கையை எழு நாளே - ழே நாட்களில் இலங்கையை ஆண்மை செலுத்திக் கொண்ட - வீரத்தால் கைக் கொண்ட கரும் புயல் மருகோனே - கரிய நிறத்துத் திருமாலின் மருகனே


வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே
வேத வனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே

வேழ முகற்குத் தம்பியே - யானை முகமுடைய விநாயகருக்குத் தம்பியே திரு முருகோனே - சொல்லப்படும் அழகிய முருகனே வேத வனத்தில் - வேதாரணியத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே - சிவபெருமான் தந்து அருளிய பெருமாளே

சுருக்க உரை

என்னைச் சூழ்ந்துள்ள வினையின் காரணமாக வருகின்ற துன்பம், நீண்ட நோய், மிகுந்த காமம், களவு, வஞ்சனை இவைகளையே நினைத்துக் கொண்டிருந்தால் எனக்கு உறு துணை ஏது உளது?
ஏழையேன் இத்தகைய துக்கங்களுடன் தினமும் அலைச்சல் உறுவேனோ? இக் குற்றங்களை நீக்கி உனது திருவடியை நினைக்கும் சிந்தையை தந்தருளுக. தமது ஆண்மையைச் செலுத்தி, இலங்கையை ஏழே நாட்களில் கைக்கொண்ட, கரிய நிறத் திருமாலின் மருகனே, யானை முகமுடைய விநாயகரின் தம்பியே, தேவ வனத்தில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் சிவந்த பதத்தினைத் தருவாயாக

விளக்கக் குறிப்புகள்

தங்கையி லங்கையை யெழுநாளே ஆண்மை செலுத்தி
எழு நாளே ஆண்மை செலுத்தி இலங்கையைத் தம் கைக் கொண்ட கரும் புயல் என்று பிரிக்கவேண்டும்