பின் தொடர்வோர்

Saturday 11 January 2020

404. பேர்அவாஅறா


404
பொது

          தான தான தானான தானத்   தனதானா

பேர வாவ றாவாய்மை பேசற்           கறியாமே

   பேதை மாத ராரோடு                 பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற்              றடிநாயேன்
   ஆவி சாவி யாகாமல் நீசற்          றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க்                   கெளிவாயா
   தோகை யாகு மாரா கிராதக்   கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப்                      பெரியோனே
   தேவ தேவ தேவாதி தேவப்        பெருமாளே.

பதம் பிரித்தல்

பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே
பேதை மாதராரோடு கூடி பிணி மேவா
பேர் அவா - பேராசை. அறா - நீங்காத நிலையில் இருந்து. வாய்மை பேசற்கு - உண்மை பேசுதற்கு. அறியாமே - தெரியாமல். பேதை மாதராரோடு - அறிவீனர்களான (விலை) மாதர்களுடன். கூடி - (நான்) சேர்ந்து. பிணி மேவா - நோய்களை அடைந்து.

ஆர வாரம் மாறாத நூல் கற்று அடி நாயேன்
ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே

ஆரவாரம் மாறாத - ஆடம்பரம் நீங்காத (சமயக் கூச்சலுக்கு இடம் தரும்). நூல் கற்று - நூல்களைப் படித்து. அடி நாயேன் - அடிமையாகிய நான். ஆவி - என்னுயிர். சாவியாகமல் - வீண் ஆகாமல். நீ சற்று அருள் வாயே - நீ சிறிது அருள்வாயாக.

சூர சூர சூராதி சூரர்க்கு எளிவு ஆயா
தோகையா குமாரா கிராத கொடி கேள்வா

சூர சூர சூராதி சூரர்க்கு - சூரர்களுக்கு எல்லாம் சூரனான சூர பத்மன் முதலிய சூரர்களுக்கு. எளிவு ஆயா - எளிதில் காட்சி கொடுத்தவனே. தோகையா - மயில் வாகனனே. குமாரா - குமார மூர்த்தியே. கிராதக் கொடி - வேடர்களின் பெண்ணும் கொடி போன்றவளும் ஆகிய வள்ளியின். கேள்வா - கணவனே.

தீர தீர தீராதி தீர பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவ பெருமாளே.

தீர தீர தீராதி தீர - மிகவும் தீரம் உடையவனே. பெரியோனே -  எல்லா வகையிலும் மேம்பட்டவனே. தேவ தேவ - தேவ தேவனே. தேவாதி தேவப் பெருமாளே - தேவர் முதலனோருக்குத் தேவனாக விளங்கும் பெருமாளே.

சுருக்க உரை

பேராசை மிகுந்தும், உண்மை பேசாமலும் இருக்கும் அறிவீனர்களாகிய விலை மாதர்களோடு உறவாடி நோய்களை அடைந்து, ஆடம்பரத்துடன் கூச்சிடும் சமய வாதிகள் வழங்கும் நூல்களைப் படித்து, அடிமையாகிய எனது உயிர் வீணாகப் போகாமல் நீ சற்று அருள் புரிவாயாக.

சூராதி சூரர்களுக்கு எளிதில் காட்சி கொடுத்தவனே, மயில் வாகனனே, வேடர்கள் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, தீரனே, தேவ தேவனே, எல்லாம் வல்ல பெரியோனே, என் உயிர் வீணாகப் போகமல் காத்து அருள் புரிவாயாக.

விளக்க  குறிப்புகள்

1.சூரர்க்கு எளிவு ஆயா...        சூரன், சிங்கமுகன், தாரகன் ஆகிய மூவரும் முருகனின் தரிசனத்தைப்   பெற்றவர்கள்.
2.தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே என்னும் இறுதி அடி வரும்    மற்ற பாக்கள் -- காதிமோதி,  கூறுமார.

403.பெருங்காரியம்


403
பொது

        தனந்தா தனந்தா தனந்தா தனந்தா
        தனந்தான தந்த              தனதான

பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்
     ப்ரியங்கூர வந்து                               கருவூறிப்
பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார்
     நடந்தார்த ளர்ந்து                         பிணமானார்
அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள்
     அலங்கார நன்றி                            தெனமூழ்கி
அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்
     அலந்தேனை யஞ்ச                    லெனவேணும்
இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ
     கவெங்கேம டந்தை                        யெனவேகி
எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீ
     யிடுங்காவ லன்றன்                       மருகோனே
பொருங்கார் முகம்பா ணிகொண்டே யிறைஞ்சார்
     புறஞ்சாய அம்பு                        தொடும்வேடர்
புனங்கா வலங்கோ தைபங்கா வபங்கா
     புகழ்ந்தோது மண்டர்                      பெருமாளே

பதம் பிரித்து உரை

பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால்
ப்ரியம் கூர வந்து கரு ஊறி
பெரும் காரியம் போல் - பெரிய காரியத்தைச் சாதிப்பதற்கு வந்தது போல் வரும் - வந்துள்ளதும் கேடும் - அழிவுக்கு இடமானதுமான உடம்பால் - இந்த உடம்பிடத்தே ப்ரியம் கூர வந்து - அன்பு மிகுந்து வந்து கரு ஊறி - கருவில் ஊறி

பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார்
நடந்தார் தளர்ந்து பிணம் ஆனார்
பிறந்தார் - பிறந்தார் என்றும் கிடந்தார் - இங்கு தான் படுத்து இருந்தார் என்றும் இருந்தார் - இருந்தார் என்றும். தவழ்ந்தார் - தவழ்ந்தார் என்றும் நடந்தார் - நடந்தார் என்றும் தளர்ந்தார் - தளர்ந்தார் என்றும் பிணம் ஆனார் - பிணமானார்  என்றும் (கூறுதற்கு இடமானவுடன்)
அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள்
அலங்கார் நன்று இது என மூழ்கி

அரும் கான் மருங்கே - அரிய சுடுகாட்டின் பக்கம் எடுங்கோள் - எடுத்துச் செல்லுங்கள் சுடுங்கோள் - அங்கே சுடுங்கோள் அலங்கார(ம்) நன்று - பிணக் கோலம் நன்றே அமைந்துள்ளது என - என்று கூறி மூழ்கி - தண்ணீரில் முழுகி.

அகன்று ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால்
அலந்தேனை அஞ்சல் என வேணும்

அகன்று - அங்கிருந்து பிரிந்து போய். ஆசையும் போய் - இருந்த பாசமும் போய் விழும் பாழ் - விழுந்து பாழாகும் உடம்பால் - இவ்வுடலால் அலந்தேனை - மனக் கலக்கமும் துக்கமும் அடையும் என்னை அஞ்சல் - பயப்பட வேண்டாம் என வேணும் - என்று நீ கூற வரவேணும்.

இரும் கானகம் போய் இளம் காளை பின் போக
எங்கே மடந்தை என ஏகி

இரும் கனகம் போய் - பெரிய காட்டகத்தே சென்று. இளம் காளை - இளைய வீரனாகிய தம்பி இலக்குமணன் பின் போக - பின் தொடர்ந்து போக. எங்கே மடந்தை - (காணாது போன) சீதை எங்கே. என ஏகி - என்று தேடிச் சென்று.

எழுந்தே குரங்கால் இலங்கா புரி தீ
இடும் காவலன் தன் மருகோனே

எழுந்தே - புறப்பட்டு குரங்கால் - அநுமன் என்னும் குரங்கைக் கொண்டு இலங்கா புரம் - இலங்கைப் பட்டணத்தை. தீ இடும் - நெருப்பு வைத்த. காவலன் தன் மருகோனே - அரசனான இராம பிரானுடைய  மருகோனே - மருகனே

பொரும் கார் முகம் பாணி கொண்டே இறைஞ்சார்
புறம் சாய அம்பு தொடும் வேலா

பொரும் - சண்டை செய்யும். கார் முகம் - வில்லை. பாணி கொண்டே - கையில் கொண்டவராய். இறைஞ்சார் - தம்மை வணங்காதவர்களுடைய. புறம் சாய - வீரம் அழியும்படி. அம்பு தொடும் வேடர் - அம்புகளைச் செலுத்தும் வேடர்களின்.

புனம் காவல் அம் கோதை பங்கா அபங்கா
புகழ்ந்து ஓதும் அண்டர் பெருமாளே.

புனம் காவல் அம் கோதை - தினைப் புனத்தைக் காவல் இருந்த பங்கா - வள்ளியின் பங்கனே அபங்கா - நாசம் இல்லாதாவனே புகழ்ந்து ஓதும் புகழ்ந்து ஓதுகின்ற அண்டர் பெருமாளே  - தேவர்கள் பெருமாளே
சுருக்க உரை
நிலை இல்லாத உடம்பின் மேல் ஆசைப்பட்டு, கருவில் தோன்றி, பிறந்தார், படுத்தார், இருந்தார், தவழ்ந்தார், நடந்தார், முடிவில் தளர்ந்து பிணமானார் என்றவுடன், சுடுகாட்டுக்கு உடலை எடுத்துச் சென்று, எரியிட்டு, நீரில் முழுகி, ஆசையும், பாசமும் போய், மனக் கலக்கம் அடையும் என்னை,  பயப்படாதே என்று கூறி, நீ என் முன்னே வரவேண்டும்.
பெரிய காட்டுக்கு, இளையவனான இலக்குவனுடன் போய், காணாமல் போன சீதையைத் தேடிச் சென்று, அனுமன் உதவியால் இலங்கைப் பட்டணத்துக்குத் தீ வைத்து, சீதையை மீட்ட இராமனின் மருகனே, வேடர்களின் வீரம் அழியும்படி, தினைப்புனம் காத்த வள்ளியின் பங்கனே, என்றும் அழிவு இல்லாதவனே, இறக்கும் போது என்னை அஞ்சாதே என்று கூற நீ வந்து அருள் புரிவாய்.

ஒப்புக
1.பிறந்தார் கிடந்தார் இருந்தார்....
நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்...சுந்தரர் தேவாரம்

புன்னினுமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியெ செயக அறவினை இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேளலறச்
சென்றான் எனப்படுதலால்.                           ..நாலடியார்

2            என மூழ்கி அகன்று.....
நீரில் படிந்துவிடு பாசத் தகன்று உனது சற்போதகம்                         ருப்புகழ், இத்தாரணிக்குள்

3.          குரங்கால் இலங்கா புரந்தீ...
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் மருகோனே
    ...திருப்புகழ், தலங்களில்
வனக் குரங்கேவி யழற்புகையிட்
டிளந்தாது மலர்த் திருவைச் சிறைமீளும்
...திருப்புகழ் அலங்கார

Wednesday 8 January 2020

402.பூதகலாதிகள்


402
பொது

        தானன தானன தந்த தானன தானன தந்த
        தானன தானன தந்த                தனதான

பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
   பூசைகள் யாதுநி கழ்ந்து                பிழைகோடி
போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு
   பூரணி காரணி விந்து                   வெளியான
நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து
   ஞானசு வாச முணர்ந்து               வொளிகாண
நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த
   நாயகர் பாதமி ரண்டு                 மடைவேனோ
மாதுசர் வேஸ்வரி வஞ்சி காளிபி டாரிவி பஞ்சி
  வாணிவ ராகிம டந்தை                    யபிராமி
வாழ்சிவ காம சவுந்த்ரி யால்மெ லாமுக பஞ்சி
   வாலைபு ராரியி டந்த                  குமையாயி
வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை
   மேலொடு கீழுல கங்கள்               தருபேதை
வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற
   வேணியர் நாயகி தந்த                பெருமாளே.

பதம் பிரித்து உரை

பூத கலாதிகள் கொண்டு யோகமும் ஆக மகிழ்ந்து
பூசைகள் யாது நிகழ்ந்து பிழை கோடி
பூத - ஐம்பூதங்களின் சம்பந்தமான. கலாதிகள் கொண்டு -  சாத்திரங்கள் முதலானவைகளை ஆய்ந்தறிந்து.  யோகமுமாக மகிழ்ந்து - யோகவகை கூடிட மகிழ்ந்து.  பூசைகள் யாதும் - பூசைகள் யாவற்றையும். நிகழ்ந்து -  செய்து. பிழை கோடி - கோடிக் கணக்கான பிழைகள்.

போம் வழி ஏது தெரிந்து ஆதி  அநாதி இரண்டு
பூரணி காரணி விந்து வெளியான
போம் வழி - நீங்கும்படியான வழி. ஏது தெரிந்து - இன்னதென்று காரணம் உணர்ந்து. அதி அநாதி இரண்டு -  முதலும், முதலற்றதுமாய் உள்ள இரண்டுமாய் நிற்கின்ற.
பூரணி - முழு முதல்வி. காரணி - சகலத்துக்கும் மூல  காரணமாக இருப்பவளாகிய பரா சத்தியும்.  விந்து  வெளியான நாதம் - விந்து வெளியான நாதம்.

நாத பராபரம் என்ற யோகி உ(ல்)லாசம் அறிந்து
ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண

பராபரம் என்ற - (விந்து சம்பந்தமான நாத ஒலி கூடி  முழங்கும் இடத்தில்) பரம் பொருளாகக் காட்சி தர. யோகி  - யோகிகள். உல்லாசம் அறிந்து - (காணும்) அந்த  பரமானந்த ஒளியை அறிந்து அனுபவித்து. ஞான சுவாசம்  உணர்ந்து - ஞான மூச்சியால் ஞான யோக நிலையை  அறிந்து ஒளி காண - நாத நல்லொளி தோன்ற

நாடி ஒரு ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த
நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ
நாடி - அதை விரும்பி. ஓராயிரம் வந்த தாமரை மீதில் - ஒரு ஆயிரம் இதழோடு கூடிய குரு கமலத்தின் மீது.  அமர்ந்த - உள்ள. நாயகர் - பெருமானது. பாதம் இரண்டும்  அடைவேனோ - இரண்டு திருவடிகளை அடைவேனோ?

மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி
வாணி வராகி மடந்தை அபிராமி
மாது - மாது. சர்வேஸ்வரி - எல்லாவற்றுக்கும் ஈசுவரி.  வஞ்சி - வஞ்சிக் கொடி போன்றவள். காளி - காளி. பிடாரி  - பிடாரி. விபஞ்சி - விபஞ்சி என்னும் வீணையை  ஏந்தியவள். வாணி - சரசுவதி. வராகி - சக்தி. மடந்தை -  மாது. அபிராமி - அழகி.

வாழ் சிவகாம சவுந்தரி ஆலம் மேலாம் பஞ்ச முக
வாலை புராரி இடம் தகு உமை ஆயி
வாழ் - வாழ்வு பொலியும். சிவகாம சவுந்தரி – சிவகாம  சௌந்தரி. ஆலம் மேலாம் - பிரளய கால வெள்ளத்தின்  மேலாகிய. பஞ்ச முக் வாலை - ஐந்து முகம் கொண்ட  பாலாம்பிகை. புராரி - திரி புரத்தை எரித்த சிவனது .  இடம் தகு உமை - இடது பாகத்துக்குத் தக்க உமா தேவி.  ஆயி - (எமது) தாய்.

வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை
மேலொடு கீழ் உலகங்கள் தரு(ம்) பேதை

வேத புராணம் விளம்பி - வேதங்களையும்,    புராணங்களையும் சொன்னவள் நீல முராரியர் – முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனாகிய திருமாலின் தங்கை
- தங்கை  மேலோடு கீழ் உலகங்கள் - பதினான்கு
உலகங்களையும். தரும் பேதை - அளித்த மாது
வேடம் எ(ல்)லாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற
வேணியர் நாயகி தந்த பெருமாளே.

வேடம் எல்லாம் - (ஆடலுக்கு உரிய) வேஷங்களெல்லாம்  உக - நிலை கலங்க. சங்க பாடலோடு –  சபையில்  பாடல்களும். ஆடல் பயின்ற - ஆடல்களும் பயின்ற  வேணியர் - சடையை உடைய சிவ பெருமான் நாயகி - தேவி (ஆகிய பார்வதி) தந்த பெருமாளே – பெற்ற பெருமாளே.

சுருக்க உரை

ஐம்பூதங்கள் சம்பந்தப்பட்ட சாத்திரங்கள் முதலியவற்றை ஆய்ந்து அறிந்து, யோக வகை கூடிட மகிழ்ந்து, பூசைகளெல்லாம் செய்து, என் பிழைகள் நீங்க வழி இன்னதென்று உணர்ந்து, முதலும் அந்தமும் இல்லாததாய் நிற்கும் பூரணி, எல்லாவற்றுக்கும் காரணப் பொருளாக இருக்கும் பராசக்தி, விந்து சம்பந்தமான் நாத ஒலி கூடி முழங்கும் இடத்தில் பரம் பொருளாகக் காட்சி தர, ஒரு ஆயிரம் இதழோடு கூடிய குரு கமலத்தின் மீதுள்ள பெருமானது இரண்டு திருவடிகளை அடைவேனோ?

சர்வேஸ்வரி, காளி, பிடாரி, விபஞ்சி, அபிராமி, சிவகாம சுந்தரி, பாலாம்பிகை, திரு புரம் அழித்த சிவ பெருமானது இடப் பாகத்தில் இருக்கத் தகுதியானள், உமை, தாய், எல்லா உலகங்களையும் பெற்ற மாது, ஆடலும், பாடலும் பயின்ற சடைப் பெருமானது தேவி, இத்தகைய பார்வதி பெற்ற பெருமாளே, உன் பாதங்களை அடைவேனோ?

ஒப்புக
ஆதி அநாதி இரண்டு பூரணி ....
ஆதி அனாதி ஆய பராசக்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி                     ....திருமந்திரம்

ஞான சுவாசம் உணர்ந்து நாடி....
ஞானத்தில் யோகமே நாதாந்த நல் ஒளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே                   ....திருமந்திரம்

விளக்கக் குறிப்புகள்
விபஞ்சி - தேவி கையில் இருக்கும் வீணை.
ஆலமேலாம் - பிரளய கால வெள்ளத்தின் மேலாகிய.

ஆயிரம் வந்த தாமரை மீதில்...
ஆறு ஆதாரங்களோடு சஹஸ்ராரம் என்பது ஆக்ஞேய சக்கரத்துக்கு மேலே, தலையில் பிரம்ம கபாலத்தில், ஆயிரம் இதழ் கமலமுள்ள பிந்து ஸ்தானமாக கிய பாவனைக்கு உரியது என்பர்

ஒப்புக
   நூறு பத்தினுட நெட்டுஇத
  ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத...  .
                                                                திருப்புகழ்,ஆசைநாலுசது
 
 மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
 மேவியரு ணாச லத்தி னுடன்மூழ்கி...திருப்புகழ், சூலமெனவோடு.

இடந்தகுமை - இடம் தகு உமை.




401.புவிக்குள்


401
பொது
12 தடவை முருகனை சுவாமி சுவாமி என விளிக்கும் திருப்புகழ்

           தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன
           தனத்தந் தான தனதன             தனதான

புவிக்குள் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை
   புலக்கண் கூடு மதுதனை                             அறியாதே
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை
   புழுக்கண் பாவ மதுகொளல்                      பிழையாதே
கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி
   களைக்கும் பாவ சுழல்படு                          மடிநாயேன்
கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை
   கணக்குண் டாதல் திருவுள                         மறியாதோ
சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ
   சிறக்குஞ் சாமி சொருபமி                       தொளிகாணச்
செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதை
   தெறிக்குஞ் சாமி முநிவர்க                           ளிடமேவுந்
தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை
   தரிக்குஞ் சாமி யசுரர்கள்                          பொடியாகச்
சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண
   தகப்பன் சாமி யெனவரு                  பெருமாளே.

பதம் பிரித்து உரை

புவிக்குள் பாதம் அதை நினைபவர்க்கும் கால தரிசனை
புல கண் கூடும் அது தனை அறியாதே
புவிக்கு - பூமியில். உன் பாதம் அதை -  உன்னுடைய திருவடிகளை. நினைபவர்க்கும் - நினைத்துத்தியானிப்பவர்களுக்கும். கால தரிசனை - (இறப்பு, நிகழ்வு, எதிர் என்ற) முக்கால நிகழ்ச்சிகள். புலக்கண் கூடும் – அவர்களுடைய அறிவில் விளங்கும். அது தனை -அவ்வுண்மையை. அறியாத - அறியாமல்.

புரட்டும் பாத(க) சமயிகள் நெறி கண் பூது படிறரை
புழு கண் பாவம் அது கொ(ள்)ளல் பிழயாதே
புரட்டும் - நெறி முறை பிறழ்ந்து பேசும். பாத(க) சமயிகள் - பாபநெறிச் சமய வாதிகளின் நெறிக் கண் - வழியிலே. பூது - புகுந்து நடக்கின்ற. படிறரை- வஞ்சகர்களை. புழுக்கண் - புழுக்கள் நிறைந்த. பாவம் அது கொளல் - பாபத்துக்கு என்று ஏற்பட்ட நரகம் ஏற்றுக் கொள்ளுதல். பிழையாதே - தவறாது.

கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு(ம்) திறம் இலி
களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன்

கவிக் கொண்டிடு - (பெரியோர்களின்) பாடல்களில் கொண்டாடப்படும். புகழினை - புகழை படிக்கும் பாடும் திறமிலி - படிக்கும் திறமும், பாடும் திறமும் இல்லாதவன் களைக்கும் - சோர்வைத் தருகின்ற. பாவ சுழல் படு – பாவச் சுழற்சியிலே சுழலும் அடி நாயேன் - நாயினும் கீழாகிய எனக்கு.

கலக்கு உண்டாகு(ம்) புவி தனில் எனக்கு உண்டாகு(ம்) பணிவிடை
கணக்கு உண்டாதல் திரு உ(ள்)ளம் அறியாதோ
கலக்கு உண்டாகும் - மனக் கலக்கத்தைத் தருகின்ற புவி தனில் - இப்பூமியில். எனக்கு உண்டாகும் பணி விடை - எனக்கு விதிக்கப்பட்ட தொண்டு. கணக்கு உண்டாதல் - இவ்வளவு என்று உள்ளதான ஒரு கணக்கு. திருவுள்ளம் -
உனது உள்ளம். அறியாதோ - அறிந்ததே ஆகும்.



பத உரை

12 தடவை முருகனை சுவாமி சுவாமி என விளிக்கும் திருப்புகழ்

சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்கும் சாமி எமது உ(ள்)ளே
சிறக்கும் சாமி சொருபம் இது ஒளி காண

சிவத்தின் சாமி - சிவபெருமானிடத்தில் தோன்றிய சுவாமி. [
[மங்களத்தையே நல்கும் சுவாமியே, (உயிர்களுக்கு நன்மைகளையே  புரிகின்றான் முருகன் . ஆதலின் சிவத்தின் சுவாமி. சுவாமி என்ற சொல்லுக்கு உடையவன் என்பது பொருள். ஸ்வம் என்றால் சொத்து. உலகங்களையும் உயிர்களையும் உடைமையாக உடையவன் முருகன். வடமொழி நிகண்டில் முருகவேள் தொகுதி சுவாமி என்ற நாமத்தைப் பற்றி பேசுகின்றது. எனவே சுவாமி என்ற பெயர் கந்தனுக்கே உரியது. மற்ற தேவர்களை சுவாமி என்று அழைப்பது உபசாரம் காரணமே. தேவசேனாபதி சூர சுவாமி கஜமுகானுஜக - நிகண்டு )] ,
மயில் மிசை நடிக்கும் சாமி - மயில் மீது நடனம் செய்யும் சுவாமி.[  - மயில் மீது நின்று நடனம் செய்கின்ற சுவாமியே,
(64 கலைகளில் சிறந்தது பரதக் கலை. இதற்குத் தலைவர் நடராஜர். 84 லட்சம் பிறவி பேதங்களுள் மயில் ஒன்றே இயற்கையாகவே நடனம் செய்ய வல்லது.
அதனை வாகனமாக ஏற்று, மயிலும் ஆட அதன்மிசை தாமும் ஆடி அருள் புரிகின்றார் குன்று தோறும் ஆடும் குமரக் கடவுள்.) ]
எமது உள்ளே சிறக்கும் சாமி - என் மனதில் சிறப்பாக விளங்கும் சுவாமி.
[ அடியவர்களாகிய எங்கள் உள்ளக் கோயிலிலே சிறப்பாக விளங்கும் சுவாமியே (அன்பில்லாதவர்களிடத்தில் விறகில் தீ போல் மறைந்திருப்பான். அடியார் உள்ளத்தில் வெண்ணெயில் நெய் போன்று விளங்கி தோன்றுவான்)]
சொருபம் இது - திருவுருவத்தின்.
ஒளி காண - பேரொளி அடியார் காணும்படி.
[-திருவுருவம் ஒளி மயமாய் ஓங்கி இருக்கும் சுவாமியே, (சுடர் ஒளியதாய் நின்ற நிஷ்கள சொரூப முதல் ஒரு வாழ்வே)]

செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை
தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும்

செழிக்கும் சாமி - விளக்கமுறும் சுவாமி. பிறவியை ஒழிக்கும் சாமி - பிறவியை அடியோடு தொலைக்கும் சுவாமி
[ பிறவித் துன்பத்தை நீக்கும் சுவாமியே, ( பிறப்பு இறப்பு உடைய மற்ற தேவர்களால் நம் பிறவியை ஒழிக்க இயலாது. செத்துப் பிழைக்கின்ற தெய்வங்கள் மணவாளனான முருகப் பெருமானாலேயே தான் அது முடியும். அவன் பெயரை விடாது உச்சரித்து வந்தாலே மீண்டும் பிறவித் துன்பம் வராது என்கிறார் அருணகிரிநாதர். வெற்றி வேற்பெருமான் திரு நாமம் புகல்பவரே முடியாப் பிறவிக் கடலில் புகார்- கந்தர் அலங்காரம் )]
பவம் அதை - பாவங்களை. தெறிக்கும் சாமி -
குலைத்து எறியும் சுவாமி
[ - பிறவிக்குக் காரணமான ஆன்மாக்கள்
செய்த பாவ வினைகளை பொடியாக்கும் சுவாமியே ( சிறியன் கொலையன் புலையன் புரி பவம் இன்று கழிந்திட வந்தருள் புரிவாயே கனகந்திரள் ].

முநிவர்கள் இடம் மேவும் - முனிவர்கள் செய்யும்.

தவத்தின் சாமி புரி பிழழை பொறுக்கும் சாமி குடி நிலை
தரிக்கும் சாமி அசுரர்கள் பொடியாக

தவத்தின் சாமி - தவப் பொருளாய் (விளங்கும்) சுவாமி.

[இடையறாது மெய்ப் பொருளையே நினைக்கும் தவ சிரேஷ்டர்களுக்கு தயை கூர்ந்து தரிசனம் நல்கி அருளும் சுவாமியே]
புரி பிழை பொறுக்கும் சாமி – செய்யும் பிழைகளைப்  பொறுத்தருளும் சுவாமி. குடி நிலை - தேவர்களை விண்ணில் குடி ஏற்றி
வைத்து. தரிக்கும் சாமி - (அங்கு) நிலைக்க வைக்கும் சுவாமி. அசுரர்கள் பொடியாக - அசுரர்கள் பொடியாகும்படி.

சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண
தகப்பன் சாமி என வரு(ம்) பெருமாளே.

சதைக்கும் சாமி - நெரித்து அழித்த சுவாமி. எம்மை பணி - எமக்குத் தொண்டு இன்னதென்று. விதிக்கும் சாமி - விதிக்கும் சுவாமி. சரவண - சரவணத்தில் தோன்றிய- தகப்பன் சாமி என வந்த - தகப்பனுக்கும் குருவாய் வந்த பெருமாளே - பெருமாளே.

[ ] அடைப்புக்குள் இருக்கும் விளக்கம் நடராஜன் அவர்கள் அருளியது

சுருக்க உரை

பூமியில் உன் திருவடிகளை நினைப்போர்க்கு முக்காலங்களையும் அறிவில் விளங்கக் கூடும் என்ற உண்மையை அறியாமலேயே, புரட்டிப் பேசும் சமய வாதிகளின் நெறியில் நடக்கின்ற வஞ்சகர்களை நரகம் ஏற்றுக் கொள்ளுதல் தவறாது. பெரியோர்களின் கவிகளைக் கொண்டாடவும், பாடவும் எனக்குத் திறமை இல்லை. பாவச் சுழற்சியிலேயே சுழன்று வரும் அடுயேனாகிய எனக்கு, இப்பூமியில் உன்னால் விதிக்கப்பட்ட தொண்டுகளின் எண்ணிக்கை நீ அறிந்ததே.

சுவாமியே, நீ சிவபெருமானிடத்துத் தோன்றியவர். மயில் மீது நடனம் செய்பவர். என் உள்ளத்தில் சிறப்பாக விளங்குபவர். உன் உருவத்தின் பேரொளியை அடியார்கள் காணும்படி விளங்குபவர். பிறவியை அழிப்பவர். முனிவர்கள் செய்யும் தவத்தின் மெய்ப்பொருளாகத் திகழ்பவர். அடியார்களின் குறைகளைப் பொறுப்பவர். அசுரர்கள் அழித்துத் தேவர்களை விண்ணுலகில் குடி ஏறச் செய்தவர். என்னுடைய தொண்டு என்ன என்பதை விதிப்பவர். தந்தைக்குக் குருவாக இருப்பவர். புகழ்த் தக்க பெருமாளே. எனக்குண்டான பணிகளை நீ நன்கு அறிவாய். அவற்றைச் சொல்லி அருள்வாயாக.

ஒப்புக
கால தாரிசனை புலக்கண் கூடும் அது தனை அறியாதே...
அவுணர் புரம் மூன்று எரி செய்த
சரவா என்பார் தத்துவ ஞானத் தலையாரே           ...சம்பந்தர் தேவாரம்.

புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது....
உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம்
சவலைக் கடல் உளனாய்க் கிடந்து தடுமாறும் கவலை      ....திருவாசகம்.

காதி மோதி வாதாடு நூல் கற்றிடுவோரும்...
மாறி லாத மாகால னூர்புக் கலைவாரே              ...திருப்புகழ்,காதிமோதி.

 தகப்பன் சாமி....
 ஓதுவித்த நாதர் கற்க வோது வித்த முநிநாண
 ஓரெழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த பெருமாளே...
            திருப்புகழ் வேதவெற்பிலே.