பின் தொடர்வோர்

Thursday, 22 November 2018

345.எதிரொருவ ரிலையுலகி

346
பொது

            தனதனன தனதனன தனதனன தனதனன
            தத்தத்த தத்தான                                   தந்ததான

எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு
       திட்டுக்ரி யைக்கேயெ                        ழுந்துபாரின்
இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை
       யெட்டெட்டு மெட்டாத                 மந்த்ரவாளால்
விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை
       வெட்டித்து ணித்தாண்மை             கொண்டுநீபம்
விளவினின இலைதளவு குவளைகமழ் பவளநிற
       வெட்சித்திருத்தாள்வ                   ணங்குவேனோ
திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர்
       செக்கச்செ வத்தேறு                    செங்கைவேலா
சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப
       சித்ரக்க கத்தேறு                            மெம்பிரானே
முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன
       முட்டச்செ லுத்தாறி                          ரண்டுதேரர்
மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு
       முப்பத்து முத்தேவர்                           தம்பிரானே

பதம் பிரித்து உரை

எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு
க்ரியைக்கே எழுந்து பாரின்

எதிர் ஒருவர் - எமக்கு இணையானவர் உலகில் இலை என - உலகத்திலேயே ஒருவரும் இல்லை என்று அலகு - பறவை மூக்கு போன்று கூர்மையான சிலுகு - வாதப் போருக்கு
விருதிட்டு - கொடி கட்டி க்ரியைக்கு எழுந்து - அச்செய்கைக்குத் துணிந்து எழுந்து

இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை
எட்டு எட்டும் எட்டாத மந்த்ர வாளால்

பாரின் இடை - உலகின் மத்தியில் உழல்வ சுழலுவ - திரிந்து சுழல்பவர்களான அன சமய வித - எல்லா வகைய சமய வாதிகளாலும் எட்டெட்டும் எட்டாத - அறுபத்து நான்கு கலைகளாலும் எட்ட முடியாத மந்த்ர வளால் - மந்திர வாள் கொண்டு

விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை
வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம்

விதி வழியின் - பிரமன் எழுதிய ஏட்டில் உள்ள படி உயிர் கவர வரு - உயிரைக் கவர வரும் கொடிய - கொடுமை வாய்ந்த
யம படரை - யம தூதுவர்களை வெட்டித் துணித்து - வெட்டித் துண்டுப்படுத்தி ஆண்மை கொண்டு - (எனது) பக்தி வைராக்கியத்தை நிலை நிறுத்தி நீபம் - கடம்பு

விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற
வெட்சி திரு தாள் வணங்குவேனோ

விளவின் இள இலை - விளாவின் இளந் தளிர் தளவு - முல்லை
குவளை - கழு நீர் கமழ்மணக்கும் பவள நிற வெட்சி - பவள நிறுமுள்ள வெட்சி (இவற்றை அணிந்த) திருத்தாள் - (உனது) திருவடிகளை வணங்குவேனோ - வணங்க மாட்டேனோ?

திதி புதல்வர் ஒடு பொருது குருதி நதி முழுகி ஒளிர்
செக்க செவத்து ஏறு செங்கை வேலா

திதி புதல்வரோடு - (காசிபர் மனைவியாகிய) திதியின் தல்வர்களாகிய அசுரர்களோடு பொருது - சண்டை செய்து
குருதி நதி  - இரத்த ஆற்றில் முழுகி - முழுகி
ஒளிர்விளக்கமுறும் செக்கச் செவத்து - மிக்கச் செந்நிறத்துடன் ஏறும் செங்கை வேலா- செவ்விய திருக்கரத்தில் பொருந்தி உள்ள வேலா வேலை உடையவனே

சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப
சித்ர ககத்து ஏறும் எம்பிரானே

சிகர கிரி - சிகரங்களை உடைய (கிரௌஞ்ச) மலையை தகர விடும் - பொடிபடச் செய்த உருவ உருவத்தனே மரகத - பச்சை நிற  கலப - தோகை உடைய சித்ர - அழகிய ககத்து ஏறும் - பட்சியாகிய மயிலின் மீது ஏறும்   எம்பிரானே - எம்பெருமானே

முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம்
முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர்

முதிய – பழமையான பதினொரு விடையர் - பதினோரு உருத்திரர்களும் முடுகுவன - முடுகிச் செலுத்தப்படும்
பரி - குதிரைகளை ககனம்ஆகாயத்தில் முட்ட செலுத்து  - நன்கு செலுத்துகின்ற ஆறிரண்டு தேரர் - பன்னிரண்டு தேர்களை உடைய பன்னிரு சூரியர்களும்

மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும்
முப்பத்து முத்தேவர் தம்பிரானே

மொழியும் சொல்லப்படும் இரு அசுவனிகள் - இரண்டு அசுவனி தேவர்களும் இரு சது வித - எண் வித வசுவசுக்களும் முப்பத்து முத்தேவர் தம்பிரானே - (30+3- 33) முப்பத்து மூன்று வகைத் தேவர்கள் தம்பிரானே
 சுருக்க உரை
உலகில் தமக்கு நிகரானவர் என்று கூறி கொடியைக் கட்டிக் கொண்டு வரும் சமய வாதிகளலும், அறுபத்து நான்கு கலைகளாலும், எட்ட ஒண்ணாத மந்திர வாள் கொண்டு, விதியின் முறைப்படி உயிர்களைக் கவர வரும் யம படர்களை வெட்டி, எனது பத்தி வைராக்கியத்தை நிலை நிறுத்தி, பலவகை மலர்கள் அணிந்துள்ள உன் திருத்தாளை வணங்க மாட்டேனா?

அசுரர்களை வெட்டி இரத்தத்தால் சிவந்த திருக்கையில் வேலை ஏந்தியவனே கிரௌஞ்சி மலையைப் பொடி செய்த திரு உருவத்தனே பச்சை மயில் மீது ஏறும் பெருமானே முப்பத்து மூவகைத் தேவர்களுக்கும் தம்பிரானே உன் வெட்சித் திருத்தாளை நான் வணங்க மாட்டேனா?
விளக்கக் குறிப்புகள்
1 சமயவித சகலகலை
 தறிய கலைகொடு சுட்டாத் தீரபொருள்
  பதறிய சமயிகள் எட்டாப் பேரொளி---திருப்புகழ், கதறியகலைகொடு  
2.விதிவழியின் உயிர்கவர
வண்போதன் தீட்டுந் தொடரதுபடி யேமன் சங்காரம் போர்---திருப்புகழ், மங்காதிங்கா
கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்--திருப்புகழ் , ஆலமேற்றவிழி
காலன் ஆதி விதி யோடுபிற ழாதவகை தேடியென---திருப்புகழ் , சூதினுணவாசை
3 முப்பத்து முத்தேவர்
    11 உருத்திரர், 12 சூரியர், 2 மருத்துவர், 8 வசுக்கள்
 



344. ஊனே றெலும்பு

344
பொது

                தானா தனந்த தானா தனந்த
            தானா தனந்த                           தனதான

        ஊனே றெலும்பு சீசீ மலங்க
           ளோடே நரம்பு                       கசுமாலம்
        ஊழ்நோ யடைந்து மாசான மண்டு
           மூனோ டுழன்ற                     கடைநாயேன்
        நானா ரொடுங்க நானார் வணங்க
           நானார் மகிழ்ந்து                    உனையோத
        நானா ரிரங்க நானா ருணங்க
           நானார் நடந்து                      விழநானார்
        தானே புணர்ந்து தானே யறிந்து
           தானே மகிழ்ந்து                     அருளூறித்
        தாய்போல் பரிந்த தேனோ டுகந்து
            தானே தழைந்து                     சிவமாகித்
        தானே வளர்ந்து தானே யிருந்த
           தார்வேணி யெந்தை                 யருள்பாலா
        சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
           சாரூப தொண்டர்                    பெருமாளே.


பதம் பிரித்து உரை
ஊன் ஏறு எலும்பு சீ சீ மலங்கள்
ஓடே நரம்பு கசு மாலம்

ஊன் ஏறு - மாமிசத்தின் மேலே ஏறி மூடியுள்ள. எலும்பு - எலும்புசீ சீ மலங்களோடே - சீசீ என வெறுக்கத் தக்க அழுக்குகள் இவையுடன்கசுமாலம் - பிற அசுத்தங்கள்.

ஊழ் நோய் அடைந்து மாசு ஆன மண்டும்
ஊனோடு உழன்ற கடை நாயன்

ஊழ் நோய் - ஊழ்வினை சம்பந்தமாக வரும் நோய்கள் (இவைகளை அடைந்து) மாசான மண்டும் - குற்றங்களே நெருங்கிச் சேருகின்ற ஊனோடு - (இந்த) உடலோடு உழன்ற - அலைச்சல் உற்ற கடை நாயேன் - இழிவுபட்ட நாயை ஒத்தவனாகிய நான்

நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க
நான் ஆர் மகிழ்ந்து உ(ன்)னை ஓத
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க
நான் ஆர் நடந்து விழ நான் ஆர் 


நான் ஆர் ஒடுங்க.......நான் ஆர் விழ - உயிர்களிடத்தே இரக்கம் கொள்ளுதல், அடங்கி ஒடுங்குதல், வணங்கிப் பணிதல், மகிழந்து உனை ஓதுதல் முதலிய நல்ல பண்புகள் என் இச்சையில் உள்ள செயல்களா?

தானே புணர்ந்து தானே அறிந்து
தானே மகிழ்ந்து அருள் ஊறி

தானே புணர்ந்து, தானே அறிந்து, தானே மகிழ்ந்து - புணரும் பொருளும், அறிபவனும், மகிழ்பவனும் தானேயாய். அருள் ஊறி - அருள் சுரந்து.

தாய் போல் பரிந்த தேனோடு உகந்து
தானே தழைந்து சிவமாகி

தாய் போல் பரிந்த தேனோடு - தாய் போல் அன்பைக் காட்டும் தேன் அனைய தேவியுடன் உகந்து - மகிழ்ந்து. தானே தழைந்து - செழிப்புடன் விளங்கி சிவம் ஆகி - சிவமாகத் திகழ்பவனும் தானே - தானேயாய்


தானே வளர்ந்து தானே இருந்த
தார் வேணி எந்தை அருள் பாலா

தானே - தானேயாய். வளர்ந்து - வளர்பவனும். தானே இருந்த - அழியாது இருப்பவனும். தார் வேணி எந்தை - பூமாலை அணிந்த சடையினராகிய என் தந்தையாகிய  சிவபெருமான். அருள் பால் - அருளிய குழந்தையே

சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
சாரூப தொண்டர் பெருமாளே.


சாலோக தொண்டர், சாமீப தொண்டர், சாரூப தொண்டர் - சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று வகையில் உள்ள அடியார்களுக்கும். பெருமாளே - பெருமாளே.


சுருக்க உரை

ஊனும், எலும்பும் கூடி மலங்கள் நிறைந்த உடல் எடுத்து, நோய் வாய்ப்பட்டு, அலைச்சல் உற்ற இழிவுபட்ட அடியேனாகிய நான், அடங்கி ஒடுங்கவும், வணங்கவும், நடக்கவும், விழவும், என் இச்சையில் உள்ளதா? 

தானே அறிபவனும், மகிழ்பவனும் ஆகி, தாய் போல் அன்பு காட்டும் தேன் அனைய தேவியுடன் செழிப்புடன் விளங்கிச், சிவமாயத் திகழ்பவனும் தானே ஆகி, வளர்பவனும், அழியாது இருப்பவனும் தன்னந் தனியே நின்று விளங்குபவனும் ஆகிய பெருமாளே, சிவபெருமானின் குழந்தையே, மூன்று வகையில் உள்ள தொண்டர்கள் பெருமாளே, அடங்கி ஒடுங்கவும் வணங்கவும் ஓதவும் விழவும் நான் ஆர்?

விளக்கக் குறிப்புகள்

1.       தானேபுணர்ந்து.....
தனக் கென் றெதுவும் புணரா இயல்பில் தனி ஞான முதற் பொரு ளான பிரான்                   -- தணிகைப் புராணம் நாரதன்
பிறவாதே தோன்றிய பெருமான் தன்னை
பேணார் அவர் தம்மைப் பேணாதானை
                                --- திருநாவுக்கரசர் தேவாரம்
பிறவா யாக்கைப் பெரியோன்-- அவதாரம் என்ற பெயரில் ஒரு தாயின் வயிற்றிலும் பிறவாத மஹாதேவனாகிய சிவன்
                                 -                           சிலப்பதிகாரம்
உதியா, மரியா, உணரா, மறவா               – கந்தர் அநுபூதி

2 சாலோக தொண்டர்.... 

இப்பாடலில் சிவ சன்மார்க்க நிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சாலோகம் - சிவன் உலகம் (இறைவனோடு ஒரே இடத்தில் இருக்கும் நிலை).   சாமீபம் - சிவன் அண்மை (இறைவனோடு நெருங்கி இருக்கும் நிலை).   சாரூபம் - சிவன் உருவாதல் (இறைவன் உருப் பெற்று விளங்கும் பேறு).
 சாயுச்சியம் - சிவனாதல் (இறைவனோடு இரண்டறக் கலத்தல்ஜீவாத்மா  பரமாத்மாவோடு ஐக்கியம் கொண்ட மோட்ஷ நிலை).
சாயுச்சிய பதவியில் இறைவனோடு இரண்டறக் கலத்தலால் ஏனைய மூவகைத்  தொண்டர்களை மட்டும் கூறினார்.

சரியை முதலிய  நான்கும் முறையே தாசமார்க்கம், புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனவும் பெயர் பெறும் எனவும், அந்நெறிகளில் நிற்பார் தொண்டர், மைந்தர், சாதகர், போதகர் எனப் பெயரெய்துவார் எனவும், அவரெய்தும் பயன் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் பதமுத்தி பரமுத்திகளுமாம் எனவும் சொல்வார்கள்

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டில்லாத் தற்பதம்
தானென்று நானெற்ற தத்துவ நல்கலால்
தானென்றும் நானெற்றுஞ் சாற்றகில் லேனே. - திருமந்திரம்

அறிபவன் நான், அறியப்படும் பொருள் சிவன் என்று எண்ணி ஆராய்ந்து நான் சிவனைச் சென்று சேர்ந்தேன். அப்போது சிவன், சீவன் என்ற இரு வேறு நிலைகள் இல்லை! சீவனே சிவன் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். அதனால் நான், அறிபவன் அறியப்படும் பொருள் என்ற நிலைகளைக் கடந்து, பிரித்து அறிய இயலாத பெரு நிலையை அடைந்து விட்டேன். ‘அது’வாக நானே மாறிவிட்டேன். சிவன், சீவன் என்ற வேறுபாடுகள் இன்றி அவனுடன் ஒன்றி விட்டேன்.

விளம்பி திருகார்த்திகை திருநாள்



Friday, 19 October 2018

343.ஊனுந் தசையுடல்

343
பொது

தானந் தனதன தானந் தனதன
  தானந் தனதன               தனதான


 ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
     யூருங் கருவழி                              யொருகோடி
 ஓதும் பலகலை கீதஞ் சகலமு
     மோரும் படியுன                               தருள்பாடி
 நானுன் திருவடி பேணும் படியிரு
     போதுங் கருணையில்                     மறவாதுன்
 நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
      நாடும் படியருள்                              புரிவாயே
 கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு
      காலங் களுநடை                      யுடையோனுங்
  காருங் கடல்வரை நீருந் தருகயி
      லாயன் கழல்தொழு                    மிமையோரும்
  வானிந் திரனெடு மாலும் பிரமனும்
      வாழும் படிவிடும்                           வடிவேலா
   மாயம் பலபுரி சூரன் பொடிபட
      வாள்கொண் டமர்செய்த              பெருமாளே

பதம் பிரித்து உரை
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி
ஊரும் கரு வழி ஒரு கோடி
ஊனும் - மாமிசமும். தசை உடல் தான் - சதையும் கூடிய இந்த உடல் தான் ஒன்பது வழி - ஒன்பது துவாரங்களுடன் ஊரும் கரு வழி - கூடிச் சேர்ந்து வரும் கருவின் வழி ஒரு கோடி - ஒரு கோடிக் கணக்கானது (ஆதலால் என் பிறப்பு இறப்பு ஒழியுமாறு)
ஓதும் பல கலை கீதம் சகலமும்
ஓரும் படி உனது அருள் பாடி
ஓதும் பல கலை - (நான்) படிக்கின்ற பல சாத்திர நூல்களையும் கீதம் - இசை ஞானத்தையும் சகலமும் - ஆக எல்லாவற்றையும்  ஓரும்படி - உணரும்படியாக உனது அருள் பாடி - உனது திருவருளைத் துதித்துப் பாடி
நான் உன் திருவடி பேணும்படி இரு
போதும் கருணையில் மறவாது உன்
நான் உன் திருவடி பேணும்படி - அடியேனும் உனது திருவடிகளை விரும்பிப் போற்றும்படியான இரு போதும் - காலை, மலை இரண்டு பொழுதிலும் கருணையில் மறவாது - உனது கருணைத் திறத்தினில் ஞாபகம் வைத்து. உன் - உனது.
நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி
நாடும்படி அருள் புரிவாயே
நாமம் புகழ்பவர் - திருநாமங்களைப் புகழ்பவர்களுடைய பாதம் தொழ - திருவடியைத் தொழ இனி நாடும்படி - இனியேனும் விரும்பும் வண்ணம். அருள் புரிவாயே - திருவருள் புரிவாயாக.

கானும் திகழ் கதிரோனும் சசியொடு
காலங்களும் நடை உடையோனும்
கானும் - காட்டிலும் திகழ் - தமது கிரணங்களை வீசும் கதிரோனும் - சூரியனும். சசியொடு - சந்திரனும் காலங்களும் – முக்காலங்களும் ( நேற்று, இன்று, நாளை) நடை உடையோனும் - காற்றும்.
காரும் கடல வரை நீரும் தரு கயிலாயன்
கழல் தொழும் இமையோரும்
காரும் - மேகமும். கடலும் - கடலும் வரை - மலையும் நீரும் - நீரும். தரு - இவைகளை எல்லாம் படைத்தருளிய  கயிலாயன் -  சிவபெருமானுடைய கழல் தொழும் இமையோரும் - திருவடியைத் தொழுது நின்ற தேவர்களும்
வான் இந்திரன் நெடு மாலும் பிரமனும்
வாழும்படி விடும் வடிவேலா
வான் - விண்ணிலுள்ள இந்திரன் - இந்திரனும் நெடு மாலும் - நெடிய திருமாலும் பிரமனும் - பிரமனும் வாழும்படி விடும் வடிவேலா - வாழும்படியாகச் செலுத்திய கூரிய வேலாயுதனே.
மாயம் பல புரி சூரன் பொடிபட
வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே.
மாயம் பல புரி - மாயைகள் பலவற்றைப் புரிந்த சூரன் - சூரன் பொடிபட - தூள் பட்டழியும்படி வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே - வாளைக் கொண்டு போர் செய்த பெருமாளே.

சுருக்க உரை
காட்டிலும் கிரணங்களை வீசும் சூரியனும், சந்திரனும், காலங்களும், காற்றும், மேகமும், கடலும் எல்லாவற்றையும் படைத்த சிவபெருமானுடைய திருவடியைத் தொழுது நின்ற தேவர்களும், திருமாலும், பிரமனும் வாழும்படி செலுத்தின கூரிய வேலாயுதனே, சூரன் தூள்பட்டு அழிய வாள் கொண்டு போர் புரிந்த பெருமாளே,
ஊனும் சதையும் ஒன்பது துவாரங்களுடன் சேர்ந்து வரும் கருவின் வழி ஒரு கோடியாகும். ஆதலின் என் பிறப்பு ஒழியுமாறு நான் படிக்கும் கலை நூல்களை நன்கு உணரும்படி, உன் நாமம் புகழும் அடியவர்கள் திருவடியைத் துதித்துப் பாட அருள்வாய். 
விளக்கக் குறிப்புகள்
1. நாமம் புகழ்பவர்....
எம்மீசர் தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி எளிதாமே
                                                                                       ---சம்பந்தர்  தேவாரம் 
2. காருங் கடல்வரை...
இரவு, எல், ஆழி, மண், விண் தரு....கயிலாயி                        ...கந்தர் அந்தாதி.