பின் தொடர்வோர்

Sunday 27 September 2020

426 கருமமான

 

426

காஞ்சீபுரம்

 


 

             தனன தானன தத்தன தனதன

                தானா தத்தத்                    தனதான

 

உனது உண்மை வடிவை கண்டு,

பிறவாத நிலை பெற அருள் வேண்டுதல்

 

கரும மானபி றப்பற வொருகதி

   காணா தெய்த்துத்                  தடுமாறுங்

கலக காரண துற்குண சமயிகள்

   நானா வர்க்கக்                கலைநூலின்

வரும நேகவி கற்பவி பரிதம

   னோபா வத்துக்                    கரிதாய

மவுன பூரித சத்திய வடிவினை

   மாயா மற்குப்                  புகல்வாயே

தரும வீம அருச்சுன நகுலச

   காதே வர்க்குப்                   புகலாகிச்

சமர பூமியில் விக்ரம வளைகொடு

   நாளோர் பத்தெட்               டினிலாளுங்

குரும கீதலமுட்பட வுளமது

   கோடா மற்க்ஷத்                ரியர்மாளக்

குலவு தேர்கட வச்சுதன் மருககு

   மாரா கச்சிப்                  பெருமாளே.

 

 

பதம் பிரித்து உரை

 

 

கருமமான பிறப்பு அற ஒரு கதி

காணாது எய்த்து தடுமாறும்

கருமமான = வினைக்கு ஈடான. பிறப்பு அற = பிறவி தொலைவதற்கு. ஒரு கதி காணாது = ஒரு வழியும் தெரியாமல். எய்த்துத் தடுமாறும் = இளைத்துத் தடுமாறுபவரும்.

 

 

கலக காரண துற்குண சமயிகள்

நானா வர்க்க கலை நூலின்

 

கலக காரண = கலக்கம் தரும் கூச்சலுக்கு இடம் தரும். துற் குண சமயிகள் = பொல்லாத குணத்தை உடைய சமய வாதிகளின். நானா வர்க்க = பலவிதமான. கலை நூலின் = சாத்திர நூல்களில்.

 

வரும் அநேக விகற்ப விபரித

மனோ பாவத்துக்கு அரிதாய


வரும் = சொல்லப்பட்ட அநேக விகற்ப = பல

மாறுபாடுகள் கொண்டதும். விபரித = பொருந்தாததுமான மனோபாவத்துக்கு அரிதாய = மன உணர்ச்சிக்கு எட்டாததான.

 

மவுன பூரித சத்திய வடிவினை

மாயாமற்கு புகல்வாயே

  மவுன பூரித = மவுன நிலை கொண்ட சத்திய வடிவினை  = உண்மை ஒளியை மாயாமற்கு = (நான்) இறப்பு இல்லாமல் விளங்க. புகல்வாயே = உபதேசித்து அருள்வாயே.

தரும வீம அருச்சுன நகுல

சகாதேவர்க்கு புகலாகி 

 தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்கு = பஞ்ச பாண்டவர்களுக்கு புகலாகி = சரண் அளிப்பவனாகி சமர பூமியில் = போர்க்களத்தில் விக்ரம = வலிமை வாய்ந்த. வளை கொடு = சங்கு கொண்டு நாளோர் பத்தெட்டினில் = பதினெட்டு நாட்களில் ஆளும் = நிகழும்.


 சமர பூமியில் விக்ரம வளை கொடு

நாளோர் பத்தெட்டினில் ஆளும்

 

சமர பூமியில் = போர்க்களத்தில் விக்ரம = வலிமை வாய்ந்த. வளை கொடு = சங்கு கொண்டு. (பாஞ்சஜன்யத்தை)  நாளோர் பத்தெட்டினில் = பதினெட்டு நாட்களில் ஆளும் = நிகழும்.

 குரு மகீதலம் உட்பட உளமது

கோடாமல் க்ஷத்ரியர் மாள

 

 

குரு மகீதலம் உட்பட = குருக்ஷேத்திரமாகிய இடத்தில். உளமது = தமது திரு உள்ளம் கோடாமல் = கோணாமல் நெறி முறையில் க்ஷத்ரியர் மாள = அரசர்கள் யாவரும்

 இறந்துபட.


குலவு தேர் கடவு அச்சுதன் மருக

குமாரா கச்சி பெருமாளே.


குலவு தேர் கடவு = விளக்கமுற்ற தேரைச் செலுத்திய. அச்சுதற்கு மருக = திருமாலுக்கு மருகனே. குமாரா = குமரனே. கச்சிப் பெருமாளே = காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

 

 

சுருக்க உரை

வினைக்கு ஏதுவான பிறவி அற, ஒரு வழியும் தெரியாமல் தடுமாறுபவரும், பொல்லாத குணத்தை உடையவரும் ஆகிய சமய வாதிகள் கருத்துக்குப் பொருந்தாத பல சாத்திர நூல்களைக் கொண்டு கூச்சலிட்டு வாதமிடுவர். இத்தகைய வாதங்களில் ஈடுபடாமல், மவுன நிலை நிறைவு கொண்ட உண்மை ஒளியை நான் இறப்பு இன்றி விளங்க எனக்கு உபதேசிப்பாயாக.

பாண்டவர்களுக்குச் சரண் அளித்து, குருக்ஷேத்திரப் போரில் தேரை ஓட்டி, நெறி முறையில் நின்று, மற்ற அரசர்கள் மடிய உதவிய திருமாலின் மருகனே. கச்சிப்

பதியில் வீற்றிருக்கும் பெருமாளே. எனக்குச் சத்திய வடிவினைப் புகல்வாயே.

 

விளக்கக் குறிப்புகள்

 மவுன பூரித சத்திய வடிவினை மாயாமற்கு....

 மவுன - மௌன   

செயல் ஒழித்த அநுபூதி மீமிசை

திகழும் அற்புத மவுன நிர்க்குண

சிவமயத் திரு ஞான வேழமே. ---திருஞான வேழ வகுப்பு

    

மன்ன கடம்பின் மலர்  மாலை மார்ப மௌனத்தை உற்று

      நின்னை உணர்ந்த எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்ட

      ன்னை மறந்திருந்தே இனி இறந்து விட்டது இவ் உடம்பே

     ---கந்தர்  அலங்காரம்

இது ஞானத்தின் முடிவாகத் திகழ்வது.

"மோனம் என்பது ஞான வரம்பு”.  வாய் திறந்து பேசாது இருப்பது மௌனம்  அன்று. மனம் அற்ற நிலை மௌனம். 

No comments:

Post a Comment