பின் தொடர்வோர்

Saturday 6 June 2020

423.அறிவிலாப் பித்தர்


423
காஞ்சீபுரம்
               தனதனாத் தத்த தந்த தனதனாத் தத்த தந்த
                தனதனாத் தத்த தந்த                  தனதான
 
    அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
         அசடர்பேய்க் கத்தர் நன்றி                              யறியாத
      அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்புகழ்ந்து
         அவரைவாழ்த் தித்தி ரிந்து                    பொருள்தேடிச்
      சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
         தெரிவைமார்க் குச்சொ ரிந்து                   அவமேயான்
      திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
         தெளியமோ க்ஷத்தை யென்று                   அருள்வாயே
      இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
         இடபமேற் கச்சி வந்த                           உமையாள்தன்
      இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
         இறைவர்கேட் கத்த குஞ்சொ                  லுடையோனே
      குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
         குருவியோட் டித்தி ரிந்த                           தவமானைக்
      குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
         குமரகோட் டத்த மர்ந்த                             பெருமாளே.
 
பதம் பிரித்து உரை

அறிவு இலாப் பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர்
அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத
அறிவு இலாப் பித்தர் = அறிவு இல்லாத பித்தர். உன்றன் அடி தொழா = உன்னுடைய திருவடியைத் தொழாத. கெட்ட வஞ்சர் = கெட்ட வஞ்சகர்கள். அசடர் = முட்டாள்கள். பேய்க்கத்தர் = பேய்க்குணம் உடையவர்.நன்றி அறியாத = நன்றி அறிதல் இல்லாத.

அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து
அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி
அவலர் மேல் = வீணர்கள் மீது (பயனில்தாவர்கள்) சொற்கள் கொண்டு = சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து = பாடல்கள் அமைத்துப் புகழ்ந்தும் அவரை வாழ்த்தித் திரிந்து = அவர்களை வாழ்த்தியும் திரிந்து பொருள் தேடி = செல்வத்தைதேடி
சிறிது கூட்டி கொணர்ந்து தெரு உலாத்தி திரிந்து
தெரிவைமார்க்கு சொரிந்து அவமே யான்
சிறிது கொட்டிக்கொணர்ந்து = சிறிதளவு சேகரித்துக் கொண்டு வந்து தெரு உலாத்தித் திரிந்து = தெருக்களில் உலவித் திரிந்து தெரிவை மார்க்கு = விலை மாதர்களுக்கு சொரிந்து = (அப்பெண்களுக்கு) நிரம்பக் கொடுத்து அவமே யான் = வீண் காலம் கழித்து நான்.

திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து
தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே
திரியும் மார்க்த்து = திரிகின்ற போக்கால். நிந்தை அதனை மாற்றி = ( அதனால் வருகின்ற) நிந்தை மொழி ஒழியும்படி அருளி பரிந்து = என் மீது அன்பு கூர்ந்து  தெளிய மோக்ஷத்தை = நான் தெளிவு பெற  வீட்டின்பத்தை என்று அருள்வாயே = என்று எனக்கு அருள்வாய்?

இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து
இடபம் மேல் கச்சி வந்த உமையாள் தன்
இறைவர் = இறைவனது மாற்று அற்ற செம்பொன் = மாற்றில்லாத செம்பொன் வடிவம் வேற்று = உருவம் வேறாகும்படி பிரிந்து = அவரிடமிருந்து பிரிந்து இடபம் மேல் = ரிஷப வாகனத்தின் மேல் கச்சி வந்த = காஞ்சீபுரத்துக்கு வந்த உமையாள் தன் = உமையாளுடைய

இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த
இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே
இருள் நீக்க = அஞ்ஞானம் நீங்க தவம் செய்த அருள் நோக்கி = (அம்மையின்) தவத்தைப் பார்த்து. குழைந்த = உருகின இறைவர் கேட்கத் தகும் சொல் = சிவபெருமான் கேட்டு மகிழத் தக்க உபதேசச் சொல்லை உடையவனே = உடையவனே
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று
குருவி ஓட்டி திரிந்த தவ மானை
குறவர் கூட்டத்தில் வந்து = குறவர்களின் கூட்டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று = கிழ வேடத்தில் (காட்டில்) புகுந்து நின்று. குருவி ஓட்டித் திரிந்த = குருவிகளை ஓட்டிக் காவல் புரிந்து திரிந்த தவ மானை = தவம் நிறைந்த மானாகிய வள்ளியை.

குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த
குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே.

குணமதாக்கி = தன் வசப் படுத்தி . சிறந்த வடிவு காட்டி = தனது தெய்வ வடிவைக் காட்டி புணர்ந்த = அவளுடன் சேர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே = குமர கோட்டம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை
மாற்றுக் குறையாத இறைவனுடைய திருமேனியிலிருந்து தனியாகப் பிரிந்து ரிஷப வாகனமேறிக் காஞ்சிக்குத் தவம்புரிய வந்த உமையம்மையின் தவக்கோலத்தைக் கண்டு மனம் குழைந்தவரான சிவபெருமான் கேட்டு மகிழத்தக்க உபதேச மொழிகளை உடையவனே,  குறவர்கள் கூட்டத்திலே கிழவன் வேடத்தில் தோன்றி, தினைப்புனத்தில் கிளி, குருவிகளை ஓட்டிக் கொண்டிருந்த வள்ளியை வசப்படுத்திக்கொண்டு, உன்னுடைய தெய்வக் கோலத்தை அவருக்குக் காட்டி மணந்துகொண்டவனே,  குமரகோட்டம் என்னும் காஞ்சித் திருப்பதியில் அமர்ந்திருக்கின்ற பெருமாளே,
அறிவற்ற பித்தர்களையும்,  உன் திருவடிகளைத் தொழாத வஞ்சகர்களையும்,  மூடர்களையும்,  பேயின் குணம் கொண்டவர்களையும், வீணர்களையும், புகழ்ந்து கவிபாடி பொருள் சேகரித்து, தெருக்களில் சுற்றித் திரிந்து அந்தப் பொருளைப் பெண்களுக்கு கொடுத்து வீணே காலங்கழித்து வருகிற நான், இப்படித் திரிவதனால் ஏற்படும் பழிச்சொல் நீங்கும்படியாக அருளி, என்மீது அன்புகூர்ந்து, நான் தெளிவுபெறுமாறு மோட்ச இன்பத்தை என்றைக்குத் தருவாய்?  (தவறாமல் தந்தருள வேண்டும் என்பது சொல்லாமல் சொன்னது)
. ஒப்புக:
இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம்....
மாற்றறியாத செழும் பசும் பொன்னே
மாணிக்கமே சுடர் வண்ணக் கொழுந்தே
                                   ---- இராமலிங்க சுவாமிகள், திருவருட்பா  

 குணமதாக்கிச் சிறந்த வடிவு காட்டி......

குணமதாக்கி – தெய்வகோலத்தை வள்ளிக்கு அளித்தது

முகமாறுடைய பிரான் கன்னிதனையோர் கடிகாவினிற் கலந்து
துன்னு கருணை செய்து தொல்லுருவங் காட்டினனே
                                                                      ---- கந்த புராணம்

(அறுமுகம் உடைய வள்ளல்....நங்கைதனை யருளோடு நோக்க... குறவர் மாதர்  குயற்றிய கோலம் நீங்கி, முன்னுறு தெய்வக் கோல முழுதொருங் குற்றதன்றே) --- கந்த புராணம்.



விளக்கக் குறிப்புகள்
இடபம் மேல் கச்சி வந்த உமையாள்
கயிலாயத்தில், ஒருசமயம் ஈசனின்  கண்களை விளையாட்டாகப் பார்வதி தேவியார் பொத்தியதால், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. அந்த கணம் உலகில் வாழும் ஜீவன்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானதால், கோபம் கொண்ட இறைவன், பார்வதியை பூலோகம் சென்று தவம் செய்யும்படி கட்டளையிட்டார். பூலோகம் வந்த பார்வதி, காஞ்சி மாநகருக்கு வந்து கம்பா நதிக்கரையில் அமர்ந்து மண்ணால் சிவலிங்கம் நிறுவி விரதம் மேற்கொண்டு பூஜித்துக் கொண்டிருந்தாள்.  இடபம் தர்மத்தின் வடிவம்.

குமர கோட்டத்து அமர்ந்த

பிரணவ்த்திற்கு பொருள் தெரியாததைனால் பிரமனை சிறை பிடித்தார். சிவபெருமான் முருகனைக் கண்டித்து, நான்முகனை சிறையிலிருந்து மீட்டார். பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்பெருமானிடமிருந்து தானும் கேட்டுக்கொண்டார். என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின் அம்சமான ஈசனையே சீடனாகக் கொண்டது தோஷம் என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார் முருகப்பெருமான். தனக் கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக முருகப்பெருமான், நகரங்களில் சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப்  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முருகர் வழிபட்ட ஈசன் 'சேனாபதீஸ்வரர்' என்று போற்றப்பட்டார். அந்தத் தலமும் 'சேனாபதீஸ்வரம்' என்று உருவானது. மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன் 'மாவடி கந்தன்' எனப் பெயர் பெற்றார்.



422.அதிமதம்கக்க


422
காஞ்சீபுரம்
தனதனந் தத்தத் தத்தன தத்தந்
தனதனந் தத்தத் தத்தன தத்தந்
தனதனந் தத்தத் தத்தன தத்தந்        தனதான
 
அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்
      சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங்
      கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன்     குறவாணர்
அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்
      றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண்
      டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன்                குமரேசன்
துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்
      களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந்
      துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன்    புகழ்பாடிச்
சுருதியின் கொத்துப் பத்திய முற்றுந்
      துரியமுந் தப்பித் தத்வ மனைத்துந்
      தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும்               படிபாராய்
கதிபொருந் தக்கற் பித்துந டத்துங்
      கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங்
      கடவளும் பத்மத் தச்சனு முட்கும்                   படிமோதிக்
கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண்
      சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங்
      கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன்               றபிராமி
பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண்
      பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன்
      பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன்        செவிபோயப்
பனவிபங் கப்பட் டப்படி வெட்கும்
      படிமுனிந் தற்றைக் கொற்றம்வி ளைக்கும்
      பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும்                பெருமாளே.
  
பதம் பிரித்து உரை

அதி மதம் கக்க அப்பக்கம் உக குஞ்சரி
தனம் தைக்க சிக்கென நெக்கு அங்கு
அணை தரு செச்சை புயன் அத்தன்   குற வாணர்

அதி = அதிகமான. மதம் = மகிழ்ச்சி. கக்க = வெளிப்பட. பக்கம் = அன்பு. உக = விரும்பி. குஞ்சரி = தேவசேனையின். தனம் = கொங்கை. தைக்க = அழுத்தமாக மனதிற் பதிய. சிக்கென = இறுகப் பிணைக்க. நெக்கு = நெகிழ்ந்து. அங்கு அணை தரும் = உடனே அணைந்த. செச்சை பொன் புயனத்தன் = அழகிய வெட்சி மாலை திருத்தோள்களை உடையவன். அத்தன் = பெரியோன். குறவர் வாணர் = குறவர் வாழும்.

அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகி சென்று
அடி படிந்து  இட்ட பட்டு மயல் கொண்டு
அயர்பவன் சத்தி கைத்தலம் நித்தன்   குமரேசன்

அடவி = காட்டில். அம் தத்தைக்கு = அழகிய கிளி போன்ற வள்ளிக்கு. எய்த்து= இளைத்து. உருகி = உருகிச் சென்று.  அடி பணிந்திட்டு = அவளுடைய அடியை வணங்கி. பட்டு = ஆசை கொண்டு. மயல் கொண்டு = மோகம் கொண்டு. அயர்பவன் = தளர்பவன். சத்தி = சக்தியாகிய வேலை. கைத்தலம் = திருக் கரத்தில் பூண்டவன். நித்தன் = என்றும் உள்ளவன் (ஆகிய).   குமரேசன் = குமரேசன்.

துதி செயும் சுத்தப் பத்தியர் துக்கம்
களைபவன் பச்சைப் பஷி நடத்தும்
துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி

துதி செயும் = துதி செய்கின்ற. சுத்தப் பத்தியர் = பரிசுத்தமான பத்தி பூண்ட அன்பர்களுடைய. துக்கம் களைபவன் = துக்கத்தை நீக்குபவன். பச்சைப் பஷி = பச்சை நிறமான மயிலை. நடத்தும் = வாகனமாகக் கொண்ட.  துணைவன் என்று அர்ச்சித்து = உதவியாளன் என்று கூறி அருச்சித்து. இச்சைத் தணித்து = என் ஆசையை நிறைவேற்றி. உன் புகழ் பாடி = உன்னுடைய திருப்புகழைப் பாடி.

சுருதியின் கொத்து பத்தியும் முற்றும்
துரியமும் தப்பி தத்வம் அனைத்தும்
தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும் படி பாராய்

சுருதியின் கொத்து பத்தி = வேதங்களின் கூட்ட வரிசையையும். முற்றும் = பிற எல்லாவற்றையும். துரியமும் = துரிய நிலையையும் (தன் மயமாய் நிற்கும் சுத்த உயர் நிலையையும்). தப்பி = கடந்து.  தத்வம் அனைத்தும் = தத்துவங்கள் யாவும் (மூலப் பொருட்கள் யாவும்). தொலையும் = அழிந்து போகும்.
அந்தத்துக்கு அப்புறம் நிற்கும் படி = முடிவு நிலைக்கு அப்புறத்தே நிற்கும்படி. பாராய் = கண்பார்த்து அருள்வாய்.

கதி பொருந்த கற்பித்து நடத்தும்
கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும்
கடவுளும் பத்ம தச்சனும் உட்கும் படி மோதி

கதி பொருந்த = (வேள்வி இயற்ற வேண்டிய) வழி பொருந்தும்படி. கற்பித்து = ஏற்பாடு செய்து. நடத்தும் = (தக்கன்) வேள்வி நடத்திய. கனல் தலம் புக்கு = அக்கினி குண்டங்கள் இருந்த யாக சாலையுள் நுழைந்து. சக்ரம் எடுக்கும் கடவுளும் = சக்கரம் ஏந்தும் கடவுளாகிய திருமாலும். பத்மத் தச்சனும் = தாமரையில் வீற்றிருக்கும் படைத்தல் தொழில் புரியும்
பிரமனும். உட்கும் படி = அச்சம் உறும்படி. மோதி = தாக்கியும்.

கதிரவன் பல் குற்றி குயிலை திண்
சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும்
கடகமும் தட்டு பட்டு ஒழிய கொன்ற அபிராமி

கதிரவன் பல் குற்றி = (ஒரு) சூரியனின் பற்களைக் குத்தியும். குயிலைத் திண் = இந்திரனாம் குயிலின் திண்ணிய. சிறகு எரிந்து = சிறகை அரிந்தும். எட்டுத் திக்கர் = அஷ்ட திக்குப் பாலகர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர். வகுக்கும் = அணி வகுத்த. கடகமும் = சேனைகளும். தட்டுப் பட்டு ஒழிய = நிலை குலைந்து அழியும் போகும்படி. கொன்று = கொன்றும்.  அபிராமி = அபிராமி.

பதிவ்ரதம் பற்ற பெற்ற மகம் பெண்
பரிவு ஒழிந்து அக்கக்கு உட்படு தக்கன்
பரிபவம் பட்டு கெட்டு ஒழிய தன் செவி போய் அப்

பதிவரத் பற்றப் பெற்ற = பதிவிரதத் தன்மையைக் கைப்பிடிக்கப் பெற்ற. மகப் பெண் = இன்பப் பெண்ணாகிய உமையின்.  பரிவு ஒழிந்து = (தன்னையும் தன் கணவன் சிவனையும் தட்சன் புறக்கணித்தான் என்னும்) வருத்தம் தீரவும். அக்கிக்கு உட்படு தக்கன் = நெருப்பில் விழப் பெற்ற தட்சன். பரிபவம் பட்டு = அவமானப் பட்டு. கெட்டு ஒழிய = கெட்டு ஒழியவும். தன் செ(வ்)வி போய் = தனது அழகு போய்.

பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்படி
முனிந்து அற்றை கொற்றம் விளைக்கும்
பரமர் வந்திக்க கக்சியில் நிற்கும் பெருமாளே.

அப்பனவி = அந்தப் பார்ப்பனியாகிய கலைமகள் (சரஸ்வதி). பங்கப்பட்டு = (மூக்கை இழந்து) பங்கம் அடைந்து. வெட்கும்படி = வெட்கம் அடைந்து. முனிந்து = கோபித்து. அற்றை = அன்று. கொற்றம் = வெற்றி பெற்ற. பரமர் = சிவ பெருமான். வந்திக்க = வணங்க. கச்சியில் = காஞ்சீபுரத்தில். நிற்கும் பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

தேவசேனை களிகூரும்படி அணைந்த திருத்தோள்களை உடையவனே.  அழகிய வள்ளியின் மேல் மோகம் கொண்டு தளர்பவனும், சத்தி வேலைத் தாங்கியவனும் ஆகிய குமரேசனே. பரிசுத்தமான பத்தி கொண்ட அடியார்களின்  துன்பத்தைப் போக்குபவனே. இவ்வாறெல்லாம் கூறி உன்னை அருச்சித்து, உன்  புகழ் பாடி, வேதங்களையும் துரிய நிலையையும் கடந்து, தத்துவங்கள் யாவும்  அழிந்து போகும் முடிவு நிலைக்கு அப்புறத்தே நான் நிற்கும்படி கண் பார்த்து அருளுக. சூரியனுடைய பற்களைக் குத்தி, இந்திரனாகிய குயிலின் சிறகை அரிந்து, எட்டுத் திக்கு பாலகர்களைf அணி வகுத்த சேனைகளைக் கொன்று, அபிராமி தன் பதிவிரதத் தன்மையைக் கைப்பிடிக்கத் தன் கணவன் சிவனைப் புறக்கணித்தான் என்னும் வருத்தம் தீர, நெருப்பில் விழப் பெற்றதக்கன் அவமானப்பட, வெற்றி பெற்ற சிவபெருமான் வணங்க, கச்சியில் வீற்றிருக்கும் பெருமாளே. உன் புகழ் பாடி, அந்தத்துக்கு அப்புறத்தில் நிற்கும்படி அருள்  புரிவாயாக.

  ஒப்புக
    *. துணைவன் என்று அர்ச்சித்து...
           யாழோ மேயரு ளரசே போற்றி
           தோழா போற்றி துணைவா போற்றி
                                     --- மணிவாகர், திருவாசகம்  -  போற்றிக்திருவகல்
                                                      
தட்சன் செய்த யாகத்தில் தண்டனை அடைந்தோர் இந்தப் பாட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
          வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்
          மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை
          வீரனென் பானொருப ராக்ர னெனவர அன்றுசோமன்
          மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக
          ஆனுகுந் தீகையற சேட்ட விதிதடை
          வீழநன் பாரதியு மூக்கு நழுவிட வந்தமாயன்
                                                                    – திருப்புகழ், மாகசஞ் சாரமுகில்
கோபத்தில் உமை கூறியவுடனே (தக்ஷனுடைய) பெரிய
வேள்வியை அழிக்கும் பொருட்டு, வீரபத்திரன் தோன்றி வர, சந்திரன் உடல் தேய, சூரியனின் பற்கள் உதிர, அக்கினியின் கை விழ, தக்ஷன் முடி அற்று விழ, சரசுவதியின் மூக்கு அறுபட்டு விழ, திருமால் ஓட்டம் பிடிக்க……
     
  
     
 
சிறப்பு :  தேவசேனையை முதலில் வைத்து பாடின வெகு குறைந்த பாடல்களில் இது ஒன்று