பின் தொடர்வோர்

Wednesday 8 January 2020

401.புவிக்குள்


401
பொது
12 தடவை முருகனை சுவாமி சுவாமி என விளிக்கும் திருப்புகழ்

           தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன
           தனத்தந் தான தனதன             தனதான

புவிக்குள் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை
   புலக்கண் கூடு மதுதனை                             அறியாதே
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை
   புழுக்கண் பாவ மதுகொளல்                      பிழையாதே
கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி
   களைக்கும் பாவ சுழல்படு                          மடிநாயேன்
கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை
   கணக்குண் டாதல் திருவுள                         மறியாதோ
சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ
   சிறக்குஞ் சாமி சொருபமி                       தொளிகாணச்
செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதை
   தெறிக்குஞ் சாமி முநிவர்க                           ளிடமேவுந்
தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை
   தரிக்குஞ் சாமி யசுரர்கள்                          பொடியாகச்
சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண
   தகப்பன் சாமி யெனவரு                  பெருமாளே.

பதம் பிரித்து உரை

புவிக்குள் பாதம் அதை நினைபவர்க்கும் கால தரிசனை
புல கண் கூடும் அது தனை அறியாதே
புவிக்கு - பூமியில். உன் பாதம் அதை -  உன்னுடைய திருவடிகளை. நினைபவர்க்கும் - நினைத்துத்தியானிப்பவர்களுக்கும். கால தரிசனை - (இறப்பு, நிகழ்வு, எதிர் என்ற) முக்கால நிகழ்ச்சிகள். புலக்கண் கூடும் – அவர்களுடைய அறிவில் விளங்கும். அது தனை -அவ்வுண்மையை. அறியாத - அறியாமல்.

புரட்டும் பாத(க) சமயிகள் நெறி கண் பூது படிறரை
புழு கண் பாவம் அது கொ(ள்)ளல் பிழயாதே
புரட்டும் - நெறி முறை பிறழ்ந்து பேசும். பாத(க) சமயிகள் - பாபநெறிச் சமய வாதிகளின் நெறிக் கண் - வழியிலே. பூது - புகுந்து நடக்கின்ற. படிறரை- வஞ்சகர்களை. புழுக்கண் - புழுக்கள் நிறைந்த. பாவம் அது கொளல் - பாபத்துக்கு என்று ஏற்பட்ட நரகம் ஏற்றுக் கொள்ளுதல். பிழையாதே - தவறாது.

கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு(ம்) திறம் இலி
களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன்

கவிக் கொண்டிடு - (பெரியோர்களின்) பாடல்களில் கொண்டாடப்படும். புகழினை - புகழை படிக்கும் பாடும் திறமிலி - படிக்கும் திறமும், பாடும் திறமும் இல்லாதவன் களைக்கும் - சோர்வைத் தருகின்ற. பாவ சுழல் படு – பாவச் சுழற்சியிலே சுழலும் அடி நாயேன் - நாயினும் கீழாகிய எனக்கு.

கலக்கு உண்டாகு(ம்) புவி தனில் எனக்கு உண்டாகு(ம்) பணிவிடை
கணக்கு உண்டாதல் திரு உ(ள்)ளம் அறியாதோ
கலக்கு உண்டாகும் - மனக் கலக்கத்தைத் தருகின்ற புவி தனில் - இப்பூமியில். எனக்கு உண்டாகும் பணி விடை - எனக்கு விதிக்கப்பட்ட தொண்டு. கணக்கு உண்டாதல் - இவ்வளவு என்று உள்ளதான ஒரு கணக்கு. திருவுள்ளம் -
உனது உள்ளம். அறியாதோ - அறிந்ததே ஆகும்.



பத உரை

12 தடவை முருகனை சுவாமி சுவாமி என விளிக்கும் திருப்புகழ்

சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்கும் சாமி எமது உ(ள்)ளே
சிறக்கும் சாமி சொருபம் இது ஒளி காண

சிவத்தின் சாமி - சிவபெருமானிடத்தில் தோன்றிய சுவாமி. [
[மங்களத்தையே நல்கும் சுவாமியே, (உயிர்களுக்கு நன்மைகளையே  புரிகின்றான் முருகன் . ஆதலின் சிவத்தின் சுவாமி. சுவாமி என்ற சொல்லுக்கு உடையவன் என்பது பொருள். ஸ்வம் என்றால் சொத்து. உலகங்களையும் உயிர்களையும் உடைமையாக உடையவன் முருகன். வடமொழி நிகண்டில் முருகவேள் தொகுதி சுவாமி என்ற நாமத்தைப் பற்றி பேசுகின்றது. எனவே சுவாமி என்ற பெயர் கந்தனுக்கே உரியது. மற்ற தேவர்களை சுவாமி என்று அழைப்பது உபசாரம் காரணமே. தேவசேனாபதி சூர சுவாமி கஜமுகானுஜக - நிகண்டு )] ,
மயில் மிசை நடிக்கும் சாமி - மயில் மீது நடனம் செய்யும் சுவாமி.[  - மயில் மீது நின்று நடனம் செய்கின்ற சுவாமியே,
(64 கலைகளில் சிறந்தது பரதக் கலை. இதற்குத் தலைவர் நடராஜர். 84 லட்சம் பிறவி பேதங்களுள் மயில் ஒன்றே இயற்கையாகவே நடனம் செய்ய வல்லது.
அதனை வாகனமாக ஏற்று, மயிலும் ஆட அதன்மிசை தாமும் ஆடி அருள் புரிகின்றார் குன்று தோறும் ஆடும் குமரக் கடவுள்.) ]
எமது உள்ளே சிறக்கும் சாமி - என் மனதில் சிறப்பாக விளங்கும் சுவாமி.
[ அடியவர்களாகிய எங்கள் உள்ளக் கோயிலிலே சிறப்பாக விளங்கும் சுவாமியே (அன்பில்லாதவர்களிடத்தில் விறகில் தீ போல் மறைந்திருப்பான். அடியார் உள்ளத்தில் வெண்ணெயில் நெய் போன்று விளங்கி தோன்றுவான்)]
சொருபம் இது - திருவுருவத்தின்.
ஒளி காண - பேரொளி அடியார் காணும்படி.
[-திருவுருவம் ஒளி மயமாய் ஓங்கி இருக்கும் சுவாமியே, (சுடர் ஒளியதாய் நின்ற நிஷ்கள சொரூப முதல் ஒரு வாழ்வே)]

செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை
தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும்

செழிக்கும் சாமி - விளக்கமுறும் சுவாமி. பிறவியை ஒழிக்கும் சாமி - பிறவியை அடியோடு தொலைக்கும் சுவாமி
[ பிறவித் துன்பத்தை நீக்கும் சுவாமியே, ( பிறப்பு இறப்பு உடைய மற்ற தேவர்களால் நம் பிறவியை ஒழிக்க இயலாது. செத்துப் பிழைக்கின்ற தெய்வங்கள் மணவாளனான முருகப் பெருமானாலேயே தான் அது முடியும். அவன் பெயரை விடாது உச்சரித்து வந்தாலே மீண்டும் பிறவித் துன்பம் வராது என்கிறார் அருணகிரிநாதர். வெற்றி வேற்பெருமான் திரு நாமம் புகல்பவரே முடியாப் பிறவிக் கடலில் புகார்- கந்தர் அலங்காரம் )]
பவம் அதை - பாவங்களை. தெறிக்கும் சாமி -
குலைத்து எறியும் சுவாமி
[ - பிறவிக்குக் காரணமான ஆன்மாக்கள்
செய்த பாவ வினைகளை பொடியாக்கும் சுவாமியே ( சிறியன் கொலையன் புலையன் புரி பவம் இன்று கழிந்திட வந்தருள் புரிவாயே கனகந்திரள் ].

முநிவர்கள் இடம் மேவும் - முனிவர்கள் செய்யும்.

தவத்தின் சாமி புரி பிழழை பொறுக்கும் சாமி குடி நிலை
தரிக்கும் சாமி அசுரர்கள் பொடியாக

தவத்தின் சாமி - தவப் பொருளாய் (விளங்கும்) சுவாமி.

[இடையறாது மெய்ப் பொருளையே நினைக்கும் தவ சிரேஷ்டர்களுக்கு தயை கூர்ந்து தரிசனம் நல்கி அருளும் சுவாமியே]
புரி பிழை பொறுக்கும் சாமி – செய்யும் பிழைகளைப்  பொறுத்தருளும் சுவாமி. குடி நிலை - தேவர்களை விண்ணில் குடி ஏற்றி
வைத்து. தரிக்கும் சாமி - (அங்கு) நிலைக்க வைக்கும் சுவாமி. அசுரர்கள் பொடியாக - அசுரர்கள் பொடியாகும்படி.

சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண
தகப்பன் சாமி என வரு(ம்) பெருமாளே.

சதைக்கும் சாமி - நெரித்து அழித்த சுவாமி. எம்மை பணி - எமக்குத் தொண்டு இன்னதென்று. விதிக்கும் சாமி - விதிக்கும் சுவாமி. சரவண - சரவணத்தில் தோன்றிய- தகப்பன் சாமி என வந்த - தகப்பனுக்கும் குருவாய் வந்த பெருமாளே - பெருமாளே.

[ ] அடைப்புக்குள் இருக்கும் விளக்கம் நடராஜன் அவர்கள் அருளியது

சுருக்க உரை

பூமியில் உன் திருவடிகளை நினைப்போர்க்கு முக்காலங்களையும் அறிவில் விளங்கக் கூடும் என்ற உண்மையை அறியாமலேயே, புரட்டிப் பேசும் சமய வாதிகளின் நெறியில் நடக்கின்ற வஞ்சகர்களை நரகம் ஏற்றுக் கொள்ளுதல் தவறாது. பெரியோர்களின் கவிகளைக் கொண்டாடவும், பாடவும் எனக்குத் திறமை இல்லை. பாவச் சுழற்சியிலேயே சுழன்று வரும் அடுயேனாகிய எனக்கு, இப்பூமியில் உன்னால் விதிக்கப்பட்ட தொண்டுகளின் எண்ணிக்கை நீ அறிந்ததே.

சுவாமியே, நீ சிவபெருமானிடத்துத் தோன்றியவர். மயில் மீது நடனம் செய்பவர். என் உள்ளத்தில் சிறப்பாக விளங்குபவர். உன் உருவத்தின் பேரொளியை அடியார்கள் காணும்படி விளங்குபவர். பிறவியை அழிப்பவர். முனிவர்கள் செய்யும் தவத்தின் மெய்ப்பொருளாகத் திகழ்பவர். அடியார்களின் குறைகளைப் பொறுப்பவர். அசுரர்கள் அழித்துத் தேவர்களை விண்ணுலகில் குடி ஏறச் செய்தவர். என்னுடைய தொண்டு என்ன என்பதை விதிப்பவர். தந்தைக்குக் குருவாக இருப்பவர். புகழ்த் தக்க பெருமாளே. எனக்குண்டான பணிகளை நீ நன்கு அறிவாய். அவற்றைச் சொல்லி அருள்வாயாக.

ஒப்புக
கால தாரிசனை புலக்கண் கூடும் அது தனை அறியாதே...
அவுணர் புரம் மூன்று எரி செய்த
சரவா என்பார் தத்துவ ஞானத் தலையாரே           ...சம்பந்தர் தேவாரம்.

புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது....
உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம்
சவலைக் கடல் உளனாய்க் கிடந்து தடுமாறும் கவலை      ....திருவாசகம்.

காதி மோதி வாதாடு நூல் கற்றிடுவோரும்...
மாறி லாத மாகால னூர்புக் கலைவாரே              ...திருப்புகழ்,காதிமோதி.

 தகப்பன் சாமி....
 ஓதுவித்த நாதர் கற்க வோது வித்த முநிநாண
 ஓரெழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த பெருமாளே...
            திருப்புகழ் வேதவெற்பிலே.
 


No comments:

Post a Comment