பின் தொடர்வோர்

Wednesday 8 January 2020

399.புகரில் சேவல


399
பொது

         தனன தானன தந்தன தந்தன
           தனன தானன தந்தன தந்தன
           தனன தானன தந்தன தந்தன  தனதான

புகரில் சேவல தந்துர சங்க்ரம
   நிருதர் கோபுக்ர வுஞ்சநெ டுங்கிரி
   பொருத சேவக குன்றவர் பெண்கொடி    மணவாள
புனித பூசுர ருஞ்சுர ரும்பணி
   புயச பூதர என்றிரு கண்புனல்
   பொழிய மீமிசை யன்புது ளும்பிய             மனனாகி
அகில பூதவு டம்புமு டம்பினில்
   மருவு மாருயி ருங்கர ணங்களு
   மவிழ யானுமி ழந்தஇ டந்தனி             லுணர்வாலே
அகில வாதிக ளுஞ்சம யங்களும்
   அடைய ஆமென அன்றென நின்றதை
   யறிவி லேனறி யும்படி யின்றருள்             புரிவாயே
மகர கேதன முந்திகழ்  செந்தமிழ்
   மலய மாருத மும்பல வெம்பரி
   மளசி லீமுக மும்பல மஞ்சரி                  வெறியாடும்
மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர
   மதுர கார்முக மும்பொர வந்தெழு
   மதன ராஜனை வெந்துவி ழும்படி             முனிபால
முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு
   முதுப கீரதி யும்புனை யுஞ்சடை
   முடியர் வேதமு நின்றும ணங்கமழ்              அபிராமி
முகர நூபுர பங்கய சங்கரி
   கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள்
   முருக னேசுர குஞ்சரி ரஞ்சித                 பெருமாளே.

பதம் பிரித்து உரை
புகர் இல் சேவல தந்துரம் சங்க்ரம
நிருதர் கோப க்ரவுஞ்ச நெடும் கிரி

பொருத சேவக குன்றவர் பெண் கொடி மணவாளா
புகர் இல் - குற்றம் ஒன்றும் இல்லாத. சேவல - சேவற் கொடியை உடையவனே. தந்துரம் - ஒழுங்கின்மை. சங்க்ரம - சேர்ந்திருந்த. நிருதர் - அசுரர்களை. கோப - கோபித்தவனே. க்ரவுஞ்ச நெடுங்கிரி - கிரவுஞ்சம் என்ற பெரிய மலையோடு. பொருத சேவக - சண்டை செய்த வலிமை படைத்தவனே. குன்றவர் - வேடர்களின். பெண் கொடி - பெண் கொடியான வள்ளியின். மணவாளா - கணவனே.

புனித பூசுரரும் சுரரும் பணி
புயச பூதர என்று இரு கண் புனல்
பொழிய மீ மிசை அன்பு துளும்பிய மனன் ஆகி
புனித - தூயவனே. பூசுரரும் - அந்தணர்களும். சுரரும் - தேவர்களும். பணி - வணங்கும். புயச பூதர - மலை போன்ற திருப் புயங்களை உடையவனே. என்று - என்று கூறி. இரு கண் - என் இரண்டு கண்களும். புனல் பொழிய - நீர் பெருக. மீ மிசை - (உடல்) மேல் எங்கும் பொழிய. அன்பு துளும்பிய - அன்பு ததும்பும். மனன் ஆகி - மனத்தை உடையவனாகி.

அகில பூத உடம்பும் உடம்பினில்
மருவும் ஆருயிரும் கரணங்களும்
அவிழ யானும் இழந்த இடம் தனில் உணர்வாலே

அகில பூத உடம்பும் - ஐந்து பூதங்களால் ஆகிய உடம்புகளும் உடம்பினில் மருவும் - அந்த உடலில் பொருந்தியுள்ளஆருயிரும் - அரிய உயிர்களும் கரணங்களும் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாலு கரணங்களும் அவிழ - நெகிழ்து இளக. யானும் இழந்த - நான் என்னும் உணர்வும் அழிந்த  இடம் தனில் - அந்த நிலையில் உணர்வாலே – ஞான உணர்ச்சி கொண்டு.

அகில வாதிகளும் சமயங்களும்
அடைய ஆம் என அன்று என நின்ற அதை
அறிவிலேன் அறியும் படி இன்று அருள் புரிவாயே

அகில வாதிகளும் - சகல சமய வாதிகளும். சமயங்களும் - எல்லா சமயங்களும் அடைய ஆம் என - அடையக் கூடும் என்றும் அன்று என - அடைய முடியாது என்றும் (முறை
யிடும்படி). நின்ற - நிற்பதான அதை - அந்தப் பொருளைஅறிவிலேன் - அறிவில்லாதவனாகிய நான். அறியும்படி -
அறிந்து கொள்ளும் படி. இன்று - இன்று. அருள் புரிவாயே - அருள் புரிவாயாக.

மகர கேதனமும் திகழ் செம் தமிழ்
மலய மாருதமும் வெம் பரிமள
சிலீ முகமும் பல மஞ்சரி வெறி ஆடும்

மகர கேதனமும் - மீன் கொடியையும். திகழ் - விளங்கும்செந்தமிழ் - செந்தமிழ் வீசும். மலய மாருதமும் – பொதிய மலைத் தென்றற் காற்றாகிய (தேரையும்). பல - பலவான.
வெம்- விரும்பத் தக்க. பரிமள - நறு மணம் கொண்ட. சிலீ கமும் - மலர்ப் பாணங்களையும். பல - பல விதமான. மஞ்சரி - பூங்கொத்துக்களின் (தேனை). ஆடும் – பருகிவிளையாடும்
மதுகரம் ஆரம் வி குஞ்சு அணியும் கர
மதுரம் கார் முகமும் பொர வந்து எழு
மதன ராஜனை வெந்து விழும்படி முனி பாலம்

மதுகரம் - வண்டுகளின் ஆரம் - மாலை போன்ற வரிசை கொண்ட (நாண்). வி - விசேடமான குஞ்ச அணியும் - பூங்
கொத்துக்களை அணிந்துள்ளதும். கர - கையில் ஏந்தப் பட்டதும் மதுரம் - இனிமை கொண்டதுமான. கார் முகமும் -
கரும்பாகிய வில்லையும் கொண்டு. பொர வந்து எழு – சண்டை செய்ய வந்து எழுந்த. மதனராஜனை - காமனை வெந்து
விழும்படி - வெந்து சாம்பலாகி விழும்படி. முநி – கோபித்த பால(ம்) - நெற்றியில்.

முகிழ் விலோசனர் அம் சிறு திங்களும்
முது பகீரதியும் புனையும் சடை
முடியர் வேடமும் நின்று மணம் கமழ் அபிராமி
முகிழ் - தோன்றி விளங்கும் விலோசன – கண்ணை உடையவரும் அம் - அழகிய. சிறு திங்களும் – சிறிய பிறையையும் முது பகீரதியும் - பழைய கங்கையையும்.
புனையும் - அணிந்துள்ள சடை முடியார் - சடை முடியை உடையவருமான சிவபெருமானும் வேதமும் நின்று மணம்
கமழ் அபிராமி - வேதச் சிலம்போடு நின்று நறு மணம் வீசும் அழகி.
முகரம் நூபுரம் பங்கய சங்கரி
கிரி குமாரி த்ரி அம்பகி தந்தருள்
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே.

முகர - ஒலிக்கின்ற நூபுரம் - சிலம்பு அணிந்த பங்கய - தாமரை போன்ற திருவடியை உடைய. சங்கரி - சங்கரி. கிரி
குமாரி - இமய மலை குமாரி த்ரி அம்பகி – முக்கண்ணி (ஆகிய பார்வதி) தந்து அருள் முருகனே – பெற்றருளிய முருகனே சுர குஞ்சரி - தேவயானைக்கு ரஞ்சித பெருமாளே - இன்பம் தரும் பெருமாளே ( அல்லது தேவயானை விரும்பும்
பெருமாளே)
சுருக்க உரை

குற்றாம் இல்லாத சேவற் கொடியோனே,
நல் ஒழுக்கம் இல்லாத அசுரர்களைக் கோபித்தவனே, கிரவுஞ்சத்தை அழித்த வலிமை படைத்தவனே,
வேடர் பெண்ணாகிய வள்ளியின் கணவனே.
தூயவனே,
அந்தணர்க்ளும், தேவர்களும் பணியும் மலை போன்ற புயங்களை உடையவனே,
இவ்வாறெல்லாம் கூறி, என் கண்களில் நீர் பெருகவும், அந்த நீர் உடலில் மேல் பொழிய, அன்பு ததும்பும்   மனத்தினனாகி, என் உடலும், உள்ளமும், கரணங்களும் நெகிழவும், நான் என்னும் உணர்வு அழியவும், அந்நிலையில், ஞான உணர்ச்சி கொண்டு, சகல சமயங்களும், சமய வாதிகளும், அடைய முடியும், முடியாது என்று முறையிடும் படி, தனித்து நிற்கும் பொருளை, அறிவில்லாதவனாகிய நானும் அறிந்து கொள்ளும்படி இன்று திருவருள் புரிவாயாக.
தனது பல வேறு பாணங்களால் போருக்கு எழுந்த மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவனும், சடையில் பிறை, கங்கை ஆகியவற்றைத் தரித்தவரும் ஆகிய சிவ பெருமானும், உமா தேவியும் தந்தருளிய முருகனே,. தேவசேனைக்கு இன்பம் தரும் பெருமாளே. உன்னை அறிந்து கொள்ள அருள் புரிவாயாக.
சேவல, சேவக, நிருதர் கோபி, மணவாளா, புனித, புய பூதர என்று ஆறு    விளிகளால் பெருமானை அழைத்துள்ளது அருமை.


ஒப்புக
யானும் இழந்த இடம் தனில் உணர்வாலே...
யானாகிய என்னை விழுங்கி வெறுந் தானாய் நிலை நிற்பது   தற்பரமே...கந்தர் அனுபூதி .
அடைய ஆமென அன்று என....
 ஒன்று உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும்...திருவாசகம்,    திருவண்டப் பகுதி
மதனராஜனை வெந்து விழும்படி...
   மதனுடல் திரு நீறாய்...திருப்புகழ், பாட்டிலுருகிலை.
 விளக்க குறிப்பு:
மகர கேதன்மும் திகழ் செந்தமிழ்....
 மன்மதனுக்கு உரியவைகள்:   கொடி – மீன்; தேர் - மலய மாருதம்; பாணம் – மலர்கள்; வில்லின் நாண் – வண்டு;  வில் - கரும்பு.




No comments:

Post a Comment