பின் தொடர்வோர்

Tuesday, 6 August 2019

383.நரையொடு


383
பொது

                 தனதன தத்த தந்த தானத்த     
                 தனதன தத்த தந்த தானத்த
                 தனதன தத்த தந்த தானத்த     தனதான

நரையொடு பற்க ழன்று தோல்வற்றி
   நடையற மெத்த நொந்து காலெய்த்து
   நயனமி ருட்டி நின்று கோலுற்று             நடைதோயா
நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து
   நமதென மெத்த வந்த வாழ்வுற்று
   நடலைப டுத்து மிந்த மாயத்தை             நகையாதே
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற
   ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு
   மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும்     வினையோடு
மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு
   மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன்
   விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு           வினவாதோ
உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு
   மொளிபெற நற்ப தங்கள் போதித்து
   மொருபுடை பச்சை நங்கை யோடுற்று        முலகூடே
உறுபலி பிச்சை கொண்டு போயுற்று
   முவரிவி டத்தை யுண்டு சாதித்து
  முலவிய முப்பு ரங்கள் வேவித்து            முறநாகம்
அரையொடு கட்டி யந்த மாய்வைத்து
   மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க
   அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து          மரவோடே   
அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த
   அரியய னித்தம் வந்து பூசிக்கும்
   அரநிம லர்க்கு நன்றி போதித்த            பெருமாளே.

பதம் பிரித்து உரை

நரை ஒடு பல் கழன்று தோல் வற்றி
நடை அற மெத்த நொந்து கால் எய்த்து
நயனம் இருட்டி நின்று கோல் உற்று நடை தோயா

நரையொடு - மயிர் நரைக்கவும் பல் கழன்று - பற்கள் கழன்று விழவும் தோல் வற்றி - தோல் வற்றிப் போகவும் நடை அற - நடை அற்றுப் போகவும் மெத்த நொந்து - மிகவும் நோவுற்று கால் எய்த்து - கால்கள் இளைத்துப் போகவும் நயனம் இருட்டி நின்று - கண்கள் இருளடைந்து பார்வையை இழந்து நின்று கோல் உற்று - தடியை ஊன்று கோலாகக் கொண்டு நடை தோயா - நடை பயின்று.

நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து
நமது என மெத்த வந்த வாழ்வு உற்று
நடலை படுத்து இந்த மாயத்தை நகையாதே

நழுவும் - நழுவி மறைந்து (இறந்து) போகும் விடக்கை - (இந்த) மாமிச உடலை ஒன்று போல் வைத்து - நிலைத்து நிற்கும் ஒரு பொருள் போல் நினைத்து நமது என - நம்முடையது என்று உடைமைகளைப் பாராட்டி மெத்த வந்த  வாழ்வுற்று - அங்ஙனம் சேகரித்து வந்த நல் வாழ்வை அடைந்து நடலை படுத்தும் - (முடிவில்) துன்பப் படுத்தும் இந்த மாயத்தை - இந்த மாய வாழ்க்கையை நகையாதே - (நீ) சிரித்து விலக்காமல்.

விரை ஒடு பற்றி வண்டு பாடு உற்ற
ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு
மிளிரும் மையை செறிந்த வேல் கட்கும் வினை ஓடு

விரையொடு பற்றி - நறு மணத்தை நுகர்ந்து வண்டு பாடுற்ற - வண்டுகள் பாட ம்ருகமதம் அப்பி - கஸ்தூரியைத் தடவி வந்த ஓதிக்கு - வந்த தோய்ந்துள்ள கூந்தலுக்கும் மிளிரும் - விளங்கும். மையைச் செறிந்த - மை தீட்டிய வேல்கட்கும் - வேல் போன்ற கண்களுக்கும் வினையோடு - தந்திர எண்ணத்துடன்.
ம்ருகமதம் - கஸ்தூரி எனப்படும் ஒரு வகை மானிலும், அதனின்று பெறப்படும் ம்ருகமதம் என்று சிறப்பித்துக் கூறப்படும் விசேஷமான கந்த த்ரவ்யம்

மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும்
இடை படு சித்தம் ஒன்றுவேன் உன்
விழுமிய பொன் பதங்கள் பாடற்கு வினவாதோ

மிகு கவின் இட்டு நின்று - மிக்க அழகைச் செய்து அலங்காரத்துடன் நின்ற மாதர்க்கு - விலைமாதர்களுக்கு இடைபடு - மத்தியில் அவதிப்படுகின்ற சித்தம் ஒன்றுவேன் - மனம் பொருந்துதலை உடையவனாகிய நான். உற்று - அன்பு உற்று உன் விழுமிய - உனது சிறந்த பொன் - அழகிய. பதங்கள் - திருவடியை பாடுதற்கு - பாடிப் புகழ்தற்கு வினவாதோ - ஆய்ந்து மேற் கொள்ள மாட்டேனோ?

உரை ஒடு சொல் தெரிந்த மூவர்க்கும்
ஒளி பெற நல் பதங்கள் போதித்தும்
ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் உலகூடே

உரையொடு - பொருளோடு சொல் தெரிந்த - சொல்லும் தெரிந்த (சிவம், சக்தி இவைகளின் உண்மை தெரிந்த) மூவர்க்கு - சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் மூவர்க்கும் ஒளி பெற - அவர்கள் புகழ் ஒளி பெற நல் பதங்கள் - சிறந்த எழுத்துக்களான ஐந்தெழுத்தை உபதேசம் செய்தும் ஒரு புடை - தமது ஒரு பக்கத்தில் பச்சை நங்கையோடு உற்ற - பச்சை நிறப் பெருமாட்டியாகிய பார்வதியோடு உற்றும் - அமைந்தும் உலகூடே - உலகம் எல்லாம்.

உறு பலி பிச்சை கொண்டு பொய் உற்றும்
உவரி விடத்தை உண்டு சாதித்தும்
உலவிய முப்புரங்கள் வேவித்தும் உற நாகம்

உறு - கிடைக்கும் பலி பிச்சை கொண்டு போயுற்றும் - பிச்சையை ஏற்றுக் கொண்டும் உவரி விடத்தை உண்டு- (கடலில் எழுந்த விடத்தை) உண்டு சாதித்தும் - (தமது பரத்தை) நிலை நிறுத்தியும்  உலவிய - பறந்து உலவிச் சென்ற முப்புரங்கள் - திரி புரங்களையும் வேவித்தும் - எரித்துச் சாம்பலாக்கியும் உற நாகம் - பொருந்தும்படி பாம்பை.

அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும்
அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க
அழகு திருத்தி இந்து மேல் வைத்தும் அரவோடே

அரையொடு கட்டி - இடுப்பில் கட்டி அந்தமாய் வைத்து - அழகாக அமைத்தும். அவிர் சடை வைத்த - விளங்கும் சடையில் தரித்துள்ள கங்கையோடு ஒக்க - கங்கையுடன் ஒத்திருக்க அழகு திருத்தி - அழகு பெற்று இந்து மேல் வைத்தும் - பிறைச் சந்திரனை மேலே வைத்தும் அரவோடே - பாம்புடன்.

அறுகு கொடு நொச்சி தும்பை மேல் வைத்த
அரி அயன் நித்தம்  வந்து பூசிக்கும்
அர நிமலர்க்கு நன்று போதித்த பெருமாளே.

அறுகொடு - அறுகம் புல்லோடு நொச்சி - நொச்சியையும் தும்பை மேல் வைத்த - தும்பையையும் மேலே சூடியுள்ளவரும் அரி அயன் - திருமாலும், பிரமனும் நித்தம் வந்து பூசிக்கும் - நாள்தோறும் வந்து பூசை செய்யும். அரன் - சிவபெருமான் ஆகிய. நிமலர்க்கு - நிர்மல மூர்த்திக்கு நன்றி போதித்த பெருமாளே - நல்ல உபதேசப் பொருளைப் போதித்தப் பெருமாளே.

சுருக்க உரை

சிறந்த அங்கங்களைக் கொண்ட விலை மாதர்களுடன் நெருங்கிப் பழகும் ஒழுக்கம் உள்ளவனாகிய அடியேன், மயிர் வெளிர, பற்கள் கழல, தோல் வற்ற, நடை தளர, நோய் வந்து சேர, கால் இளைக்க, கண்கள் இருள, இறந்து படும் இந்த உடலைப் பேணி, உடைமைகளைப் பாராட்டி, முடிவில் துன்பத்தை உண்டாக்கும் இந்த மாய வாழ்க்கையைச் சிரித்து விலக்காமல், உனது அழகிய திருவடிகளைப் பாடிப் போற்ற ஆய்ந்து மேற்கொள்ள மாட்டேனோ?

சைவக் குரவர்கள் மூவருக்கும் சொல்லும் பொருளும் நன்கு தெரியும்படி ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்தவரும், உமா தேவியைப் பாகத்தில் கொண்டவரும், பிச்சை எடுத்து உண்பவரும், திரிபுரங்களை எரித்தவரும், பாம்பை இடுப்பில் தரித்தவரும், சடையில் கங்கையையும், நிலவையும் வைத்தவரும், பாம்பு, நொச்சை, அறுகு, தும்பை ஆகியவற்றை அணிந்தவரும், அரியும், பிரமனும் தினமும் பூசித்தவருமாகிய சிவபெருமானுக்கு நல்ல உபதேசப் பொருளை உபதேசித்த பெருமாளே. உன் புகழைப் பாடுதற்கு அருள் புரியலாகாதா?

ஒப்புக
  1. நற்பதங்கள் போதித்து...
    அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி
    முந்தி எழும் பழைய வல்வினை மூடாமுன்.
                                                            ..சுந்தரர் தேவாரம்

  1. உறுபலி பிச்சை கொண்டு போயுற்று...
வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண   மாபலி முதற்கொ ணாதன்  முருகோனே...திருப்புகழ், கூரியகடை.



Sunday, 4 August 2019

382.தோலத்தியால


382
பொது
               தானத்த தானத்த தானத்த தானத்த
                   தானத்த தானத்த                  தனதான

தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற
   தோளுக்கை காலுற்ற                                          குடிலூடே
சோர்வுற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு
   வேதித்த சூலத்த                                              னணுகாமுன்
கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ
   டேபட்டு வீழ்வித்த                                      கொலைவேலா
கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி
   கூர்கைக்கு நீகொற்ற                                     அருள்தாராய்
ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த
   ராவிக்கள் மாள்வித்து                                           மடியாதே
ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு
   மாம்வித்தை யாமத்தை                                 யருள்வோனே
சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட
   தோதக்கண் மானுக்கு                                        மணவாளா
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
   சேவிக்க வாழ்வித்த                                          பெருமாளே.

பதம் பிரித்து உரை

தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற
தோளு கை கால் உற்ற குடிலுடே

தோல் - தோலாலும் அத்தியால் - எலும்பினாலும். அப்பினால் - நீராலும்   ஒப்பிலாது - ஒப்பில்லாத வகையில் உற்ற - அமைந்துள்ள தோளு - தோள் கைக் கால் உற்ற - கை, கால் இவை கூடிய குடிலுடே - குடிசையாகிய இந்த உடலில்.

சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றியே கைக்கு
வேதித்த சூலத்தன் அணுகா முன்

சோர்வற்று - தளர்ந்து போகாமல் வாழ்வுற்ற கால் - நான் வாழ்ந்திருந்த காலத்தில் பற்றி - (உனது திருவடியைப்) பிடித்து ஏகைக்கு - நான் வாழ் நாளைச் செலுத்துதற்கு வேதித்த - என் மேல் மாறு கொண்ட சூலத்தன் - திரி சூலத்தை ஏந்திய யமன். அணுகா முன் – என்னை நெருங்கிவரும் முன்பாக.

கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே
பட்டு வீழ்வித்த கொலை வேலா

கோலத்தை - தனது உருவை வேலைக்குளே விட்ட - கடலுக்குள் (மாமரமாய்ச்) சேர்ப்பித்த சூர் - சூரன். கொத்தோடே பட்டு - தன் குலத்தாருடன் அழிந்து. வீழ்வித்த - விழச் செய்த கொலை வேலா - கொலைத் தொழில் வல்ல வேலாயுதனே.

கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி
கூர்கைக்கு நீ கொற்ற அருள் தாராய்

கோது அற்ற - குற்றமற்ற. பாதத்திலே- உனது திருவடியில் பத்தி கூர் - பத்தி மிகுந்த. புத்தி கூர்கைக்கு - புத்தி மிகுதற்கு நீ கொற்ற அருள் - நீ வெற்றி தரும் திருவருளை. தாராய் - (எனக்குத்) தந்தருளுக

ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர்
ஆவிக்கள் மாள்வித்து மடியாதே

ஆலத்தை - ஆலகால விடத்தை ஞானத்து உளோர்க்கு - பூமியில் உள்ளவர்களும் திக்கு - பல திசைகளில் இருந்தவர்களும் வானத்தர் - விண்ணோர்களும். ஆவிக்கள் மாள்வித்து - தத்தம் உயிர் மாண்டு  மடியாதே - இறந்து படாமல்.

ஆலித்து மூலத்தோடே உட் கொள் ஆதிக்கும்
ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே

ஆலித்து - களித்து நடித்து. மூலத்தோடே - அடியோடு (முழு விஷத்தையும்). உட்கொள் - உட்கொண்ட. ஆதிக்கு - ஆதி மூர்த்திக்கும். ஆம் வித்தையாம் அத்தை - ஏற்றதான உண்மை ஞானமாகிய அந்தப் பொருளை. அருள்வோனே - உபதேசித்தவனே.

சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட
தோதக் கண் மானுக்கு மணவாளா

சேல் ஒத்த - சேல் மீன் போன்றதும். வேல் ஒத்த - வேலாயுதம் போன்றதும். நீலத்து மேலிட்ட - நீலோற்பல மலருக்கும் மேலாகவும். தோதக் கண் - (உனக்குக்) காம வருத்தம் தந்த கண்களைக் கொண்ட. மானுக்கு மணவாளா - மான் போன்ற வள்ளிக்குக் கணவனே.

தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர்
சேவிக்க வாழ்வித்த பெருமாளே.

தீது அற்ற - குற்றம் இல்லாத. நீதிக்குள் ஏய் - நீதி வழியில் பொருந்த. கூர் பத்தர் - பக்தி மிக்க பக்தர்கள். சேவிக்க - (உன்னைப்) போற்ற. வாழ்வித்த பெருமாளே - (அவர்களை) வாழவித்த பெருமாளே.

சுருக்க உரை

தோல், எலும்பு, நீர் இவைகளால் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடல் தளர்ந்து போகாது, நான் நன்றாக வாழ்ந்திருக்கும் காலத்தில், என்னைப் பிடித்துச் செல்ல யமன் தன் திரி சூலத்துடன் நெருங்கி வருவதற்கு முன், கடலில் தன் உருவத்தை மறைத்து மாமரமாக ஒளிந்த சூரனைக் குலத்தோடு அழிந்து மடியும்படி விழச் செய்த கொலைத் தொழிலில் வல்ல வேலாயுதனே, குற்றமற்ற உன் திருவடியை நான் பெறும்படி திருவருளை எனக்குத் தந்து அருளுக.

கடலில் ஏழுந்த ஆலகால விடம் முழுவதையும் உட்கொண்ட ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு உண்மை ஞானமாகிய அந்தப் பொருளை உபதேசித்தவனே, சேல் மீனையும், வேலையும் ஒத்ததும், வள்ளியின் மீது காமத்தைக் கொடுத்ததுமான கண்களை உடைய வள்ளிக்கு மணவாளனே, குற்றமற்ற பத்தர்கள் உன்னைப் போற்ற அவர்களுக்கு நல் வாழ்வை அளித்த பெருமாளே, யமன் என்னை அணுகு முன் உன் திருவடியைத் தந்து அருளுக.

ஒப்புக
வித்தையாம் அத்தை அருள்வோனே...
ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே
...திருப்புகழ், வேதவெற்பிலே.


381.தோரணகனக


381
பொது

                  தானன தனன தானன தனன
                  தானன தனன          தனதான

தோரண கனக வாசலில் முழவு
     தோல்முர சதிர                                        முதிராத
தோகையர் கவரி வீசவ யிரியர்
     தோள்வலி புகழ                                     மதகோப
வாரண ரதப தாகினி துரக
     மாதிர நிறைய                                         அரசாகி
வாழினும் வறுமை கூரினு நினது
     வார்கழ லொழிய                           மொழியேனே
பூரண புவன காரண சவரி
     பூதர புளக                                               தனபார
பூஷண நிருதர் தூஷண விபுதர்
     பூபதி நகரி                                             குடியேற
ஆரண வனச ஈரிரு குடுமி 
   ஆரியன் வெருவ                                     மயிலேறு
மாரிய பரம ஞானமு மழகு
   மாண்மையு முடைய                           பெருமாளே.

பதம் பிரித்து உரை

தோரண(ம்) கனக வாசலில் முழவு
தோல் முரச(ம்) அதிர முதிராத

தோரண - தோரணம் கட்டியுள்ள. கனக - பொன் மயமான. வாசலில் - (அரண்மனையின்) வாயலில். முழவு தோல் முரசம் அதிர - முழவு, தோல் முரச வாத்தியம் ஆகியவை  பேரொலி செய்ய. முதிராத - இளம் பருவத்தினரான.

தோகையர் கவரி வீச வயிரியர்
தோள் வலி புகழ் மத கோப

தேகையர் - பெண்கள். கவரி வீச - சாமரம் வீச. வயிரியர் - பாணர். தோள் வலி புகழ - எனது புய வலிமையைச் சிறப்பித்துப் புகழ. மத கோப - மதமும் கோபமும் கொண்டதுமான.

வாரணம் ரத பதாகினி துரக
மாதிர(ம்) நிறைய அரசாகி

வாரணம் - யானை. ரத - தேர். பதாகினி - காலாட் படைகள். துரக - குதிரைப் படைகள். மாதிர(ம்) நிறைய - திசைகளில் நிரம்பி விளங்க. அரசாகி - ஒரு அரசனாகி.

வாழினும் வறுமை கூரினும் நினது
வார் கழல் ஒழிய மொழியேனே

வாழினும் - வாழ்ந்திருந்தாலும். வறுமை கூரினும் - தரித்திர நிலையை அடைந்தாலும். நினது - உன்னுடைய. வார் கழல் ஒழிய - நேர்மை பொருந்திய திருவடிகளைத் தவிர மொழியேனே - வேறு எதையும் நான் புகழ மாட்டேன்.

பூரண புவன காரண சவரி
பூதர புளக தன பார

பூரண புவன - எல்லா உலகங்களுக்கும். காரணா - மூலப் பொருளே. சவரி - குறத்தியின். பூதர - மலை போன்றதும். புளக - புளகம் கொண்டதுமான. தன பார - கொங்கைப் பாரங்களை.

பூஷண நிருதர் தூஷண விபுதர்
பூபதி நகரி குடியேற

பூஷண - (மார்பில்) அணியாகக் கொண்டுள்ளவனே. நிருதர் - அசுரர்களை. தூஷண - கண்டனம் செய்தவனே.  விபுதர் - தேவர்களின். பூபதி - அரசனாகிய இந்திரனின். நகரி குடியேற - பொன்னுலகில் குடியேறும்படி.

ஆரண வனச ஈரிறு குடுமி
ஆரியன் வெருவ மயில் ஏறும்

ஆரணம் - வேதம் ஓதுபவனும். வனச - தாமரையில் இருப்பவனும். ஈரிரு - நான்கு. குடுமி - குடுமிகளை உடையவனுமாகிய. ஆரியன் - மேலோனாகிய பிரமன். வெருவ - அச்சம் கொள்ளும்படி. மயில் ஏறும் ஆரிய - மயிலில் மேல் ஏறி வரும் பெரியோய்.

ஆரிய பரம ஞானமும் அழகும்
ஆண்மையும் உடைய பெருமாளே.

பரம - மேலான. ஞானமும் - அறிவும். அழகும் அழகும் ஆண்மையும் - வீரமும். உடைய பெருமாளே - கொண்ட பெருமாளே.

சுருக்க உரை
தோரணங்கள் கட்டிய அரண்மனை வாயிலில் முரசுகள் போரொலி செய்யவும், இளம் பெண்கள் கவரி வீசவும், பாணர்கள் தம் வீரச் செயல்களைப் புகழ்ந்து பாடவும், யானை, தேர், குதிரை, காலாட் படைகள் நிரம்பி விளங்கவும் நான் அரசான இருந்தாலும், வறுமை மிகுந்து கீழ் நிலையை அடைந்தாலும், நான் உன் திருவடிகளைத் தவிர வேறு எதையும் பற்றியும், யாரைப் பற்றியும் பேச மாட்டேன்.
முழு முதற் பொருளே, எல்லா உலகங்களுக்கும் காரணனேம், குறத்தியாகிய வள்ளியின் புளகம் கொண்ட கொங்கைகளை மார்பில் அணியாகக் கொண்டவனே, அசுரர்களைக் கண்டித்தவனே.
தேவர்கள் அரசனான இந்திரன் தன் பொன்னுலகுக்குக் குடி போகும் பொருட்டும், பிரமன் அச்சம் கொள்ளும்படியும் மயிலின் மீது ஏறி வரும் மேலோனே, மேலான ஞானத்தையும், அழகையும், ஆண்மையையும் உடைய பெருமாளே,
 உனது திருவடிகளைத் தவிர வேறு எதையும் பற்றிப் பேச மாட்டேன்.

ஒப்புக
1. வயிரியர் தோள்வலி புகழ...
  செழுமணி சேர்ந்த பீடிகையிலிசை வாய்ந்த பாடல்
  வயிரியர் சேர்ந்து பாட   இருபாலும்...              திருப்புகழ், தினமணிசார்.
  நல்யாழ் மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோயே
.                                                                                              .புற    நானூறு
2. ஆரண வனச ஈரிரு குடுமி ஆரியன் வெருவ...
  நான் மறைவிதியை நடங்கு சிறைவைத்துப்
  படைப்பு முதல் மாயவான் முதற் கூடித்                                 ...கல்லாடம்.