பின் தொடர்வோர்

Wednesday 15 May 2019

375.தரணிமிசை


375




பொது

            தனதனன தனதனன தந்தனந் தந்தனந்   
            தனதனன தனதனன தந்தனந் தந்தனந் 
             தனதனன தனதனன தந்தனந் தந்தனந்   தனதான

375

பொது

 

            தனதனன தனதனன தந்தனந் தந்தனந்   

            தனதனன தனதனன தந்தனந் தந்தனந் 

             தனதனன தனதனன தந்தனந் தந்தனந்   தனதான

 

 

தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந்    

   துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின்     

   தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன்      பதுவாயுந்     

தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும்     

   பெருகியொரு பதினவணி வந்துகண் டன்புடன்     

   தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின்         வசமாகித்     

திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்     

   கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன்     

   சிதறவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும்    அயர்வாகிச்     

செடமதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன்     

   சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ்     

   செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங்    கழல்தாராய்     

செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங்     

   கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந்     

   திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின்   மகிழ்வாகிச்     

சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன்     

   டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்     

   டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந்       தவமோதச்     

சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ்     

   சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன்     

   சதுமுகனு படிபரவ மண்டுவெஞ் சம்பொருங்        கதிர்வேலா

சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந் 

   தெரவரிய முடியினர வங்களுந் திங்களுஞ்     

   சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும்            பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

தரணி மிசை அ(ன்)னையினிட உந்தியின் வந்து உகு 

துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில்     

தசை உதிர(ம்) நிண(ம்) நிறைய அங்கமும் தங்க ஒன்பது வாயும்   

தரணி மிசை - இந்தப் பூமியில் அன்னையினிட - தாயின் உந்தியில் - வயிற்றில் (கர்ப்பப்பையில்) வந்து உகு - வந்து சேரும் துளி பயறு - ஒரு துளி பயறு அளவு கழல் - விழுதலாகி இனிய - இன்பகரமான அண்டமுங் கொண்டு - முட்டை வடிவாகி அதில் - அதில் தசை உதிரம் நிணம் நிறைய - சதை, இரத்தம், கொழுப்பு இவை நிறைவு பெற அங்கமும் - (பின்னர்) அவயவங்களும் தங்க - வந்து கூட ஒன்பது வாயும் - ஒன்பது துவாரங்களும்  

தரு கரமொடு  இனிய பதமும் கொ(ண்)டு அங்கு ஒன்பதும்     

பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன்     

தநயன் என நடை பழகி மங்கை தன் சிங்கியின் வசமாகி 

 தரு கரமொடு - ஏற்பட்ட கைகளுடன் இனிய பதமும் கொ(ண்)டு - அழகிய கால்களும் கொண்டு அங்கு ஒன்பதும் பெருகி - அங்கே கண் (2), காது (2), மூக்குத் தொளை (2), வாய் (1), மலத்துவாரம் (1), சலத் துவாரம் (1) ஆகிய ஒன்பது துவாரங்களும் ஏற்பட்டு ஒரு பதில் - ஒரு பத்து மாதத்தில் அவனி வந்து - பூமியில் வந்து பிறந்து கண்டு - (அக்குழந்தையைக்) கண்டு (பெற்றோர்கள்) அன்புடன் - அன்பு பூண்டு தநயன் என - மகன் என வளர்ந்து நடை பழகி - நடக்கக் கற்று மங்கை தன் சிங்கியில் வசமாகி - மாதர்களின்f விடமச் செயல்களில் அகப்பட்டு

 

திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின்    

கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன்    

சிதற உயிர் பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி  

திரிகி - சலிப்புற்று நிலை மாறி உடல் வளைய - நிமிர்ந்த உடல் குனிய நடை தண்டுடன் சென்று - தடியுடன் நடந்து செல்வதாகி பின் கிடை எனவும் மருவி - பிறகு படுக்கையில் கிடக்கை உற்றுக் கிடக்க மனை முந்தி - வீட்டில் முந்தி அந்தகன் வந்து - யமன் வந்து உயிர் சிதற - உயிரைச் சிதறும்படி செய்ய பிணம் எனவே - பிணம் என்று முடிவு செய்து மைந்தரும் - மக்களும் பந்துவும் - சுற்றமும் அயர்வாகி - சோர்வடைந்து 

செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன்      

சுடலை மிசை எரியில் இட வெந்து பின் சிந்திடும்     

செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட பைங்கழல் தாராய்  

செடம் இதனை எடும் எடுமின் என்று - இந்தப் பிணத்தை எடுத்துச் செல்லவும்  என்று பன் முறைகள் சொல்ல கொண்டு அன்புடன் - எடுத்துக் கொண்டு போய் அன்புடன் சுடலை மிசை எரியில் இட - சுடுகாட்டில் நெருப்பில் இட வந்து பின் சிந்திடும் - வெந்து சாம்பலாகி அழிகின்ற செனனம் இது - இந்தப் பிறவி தவிர - இனி வராதிருக்க இரு தண்டையும் கொண்ட பைங்கழல் - உனது தண்டைகள் அணிந்த இரு திருவடிகளையும் தாராய் - தந்து அருள்வாயாக

 

செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கு எங்கணும்     

கழுகு கருடன்நயனம் இது கண்டு கொண்டு அம்பரம்     

திரிய மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி  

செரு எதிரும் - போரில் எதிர்த்து வந்த அசுரர் கிளை - அசுரர்கள் கூட்டம்  மங்க - அழிய  எங்கெங்கணும் - எல்லா இடத்தும் கழுகு கருடன் - கழுகு, கருடன் நயனம் இது கண்டு கொண்டு - இவைகளின் கண்கள் (பிணங்களைக்) கண்டு உணர்ந்து அம்பரம் - ஆகாயத்தில் திரிய - சுற்றிவர மிகு அலகையுடன் - மிக்கு வரும் பேய்களின் வெம் கணம் - கொடிய கூட்டங்கள் தங்களின் மகிழ்வாகி - தங்களுக்குள் மகிழ்ச்சி பூண்டு  

சின அசுரர் உடல் அது தின்று தின்று இன்புடன் 

டுமுடு     

திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத  

சின அசுரர் உடலம் அது தின்று தின்று - கோபத்துடன் (இறந்து பட்ட)அசுரர்களின் உடல்களைத் தின்று இன்புடன் - மகிழ்ச்சியுடன் டுமுடு - இவ்வாறு ஒலிகளை எழுப்பும் திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் - இப்பறை வகைகள் தவ மோத - மிக்க பேரொலிகளை எழுப்ப 

சர வரிசை விடு குமர அண்டர் தம் பண்டு உறும்     

சிறையை விட வரு முருக என்று வந்து  இந்திரன்     

சது(ர்) முகன் அடி பரவ மண்டு வெம்ச(ம)ம் பொரும் கதிர் வேலா  

சர வரிசை - அம்புகளை வரிசை, வரிசையாக விடு குமர - செலுத்திய குமரனே அண்டர் தம் - தேவர்களை பண்டு உறும் சிறையை விட - முன்பு அடைபட்டிருந்த சிறையினின்றும் விடுத்த முருக - முருகனே என்று வந்து இந்திரன் - என்று கூறி வந்து இந்திரன் சதுர் முகன் அடிபரவ - பிரமன் முதலியோர் உன் அடிகளைப் போற்றி செய்ய மண்டு - நெருங்கி வெம்சமம்  பொரும் - கோடிய போரைச் செய்த கதிர் வேலா - ஒளி வீசும் வேலாயுதனே 

சக(ம்) முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும்      

தெரிவரிய முடியில் அரவங்களும் திங்களும்      

சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே 

சகம் முழுதும் அடைய - உலகம் எல்லாவற்றையும் முழுதாக அமுது உண்டிடும் கொண்டலும் - அமுதாக உண்ட மேக வண்ணத் திருமாலும் தெரிவரிய - காண முடியாத முடியில் - தலையில் அரவங்களும் - பாம்புகளையும் திங்களும் - சந்திரனையும் சலம் இதழி அணியும் - கங்கை, கொன்றை ஆகியவற்றையும் தரித்துள்ள ஒரு - ஒப்பற்ற சங்கரன் தந்திடும் பெருமாளே - சிவபெருமான் அருளிய பெருமாளே

 

சுருக்க உரை

 

தாயின் வயிற்றில் ஒரு துளி அளவாகத் தோன்றி, முட்டை வடிவமாகி, சதை, இரத்தம், கொழுப்பு முதலியவற்றுடன் சேர்ந்து, அவயவங்களும் ஏற்பட்டு, வளர்ந்து, பத்து மாதங்களுக்குப் பின் பூமியில் பிறந்து, மகன் எனப் பெற்றோர்களுக்கு இன்பம் கொடுத்து, நடை பழகி, வயது ஏறியவுடன் மாதர்கள் மயலில் வசப்பட்டு, முதுமை பருவம் எய்தி, உடல் கூனாகி, படுக்கையில் கிடந்து, உயிர் போன பிறகு, உறவினர்கள் சடலத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று, அழியும் இப்பிறப்பு மீண்டும் வராதிருக்க உனது திருவடிகளைத் தந்து அருளுக

 போரில் எதிர்த்து வந்த அசுரர்கள் கூட்டம் எல்லாம் இறந்து பட, கழுகுகளும், கருடன்களும், பேய்களும், பிணங்களைக் களிப்புடன் உண்ணும்படி, பறைகளின் பேரொலிகள் முழங்க, வரிசை வரிசையாக அம்புகளைச் செலுத்திய குமரனே! தேவர்களின் சிறையை மீட்ட முருகனே! மேக வண்ணத் திருமாலும் காணுதற்கரிய திருவடியை உடைய சிவபெருமான் அளித்த பெருமாளே!, என் பிறப்பபை ஒழிக்க உன் பைங்கழல் தாராய்

 

விளக்கக் குறிப்புகள்

 

பிறப்பு, வாழ்க்கை, இறப்பு ஆகியவற்றைக் குறிக்கும் மற்ற திருப்புகழ் பாக்கள் வருமாறு தொடங்குவன இத்தாரணிக்குள், பனியின் விந்துளி, சுக்கிலச்சுரொணி, அறுகுநுனி 

 

ஒப்புக

சகமுழுது மடைய அமுது உண்டிடும் கொண்டல்        

சக்கிர வளைகர மழகியர்

படிக்க டத்தையும் வயிறடை நெடியவர்   மருகோனே

                                                                    ……திருப்புகழ், தொடத்துள 

 தாத்திரி பட்சித் தாவென வுமிழ்வாளி

                                                          ……திருப்புகழ்,  வேலைதோற்க     

ஐய நாவழித் தாளுக்கங் காந்திட     

வைய மேழுங்கண் டாள்பிள்ளை வாயுளே………

                                                                          பெரியாழ்வார் திருமொழி



374.தத்த னமுமடிமை


374
பொது

          தத்த தனதனன தத்த தனதனன 
          தத்த தனதனன                      தனதான

தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்
   தக்க மனையினமு                          மனைவாழ்வுந் 
தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு  
   தைக்கு மயல்நினைவு                         குறுகாமுன் 
பத்தி யுடனுருகி நித்த முனதடிகள் 
   பற்று மருள்நினைவு                              தருவாயே
அத்தி முகவனழ குற்ற பெழைவயிற 
   னப்ப மவரைபொரி                         அவல்தேனும் 
அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட  
   விக்குள் மறமகளை                     யணைவோனே 
முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு 
   முற்று மறைமொழியை                 மொழிவோனே 
முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல் 
   வெட்டி யமர்பொருத                         பெருமாளே.

பதம் பிரித்தல்

தத் தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர் 
தக்க மனை இனமும் மனை வாழ்வும்

தத்தனமும் - அந்தப் பொருளும். அடிமை - ஏவலாலர்களும். சுற்றமொடு - சுற்றத்தினரும். புதல்வர் -  புதல்வர்களும். தக்க மனை - தகுதியான மனைவியும். இனமும் - மனைவியைச் சார்ந்தவர்களும். மனை வாழ்வும் - இல்லற வாழ்வும் (ஆன இவைகள்).

தப்பு நிலைமை அணுகைக்கு வர விரகு 
உதைக்கும் மயல் நினைவு குறுகா முன்

தப்பு நிலைமை - இழக்கும் படியான நிலைமை. அணுகைக்கு வர - குறுகி வர. விரகு உதைக்கும் - அறிவைச் சிதைக்கும். மயல் நினைவு - புத்திமாறாட்டம் குறுகா முன் - (என்னை) அணுகி வருவதற்கு முன்.

பத்தி உடன் உருகி நித்தம் உனது அடிகள்
பற்றும் அருள் நினைவு  தருவாயே

பத்தியுடன் உருகி - பக்தியுடனே மனம் உருகி. நித்தம் - தினமும். உனது அடிகள் - உன்னுடைய திருவடிகளை. பற்றும் அருள் - பற்றும் திருவருள். நினைவு தருவாயே - நினைவைத் தந்தருள்க.

பத்து முடி உருளுவித்த பகழியினர்
பச்சை நிற முகிலின் மருகோனே

பத்து முடி உருளுவித்த - (இராவணனுடைய)  பத்து முடிகளையும் அறுத்துத் தள்ளிய. பகழியினர் - அம்பைக் கொண்டவர். பச்சை நிற முகிலின் - மேக நிறத்தினறான திருமாலின். மருகோனே - மருகனே.

அத்தி முகவன் அழகு உற்ற பேழை வயிறன் 
அப்பம் அவரை பொரி அவல் தேனும்

அத்தி முகவன் - யானை முகம் உடைய விநாயகன். அழகு உற்ற - அழகுள்ள. பேழை வயிறன் - பெட்டி போன்ற வயிற்றை உடையவன். அப்பம் அவரை பொரி  அவல் - அப்பம் முதலியவற்றோடு. தேனும் - தேனையும்.

அப்பி அமுது செயும் மொய்ப்பன் உதவ
அடவிக்குள் குற மகளை அணைவோனே

அப்பி அமுது செயும் - தொப்பையில் நிரப்பி உண்ணும். மொய்ப்பன் - வலிமையை உடையவன். உதவ - உதவி செய்ய. அடவிக்குள் - காட்டில். மற மகளை அணைவோனே - வேடப் பெண்ணாகிய வள்ளியை அணைபவனே.

முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு
முற்று(ம்) மறை மொழியை மொழிவேனோ

முத்தி தரு முதல்வர் - வீட்டுப் பேறு அளிக்கும் முதல்வரும்.
முக்கண் இறைவரோடு - முக்கண் இறைவருமாகிய சிவபெருமானுக்கு. முற்றும் மறை மொழியை - வேத மொழி முழுவதையும். மொழிவோனே - உபதேசித்தவனே.

முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல்
வெட்டி அமர் பொருத பெருமாளே.

முட்ட அசுரர் கிளை - அரக்கர் கூட்டம் முழுமையும். கெட்டு - தோற்றுப் போய் அழிய. முதல் வெட்டி - முன்பு வெட்டி. அமர் பொருத பெருமாளே - போர் செய்த பெருமாளே.

சுருக்க உரை

அந்தத் தனமும், உற்றார் உறவினர்களும், மனைவியும் இல்லற வாழ்க்கையும் இழக்கும்படியான நேரம் வந்து, நான் புத்தியையும் இழக்கும் நிலைமை அணுகு முன் பக்தியுடன் மனம் உருகி உன் திருவடியைப் பற்றும் திருவருளை எனக்குத் தந்து அருளுக.

இராவணனுடைய பத்துத் தலைகளும் உருள ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இரமனின் மருகனே. அழகிய யானை முகம் உடையவனும், அப்பம், அவல், பொரி முதலியவற்றை அப்பி உண்ணும் விநாயகனின் உதவியால் காட்டில் வள்ளியை அணைந்தவனே. முக்கண் இறைவனுக்கு வேத மொழியை உபதேசித்தவனே. அசுரர்கள் கூட்டம்  முழுதும் அழிய போர் புரிந்த பெருமாளே. நான் இறக்கு முன் உன் திருவடிகளைப் பற்ற அருள் புரிய வேண்டும்.

ஒப்புக

1அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன்... 
   வாழைக் கனிபல வின் கனி மாங்கனி தாஞ்சிறந்த
   கூசைச் சுருள் குழையப்பம் எள் ளுண்டை எல்லாம் துறுத்தும்
   பேழைப் பெருவயிற் றோடும் புகுந் தென்னுளம் பிரியான்
   வேழத் திருமுகத் துச் செக்கர் மேனி விநாயகனே...
கபிலர் மூத்த நாயனார் இரட்டை  மணி மாலை.

2. முத்தி தரு முதல்வர் முக்கணிறைவர்...
    ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே...திருப்புகழ், வேதவெற்பிலே.