பின் தொடர்வோர்

Sunday 27 September 2020

425எனக்கு சற்று உனக்கு சற்று என

 

425

காஞ்சீபுரம்

 

     தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்

       தனத்தத்தத் தனத்தத்தத்                   தனதான

 

முருகன் திருவடியைச் சொல்லித் துதிக்கும் பேற்றை வேண்டுகிறது பாடல்

 

எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்

   பொருட்பொற்றட் டிடிக்கைக்குக்               குடில்மாயம்

எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்

   பிறக்கைக்குத் தலத்திற்புக்                   கிடியாமுன்

தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்

   பெறச்செச்சைப் புயத்தொப்பித்                 தணிவோனே

செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்

   திரட்டப்பிக் கழற்செப்பத்                    திறல்தாராய்

பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப்

   பணத்துட்கக் கடற்றுட்கப்                   பொரும்வேலா

பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப்

   பலிப்பப்பத் தருக்கொப்பித்                 தருள்வாழ்வே

கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக்

   கிடைப்புக்குக் களிப்புக்குத்                   திரிவோனே

கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக்

   கடற்கச்சிப் பதிச்சொக்கப்                    பெருமாளே.

 

 

பதம் பிரித்து உரை

 

எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை

பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம்

 

என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு

பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன்

 

தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொன்

பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே

 

செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி

திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய்

 

பனைக்கை கொக்கனை தட்டு பட குத்தி பட சற்ப

பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா

 

பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று

பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே

 

கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு

இடை புக்கு களிப்புக்கு திரிவோனே

 

கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி

கடல் கச்சி பதி சொக்க பெருமாளே.

 

 

  பத உரை

 

 

எனக்குச் சற்று உனக்குச் சற்று என = எனக்குக் கொஞ்சம், உனக்குக் கொஞ்சம் என்று. கத்து = கூச்சலிடுகின்ற. அத்தவர்க்கு = விலை மாதருக்கு. இச்சை = விருப்பமுள்ள. பொருள் = பொருளையும். பொன் தட்டு = பொன்னாலாகிய தட்டுக்களையும். இடு = தருகின்ற. இக்கை = ஆபத்தைக் கொண்ட. கு = சிறுமை வாய்ந்த. குடில் = குடிசையாகிய உடல். மாயம் = மாயமாய் மறைந்தது.

 

என = என்று. கட்டைக்கு இடைப்பட்டிட்டு = விறகுக் கட்டைகளின் இடையே கிடத்தப்பட்டு. அடக்கைக்கு = இறந்து மறைந்து போவதற்கும். பிறக்கைக்கு = பிறப்பதற்கும். தலத்தில் = இந்தப் பூமியில். புக்கு = தோன்றி. இடியா முன் = அழிந்து போவதற்கு முன்னம்.

 

தினைக்குள் = தினைப் புனத்தில். சித்திர = அழகான. கொச்சைக் குற தத்தை = குழந்தை போலத் திருந்தாப்

பேச்சுக்களைப் பேசம் குறக்குலத்து கிளியாகிய வள்ளியின். தனத்தை = கொங்கையை. பொன் பெற = அழகு பெற. செச்சை = வெட்சி மாலை அணிந்த. புயத்து ஒப்பித்து = திருப்புயத்தில் ஏற்று. அணிவோனே = அணிபவனே.

 

செருக்கி = அகந்தை கொண்டும். சற்று உறுக்கி = சிறிது கோபித்தும். சொல் = பேசுகின்ற. பிரட்டத் துட்டரை = நன்னெறியினின்றும் வழுவிய துட்டர்கள்.  திரள் தப்பி = அவர்கள் கூட்டத்தினின்றும் விலகி. கழல் செப்ப =

(உன்னுடைய) திருவடியைப் புகழ. திறல் = சாமர்த்தியத்தை. தாராய் = கொடுத்து அருளுக.

 

பனைக்கை = பனை மரம் போல் நீண்ட கையைக் கொண்ட. கொக்கனை = கொக்கு போன்று தாழ்மை குணம் படைத்த தாரகனை. தட்டுப் பட = அவன் தடைபடும்படி.  குத்திப்பட = குத்தி (அவன் அழிவு உற). சற்பப் பணம் துட்க =

ஆதிசேடனது படங்கள் அஞ்சவும். கடல் துட்க = கடல் அஞ்சவும். பொரும் வேலா = சண்டை செய்யும் வேலனே.

 

பரப்பு = பேராசை. அற்று = ஒழிய. சுருக்கு = உலோப குணம். அற்று = ஒழிய. பதைப்பு = நடுக்கம். அற்று = ஒழிய.  திகைப்பு அற்று = மயக்கம் ஒழிய.  பலிப்ப = நற்குணங்கள் உண்டாக. பத்தருக்கு ஒப்பித்து அருள்வாழ்வே = அடியார்களுக்குச் சேர்ப்பித்து அருள் புரியும் செல்வனே.

 

கனிக்கு = பழத்துக்காக. திக்கு அனைத்துச் சுற்றிட =

எல்லா திக்குகளிலும் வலம்வர. பச்சை = பச்சை நிறமுள்ள. கனப் பக்ஷிக்கு = பெருமை வாய்ந்த மயிலின். இடைப் புக்கு = மேல் ஏறி. களிப்புக்குத் திரிவோனே = மகிழ்ச்சியுடன் திரிவோனே.

 

கலிக்கு ஒப்பு இல் = கலி யுகத்திலும் நிகரில்லாத. சலிப்பு அற்று = சலித்தல் இல்லாமல் (மனம் உவந்து). கதிக்கு = வீட்டு இன்பத்தைத்தர.  ஒத்திட்ட = உட்பட்டுள்ள. எழில் பெருமாளே = அழகிய பெருமாளே. சத்தி = சத்திப் பெருமாளே. கடல் கச்சிப் பதி = கடல் போலும் ஒலி பெருகும் கச்சி மாநகரில் வீற்றிருக்கும். சொக்கப் பெருமாளே = அழகிய பெருமாளே.

 

சுருக்க உரை

 

விலை மாதருக்குப் பலப் பொருட்களைத் தருகின்ற ஆபத்தைக்  கொண்ட இந்த உடல் மறைந்து, கட்டையின் நடுவே கிடந்து, நெருப்பால் அழிந்து போகு முன், வள்ளியை உனது வெட்சி மாலை அணிந்த புயங்களில் ஏற்று அணிபவனே!

துஷ்டர்கள் கூட்டத்திலிருந்து விலகி உனது திருவடியைப் புகழத் திறனை எனக்குத் தருவாய்.

 

நீண்ட கைகளை உடைய தாரகனையும், கொக்காய் நின்ற சூரனையும் அழித்து, கடலும் அஞ்சும்படி போர் செய்தவனே! உன்னை வணங்கும்  அடியார்களுக்கு நற்குணங்களை அடையும் படி அருள் புரிவாயாக.

 

விளக்கக் குறிப்புகள்

 

பனைக்கைக் கொக்கன்....

தாரகாசுரன் யானையின் துதிக்கையைப் பனைக்கை என்பர். 

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்

-                                                   திருநாவுக்கரசர் , தேவாரம்.      

பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன்

 

பிறப்பதும் இறப்பதும் ஆகவே உயிர்கள் உழல்கின்றன.  இப் பிறப்பு என்னும் சுழலில் இருந்து உயிர் தப்பித்து இறைவன் பாதமலரை சேர்தல் வேண்டும்.

ஒப்புக:

 உதித்துஆங்கு உழல்வதும், சாவதும் தீர்த்து, எனை உன்னில்  ஒன்றாய் விதித்து, ஆண்டு, அருள்தரும் காலம்உண்டோ? வெற்பு நட்டு, உரக பதித் தாம்பு வாங்கி நின்று, அம்பரம் பம்பரம் பட்டு உழல

மதித்தான் திருமருகா, மயில் ஏறிய மாணிக்கமே.--  கந்தர் அலங்காரம்.

 

கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட

 

 ஒப்புக

ஆகமம் விளைத்த அகில லோகமும் நொடிப்புஅளவில்

ஆசையொடு சுற்றும்அதி வேகக் காரனும்; திருவேளைக்காரன் வகுப்பு.

No comments:

Post a Comment