பின் தொடர்வோர்

Tuesday 29 September 2020

427கறையிலங்கு

 

427

காஞ்சீபுரம்

 

              தனதனந் தத்தத் தத்தன தத்தந்

              தனதனந் தத்தத் தத்தன தத்தந்

              தனதனந் தத்தத் தத்தன தத்தந்            தனதான

 

          கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்

         சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்

           கரவடன் கொற்றக் குக்கட வத்தன்                        தனிவீரக்

      கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்

         பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்

           கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந்                  தமிழ்பாடிக்

      குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்

         பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்

            குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன்                றிலதான

      குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்

          குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்

             குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங்             கிடையாதோ

      பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்

          தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்

             பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன்       றையும்வேணிப்

      பிறவுநின் றொக்கத் தொக்கு மணக்குஞ்

         சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்

            பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங்                        கயவாவி

      திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்

          பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்

             த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின்                 திருவான

      தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்

         தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்

             சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும்          பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

கறை இலங்கும் உக்ர சத்தி தரிக்கும்

சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும்

கரவடன் கொற்ற குக்கடவத்தன் தனி வீர

 

கறை இலங்கும் = (இரத்தக்) கறை விளங்கும். உக்ர = உக்கிரம் பொருந்திய சத்தி = வேற்படையை தரிக்கும் = ஏந்தும். சரவணன் = சரவண மூர்த்தி சித்தத்துக்குள் ஒளிக்கும் = மனத்தில் ஒளிந்து கொண்டிருக்கும். கரவடன் = திருடன் கொற்ற = வீரம் வாய்ந்த.

குக்கடவத்தன் = கோழிக் கொடியை ஏந்திய கையன். தனி வீர = ஒப்பற்ற வீர.

 கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன்

பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும்

கடக வஞ்சிக்கு கர்த்தன் எனசெம் தமிழ் பாடி

 

கழல் இடும் = கழலை அணிந்துள்ள. பத்ம = தாமரை போன்ற திருவடியை உடையவன் கண் செவி வெற்பன் = பாம்பு மலையான் (திருச் செங்கோட்டு மலையான்). பழநி மன் = பழனி மலையான். கச்சிக் கொற்றவன் = கச்சி வீரன். மற்றும் = பின்னும் கடக = கைவளை அணிந்த. வஞ்சிக்குக் கர்த்தன் = வள்ளிக் கொடி போன்ற வள்ளிக்குத் தலைவன். செம் தமிழ் பாடி = செந்தமிழ்ப் பாக்களைப் பாடி.

 குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும்

பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என்

குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான

 

குறை இல் = குறைவு படாத அன்பு உற்று = அன்பு பூண்டு குற்றம் அறுக்கும் = குற்றங்களை விளக்க வல்ல பொறைகள் நந்த = பொறுமைக் குணம் சிறந்து மேம்பட அற்பப் புத்தியை

விட்டு = அற்பமான புத்தியை ஒழித்து என் குணம் அடங்கக் கெட்டு = என்னுடைய தீய குணங்கள் எல்லாம் கெட்டு குணம் மற்று ஒன்று இலதான = குணம் வேறு ஒன்று இல்லாததான.

 குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்று

குறியொடும் சுத்த பத்தர் இருக்கும்

குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ

 

குணம் அடைந்து = ஒரே நிலையான சாத்துவிகக் குணம் ஒன்றையே அடைந்து எப் பற்றுக்களும் அற்றும் = எல்லாவிதமான ஆசைகளையும் ஒழித்து குறியொடும் = கடவுள் குறி ஒன்றையே கருதும். சுத்தப் பத்தர் இருக்கும் = பரிசுத்தமான பத்தர்கள் இருக்கும் குரு பதம் = பெருமை பொருந்தும் ஞான நிலை. சித்திக்கைக்கு = எனக்குக் கை கூடுவதற்கு. அருள் சற்றும் கிடையாதோ = உனது திருவருள் சற்றேனும் கிடைக்காதோ?

 பிறை கரந்தை கொத்து பணி மத்தம்

தலை எலும்பு அப்பு கொக்கின் இறகு அக்கம்

பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி

 

பிறை = சந்திரன். கரந்தைக் கொத்து = திருநீற்றுப் பச்சைக் கொத்துக்கள் பணி = பாம்பு மத்தம் = ஊமத்தம் தலை எலும்பு = கபால எலும்பு. அப்பு = கங்கை நீர். கொக்கு இறகு = கொக்கின் இறகு. அக்கம் = ருத்ராக்ஷ மாலை பிரமன் அன்று எட்டற்கு அற்ற = பிரமன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த. திருக் கொன்றையும் = அழகிய கொன்றை இவை எல்லாம்.

வேணி = அணிந்த சடை.

 பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும்

சரணி அம் பத்ம கை கொடி முக்கண்

பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி

 

பிறவும் = மற்றவைகளும் நின்று ஒக்க தொக்கு = விளங்கி ஒன்று சேர்ந்து கூடி. மணக்கும் சரணி = (சிவபெருமான் வீழ்ந்து வணங்குவதால் அவர் தலையில் உள்ள பொருள்களின்) மணம் வீசும் திருவடி உடையவள் அம் = அழகிய பத்மக் கை = தாமரை போன்ற திருக்கரத்தை உடைய கொடி = கொடி போன்றவள் முக் கண் பெறு = மூன்று கண்கள் கொண்ட கரும்பு = கரும்பு போன்றவள் அத்தக்க(த்)து அருள் = அந்தத் தக்கதான பொருளை (அடியேனுக்கு) அருள் செய்பவள் நல் வாவிப் பங்கயம் = நல்ல திருக் குளத்துத் தாமரையையும்.

 திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு

அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும்

த்ரிபுரை செம்பட்டு கட்டு நுசுப்பின் திருவான

 

திறை கொளும் = கப்பம் கட்டச் செய்யும் ( = வென்று அடக்கும்) சித்ர = அழகிய. குத்து முலைக் கொம்பு = திரண்டு குவிந்த கொங்கையைக் கொண்ட கொம்பு போன்றவள். அறியும் = ஞானமுள்ளவள். அம் = அழகிய. தத்தை = கிளி. கைக்கு அகம் மொய்க்கும் = கையில் பயின்று இருக்கும். த்ரிபுரை = சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவை உடைய சக்கரத்துக்குத் தலைவி. செம் பட்டுக் கட்டும் = செம்பட்டு ஆடை கட்டியிருக்கும். நுசுப்பின் = இடைடை உடைய. திருவான= இலக்குமிகரம் பொருந்திய.

 தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும்

தெரி அரும் சுத்த பச்சை நிற பெண்

சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே.

 

தெரிவை = நங்கை. அம் = அழகிய. துர்க்கி = துர்க்கா தேவி. சத்தி = சத்தி. எவர்க்கும் = எல்லோருக்கும். தெரி அரும் = தெரிவதற்கு அரிதான. சுத்தப் பச்சை நிறப் பெண் = சுத்தமான பச்சை நிறம் கொண்ட பெண் ஆகிய பார்வதி தேவியின். சிறுவ = பிள்ளையே. தொண்டர்க்கு = அடியார்களுக்கு. சித்தி அளிக்கும் பெருமாளே = வீடு பேற்றைத் அளிக்கும் பெருமாளே.

  சுருக்க உரை

 

வேற்படை விளங்கும் சரவண மூர்த்தி! அடியார் மனத்துள் உறையும் கள்வன்! கோழிக் கொடியை உடையவன்! வீரக் கழல்கள் அணிந்த தாமரை போன்ற திருவடியை உடையவன்! பழனி அரசன்! வள்ளியின் கணவன்! என்றெல்லாம் செந்தமிழ்ப் பாக்களைப் பாடி, என் குற்றங்கள் விலகி, அற்பப் புத்தி நீங்கி, சத்துவ குணம் ஒன்றே நிலை நின்று, பற்றுக்கள் ஒழிந்து, இறைவனையே குறியாகக் கருதும் பத்தர்கள் இருக்கும் ஞான நிலையில் பொருந்தி நிற்கும் பேறு எனக்குச் சற்றேனும் கிடைக்காதோ?

 

 

சிவபெருமான் தலையிலிருந்து விழும் மலர்களால் மணக்கும் பாதங்களை உடையவள், கொடி போன்றவள், அடியார்களுக்குத் தக்கபொருள்களை அளிப்பவள், கிளி போன்ற பச்சை நிறம் வாய்ந்தவள், இத்தகைய பார்வதி பெற்றெடித்த  திருக்குமரனே!

தொண்டர்க்கு வீடு பேற்றினை அளிக்கும் பெருமாளே! பத்தர்கள் இருக்கும் குரு பதம் அடியேனுக்குக் கிடைக்குமோ? 

 

விளக்கக் குறிப்புகள்

 

சித்தத்துள் ஒளிக்கும் கரவடன்...

உள்ளமெல்லாம் உள்கி நின்று ஆங்கே

உடனாடும் கள்ளம் வல்லான் --- சம்பந்தர் தேவாரம்.

 

.பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு ....

சிவசிவ சங்கர மாவை ஏனுந்திற லோய்பொறைவா

சிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே    -- கந்தர் அந்தாதி .

 

குறியொடும் சுத்தப் பத்தர்...

குணம் பொல்லேன் குறியும் பொல்லேன்     ---- திருநாவுக்கரசர் தேவாரம்.

குறி கலந்த இசைபாடல்  -                                         --- சம்பந்தர் தேவாரம்.

 

முக்கண் பெறு கரும்பு.....

முக்கண்ணியைத் தொழுவார்க் கொரு தீங்கில்லையே   -- அபிராமி அந்தாதி

அத்தக்கத்து அருள்.....

      அத் தக்கது என்பது சந்தம் நோக்கி தக்கத்து என நின்றது.




Sunday 27 September 2020

426 கருமமான

 

426

காஞ்சீபுரம்

 


 

             தனன தானன தத்தன தனதன

                தானா தத்தத்                    தனதான

 

உனது உண்மை வடிவை கண்டு,

பிறவாத நிலை பெற அருள் வேண்டுதல்

 

கரும மானபி றப்பற வொருகதி

   காணா தெய்த்துத்                  தடுமாறுங்

கலக காரண துற்குண சமயிகள்

   நானா வர்க்கக்                கலைநூலின்

வரும நேகவி கற்பவி பரிதம

   னோபா வத்துக்                    கரிதாய

மவுன பூரித சத்திய வடிவினை

   மாயா மற்குப்                  புகல்வாயே

தரும வீம அருச்சுன நகுலச

   காதே வர்க்குப்                   புகலாகிச்

சமர பூமியில் விக்ரம வளைகொடு

   நாளோர் பத்தெட்               டினிலாளுங்

குரும கீதலமுட்பட வுளமது

   கோடா மற்க்ஷத்                ரியர்மாளக்

குலவு தேர்கட வச்சுதன் மருககு

   மாரா கச்சிப்                  பெருமாளே.

 

 

பதம் பிரித்து உரை

 

 

கருமமான பிறப்பு அற ஒரு கதி

காணாது எய்த்து தடுமாறும்

கருமமான = வினைக்கு ஈடான. பிறப்பு அற = பிறவி தொலைவதற்கு. ஒரு கதி காணாது = ஒரு வழியும் தெரியாமல். எய்த்துத் தடுமாறும் = இளைத்துத் தடுமாறுபவரும்.

 

 

கலக காரண துற்குண சமயிகள்

நானா வர்க்க கலை நூலின்

 

கலக காரண = கலக்கம் தரும் கூச்சலுக்கு இடம் தரும். துற் குண சமயிகள் = பொல்லாத குணத்தை உடைய சமய வாதிகளின். நானா வர்க்க = பலவிதமான. கலை நூலின் = சாத்திர நூல்களில்.

 

வரும் அநேக விகற்ப விபரித

மனோ பாவத்துக்கு அரிதாய


வரும் = சொல்லப்பட்ட அநேக விகற்ப = பல

மாறுபாடுகள் கொண்டதும். விபரித = பொருந்தாததுமான மனோபாவத்துக்கு அரிதாய = மன உணர்ச்சிக்கு எட்டாததான.

 

மவுன பூரித சத்திய வடிவினை

மாயாமற்கு புகல்வாயே

  மவுன பூரித = மவுன நிலை கொண்ட சத்திய வடிவினை  = உண்மை ஒளியை மாயாமற்கு = (நான்) இறப்பு இல்லாமல் விளங்க. புகல்வாயே = உபதேசித்து அருள்வாயே.

தரும வீம அருச்சுன நகுல

சகாதேவர்க்கு புகலாகி 

 தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்கு = பஞ்ச பாண்டவர்களுக்கு புகலாகி = சரண் அளிப்பவனாகி சமர பூமியில் = போர்க்களத்தில் விக்ரம = வலிமை வாய்ந்த. வளை கொடு = சங்கு கொண்டு நாளோர் பத்தெட்டினில் = பதினெட்டு நாட்களில் ஆளும் = நிகழும்.


 சமர பூமியில் விக்ரம வளை கொடு

நாளோர் பத்தெட்டினில் ஆளும்

 

சமர பூமியில் = போர்க்களத்தில் விக்ரம = வலிமை வாய்ந்த. வளை கொடு = சங்கு கொண்டு. (பாஞ்சஜன்யத்தை)  நாளோர் பத்தெட்டினில் = பதினெட்டு நாட்களில் ஆளும் = நிகழும்.

 குரு மகீதலம் உட்பட உளமது

கோடாமல் க்ஷத்ரியர் மாள

 

 

குரு மகீதலம் உட்பட = குருக்ஷேத்திரமாகிய இடத்தில். உளமது = தமது திரு உள்ளம் கோடாமல் = கோணாமல் நெறி முறையில் க்ஷத்ரியர் மாள = அரசர்கள் யாவரும்

 இறந்துபட.


குலவு தேர் கடவு அச்சுதன் மருக

குமாரா கச்சி பெருமாளே.


குலவு தேர் கடவு = விளக்கமுற்ற தேரைச் செலுத்திய. அச்சுதற்கு மருக = திருமாலுக்கு மருகனே. குமாரா = குமரனே. கச்சிப் பெருமாளே = காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

 

 

சுருக்க உரை

வினைக்கு ஏதுவான பிறவி அற, ஒரு வழியும் தெரியாமல் தடுமாறுபவரும், பொல்லாத குணத்தை உடையவரும் ஆகிய சமய வாதிகள் கருத்துக்குப் பொருந்தாத பல சாத்திர நூல்களைக் கொண்டு கூச்சலிட்டு வாதமிடுவர். இத்தகைய வாதங்களில் ஈடுபடாமல், மவுன நிலை நிறைவு கொண்ட உண்மை ஒளியை நான் இறப்பு இன்றி விளங்க எனக்கு உபதேசிப்பாயாக.

பாண்டவர்களுக்குச் சரண் அளித்து, குருக்ஷேத்திரப் போரில் தேரை ஓட்டி, நெறி முறையில் நின்று, மற்ற அரசர்கள் மடிய உதவிய திருமாலின் மருகனே. கச்சிப்

பதியில் வீற்றிருக்கும் பெருமாளே. எனக்குச் சத்திய வடிவினைப் புகல்வாயே.

 

விளக்கக் குறிப்புகள்

 மவுன பூரித சத்திய வடிவினை மாயாமற்கு....

 மவுன - மௌன   

செயல் ஒழித்த அநுபூதி மீமிசை

திகழும் அற்புத மவுன நிர்க்குண

சிவமயத் திரு ஞான வேழமே. ---திருஞான வேழ வகுப்பு

    

மன்ன கடம்பின் மலர்  மாலை மார்ப மௌனத்தை உற்று

      நின்னை உணர்ந்த எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்ட

      ன்னை மறந்திருந்தே இனி இறந்து விட்டது இவ் உடம்பே

     ---கந்தர்  அலங்காரம்

இது ஞானத்தின் முடிவாகத் திகழ்வது.

"மோனம் என்பது ஞான வரம்பு”.  வாய் திறந்து பேசாது இருப்பது மௌனம்  அன்று. மனம் அற்ற நிலை மௌனம்.